நான் ஏன் சார் இந்த படத்த பாத்தேன்...???
வழக்கமாக திரையில் காட்டப்படும் காதல்களை நான் என்றுமே விரும்பியதில்லை. infact, (மதன் ஸ்டைலில் படிக்கவும்) காதல் என்பது புனிதமானது, புளிப்பானது என்றெல்லாம் இன்றுவரை மக்களை ஏமாற்றி வருவதே சினிமா தான். இருப்பினும் இந்த பதிவை வெளியிடுவதற்காகவும் கேட்காமலே டிக்கட் கிடைத்தது என்பதாலும் நேற்று மாலை iDreams திரையரங்கம் சென்றேன். மீசைக்கார நண்பனும் ரோஷக்கார நண்பனும் போட்டுக்கொண்ட சண்டையில் "ஹோசன்னா..." பாடல் உட்பட இருபது நிமிட படம் முடிந்திருந்தது.
கதைச்சுருக்கம்
(நான் பார்த்த காட்சியில் இருந்து)
த்ரிஷாவை பார்த்ததும் காதல் வசமாகிவிடுகிறார் சிம்பு (!!!). த்ரிஷாவை துரத்திக்கொண்டு ஆலப்புழை வரை சென்று கொக்கி போடுகிறார். த்ரிஷா வழக்கமான பெண்களைப் போல புரிந்தும் புரியாமலும் பேசி சிம்புவை குழப்புகிறார். ஒரு காட்சியில் கட்டிப்பிடித்து முத்தமிடுகிறார், மறுகாட்சியிலேயே நாம friendsa இருப்போம் என்று சாலமன் பாப்பைய்யா மாதிரி சொல்கிறார். ஒரு வழியாக அவர்கள் OK ஆவதற்குள் விஷயம் த்ரிஷாவின் குடும்பத்திற்கு தெரிய வந்து த்ரிஷாவிற்கு வேறு திருமணத்திற்கு ஏற்பாடு செய்கின்றனர். மணக்கோலத்தில் இருக்கும் த்ரிஷா திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை என்று சொல்வதோடு இடைவேளை.
இடைவேளைக்குப்பின் த்ரிஷா காதலுக்கு க்ரீன் சிக்னல் கொடுக்கிறார். ஆனால் அடுத்த காட்சியிலேயே சிம்புவை பிரிகிறார். சிம்பு தனது லட்சிய சினிமாவை எடுக்கிறார். த்ரிஷா அமெரிக்க மாப்பிள்ளையை மணக்கிறார். படம் நிறைவடைகிறது.
படத்தில் உள்ள பல காட்சிகள் என்னுடைய நிஜ வாழ்க்கையில் சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட சம்பவங்கள் அச்சுபிசகாமல் பிரதிபலித்தது. (அது பற்றிய ஓர் தொடர்பதிவு கூடிய விரைவில் வெளிவரும்). ஆனாலும் படத்தைப் பார்த்தபோது எந்த உணர்வும் தோன்றவில்லை.
SIMBHU
டைட்டிலில் யங் சூப்பர் ஸ்டார் என்று போட்டதாக கேள்விப்பட்டேன். நல்லவேளையாக நான் அந்த கொடுமையை பார்க்கவில்லை. சினிமாவில் அசிஸ்டென்ட் டைரக்டராக முயற்சி செய்யும் கார்த்திக் என்னும் பாத்திரத்தில் நடித்திருக்கிறார். வழக்கமாக ஒவ்வொரு படத்திலும் கணக்கு பண்ணுவதில் சிறப்பாக விளங்கும் சிம்பு இந்த படத்தில் கணக்கு போடுவதிலும் வெளுத்து வாங்கியிருக்கிறார். எனக்கு 80 வயதாகும்போது உனக்கு 81 ஆகியிருக்கும், உனக்கு 50 வயதாகும்போது எனக்கு 49 வயது ஆகியிருக்கும் என்றெல்லாம் அவ்வப்போது புள்ளிவிவரங்களை சொல்லி கேப்டனோடு போட்டி போடுகிறார். இவர் த்ரிஷாவை உஷார் செய்வதற்காக பயன்படுத்தும் வசனங்கள் அனைத்தும் கவிதை. உச்சகட்ட காட்சியில் த்ரிஷாவுடன் பேசும் இரண்டு நிமிடங்களில் சிம்புவை ரசிக்கலாம்.
THRISHA
ஆயுத எழுத்து, சர்வம் படங்களுக்கு பிறகு த்ரிஷா இந்த படத்தில் இன்னும் அழகாக இருக்கிறார். இருப்பினும் அவ்வப்போது யதார்த்த காதலியை நினைவூட்டுவதால் ரசிக்க முடியவில்லை. சாப்ட்வேர் கம்பெனியில் வேலைபார்க்கும் ஜெஸ்ஸி பாத்திரத்தில் மலையாள கப்பகிழங்காக நடித்திருக்கிறார். குடும்பத்திற்கும் காதலுக்கும் இடையே ஆல்லாடும் நடுத்தர வர்க்கத்து பெண்ணாக வசீகரிக்கிறார்.
SIMBHU - THRISHA CHEMISTRY
இத நான் சொல்லியே ஆகணும். படத்தில் இரண்டு பேருடைய வேதியியல் (அதாங்க கெமிஸ்ட்ரி...!!!) சிறப்பாக உள்ளது. ஆனால் படத்தில் இருவரும் காதலிக்கும் காட்சிகளை விட சண்டை போடும் காட்சிகளே அதிகமாக உள்ளது. ஆங்காங்கே மேலோட்டமாக சில முத்தக்காட்சிகள் தென்படுவது ஆறுதல்.
மற்றும் பலர்
சிம்பு, த்ரிஷா தவிர்த்து படத்தில் மனதில் நிற்கும் ஒரே கதாபாத்திரம் முதல் பாதியில் கேமரா மேனாக சிம்பு கூடவே வரும் நபர். மனிதர் டைமிங் காமடியில் பின்னி எடுக்கிறார். முதல் பாதியை தூக்கி நிறுத்தியிருப்பதே இவர் பேசும் வசனங்கள் தான். கே எஸ் ரவிக்குமார், இயக்குனராகவே சில காட்சிகளில் வந்து சென்றாலும் மனதில் நிற்கிறார். காதலுக்கு காதலர்களே சூனியம் வைத்துக்கொள்வதால் இருவரின் பெற்றோருக்கும் பெரிய அளவில் வேலை இல்லை. த்ரிஷாவின் அப்பா மட்டும் அவ்வப்போது ஆங்கிலத்தில் பேசி கடுப்பேத்துகிறார்.
பாடல்கள்
படத்தில் சிறப்பான பாடலான "ஹோசன்னா..." பாடலை தவற விட்டதால் மற்ற பாடல்கள் அதிகம் மனதை கவரவில்லை. சில பாடல்களில் சிம்புவை சுற்றி முக்கால் பேன்ட் போட்ட RAP கூட்டம் ஆடுவதை ரசிக்க முடியவில்லை. மற்றபடி பாடல்கள் அனைத்தும் மென்மையாக இருக்கிறது.
RESULT
காதலை யதார்த்தமாக சொல்லியிருக்கிறார்கள். இன்னும் எதார்த்தமாக காட்டியிருந்தால் முதல்பாதியில் த்ரிஷா திருமணம் செய்து கொள்வதோடு படம் முடிந்திருக்கும். படத்தில் சிம்புவாவது வேறு ஏதாவது ஒரு நல்ல படத்தை எடுத்திருக்கலாம். டென்ட் கொட்டாயில் மண்ணை குமித்து வைத்து பார்ப்பவர்களுக்கு படத்தின் உச்சகட்ட காட்சி புரிந்திருக்க வாய்ப்பில்லை. கூடிய விரைவில் கிளைமாக்ஸ் மாற்றப்படுமென நம்புகிறேன். ஆனால் அது சினிமாத்தனமாகவே இருக்கும்.
காதலர்கள் அவர்களின் இணையோடு பார்த்தால் ரசிக்கலாம். காதலித்தவர்கள் படத்தை பார்க்கலாம். காதலுக்கு துளியும் சம்பந்தமில்லாதவர்கள் படத்தை பார்ப்பது வேஸ்ட்.
விண்ணைத் தாண்டி வருவாயா...? - இல்லை இழப்புதான்
டிக்கட் எடுத்த 70 ரூபாய் இழப்புதான்.
என்றும் அன்புடன்,
NR PRABHAKARAN
NR PRABHAKARAN
|