ஆன்லைன் புக்கிங் தந்த ஆதரவில் எந்திரன் படத்திற்கு முதல் நாள் டிக்கெட் கிடைத்தது. ஆனால் வீட்டில் இருந்து கொஞ்சம் தொலைவில் இருக்கும் கொளத்தூர் கங்கா திரையரங்கில் தான் கிடைத்தது. பத்து டிக்கெட்டை எடுத்து வைத்துக்கொண்டு நான் பட்ட பாடு இருக்கே... அய்யுய்யுய்யோ.... சொன்னா நம்ப மாட்டீங்க... வர்றதுக்கு ஆள் இல்லைங்க... எப்படியோ நண்பரின் உறவினர், உறவினரின் நண்பர் என்று எப்படி எல்லாமோ தேடி ஆள் சேர்த்துவிட்டேன். பதிவில் திரைக்கு முன் என்று போட்டு ஒரு பத்தியை இணைப்பதற்காக ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே திரையரங்கிற்கு சென்றுவிட்டேன். ஆனால் பெரிய அளவில் ஆரவாரமில்லை. இரண்டே பேனர்கள் மட்டுமே கட்டியிருந்தனர். விசிலடிச்சான் குஞ்சுகள் சிலர் எதற்காக கத்துகிறோம் என்ற காரணமே தெரியாமல் கத்திக் கொண்டிருந்தனர். அரங்கின் உள் நுழையும் வரை சுற்றிச்சுற்றி வேடிக்கை பார்த்தபடி இருந்தேன். தனிப்பத்தி போடும்படி எதுவும் சுவாரஸ்யமாக நடக்கவில்லை. எனவே நேரடியாக விமர்சனத்திற்கு செல்வோம்....
அதற்கு முன்னால் சில வரிகளை சொல்லியே ஆகவேண்டும். எனக்கு ஷங்கரையும் ரஜினியையும் கொஞ்சம் கூட பிடிக்காது. ஆனால் அதையெல்லாம் தாண்டி படம் மிகவும் பிடித்திருந்தது, திரைக்கதை துரித வேகத்தில் அமைந்திருந்தது, அது மட்டுமில்லாமல் பல கோடி செலவு செய்து பத்து ஆண்டுகள் பாடுபட்டு எடுத்த படத்திற்கு கண்டிப்பாக பாசிடிவ் விமர்சனம் எழுதியே ஆகவேண்டும் என்றெல்லாம் தோன்றியது முதல்பாதி முடியும் வரை. அதன்பிறகு கொஞ்சம் தலை சுற்றியதும், வயிற்றுப்போக்கு ஏற்பட்டதும் ஏன் என்று தெரியவில்லை.
கதைச்சுருக்கம்
விஞ்ஞானி வசீகரன், தனது பத்து வருட உழைப்பில் சகலகலாவல்லவனாக ரோபோ ஒன்றினை உருவாக்குகிறார். அதுபோல பல ரோபோக்களை உருவாக்கி இந்திய ராணுவத்திற்கு பரிசளிக்க வேண்டுமென்பதே அவரது லட்சியம். ஆனால் இதற்கு நேர்மாறான எண்ணம் கொண்டவர் வசீகரனின் விஞ்ஞான குருவான விஞ்ஞானி போஹ்ரா. அழிவு சக்தி கொண்ட ரோபோக்களை உண்டாக்கி தீவிரவாதங்களில் ஈடுபடும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யவேண்டுமென்பதே அவரது விருப்பம். இடையில் இங்கே வசீகரனுக்கும் மருத்துவக்கல்லூரியில் படிக்கும் சனாவுக்கும் காதல். உன் ரோபோ முட்டாள் ரோபோ என்று விஞ்ஞானி போஹ்ரா குற்றம் சாட்டியதால் வசீகரன் ரோபோவுக்கு உணர்வுகளை கற்பிக்க அதற்கும் சனா மீது காதல் வருகிறது. வசீகரனுக்கும் ரோபோவுக்கும் நடக்கும் காதல் தகராறில் ரோபோவை உடைத்து குப்பையில் போடுகிறார் வசீகரன். விஞ்ஞானி போஹ்ரா குப்பையை அள்ளிக்கொண்டு வந்து கேடு கெட்ட சிப் ஒன்றினை சொறுக ரோபோ மனித இனத்திற்கு எதிராகி பல உயிர்களை கொன்று குவிக்கிறது விஞ்ஞானி போஹ்ரா உட்பட. கடைசியில் சனாவுடன் கை கோர்ப்பது வசீகரனா ரோபோவா என்பதே மீதிக்கதை. என்னது... தலை சுற்றுகிறதா... எனக்கும் அப்படித்தாங்க இருந்தது.
விரிவான கதை: (திரையரங்கில் தான் பார்ப்பேன் என்று அடம் பிடிப்பவர்கள் அடுத்த இரண்டு பத்திகளை ஸ்கிப் செய்துவிடவும்)
முதல் பாதி முழுக்க சிட்டி செய்யும் அதிசயங்களை வைத்து ஜாலியாக கதையை நகர்த்தியிருக்கிறார்கள். ரஜினி உருவாக்கிய ரோபோவின் பெயர் தான் சிட்டி. வழக்கமாக ரஜினி ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்துகொண்டும் ஒரு குத்துமதிப்பாக அரசியல் வரிகளை இணைத்து ரசிகர்களை கிறுக்கர்களாகவும் மாற்றும் ஒப்பனிங் சாங் இந்தப் படத்தில் இல்லை. அதற்கு பதிலாக டைட்டில் பாடலாக புதிய மனிதா பாடலும் பேக்ரவுண்டில் ரஜினி எந்திரனை அசெம்பிள் செய்யும் காட்சியும் சிறப்பாக பொருந்தியிருந்தது. டைட்டிலில் கலாநிதி மாறன் பெயர் போட்டதும் ஏதோ இவர்களும் கலாநிதி மாறனும் ஒரே தட்டில் சாப்பிட்டவர்கள் போல ஒரு கும்பல் ஓ வென்று கத்தி உயிரை வாங்கியது. இவ்வாறாக ரோபோ செய்வதில் ரஜினி பிஸியாக இருக்க காதலி ஐஸ் கோபித்துக்கொள்கிறார். ஐஸை சமாதானப்படுத்த ரஜினி போக அங்கே சில முத்த பரிமாற்றங்கள். (நோ... நோ... ரசிகர்கள் யாரும் கோபப்பட வேண்டாம்... ஒரு தாத்தா தனது பேரக்குழந்தையின் மீது கொண்ட பாசத்தில் முத்தம் கொடுத்ததாக நினைத்துக்கொள்வோம்). அப்படியே கட் பண்ணா பிரேசில் பாலைவனத்துல ரஜினியும் ஐஸும் காதல் அனுக்கள் டான்ஸ் ஆடுறாங்க. சும்மா சொல்லக்கூடாது... உண்மையில் பாலைவனத்திற்கு நடுநடுவே ஏரிகள் அமைந்த அந்த லொகேஷன் படு சூப்பர். அடுத்த காட்சியில் எந்திரனை விஞ்ஞானிகள் மத்தியில் ரஜினி அறிமுகப்படுத்த உடன் இருக்கும் ஐஸ் இம்ப்ரெஸாகி எந்திரனை இரண்டு நாட்களுக்கு அவரது வீட்டுக்கு அழைத்து செல்கிறார். பரீட்சைக்கு படிக்கும் ஐஸை தொந்தரவு செய்யும் பக்கத்து வீட்டு பக்கிகள், சவுண்ட் சர்வீஸ் கும்பல் ஆகியோரை அடித்து ஹீரோயிசம் காட்டுகிறார். பரீட்சைக்கு பின்நவீனத்துவ முறையில் பிட் கொடுத்து பாஸாக்குகிறார். பரீட்சை முடிந்து திரும்பும்போது மின்சார ரயிலில் அடியாள் கும்பலுடன் ஒரு பைட் சீன். மேற்படி சீனில் கிராபிக்ஸ் ரொம்பவே தூக்கல். குழந்தைகள் அதிகம் ரசிப்பார்கள். எந்திரனின் ஆற்றல் ஆபத்தானது என்று காரணம் கூறி அதனினை அப்ரூவ் செய்ய மறுக்கிறார் விஞ்ஞானி வில்லன். பின்னர் ஒரு தீ விபத்தில் எந்திரனை வைத்து ரஜினி சாகசங்கள் நிகழ்த்திக்காட்ட முயன்று அது விபரீதத்தில் முடிகிறது. அதற்குப்பின் எந்திரனுக்கு ஆறாவது அறிவாக உணர்ச்சிகளை கற்றுத்தருகிறார் ரஜினி. உணர்ச்சிகளை கற்றுக்கொண்ட எந்திரன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருக்கும் ஒரு கர்ப்பிணிக்கு சுகப்பிரசவம் பார்க்கிறார். உணர்ச்சிப்பூர்வமான அந்த காட்சி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த சம்பவம் காரணமாக ஐஸ் உணர்ச்சிவசப்பட்டு எந்திரனுக்கு முத்தம் கொடுக்க, எந்திரனுக்கு லவ் மூட் ஸ்டார்ட் ஆகிருதுங்க. இடைவேளை.
இடைவேளை முடிந்ததும் ஏதோ கொசு மருந்து விளம்பரம் போட்டுவிட்டார்கள் என்றே எண்ணினேன். ஐஸை கடித்த கொசுவை எந்திரன் விரட்டி பிடிப்பதும் கொசு தங்களுக்குள்ளாக பேசிக்கொள்வதும் மொக்கை காமெடி. ஐஸின் பிறந்தநாள் விழாவில் ரஜினியும் எந்திரனும் ஐஸை போட்டி போட்டு காதலிக்க ஒரு கட்டத்தில் எந்திரன் ஐஸுக்கு முத்தம் கொடுத்து விடுகிறது. (யூ டூ ப்ரூட்டஸ்). ஐஸை தானும் காதலிப்பதாக சொல்லும் எந்திரனிடம் ரஜினியும் ஐஸும் சேர்ந்து யதார்த்தத்தை உணர்த்துகிறார்கள். எனினும் காதலை கைவிட முடியாமல் தவிக்கும் எந்திரனை உருவாக்கிய ரஜினியே அழித்து விடுகிறார். சந்தர்ப்பம் பார்த்து காத்திருக்கும் வில்லன் உடைந்து போன பாகங்களில் இருந்து மீண்டும் எந்திரனை உருவாக்கி அதில் அழிவு சக்தி கொண்ட சிப் ஒன்றினை இணைத்துவிடுகிறார். அதன் பிறகு சுமார் ஒரு மணி நேரத்திற்கு சிட்டியின் அட்ராசிட்டி. ஹாலிவுட் படங்களில் வருவது போல அட்டகாசமான கிராபிக்ஸ் காட்சிகள். (ராம நாராயணனின் குட்டிப் பிசாசு படத்தில் வருவது போல என்றுகூட சொல்லலாம்). நீண்ட நெடிய கிளைமாக்ஸ் காட்சிக்குப்பின் ரஜினி எந்திரனின் உடலில் இருந்த அழிவுசக்தி சிப்பை கழட்டி எரிய, கட் பண்ணா கோர்ட். (அட... வழக்கமா தமிழ் சினிமாக்கள் அங்க தானப்பா முடியும்). இறுதிக்காட்சியில் ரஜினியும் ஐஸும் இணைய எந்திரனை மட்டும் பிரித்து எறிந்துவிடுகிறார்கள். கடைசியாக மனிதர்களின் கோபம், பொறாமை போன்ற உணர்வுகள் பற்றி எந்திரன் சொல்லும் மெசேஜ் நன்றாக இருந்தது.
கிராபிக்ஸ்:
படத்தின் நாயகன் கிராபிக்ஸ் தான் ரஜினி எல்லாம் அப்புறம் தான். எது கிராபிக்ஸ் எது உண்மை என்று கண்டுபிடிக்க முடியாதபடி செய்வதே உண்மையான கிராபிக்ஸ். அதை கச்சிதமாக செய்திருக்கிறார்கள் குழுவினர். இவர்களுக்கு உடந்தையாக கலை இயக்குனர் சாபு சிரிலும் கலக்கி எடுத்திருக்கிறார். படத்தில் ரஜினி ஸ்டைல் என்று சொல்லிக்கொள்ளும் பலதையும் கிராபிக்ஸ் மூலமே செய்திருக்கிறார்கள் என்பதால் ரஜினி ரசிகர்கள் ரொம்பவும் சிலிர்த்துக்கொள்ள வேண்டாம்.
ரஜினி:
விஞ்ஞானி வசீகரனாகவும் ரோபோ சிட்டியாகவும் இரட்டை வேடம். இருப்பினும் வசீகரன் கதாப்பாத்திரத்தை மட்டுமே ரஜினியாக பார்க்க முடிகிறது. வழக்கமாக ரஜினி மனிதராக வந்து செய்யும் சாகசங்களை எல்லாம் இந்தப் படத்தில் ரோபோவாக வந்து செய்கிறார். ஷங்கரின் பத்து வருட கனவு நிறைவேறியதா என்று தெரியவில்லை ஆனால் ரஜினியின் பத்து வருட ஐஸ் கனவு இந்தப் படத்தில் நிறைவேறியிருக்கிறது.
ஐஸ்:
இந்தப் படத்தில் ஐஸுக்கு எதிர்பார்த்ததை விட முக்கியமான வேடம். ஐஸை பார்த்ததும் ரோபோவுக்கே காதல் வரும்போது நமக்கு வராதா. ஐஸின் உடை சம்பந்தப்பட்ட விஷயத்தில் மணி ரத்னத்திற்கு நான் ஒன்றும் சளைத்தவன் அல்ல என்று ஷங்கர் நிரூபித்திருக்கிறார்.
மற்றும் பலர்:
படத்தின் வில்லன் யாரோ டேனி டென்சொன்பா என்று சொன்னார்கள். ஆனால் அவர் சுத்த டம்மி பீசுங்க. எந்திரனுக்கு ஜட்டி மாட்டி விடும் உதவியாளர்களாக கருணாசும் சந்தானமும். சந்தானத்தை அநியாயத்துக்கு வேஸ்ட் பண்ணியிருக்காங்க. கொச்சின் ஹனீபாவும் கலாபவன் மணியும் தலா ஒரு மொக்கை காட்சியில் வந்து செல்கிறார்கள். பீட்டர் ஹெயினும் சாபு சிரிலும் ஆளுக்கொரு காட்சியில் முகம் காட்டுகிறார்கள்.
இசை & வசனம்:
இசையை பற்றி என்ன சொல்வதென்றே தெரியவில்லை ஏனென்றால் ரசிகர்கள் போட்ட கூச்சலில் ஒன்றையும் ரசிக்க முடியவில்லை. ஆனால் கண்டிப்பாக ரகுமான் கலக்கி இருப்பார் என்று புதிய மனிதா டைட்டில் இசையை கேட்ட போதே உணர முடிந்தது. சுஜாதாவின் வசனங்களும் அதுபோல தான். இரைச்சலில் ரசிக்க முடியவில்லை. இவர்கள் இவருக்காகவே பிறிதொரு நாளில் ரசிகர்கள் கூட்டம் ஆடி ஓய்ந்தபிறகு நைட்ஷோ பார்க்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டேன்.
எனக்குப் பிடித்த காட்சி:
ஐஸ் பரிட்சைக்காக படித்துக்கொண்டிருக்கும்போது பக்கத்தில் இருக்கும் மாரியாத்தா கோவிலில் சவுண்டாக பாடலை ஒலிபரப்பி இம்சை கொடுக்கிறது ஒரு கும்பல். அதை தட்டி கேட்கப்போகும் எந்திரன் அவர்களுடன் சண்டை போடுகிறார். அப்போது இரண்டே இரண்டு கைகளில் கத்தி, அரிவாள் என்று பல்வேறு ஆயுதங்களுடன் காட்சி அளிக்கும் எந்திரனை பார்த்து பெண்கள் சாமியாடுவது போலவும் சிலிர்ப்பது போலவும் காட்டி இருந்தது சிறப்பாக இருந்தது.
இந்தப் பதிவிற்கு ஏன் இந்தப் பெயர் வைத்தேன் என்று கேட்கிறீர்களா...? கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்... இந்தப் படத்தில் ரஜினி தான் ஹீரோ என்று சொல்கிறார்கள். ஆனால் 90 சதவீதம் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் கிராபிக்ஸ். ஐஸ் சம்பந்தப்பட்ட சில ரொமான்ஸ் காட்சிகளில் மட்டும் ரஜினி டூப் - கிராபிக்ஸ் எதுவும் இல்லாமல் நடித்திருப்பார் போல. பேய்கள் பற்றி ரஜினியும் வடிவேலும் பேசிக்கொள்ளும் சந்திரமுகி காட்சியை கொஞ்சம் நினைவுக்கு கொண்டு வாருங்களேன். அந்தக் காட்சியில் இருந்த அந்த ஒரிஜினாலிடி இந்தப் படத்தில் சிற்சில காட்சிகளில் மட்டுமே காண முடிந்தது. எனவே தான் சொல்கிறேன்...
எந்திரன் - உணர்ச்சிகள் இல்லை....!
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
19 comments:
எந்திரன் அருமையாக இருக்குமோ உடனே பார்க்க வேண்டுமோ என குழம்பி இருந்தேன். நல்லவேளை எந்திரன் டிக்கெட் விலை குறையும் வரை காத்திருக்கலாம் என முடிவெடுக்க இந்த பதிவு உதவியது.
good and straight forward review from a neutral person....
The only thing Tamilians need to *fear* is "SUN TV"
@ சுதன்
எப்படியும் ரஜினி ரசிகர்கள் திட்டி பின்னூட்டம் போடுவார்கள் என்று
கலங்கிக்கொண்டிருந்தேன்... நல்லவேளையாக முதல் பின்னூட்டத்தை நல்ல விதமாக
எழுதிவிட்டீர்கள்... நன்றி...
யதார்த்தமான விமர்சனம். நன்றாக இருந்தது.
/********ஷங்கரின் பத்து வருட கனவு நிறைவேறியதா என்று தெரியவில்லை ஆனால் ரஜினியின் பத்து வருட ஐஸ் கனவு இந்தப் படத்தில் நிறைவேறியிருக்கிறது.
**********/
lol :D
/**********இந்தப் படத்தில் ரஜினி தான் ஹீரோ என்று சொல்கிறார்கள். ஆனால் 90 சதவீதம் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் கிராபிக்ஸ்*********/
நெத்தியடி !!!
@ getch
i think its காவியத்தலைவன் Thanks for reading my post and writing this comment...
@ ramalingam
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
@ Anonymous
இவ்வளவு சொன்ன தங்களது பெயரையும் சொல்லியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்... Anyway வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
Hi Prabha!!
Just read this: http://tamil.webdunia.com/entertainment/film/gossip/1009/20/1100920034_1.htm
Its a sample to validate my point: "Fear SUN TV"
Where is Tamilnadu heading towards...
If that is not enough consider reading this friend:
90% of theaters in TN are controlled by Kalaignar family of these 30% by Sun group
http://in.news.yahoo.com/248/20100907/1585/tnl-karuna-s-family-rules-tn-airwaves.html
நன்றி தோழர் படத்தின் கதையை உங்கள் பாணியில் சொன்னதற்கு. விமர்சனம் அபாரமாக இருந்தது. நல்லவேளை என்ன முன்னாடியே தெளிவுபடுத்திட்டீங்க
Its time to read the truth
read this: http://bit.ly/flop_enthiran
or this: http://bit.ly/flop_enthiran2
இந்த படத்தை பார்பதற்கு பதிலாக சுட்டி டிவி பார்க்கலாம் .......
ஈரை பேனாக்கி,பேனை பெருமாளாக்குவதில் திரைத்துறையினர் மகா புத்திசாலிகள். என்னங்க பெரிய எந்திரன். கதையை சிம்பிளா சொல்லனும்னா.... வரம் கொடுத்தவன் தலையிலேயே கைவைப்பது என்ற பழமொழி தாங்க இதன் கதை கரு .
இந்த படம்னால 50 ரூபா + time waste ஆகிருச்சு :(
அநேகமா ரஜினியோட "விக்குகே" 100 கோடி செலவு பண்ணி இருப்பாங்கன்னு நினைக்கிறேன்
அதற்கு முன்னால் சில வரிகளை சொல்லியே ஆகவேண்டும். எனக்கு ஷங்கரையும் ரஜினியையும் கொஞ்சம் கூட பிடிக்காது. ஆனால் அதையெல்லாம் தாண்டி படம் மிகவும் பிடித்திருந்தது,
ungka உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு
. ஐஸின் உடை சம்பந்தப்பட்ட விஷயத்தில் மணி ரத்னத்திற்கு நான் ஒன்றும் சளைத்தவன் அல்ல என்று ஷங்கர் நிரூபித்திருக்கிறார்.
தூள்
எது கிராபிக்ஸ் எது உண்மை என்று கண்டுபிடிக்க முடியாதபடி செய்வதே உண்மையான கிராபிக்ஸ்.
அது அது
ரஜினி ஸ்டைல் என்று சொல்லிக்கொள்ளும் பலதையும் கிராபிக்ஸ் மூலமே செய்திருக்கிறார்கள் என்பதால் ரஜினி ரசிகர்கள் ரொம்பவும் சிலிர்த்துக்கொள்ள வேண்டாம்.
நக்கலு?
பழுதில்லா ,நல்ல தராசில் நிறுத்து எடை போட்டிருக்கிறீர்கள்.
//(நோ... நோ... ரசிகர்கள் யாரும் கோபப்பட வேண்டாம்... ஒரு தாத்தா தனது பேரக்குழந்தையின் மீது கொண்ட பாசத்தில் முத்தம் கொடுத்ததாக நினைத்துக்கொள்வோம்). // தப்பு, தப்பு தாத்தா பாசத்துல பேத்தி முத்தம் கொடுத்தார் எனபது சரியாக இருக்கும். [நோ பரிமாற்றம்,ஐஸ் தான் முத்தம் கொடுத்தார், ரஜினி கொடுக்க வில்லை.] //கொச்சின் ஹனீபாவும் கலாபவன் மணியும் தலா ஒரு மொக்கை காட்சியில் வந்து செல்கிறார்கள். பீட்டர் ஹெயினும் சாபு சிரிலும் ஆளுக்கொரு காட்சியில் முகம் காட்டுகிறார்கள்.// கொச்சின் ஹனீபாவின் ட்ராபிக் போலீஸ் காட்சி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பீட்டர் ஹெயினும் சாபு சிரிலும் எந்த காட்சியில் வருகிறார்கள்? [நான் அவர்களைப் பார்த்ததே இல்லை, யார் என்று தெரியவில்லை. ஹி.... ஹி.... ஹி.... ]
//ஆனால் 90 சதவீதம் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் கிராபிக்ஸ். // கிராபிக்ஸ் இருக்குதுன்னு தெரியும், ஆனா இந்த அளவுக்கா? புதிய செய்தி, ஆச்சரியமாக இருக்கிறது! // ஷங்கரின் பத்து வருட கனவு நிறைவேறியதா என்று தெரியவில்லை ஆனால் ரஜினியின் பத்து வருட ஐஸ் கனவு இந்தப் படத்தில் நிறைவேறியிருக்கிறது.// ஹா..ஹா..ஹா..ஹா.... இவரு சாமியாரப் போகபோறேன்னு சொல்லிக்கிட்டு அடிக்கடி அவரோட ரசிகர்களைத் தூங்க விடாம பண்ணிக்கிட்டு இருக்காருங்க. இமய மலைக்குப் போயி கரடி கூட நுழைய பயப்படும் குகைக்குள்ள உட்க்கார்ந்து கிட்டு ஐஸ் முத்தம் பத்தி நினைச்சுகிட்டு..... ஓம்.. ஐஸே நமஹா, ஐஸாயா நமஹா.... என்று பஜனை பண்ணப் போகிறார். ஹா......ஹா......ஹா......லேட் பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும், எனக்கு உங்கள் பிளாக் இப்பத்தானே பரிச்சயம் ஆகியிருக்கு, உங்க பதிவுகள் எல்லாம் தேடித் தேடி படிச்சிகிட்டு இருக்கேன். ஹா....ஹா....ஹா....ஹா....]
@ Jayadev Das
// தப்பு, தப்பு தாத்தா பாசத்துல பேத்தி முத்தம் கொடுத்தார் எனபது சரியாக இருக்கும். [நோ பரிமாற்றம்,ஐஸ் தான் முத்தம் கொடுத்தார், ரஜினி கொடுக்க வில்லை.] //
ஆமா... கரெக்டுதான் ஐஸ் தான் கொடுத்தாங்க... இதுவும் நம்ம பதிவில் ஒரு இயக்கப்பிழை...
// பீட்டர் ஹெயினும் சாபு சிரிலும் எந்த காட்சியில் வருகிறார்கள்? [நான் அவர்களைப் பார்த்ததே இல்லை, யார் என்று தெரியவில்லை. ஹி.... ஹி.... ஹி.... ] //
பீட்டர் ஹெயின் ரயில் சண்டைக்காட்சியில் அடியாட்கள் கும்பலில் ஒருவராக வருவார்... சாபு சிரில் ஆயுத ப்ரோக்கராக வருவார்...
// கிராபிக்ஸ் இருக்குதுன்னு தெரியும், ஆனா இந்த அளவுக்கா? புதிய செய்தி, ஆச்சரியமாக இருக்கிறது! //
உண்மைதான்... நீங்கள் ஹாலிவுட் படம் நார்னியா பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்... அதாவது ஒரு சிங்கம் செய்யமுடியாத விஷயங்களை எல்லாம் கிராபிக்ஸ் மூலம் செய்ய வைத்திருப்பார்கள்... ஆனால் துளியளவும் கிராபிக்ஸ் என்று தெரியாதபடி தத்ரூபமாக இருக்கும்... ரஜினியும் ஒரு சிங்கம்னு நமக்கெல்லாம் தெரியும்தானே :)))
// பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும், எனக்கு உங்கள் பிளாக் இப்பத்தானே பரிச்சயம் ஆகியிருக்கு, உங்க பதிவுகள் எல்லாம் தேடித் தேடி படிச்சிகிட்டு இருக்கேன் //
தாராளமா படிங்க... ஆனால் பழைய இடுகைகள் சில மொக்கைத்தனமாக இருக்கும்... சில கோணல் பார்வைகள் இருக்கும்... தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்... எந்த இடுகையில் நீங்கள் பின்னூட்டம் போட்டாலும் அது எனது மெயில் பாக்ஸுக்கு வந்துவிடும்... அதனால் நிச்சயமாக பார்த்து பதிலளிப்பேன்...
Post a Comment