வணக்கம் மக்களே...
முதல்முறையாக என்னிடமிருந்து ஒரு கிரிக்கெட் பதிவு. பதிவுலகிற்கு வந்ததில் இருந்தே கிரிக்கெட் பதிவு எழுத வேண்டுமென்றொரு அவா. பதிமூன்று வருடங்களாக கிரிக்கெட் பார்த்து வந்தாலும் எனக்கு அதில் பெரிய அளவில் தொழில்நுட்ப ஞானம் கிடையாது. இப்பொழுது கூட என்னுடைய கேள்வியறிவையும் சில தளங்களில் திரட்டிய தகவல்ககளை ஒருங்கிணைத்தும் இந்தப் பதிவை சமர்ப்பிக்கிறேன். கிரிக்கெட் பற்றி தொடர்ந்து பதிவெழுதி வரும் ஞானிகள் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
இன்னும் சில தினங்களில் சாம்பியன்ஸ் லீக் துவங்க இருக்கிறது. இருப்பினும் ஐ.பி.எல் அளவிற்கு சாம்பியன்ஸ் லீக்கிற்கு பெரிய அளவில் ஆரவாரமும் வரவேற்பும் இல்லை. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம், அவற்றில் முக்கியமானது வீரர்கள் பெரும்பாலானாவர்கள் அறிமுகமில்லாதவர்கள். ஆயினும் திறமையில் குறைந்தவர்கள் என்று யாரையும் ஒதுக்கிவிட முடியாது. அப்படிப்பட்ட திறமை நிறைந்த ஆனால் நம்மூர் மக்களுக்கு அதிகம் அறிமுகமில்லாத சில வீரர்களை இந்தப் பதிவின் மூலம் அறிமுகப்படுத்துகிறேன்.
1. பீட்டர் இங்க்ராம் (Peter Ingram)
பார்ப்பதற்கு சிங்கம் படத்தில் வரும் சூர்யாவைப் போல முரட்டுத்தனமாக காட்சியளிக்கும் இவர், சென்ட்ரல் ஸ்டேக்ஸ் அணியின் சீனியர் ப்ளேயர். கிட்டத்தட்ட பத்து வருடங்களாக உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வரும் இவர் சமீபத்தில் வங்காளதேசம் உடனான தொடரில் சர்வதேச அறிமுகம் பெற்றார். இவர் அதிரடியாக ஆடக்கூடிய தொடக்க ஆட்டக்காரர். இந்தத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே சர்வதேச அணியில் இடத்தை தக்க வைத்துக்கொள்ள முடியும் என்பதால் சிறப்பாக விளையாடுவார் என்று நம்பப்படுகிறது.
2. வாக்ன் வான் ஜார்ஸ்வெல்ட் (Vaughn Van Jaarsveld)
ஹைவீல்ட் லயன்ஸ் அணியின் நட்சத்திர வீரர். கிரிக்கெட்டின் மூன்று பரிணாமங்களிலும் ஜொலிக்கும் திறமை படைத்தவர். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் சர்வதேச களம் கண்டார். அந்தத் தொடரில் இவர் பெருமளவில் சோபிக்கவில்லை என்றாலும் உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வீரர்களில் ஒருவர். சமீபத்தில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் தொடரில் அதிக ரன் குவித்தவரும் இவரே.
3. ஆரோன் பிஞ்ச் (Aaron Finch)
கடந்த ஆண்டின் சாம்பியன்ஸ் லீக் போட்டியை உன்னிப்பாக கவனித்தவர்களுக்கு நினைவிருக்கலாம். கடைசி வரை களத்தில் இறக்கப்படாமல் டக்-அவுட்டில் அமர்த்தப்பட்டிருந்த வீரர். அதுமட்டுமில்லாமல் ராஜஸ்தான் ராயல் அணி ஏலத்தில் எடுத்திருக்கும் வீரர். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பொல்லார்ட் எப்படியோ அதுபோல விக்டோரியா அணிக்கு பிஞ்ச். இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடி ஆட்டத்தை திசை திருப்பும் வல்லமை படைத்தவர். இதுவரை சர்வதேச களம் காணாதவர் ஆனால் விரைவில் களம் காணுவார் என்று நம்பப்படுகிறது.
4. ஜான் ஹாஸ்டிங்ஸ் (John Hastings)
இவருடைய கதையும் மேலே குறிப்பிட்டது போல தான். சென்ற ஆண்டு விக்டோரியா அணியில் இடம் பெற்று ஆனால் சாம்பியன்ஸ் லீக்கில் களம் காணாதவர். இவர் ஒரு திறமை மிக்க ஆல்ரவுண்டர். சமீபத்தில் நடந்த உள்ளூர் சீசனில் அனைத்து பரிணாமங்களில் கலக்கோ கலக்கென்று கலக்கியவர். பேட்டிங்கை பொறுத்தவரையில் பிஞ்ச்சை போலவே இறுதிகட்டத்தில் களம் காணுபவர். அவரைப்போல அதிரடியாக விளையாடாவிட்டாலும் அதிரடியாக விளையாடும் சக வீரருக்கு துணை நிற்கும் ஆற்றல் படைத்தவர்.
5. அல்விரோ பீட்டர்சன் (Alviro Pieterson)
தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கும் இவர் ஹைவீல்ட் லயன்ஸ் அணியின் தற்போதைய கேப்டன். திறமையான பேட்ஸ்மேன் என்று சொல்வதை விட திறமையான கேப்டன் என்று சொல்லலாம். எதிரணியின் பலவீனத்தை புரிந்துக்கொண்டு செயல்படுவதில் கெட்டிக்காரர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சர்வதேச களம் கண்ட இவர் அந்த ஆட்டத்திலேயே சதம் அடித்து அசத்தினார்.
6. டேனியல் கிறிஸ்டியன் (Daniel Christian)
ரெட் பேக்ஸ் அணிக்காக விளையாடும் அதிரடி ஆட்டக்காரர், ஆல் ரவுண்டரும் கூட. இயற்கையான ஆல் ரவுண்டர் என்று க்ரிக்கின்போ (Cricinfo) தளத்தால் வர்ணிக்கப்பட்டவர். தற்போதைய ஆஸ்திரேலிய அணியின் டி-20 அணியில் இடம் பெற்றுள்ள வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்டத்தின் தன்மைக்கேற்ப அவ்வப்போது பெளலிங்கிலும் சோபிக்கும் திறமை கொண்டவர். நடந்துமுடிந்த டி-20 உலகக்கோப்பை போட்டியில் மூன்று ஆட்டங்களில் விளையாடினாலும் பேட்டிங் வாய்ப்பு கிடைக்கததால் இவரது திறமை வெளிப்படவில்லை.
7. டேனியல் ஹாரிஸ் (Daniel Harris)
ஆஸ்திரேலிய உள்ளூர் கிரிக்கெட்டின் புகழ்பெற்ற வீரர்களில் ஒருவர். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக ரெட் பேக் அணிக்காக விளையாடி வருபவர். கிரிக்கெட்டில் இவருடைய புனைப்பெயர் "மாஸ்". இதிலிருந்தே மேற்படி நபர் எப்படிப்பட்டவர் என்று உணர்ந்துக்கொள்ளலாம். பேட்டிங்கில் மட்டுமில்லாமல் பீல்டிங்கிலும் புயலாக பாய்ந்து ஓட்டங்களை சேமிக்கும் ஆற்றல் பெற்றவர். சமீபத்தில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட்டில் அணிக்காக அதிக ஓட்டங்களை குவித்து முழு பார்மில் இருக்கிறார்.
8. டேவிட் ஜேகப்ஸ் (David Jacobs)
வாரியர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர், கேப்டன், விக்கெட் கீப்பர் அனைத்தும் இவரே. ஆரம்பகாலத்தில் ஈகிள்ஸ் அணிக்காக விளையாடியவர். தொடர்ந்து உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருபவர். இதுவரை சர்வதேச களம் காணும் வாய்ப்பு கிட்டாதது வருத்தம் தான். விக்கெட் கீப்பிங் திறமையும் இருப்பதால் கூடிய விரைவில் சர்வதேச அணியில் இடம் பிடிக்கக்கூடும்.
9. கிளிப்பி டீகான் (Cliffie Deacon)
ஹைவீல்ட் அணியின் தலைசிறந்த ஆல் ரவுண்டர். பேட்டிங் மற்றும் பெளலிங் இரண்டிலும் சரிசமமான திறமை படைத்தவர். பேட்டிங்கை பொறுத்தவரையில் ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் அதிரடி காட்டக்கூடியவர். வேகப்பந்து வீசி விக்கெட் எடுப்பதில் வல்லவர். விக்கெட்டுக்களை வீழ்த்துவது ஒரு புறமிருந்தாலும் ரன்களை கட்டுபடுத்துவதில் சிறந்தவர். டி-20 பரிணாம கிரிக்கெட்டில் இவரது எகானமி 5.8 என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
10. ஜெமி ஹவ் (Jamie How)
சிறந்த பேட்ஸ்மேன், கிரிக்கெட்டின் மூன்று பரிணாமங்களிலும் சிறந்து விளங்கக்கூடியவர், புத்திசாலித்தனமான கேப்டன் என்று பல்வேறு பெருமைகளை பெற்றவர். அவ்வப்போது சர்வதேச போட்டிகளிலும் தலை காட்டி இருக்கிறார். சமீபத்தில் நடந்த உள்ளூர் கிரிக்கெட்டில் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இருப்பினும் அணியின் கேப்டன் என்ற முறையில் அணியை சிறப்பாக வழிநடத்துவார் என்று தெரிகிறது.
ஏற்கனவே மூன்று ஐ.பி.எல்லில் பார்த்து பழகிவிட்டதால் ஐ.பி.எல் அணி வீரர்களைப் பற்றியும் நம்மூர் வீரர்களைப் பற்றியும் எழுதவில்லை. திறமை இல்லை என்று சொல்ல முடியாது, ஆனால் மேலே குறிபிட்டுள்ள வீரர்களுக்கு இணையாக கயானாவில் வீரர்கள் இல்லை. வயம்பா அணியில் திறமைசாலிகள் இல்லை என்று சொன்னால் இலங்கை பதிவர்கள் என்னை அடிக்க வருவார்கள் என்று தெரியும் ஆனாலும் அவர்களும் நமக்கு ஏற்கனவே பழக்கப்பட்ட வீரர்கள் என்ற காரணத்தினால் எழுதவில்லை.
இதனை தொடர்ந்து நாளையே மற்றுமொரு கிரிக்கெட் பதிவு எழுதும் எண்ணம் உள்ளது. ஆனால் அது உங்களிடமிருந்து வரும் வரவேற்பை பொறுத்தே இருக்கிறது. அதனால் தாராளமாக உங்கள் ஓட்டுக்களை போட்டுவிட்டு பின்னூட்டங்களையும் பதிவு செய்துவிட்டு திட்டவேண்டுமென்று தோன்றினால் கன்னாபின்னாவென்று திட்டிவிட்டும் செல்லுங்கள்.
என்றும் அன்புடன்,
N R PRABHAKARAN
N R PRABHAKARAN
|
6 comments:
இதனை தொடர்ந்து நாளையே மற்றுமொரு கிரிக்கெட் பதிவு எழுதும் எண்ணம் உள்ளது. ஆனால் அது உங்களிடமிருந்து வரும் வரவேற்பை பொறுத்தே இருக்கிறது.
...... Alright! Keep writing!
No submission for Indli....
@ Chitra
வருகை தந்ததற்கும் அனுமதி தந்ததற்கும் நன்றி... இன்ட்லியில் ஏற்கனவே இணைத்துவிட்டேன்... ஆனால் அதற்கு இங்கே இணைப்பு கொடுப்பதில் ஏதோ பிழை ஏற்பட்டுள்ளது... யாருக்காவது தெரிந்தால் உதவுங்களேன்...
எல்லாம் புது முகங்கள், அவர்கள் ஆட்டத்தை பார்த்தால்தான் சொல்லமுடியும்
//இன்ட்லியில் ஏற்கனவே இணைத்துவிட்டேன்... ஆனால் அதற்கு இங்கே இணைப்பு கொடுப்பதில் ஏதோ பிழை ஏற்பட்டுள்ளது..//
நீங்க ஆங்கில பதிவுக்கான ஓட்டு பட்டனை சேர்த்து இருக்கீங்க, தமிழுக்கான ஓட்டு பட்டனை சேருங்கள்
http://ta.indli.com/static/add-indli-voting-widget-blogger-tamil
இங்கு போய் பாருங்கள் தெளிவாக விளக்கி இருக்காங்க. இன்னும் விவரம் வேணும்னா என் Gtalk ல வாங்க arunprasath.gs@gmail.com
@ அருண் பிரசாத்
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நன்பரே... ஆம் நீங்கள் சொன்னது சரிதான்... நான் பார்த்த பக்கத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தி பதிவுகளுக்கான இணைப்புகள் மட்டுமே இருந்தன... என்ன செய்வதென்று தெரியாததால் அதிமேதாவித்தனமாக ஆங்கிலத்திற்கான இணைப்பை கொடுத்துவிட்டு அதில் "en" என்ற வார்த்தைக்கு பதிலாக மட்டும் "ta" என்ற வார்த்தையை இணைத்துக்கொண்டேன்... ஆனால் அது பலனலிக்கவில்லை... சரி இப்பொது மொபைலில் உலவிக்கொண்டிருக்கிறேன், கணினிக்கு வரும்போது நீங்கள் சொன்னபடி முயல்கிறேன்... தகவல் தந்ததற்கு மிக்க நன்றி...
Post a Comment