வணக்கம் மக்களே...
நேற்றைக்கு "அறியாத முகங்கள்" என்ற பெயரில் பெரும்பாலானவர்கள் அறிந்திராத பத்து வீரர்களைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன். நான் எழுதிய அந்த முதல் கிரிக்கெட் பதிவிற்கு போதிய வரவேற்பு கிடைக்காவிட்டாலும் தோற்றுப்போய் விடுவதாக இல்லை. கடைசி பந்து வரை முயற்சி செய்யத்தான் போகிறேன். எனவே முன்னர் திட்டமிட்டது போலவே இன்று அறிந்தும் அறியாமலும் என்ற தலைப்பில் பத்து வீரர்களைப் பற்றி எழுதுகிறேன். ஏன் இந்தத் தலைப்பு...? சில வீரர்களின் பெயரைக் கேட்டதும் எங்கேயோ கேள்விப்பட்டது போல தோன்றும் ஆனால் அதிகம் பரிட்சயம் இருக்காது. அப்படிப்பட்ட நினைவினோரத்தில் இருக்கும் வீரர்களைப் பற்றியதே இந்தப் பதிவு.
1. Mathew Sinclair (Central Stags)
பழம்பெரும் வீரர். சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான முதல் டெஸ்டிலேயே இரட்டை சதமடித்து அதிரடி காட்டினார். சில டெஸ்ட் போட்டிகளில் விளையாடியபின் மறுபடி ஒரு இரட்டை சதம். ஆனால் அதன் பிறகு இவர் சர்வதேச கிரிக்கெட்டில் பெரிதாக எதுவும் சாதிக்காததால் ஓரம் கட்டப்பட்டுவிட்டார். அவ்வப்போது நியுசிலாந்து அணியில் முக்கிய வீரர்களுக்கு எதிர்பாரா காயம் ஏற்படும்போது மாற்றுவீரராக களம் காணுவார். எனினும் இதுவரை தேசிய அணியில் நிரந்தர இடம் பிடிக்க முடியவில்லை.
2. Brandon Diamanti (Central Stags)
டி-20 ஸ்பெஷலிஸ்ட் என்று சொல்லலாம். முக்கியமான தருணங்களில் விக்கெட்டுக்களை வீழ்த்தியும் ஆட்டத்தின் கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தும் அணியின் வெற்றிக்கு பலமாக விளங்கும் ஆல் ரவுண்டர். பெளலிங்கை பொறுத்தவரையில் அவ்வப்போது ரன்களை வாரி இறைத்தாலும் நேர்த்தியாக பந்து வீசும் ஆற்றல் கொண்டவர். மிதமான வேகத்தில் பந்தை ஸ்விங் செய்வதில் கெட்டிக்காரர்.
3. Justin Kemp (Chennai Super Kings)
அற்புதமான ஆல் ரவுண்டர், ஆனால் ஏனோ இதுவரை தோனி இவரை சரிவர பயன்படுத்தவில்லை. முதலில் அதிரடியாக ஆடும் பேட்ஸ்மேனாகவே அறிமுகமானார். பின்னர் காலப்போக்கில் மிதவேகப்பந்து வீசுவதில் திறமை காட்டினார். உள்ளூர் கிரிக்கெட்டில் இங்கிலாந்து கவுண்டி, தென் ஆப்பிரிக்கா, ஐ.பி.எல் என்று அதிக அனுபவம் வாய்ந்தவர். இப்போது துஷாராவுக்கு காயம் ஏற்பட்ட காரணத்தினால் அணியில் சேர்க்கப் பட்டுள்ளார்.
4. Neil McKenzie (Highvield Lions)
முன்னர் குறிப்பிட்ட சின்க்லேர் எப்படியோ அப்படித்தான் இவரும். திறமை இருந்தும் அதிகம் பேசப்படாத வீரர். கிரிக்கெட்டின் மூன்று பரிணாமங்களிலும் தொடர்ந்து உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஆற்றல் படைத்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன். சுழற்பந்துவீச்சை எதிர்கொள்வதில் வல்லவர். தென் ஆப்பிரிக்காவில் இவரைவிட திறமை வாய்ந்த வீரர்கள் நிரம்பி வழிந்ததால் இவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனதென்று சொல்லலாம்.
5. Ryan McLaren (Mumbai Indians)
தென் அப்பிரிக்கா அணியின் கல்லிஸ் போல சீம் பெளலிங்கிலும் மிடில் ஆர்டர் பேட்டிங்கிலும் அசத்தும் திறமை கொண்ட ஆல் ரவுண்டர். சமீபத்திய சீசனில் மும்பை அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்காவின் ஈகிள்ஸ் அணியிலும் இங்கிலாந்தின் கென்ட் அணியிலும் இவர் காட்டிய திறமை இவருக்கு மும்பை அணியில் இடம் வாங்கி தந்துள்ளது.
6. Cameron White (Royal Challengers Bangalore)
பல்வேறு திறமைகளை பெற்ற வீரர். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன், லெக் ஸ்பின்னர், சில நேரங்களில் விக்கெட் கீப்பர் இவ்வாறாக பன்முகம் காட்டுபவர். கொஞ்சம் சிரமப்பட்டு சர்வதேச கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்திருப்பவர், இப்போது ஆஸ்திரேலியாவின் டி-20 துணை கேப்டன். ஆல் ரவுண்டர் என்று சொல்லிக்கொண்டாலும் ஆஸ்திரேலியாவில் போதிய அளவில் பந்து வீச்சாளர்கள் இருப்பதால் இவருக்கு பந்து வீசும் வாய்ப்பு கிட்டுவதில்லை.
7. Callum Ferguson (South Australian Red Backs)
20 வயதில் உள்ளூர் கிரிக்கெட்டில் அறிமுகமான முதல் சீசனிலேயே எக்கச்சக்கமாக ரன்களை குவித்தவர். தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் தேசிய அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவரது போதாத காலம், கடந்த ஆண்டின் சாம்பியன்ஸ் ட்ராபியின் போது கால் மூட்டில் காயம் ஏற்பட்டு இப்போது ஒரு வழியாக மீண்டு வந்திருக்கிறார்.
8. Shane Harwood (Victorian Bushrangers)
தோள்பட்டை காயத்தில் இருந்து மீண்டு வந்திருக்கும் ஒரு பழம்பெரும் வேகப்பந்து வீச்சாளர். ஏற்கனவே விக்டோரியா அணியில் பல பெளலர்கள் இருப்பதால் இவர் பயன்படுத்தப்படுவது சந்தேகமே. எனினும் வயதிற்கு அப்பாற்ப்பட்ட திறமை படைத்தவர். ராஜஸ்தான் அணிக்காக இவர் வீசிய முதல் பந்திலேயே விக்கெட்டை சாய்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்களை கூட ஆட்டம் காண வைப்பவர்.
9. Juan Theron (Warriors)
கிடைத்தற்கரிய பெளலர் என்று சொல்லலாம். டி-20 போட்டியின் இறுதி ஓவர்களில் ரன்களை கட்டுபடுத்தும் விதமாக பந்து வீசி ஆட்டத்தை திசை திருப்பும் வல்லமை கொண்டவர். லைன் அண்ட் லெந்தில் பந்து வீசியும் திடீரென மித வேகத்தில் பந்துவீசி பேட்ஸ்மேனை நிலைகுலைய வைத்துவிடுவார். ஐ.பி.எல்லில் பஞ்சாப் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்ட விளையாடிய முதல் போட்டியிலே ஆட்ட நாயகன் விருதைப் பெற்று அசத்தியவர்.
10. Jehan Mubarak (Wayamba Elevens)
வயம்பா அணியின் தற்போதைய கேப்டன். சரியான நேரத்தில் சோபிக்காததால் தேசிய அணியில் வாய்ப்பை இழந்த போதிலும் தொடர்ந்து வயம்பா அணிக்காக ரன்களை குவித்து வருபவர். ஆப்-ஸ்பின்னிலும் பீல்டிங்கிலும் கூட சிறந்து விளங்குபவர். வயம்பா அணியை இவர் கை ஆளும் விதத்தை கண்ட சில வர்ணனையாளர்கள் இவர்தான் வருங்கால இலங்கை அணியின் கேப்டன் என்று கூறி வருகின்றனர்.
இன்னும் இரு தினங்களில் சாம்பியன்ஸ் லீக் ஆரம்பிக்க இருக்கும் நிலையில் நாளைக்கும் இதைப்போல ஒரு பதிவை எழுத விரும்புகிறேன். ஆனால் என்ன எழுதுவதென்று தெரியவில்லை. நீங்கள் ஏதாவது ஆலோசனை தெரிவித்து அப்படியே மறக்காமல் உங்கள் ஓட்டினையும் போட்டுவிட்டு சென்றால் சிறப்பு.
என்றும் அன்புடன்,
N R PRABHAKARAN
|
8 comments:
Mclaren, Kemp, White இவர்களை பற்றி தெரியும். மற்றவர்கள் ஆட்டத்தை பார்ப்போம்
ம்ம்ம்... வாங்கஜீ நேத்து நீங்க சொன்ன ஓட்டுப்பெட்டி விவகாரத்தை இதுவரை ட்ரை பண்ணவே இல்லை... சாரி... நாளைக்கு என்ன பதிவு எழுதுறதுன்னு சொல்லவே இல்லையே பாஸ்...
நல்ல பதிவு.
நல்ல வீரர்கள் குறித்து ஒரு பகிர்வு.
@ சே.குமார்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குமார்...
நல்ல பதிவு.
நன்றி..,
மரங்களோடு மனிதம் வளர்ப்போம்...
அன்புடன்...S.ரமேஷ்.
@ S.ரமேஷ்
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
இன்னும் இரு தினங்களில் சாம்பியன்ஸ் லீக் ஆரம்பிக்க இருக்கும் நிலையில் நாளைக்கும் இதைப்போல ஒரு பதிவை எழுத விரும்புகிறேன். ஆனால் என்ன எழுதுவதென்று தெரியவில்லை. நீங்கள் ஏதாவது ஆலோசனை தெரிவித்து அப்படியே மறக்காமல் உங்கள் ஓட்டினையும் போட்டுவிட்டு சென்றால் சிறப்பு.
......more on champion league news (like updates) will be good. :-)
அருமையான பதிவு....
Post a Comment