15 January 2011

கருத்துப் பொங்கல் (அ) தத்துவப் பொங்கல்

வணக்கம் மக்களே...

தமிழ் புத்தாண்டு முதல் நாளே கமர்ஷியல் பக்கம் ஓட விரும்பாமல் பெரியார் கருத்துக்களோடு இந்த சிறியவனின் கருத்துக்களையும் கலந்து ஒரு கருத்துப் பொங்கலாக உங்கள் முன்பு படைக்கிறேன். ஆதரவு தாருங்கள்...

உழவர்களுக்கு ஒரு சல்யூட்
வேளாண்மையையும் அறுவடையையும் கொண்டாடும் பண்டிகையே பொங்கல் பண்டிகை. எனவே இது உழவர்த் திருநாள் என்று அழைக்கப்படுகிறது. பல்வேறு நாடுகளில் ஹார்வெஸ்ட் பெஸ்டிவல் என்று சொல்லப்படுவதன் கருத்தும் இதுதான். அவங்க சேற்றில் கால் வைத்தால் தான் நம்ம சோற்றில் கை வைக்கமுடியும் என்பது மறுக்க முடியாத உண்மை. உழவர்களே... நான் உண்ணும ஒவ்வொரு பருக்கை சோற்றிலும் உங்கள் ரத்தம் இருக்கிறது. உங்களுக்கு தலை வணங்குகிறேன். என்னைப் பொறுத்தவரையில் தை ஒன்றும் மே ஒன்றும் ஒன்றுதான்.

மற்ற பண்டிகைகள் vs பொங்கல்
இந்துக்கள் தீபாவளி, பிள்ளையார் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி, சரஸ்வதி பூஜை, மகாசிவராத்திரி என்று நூற்றுக்கணக்கான பண்டிகைகளை கொண்டாடுகிறார்கள். அவற்றில் தமிழனுக்கு, தமிழ்ச் சமுதாயத்திற்கு, தமிழன் பண்பிற்கு, தமிழன் வரலாற்று நடப்புக்கு பொருந்தும் ஒரு பண்டிகை உண்டு என்றால் அது பொங்கல் மட்டுமே. எனவே இது தமிழர்த் திருநாள் என்று வழங்கப்படுகிறது. சொல்லப்போனால் இது இந்துக்கள் மட்டும் கொண்டாடும் பண்டிகையே அல்ல. உலகத்தமிழன், ஏன் உழவுக்கும் உறவுக்கும் நன்றி செலுத்த நினைக்கும் யார் வேண்டுமானாலும் கொண்டாடலாம்.

பொங்கலும் சங்கராந்தியும் ஒன்றா...?
தமிழன் பண்டிகையான பொங்கலை ஒரு சிலர் தங்கள் சாதி சுயநலத்திற்காக திருத்தி கற்பனை செய்து இதை சங்கராந்திப் பண்டிகை என்று ஆக்கி இதில் பல மூடநம்பிக்கைகளைப் புகுத்திவிட்டார்கள். இந்திரன் பண்டிகை என்றும் அதற்குக் காரணம் வெள்ளாண்மைக்கு முக்கிய ஆதாரமான நீரை (மழையை)ப் பொழிகிறவன் இந்திரன் ஆதலால் இந்திரனைக் குறிப்பாய் வைத்து, விவசாயத்தில் விளைந்து வெள்ளாண்மையாகியதைப் பொங்கி (சமைத்து) மழைக் கடவுளாகிய இந்திரனுக்கு வைத்துப் படைத்து பூசிப்பது என்றும் கதை கட்டிவிட்டார்கள்.

இந்தக்கதையை இதோடு விட்டு வைக்கவில்லை. மேலும் படிக்க...

தமிழ் புத்தாண்டு தை ஒன்றா...? சித்திரை ஒன்றா...?
சிலர் கருணாநிதி அறிவித்தார் என்ற ஒரே காரணத்துக்காக தை ஒன்றை தமிழ் புத்தாண்டாக ஏற்றுக்கொள்வதில்லை. எனக்கென்னவோ இது அடிமுட்டாள்த்தனமாக தோன்றுகிறது. நல்ல விஷயத்தை யார் செய்தாலும் அது நல்ல விஷயம் தானே. ஆண்டாண்டு காலமாக நம்மை அடக்கி ஆண்டுவந்த சமூகம் சொல்லி சித்திரை ஒன்றை தமிழ் புத்தாண்டென்று கொண்டாடி வந்தோம். இந்த போகித் திருநாளோடு அந்த எண்ணங்களை எரித்துவிட்டு, எறிந்துவிட்டு இனி தைத்திருநாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுவோம்.

உறவுகளை கொண்டாடுங்கள்
திராவிட பண்டிகையோ, ஆரியப் பண்டிகையோ... சாலமன் பாப்பையா பட்டிமன்றம், நடிகையின் மனம் திறந்த பேட்டி, போன வாரம் வெளியான புதுப்படங்கள் இப்படித்தான் போகிறது நம்ம பொழுது. பொழுதுபோக்கு என்பதை தவறு என்று கூறமாட்டேன். ஆனால் அதைத்தான் மற்ற நேரமும் செய்கிறோமே. பண்டிகைகளின் அன்றாவது அண்டை வீடுகளுக்கும், உறவினர் வீடுகளுக்கும் குடும்பத்துடன் சென்று நட்பு பாராட்டி உறவு கொண்டாடி சமத்துவப் பொங்கலாகவும் சந்தோஷப் பொங்கலாகவும் கொண்டாடுங்கள்.

நன்றி: தமிழ் ஓவியா (உங்கள் சேவை என்றென்றும் தொடரட்டும்)
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

61 comments:

எல் கே said...

உங்களுக்குப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Pari T Moorthy said...

//உழவர்களே... நான் உண்ணும ஒவ்வொரு பருக்கை சோற்றிலும் உங்கள் ரத்தம் இருக்கிறது. உங்களுக்கு தலை வணங்குகிறேன்.//
உண்மை.......இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.....

ஆதவா said...

என்னதான் சொல்லுங்க , சித்திரை 1 தான் புத்தாண்டு... இப்பொழுது தைத்திங்களை யாருமே புத்தாண்டாகக் கொண்டாடுவதில்லை.

உலக சினிமா ரசிகன் said...

பொங்கல் வாழ்த்துக்கள்.என் மனது சித்திரை திருநாளைத்தான் புத்தாண்டாக நினைக்கிறது.இந்த நல்ல பழக்கத்தை விடமுடியவில்லை.

முத்தரசு said...

பொங்கலோ பொங்கல் வாழ்த்துக்கள் - கலக்கல் கருத்து பொங்கல் - உறவுகளை கொண்டாடுங்கள் பிடிச்சிருக்கு

வருண் said...

பொங்கல் வாழ்த்துக்கள்!

காவலன் பார்க்காம எங்கே என்ன பண்ணுறீங்க?

pichaikaaran said...

நாளை புரட்சி தலைவி ஆட்சிக்கு வந்தால் அவர் புத்தாண்டாக இன்னொரு தினத்தை அறிவிப்பார் . புரட்சிகலைஞரும் ஒரு ஐடியா வைத்திருக்க கூடும் . எனவே நான் வாழ்த்து எதையும் சொல்லபோவதில்லை

Harini Resh said...

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.
http://harininathan.blogspot.com/2011/01/blog-post_15.html

எப்பூடி.. said...

உங்களுக்குப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

எப்பூடி.. said...

எனது face book ஸ்டேட்டஸ் இதுதான்;

உலகத்தின் ஏதாவதொரு மூலையில் யாராவது ஒருவராவது கருணாநிதிமேல தம்மாத்துண்டு நன்மதிப்பாவது வச்சிருந்தீங்கென்னா அவங்களுக்கு "தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்"

மிகுதி அனைவருக்கும் "தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்"

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நியாயமான கருத்துக்கள்....!

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

உங்களுடைய தைரியத்தைப் பாராட்டுகிறேன்!

ஜெய்லானி said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !! :-)

Unknown said...

Good post prabhakaran.. Happy pongal.. Ennala vote poda mudiyala.. Konjam neram kalichu varean..

Prabu Krishna said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

yeskha said...

உங்களுக்கு எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு.. அதைக்கேட்டுலாம் வாங்காதீங்க... பொங்கல் வாழ்த்துக்கள்.

Unknown said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பரே...... பொங்கல் அன்று அருமையான கருத்துக்கள்... இனி அடிக்கடி வருகின்றேன்

middleclassmadhavi said...

மறுபடியும் உங்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துகளைப் பதிவிடுகிறேன்

மாணவன் said...

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எனதினிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Unknown said...

உங்களுக்கு எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

NKS.ஹாஜா மைதீன் said...

இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்....

உங்கள் கருத்தும் நல்ல பொங்கியிருக்கு....

Ram said...

கண்டிப்பாக நீங்கள் சொன்ன உழவரை பற்றிய கருத்துகளை மதிக்கிறேன்.. ஏற்கிறேன்.. ஆனால் தை 1றை தமிழ் புத்தாண்டாக நீங்கள் ஏத்துகொண்டுள்ளீர் மகிழ்ச்சி.. ஆனால் அது நல்லது என்று எதனால் சொல்கிறீர்கள்.??? நல்லதை யார் சொன்னாலும் ஏத்துகொள்ளலாம்.. ஆனால் இது நல்லது என்பது எதை வைத்து.?
//நம்மை அடக்கி ஆண்டுவந்த சமூகம் //
எந்த சமூகத்தை பற்றி விளிக்கின்றீர்.??? நம் சமுதாயமே இதை வரையறுத்தது.. நம்மை அடக்கி ஆண்ட எவரும் சொல்லவில்லை.. நீங்கள் இதை பற்றி இன்னும் தெளிவாக தெரிந்துகொள்ள என் நண்பரின் பதிவுலகத்தை கொஞ்சம் எட்டி பாருங்கள்...

http://thiru7m.blogspot.com/2011/01/blog-post_13.html

தவறாக எதுவும் கூறவில்லை என நினைக்கிறேன்.. அப்படி தவறாக இருந்தால் மன்னிக்கவும்..

எஸ்.கே said...

இனிய மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

Anonymous said...

பொங்கல் வாழ்த்துக்கள்.

பொன் மாலை பொழுது said...

அனைவருக்கும்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

சி.பி.செந்தில்குமார் said...

கலக்கல் போஸ்ட்

Sivakumar said...

பொங்கல் நல்வாழ்த்துகள் பிரபா!!

பழூர் கார்த்தி said...

பொங்கல் வாழ்த்துக்கள்!!

<<>>

சமத்துவ, சந்தோஷ பொங்கலாக கொண்டாடுவோம் என்ற உங்கள் கருத்தில் எனக்கும் உடன்பாடே!!

<<>>

பொங்கல் நாளை தமிழ் வருடப் பிறப்பாக பெரும்பான்மையான மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை..

Anonymous said...

// அவற்றில் தமிழனுக்கு, தமிழ்ச் சமுதாயத்திற்கு, தமிழன் பண்பிற்கு, தமிழன் வரலாற்று நடப்புக்கு பொருந்தும் ஒரு பண்டிகை உண்டு என்றால் அது பொங்கல் மட்டுமே. எனவே இது தமிழர்த் திருநாள் என்று வழங்கப்படுகிறது. //

அதென்ன தமிழர் திருநாள்..
நீங்கள் மட்டும் இனவாரியா மனுசனப் பிரிக்கலாமா ?
உலகத்துல தமிழ் பேசுறவனத் தவிர வேற எவனும் விவசாயம் செய்யுறதில்லையா ?
பேச வந்திட்டானுக....

// தமிழ் புத்தாண்டு – தை ஒன்றா...? சித்திரை ஒன்றா...?
சிலர் கருணாநிதி அறிவித்தார் என்ற ஒரே காரணத்துக்காக தை ஒன்றை தமிழ் புத்தாண்டாக ஏற்றுக்கொள்வதில்லை. எனக்கென்னவோ இது அடிமுட்டாள்த்தனமாக தோன்றுகிறது. நல்ல விஷயத்தை யார் செய்தாலும் அது நல்ல விஷயம் தானே. ஆண்டாண்டு காலமாக நம்மை அடக்கி ஆண்டுவந்த சமூகம் சொல்லி சித்திரை ஒன்றை தமிழ் புத்தாண்டென்று கொண்டாடி வந்தோம். //

அறிவியல் படி, சூரியன் தமிழ்நாட்டுத் தலைக்குமேல வர்ற சமயம்தான் சித்திரை ஒன்னாக, புத்தாண்டாக கொண்டாடுகிறோம்..
அதப் போயி மறுபடியும் ஜாதிப் பேருல எவனோ சொன்னான்னு சொல்லி ஒத்துக்குறதுக்கு ஒங்களுக்குலாம் பக்குவமும் கெடையாது.. அறிவும் கெடையாது.. அறிவியலும் தெரியாது..
அறிவியல் ரீதியா ஏதாவது சொல்லி செயல் படுத்தச் சொன்னா, ஏன் எனான்னு கேக்கவேண்டியது லாஜிக்கே இல்லாமல். போயி குப்பைத் தொட்டில ஒக்காந்துக்கதான் லாயக்கு ஒங்கள மாதியான ஆளு..

//நல்ல விஷயத்தை யார் செய்தாலும் அது நல்ல விஷயம் தானே. //

அது சரி.. புத்தாண்டு தினத்த மாத்துறது எந்த வகையில நல்ல விஷயம்..
புரியும்படி ஒன்னால சொல்ல முடியுமா ?

மனுஷன் செத்ததுக்கப்புறம் சிலை வெச்சு மாலை போட்டு.. அவனக் கும்புடுறது மட்டும் எந்த வகையில அறிவு பூர்வம் ?
சும்மா ஹிட்ஸ் வாங்கனும்னே ஏதாவது எழுதுறது.. அப்புறம் 'சாரி', கேக்குறது...
வேணாம்.. நல்லவங்களோட வயித்தெரிச்சல் ஒங்கள மாதிரி ஆளுங்கள சும்மா விடாது..

திருந்தர வழியப் பாரு.. இல்லை கஷ்டம் ஒனக்குத்தான்..

அனானியா என்னாத்துக்கு வந்தேன்னு கேக்காத..
நல்லத (எனக்கு நல்லதுன்னு பட்டத) சொல்லுறதுக்கு ஊரு, பேரு முக்கியமில்லை.. மேட்டரு என்னான்னு பாரு.. அதான் முக்கியம்..

T.V.ராதாகிருஷ்ணன் said...

பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Ram said...

@Anony: நண்பரே நாம் இருவரும் ஒருமித்த கருத்தையே தெரிவித்துள்ளோம் என நினைக்கிறேன்.. ஆனால் தங்கள் கருத்தை அநாகரிகமாக இருப்பது போல் உணர்கிறேன்..

//நல்லத (எனக்கு நல்லதுன்னு பட்டத) சொல்லுறதுக்கு ஊரு, பேரு முக்கியமில்லை.. மேட்டரு என்னான்னு பாரு.. அதான் முக்கியம்..//

உண்மை தான்.. ஆனால் அது நாகரிகமாக இருந்திருந்தால் பரவாயில்லை...


//போயி குப்பைத் தொட்டில ஒக்காந்துக்கதான் லாயக்கு ஒங்கள மாதியான ஆளு.. //

//திருந்தர வழியப் பாரு.. இல்லை கஷ்டம் ஒனக்குத்தான்..//

//பேச வந்திட்டானுக....//

//நல்லவங்களோட வயித்தெரிச்சல் ஒங்கள மாதிரி ஆளுங்கள சும்மா விடாது//

இந்த மாதிரியெல்லாம் பேசுறது நல்லதுக்கா.???

//சும்மா ஹிட்ஸ் வாங்கனும்னே ஏதாவது எழுதுறது..//

மனசுல பட்டத சொல்லியிருக்கார்.. இதிலென்ன இருக்கு.. அவரு ஹிட்ஸ் வாங்குறதுல உங்களுக்கென்ன கடுப்பு.??

Unknown said...

நல்ல அலசல் பிரபா..

Unknown said...

பிரபாகரன் அவர்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

சுதன் said...

மிக நல்ல பதிவு.இந்த மாதிரியான பதிவுகளை அதிகம் எதிர்பார்க்கிறேன்

கவிதை பூக்கள் பாலா said...

"நாளை புரட்சி தலைவி ஆட்சிக்கு வந்தால் அவர் புத்தாண்டாக இன்னொரு தினத்தை அறிவிப்பார் . புரட்சிகலைஞரும் ஒரு ஐடியா வைத்திருக்க கூடும் . எனவே நான் வாழ்த்து எதையும் சொல்லபோவதில்லை"
இதையே நானும் வழி மொழிகிறேன்
தமிழன் அடிப்படை ஆதாரம் அழிந்து போகுமோ
என்று குமுறிக்கொண்டு இருக்கும் போது
ஈழத்தில் உறவுகள் கொலையுண்ட போது
உளறத உன்னத தலைவா ( தமிழனுக்கு எதிரியாய் எவனாக இருந்தாலும் எதிர்ப்பதில் தவறில்லை என்று நினைப்பவன் )
புத்தாண்டு நாளை மட்டும் மாற்றி விட்டு,
தமிழனை மண்ணில் புதைக்க நினைக்கும் தலைவர்கள் சொல்வதை எல்லாம் நாங்கள் ஏற்பதில்லை. ஆதலால் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் மட்டுமே
"சிலர் கருணாநிதி அறிவித்தார் என்ற ஒரே காரணத்துக்காக தை ஒன்றை தமிழ் புத்தாண்டாக ஏற்றுக்கொள்வதில்லை"
மன்னிக்கவும், உயிர கொன்னுட்டு உடலுக்கு மலர் வலையம் வைக்க தெரியாதவன் நான் . மனிக்கவும் நண்பரே

Unknown said...

மிக நல்ல பதிவு

அதே நேரத்தில் "ஆண்டாண்டு காலமாக நம்மை அடக்கி ஆண்டுவந்த சமூகம் "

- இது எந்த சமூகம்

பொங்கல் என்பது ஒரு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியே என்பது என் கருத்து.

எனினும் நண்பர் தம்பி கூர்மதியன் அவர்களின் தகவலையும் புரிந்து கொள்ளுங்க.

வயதானால் ஒரு சிலருக்கு புத்தி மாறும் என்பதை நிரூபிக்கும் ஒருவர் நல்லது சொன்னதை போல நீங்கள் சொல்லி இருப்பது என்னை வருந்த வைக்கிறது.

"சிலர் கருணாநிதி அறிவித்தார் என்ற ஒரே காரணத்துக்காக தை ஒன்றை தமிழ் புத்தாண்டாக ஏற்றுக்கொள்வதில்லை"
>>>
அரசு கையில் இருக்கிறது எனும் மமதையே இதில் வெளிப்படுகிறது.

மக்களிடம் நாத்திகம் பேசி கல்கி பகவானிடம் அருளை வேண்டி நிற்கும் ஒரு பொய்யான நாத்திகவாதி சொல்வதை ஏற்பது கடினம் நண்பரே!

எம் அப்துல் காதர் said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் நண்பா!!

தூயவனின் அடிமை said...

உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!

ரஹீம் கஸ்ஸாலி said...

இந்தவாரம் தமிழ்மணத்தில் 13-ஆவது இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்

Jayadev Das said...

//ஆண்டாண்டு காலமாக நம்மை அடக்கி ஆண்டுவந்த சமூகம் சொல்லி சித்திரை ஒன்றை தமிழ் புத்தாண்டென்று கொண்டாடி வந்தோம்.// தம்பி கூர்மதியன் கருத்துக்களே என்னுடையதும். [அனானியாக வந்து அநாகரிகமாக எழுதியிருப்பவரும் கிட்டத் தட்ட சரியாகவே சொல்லியிருக்கிறார்]. சித்திரை ஒன்று தான் தமிழ் வருடப் பிறப்பு என்பது தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கமாகும். அதை ஏன் அனாவசியமாக மாற்ற வேண்டும்? யாராவது தமிழ் ஆசிரியர்களைப் பிடித்து சங்க இலக்கியங்களில் எப்போதிருந்து இது ஆரம்பித்தது என்பதற்கு ஆதாரம் தேடலாம்!

Jayadev Das said...

// மக்களிடம் நாத்திகம் பேசி கல்கி பகவானிடம் அருளை வேண்டி நிற்கும் ஒரு பொய்யான நாத்திகவாதி சொல்வதை ஏற்பது கடினம் நண்பரே! // கல்கி பகவான், சாயிபாபா போன்றவர்களை சக மனிதர்கள் என்ற முறையில் பார்த்தேன், மாநில நலத் திட்டங்களுக்கு உதவி கோரியுள்ளேன் என்று தப்பித்துக் கொள்ளலாம். ஆனால் நாத்திக வாதிக்கு விடாமல் பத்து வருடமாக மஞ்சள் நிறத் துண்டு எதற்கு? இவரைக் காண வருபவர்களும் [சோனியா காந்தி உட்பட] மஞ்சள் துண்டேதான் கையில் எடுத்து வருகிறார்களே! கட்சிக் கரை போட்ட துண்டு தொண்டனுக்கு மட்டும்தானா? சிலைகளுக்கு மாலை போட்டால் அந்த மரியாதை குறிப்பிட்ட நபர்களுக்கு போய் விடுமா? நினைவு நாள் அன்று சமாதிக்குப் போய் மலை வளையம் வைத்து மரியாதை செய்கிறார்கள், அங்கே சில நிமிடம் மவுனமாக நிற்கிறார்கள், அப்போது இவர்கள் செலுத்தும் மரியாதை அந்த செத்துப்போன தலைவருக்கு போய்ச் சேருகிறதா, அந்தத் தலைவருடன் பேசுகிறார்களா? அக்மார்க் பகுத்தறிவு வாதிகள் இவர்கள்தான் போலிருக்கு.

Prabu M said...

ந‌ல்ல‌ அல‌ச‌ல் பிர‌பா... வாழ்த்துக்க‌ள் !!

'பரிவை' சே.குமார் said...

உண்மை.......

இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

சேலம் தேவா said...

//தை ஒன்றும் மே ஒன்றும் ஒன்றுதான்//

சூப்பர்..!! :-)

செழியன் said...

//சிலர் கருணாநிதி அறிவித்தார் என்ற ஒரே காரணத்துக்காக தை ஒன்றை தமிழ் புத்தாண்டாக ஏற்றுக்கொள்வதில்லை.//

சிலரல்ல நண்பரே, பலர் ஏற்றுக்கொள்வதில்லை. அதுதான் சரியும் கூட. கருணாநிதி கூறினார் என்பதற்காக அல்ல, அது தவறான தகவல் என்பதற்காக.

வெகு சிலரே தைப்புத்தாண்டை ஏற்றுக்கொண்டார்கள். தங்களிடம் ஒரு பழக்கம் உள்ளது. சரியாக ஆராயாமல், முதிர்ச்சியின்றி எதையாவது சொல்லிவிடுகிறீர்கள், அதன் பிறகு திருத்திக்கொள்கிறீர்கள். இதே நிலைமை நீடித்தால் தங்களின் நம்பகத்தன்மை குறைந்துவிடும். இனிமேல் எதைக்கூற முற்பட்டாலும், ஆராய்ந்து, தெளிவான பின்னர் தெரிவியுங்கள். இதனை தங்களின் நலனுக்குத்தான் கூறுகிறேன். பொங்கல் வாழ்த்துக்கள்.

சிவகுமாரன் said...

நல்ல பகிர்வு

இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்....

Philosophy Prabhakaran said...

@ எல் கே, ம.தி.சுதா, Pari T Moorthy , ஆதவா, உலவு.காம், உலக சினிமா ரசிகன், மனசாட்சி, வருண், பார்வையாளன், Harini Nathan, எப்பூடி.., பன்னிக்குட்டி ராம்சாமி, ஜெய்லானி, பதிவுலகில் பாபு, பலே பிரபு, yeskha, டெனிம், middleclassmadhavi, மாணவன், நா.மணிவண்ணன், NKS.ஹாஜா மைதீன், தம்பி கூர்மதியன், எஸ்.கே, kanthasamy, கக்கு - மாணிக்கம், சி.பி.செந்தில்குமார், சிவகுமார், பழூர் கார்த்தி, Anonymous, T.V.ராதாகிருஷ்ணன், பாரத்... பாரதி..., சுதன், bala, விக்கி உலகம், எம் அப்துல் காதர், இளம் தூயவன், ரஹீம் கஸாலி, Jayadev Das, பிரபு எம், சே.குமார், சேலம் தேவா, செழியன், சிவகுமாரன்

வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவினை சிறப்பியுங்கள்...

Philosophy Prabhakaran said...

@ ஆதவா
// என்னதான் சொல்லுங்க , சித்திரை 1 தான் புத்தாண்டு... இப்பொழுது தைத்திங்களை யாருமே புத்தாண்டாகக் கொண்டாடுவதில்லை. //

இந்த வரிகளை படிக்கும் பொது கண்ணகி சிலை விவகாரத்தில் எழுத்தாளர் ஞாநி சொன்ன கரடி பொம்மை உதாரணம் நினைவுக்கு வருகிறது...

Philosophy Prabhakaran said...

@ உலக சினிமா ரசிகன்
// என் மனது சித்திரை திருநாளைத்தான் புத்தாண்டாக நினைக்கிறது.இந்த நல்ல பழக்கத்தை விடமுடியவில்லை. //

இது நல்ல பழக்கம் என்று எண்ணிக்கொண்டிருக்கும் உங்கள் மீது பரிதாப உணர்வு ஏற்படுகிறது...

Philosophy Prabhakaran said...

@ வருண்
// காவலன் பார்க்காம எங்கே என்ன பண்ணுறீங்க? //

புத்தாண்டில் பார்க்கும் முதல் படம் நல்ல படமாக இருக்க வேண்டுமென விரும்புகிறேன்... அதனால் காவலன் படத்தை பார்க்கவில்லை...

Philosophy Prabhakaran said...

@ பார்வையாளன்
// நாளை புரட்சி தலைவி ஆட்சிக்கு வந்தால் அவர் புத்தாண்டாக இன்னொரு தினத்தை அறிவிப்பார் . புரட்சிகலைஞரும் ஒரு ஐடியா வைத்திருக்க கூடும் . //

யார் எப்படி அறிவித்தாலும் தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு...

Philosophy Prabhakaran said...

@ எப்பூடி..
// உலகத்தின் ஏதாவதொரு மூலையில் யாராவது ஒருவராவது கருணாநிதிமேல தம்மாத்துண்டு நன்மதிப்பாவது வச்சிருந்தீங்கென்னா அவங்களுக்கு "தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்" //

எனக்கு கருணாநிதி மீது துளியளவும் மரியாதை கிடையாது... இருந்தாலும் இது தமிழ் புத்தாண்டு தான்... இதை நான் கருணாநிதி அறிவிக்கும் முன்பிருந்தே கடைப்பிடித்து வருகிறேன்...

Philosophy Prabhakaran said...

@ yeskha
// உங்களுக்கு எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு.. அதைக்கேட்டுலாம் வாங்காதீங்க... //

உங்கள் ஆதரவுக்கு நன்றி எஸ்கா... உங்களைப் போன்ற ஆட்கள் அடிக்கடி வருகை தந்தாள் மட்டற்ற மகிழ்ச்சி அடைவேன்...

Philosophy Prabhakaran said...

@ தம்பி கூர்மதியன்
// நீங்கள் இதை பற்றி இன்னும் தெளிவாக தெரிந்துகொள்ள என் நண்பரின் பதிவுலகத்தை கொஞ்சம் எட்டி பாருங்கள்... //

உங்களுடைய நண்பரின் தளத்தை பார்த்தேன்... அருமையாக இருந்தது... ஆக, பருவநிலை மாற்றங்களை அடிப்படையாக கொண்டு சித்திரை ஒன்று புத்தாண்டாக கணக்கிடப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்... அதுவரைக்கும் ஓகே... ஆனால் அதுதான் தமிழ் புத்தாண்டு என்பதை மட்டும் ஏற்க மறுக்கிறேன்...

இதுகுறித்து விரிவான விளக்கம் அளிப்பதற்கு முன்பு பாரதிதாசன் கவிதை ஒன்றினை மேற்கோள் காட்ட விரும்பிறேன்...

"நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு
அண்டிப் பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் காட்டியதே
அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழர்க்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு..."
-புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

// எந்த சமூகத்தை பற்றி விளிக்கின்றீர்.??? நம் சமுதாயமே இதை வரையறுத்தது.. நம்மை அடக்கி ஆண்ட எவரும் சொல்லவில்லை.. //

இப்பொழுது உங்களுடைய இந்தக் கேள்விக்கு விடை கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்...

சித்திரை தொடங்கி பங்குனி வரைக்கும் இருக்கும் பன்னிரண்டு மாதங்களும், பிரபவ தொடங்கி அக்ஷய வரைக்கும் இருக்கும் அறுபது ஆண்டுகளும் ஆரிய - சம்ஸ்கிருத மாதங்கள் மற்றும் ஆண்டுகளே ஆகும்... இதனை அந்த மாதங்களையும் வருடங்களையும் குறிக்கும் சொற்கள் தமிழ் வார்த்தைகள் தானா என்று யோசித்தாலே உங்களுக்குப் புரியும்...

உண்மையான பன்னிரண்டு தமிழ் மாதங்கள் என்பது சுறவம், கும்பம், மீனம், மேழம், விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை ஆகிய பன்னிரண்டே ஆகும்...

Philosophy Prabhakaran said...

@ Anonymous
// அதென்ன தமிழர் திருநாள்..
நீங்கள் மட்டும் இனவாரியா மனுசனப் பிரிக்கலாமா ?
உலகத்துல தமிழ் பேசுறவனத் தவிர வேற எவனும் விவசாயம் செய்யுறதில்லையா ?
பேச வந்திட்டானுக.... //

தமிழர் திருநாள் என்ற வார்த்தையையும், உழவர் திருநாள் என்ற வார்த்தையையும் குழப்பிக்கொள்ள வேண்டாம்... உழவர் திருநாள் என்பது உலகெங்கிலும் கொண்டாடப்படும் Harvest Festival... அது அவரவர் நாட்டின் பருவ நிலை, அறுவடை தினம் போன்றவற்றிற்கு ஏற்ப கொண்டாடப்படுவது... உழவர் திருநாள் குறித்த கருத்துக்களை முதல் பத்தியில் குறிப்பிட்டிருந்தேன்...

இரண்டாவது பத்தியில் தமிழர் திருநாள் என்ற வார்த்தை பிரயோகத்தைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன்... அதாவது தீபாவளி, பிள்ளையார் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி, சரஸ்வதி பூஜை, மகாசிவராத்திரி போன்ற இந்துப்பண்டிகைகளின் பின்புலத்தில் புராணக் கட்டுக்கதைகள் உள்ளன (அவைகளில் பெரும்பாலும் ஆபாசக் கதைகள் அதிலும் incest கதைகள் கூட உண்டு)... அந்தக் கட்டுக்கதைகளை நமக்கு அருளிய புண்ணியவான்கள் சமஸ்கிருதத்தை தாய்மொழியாகக் கொண்ட ஆரியர்கள்... ஆனால் பொங்கல் பண்டிகையின் பின்புலத்தில் அப்படிப்பட்ட கட்டுக்கதைகள் இல்லை... அது தமிழர்களுக்காக தமிழனால் உருவாக்கப்பட்ட பண்டிகை... எனவே அதை தமிழர் திருநாள் என்று குறிப்பிட்டிருந்தேன்...

அதையும் ஆரியன் புராணமாக மாற்ற விழைந்த முயற்சியே மகர சங்கராந்தி... அதைப் பற்றி மூன்றாவது பத்தியில் குறிப்பிட்டிருந்தேன்...

// அறிவியல் படி, சூரியன் தமிழ்நாட்டுத் தலைக்குமேல வர்ற சமயம்தான் சித்திரை ஒன்னாக, புத்தாண்டாக கொண்டாடுகிறோம்..
அதப் போயி மறுபடியும் ஜாதிப் பேருல எவனோ சொன்னான்னு சொல்லி ஒத்துக்குறதுக்கு ஒங்களுக்குலாம் பக்குவமும் கெடையாது.. அறிவும் கெடையாது.. அறிவியலும் தெரியாது..
அறிவியல் ரீதியா ஏதாவது சொல்லி செயல் படுத்தச் சொன்னா, ஏன் எனான்னு கேக்கவேண்டியது லாஜிக்கே இல்லாமல். போயி குப்பைத் தொட்டில ஒக்காந்துக்கதான் லாயக்கு ஒங்கள மாதியான ஆளு.. //

சூரியன் தலைக்கு மேல் வரும் மாதத்தை புத்தாண்டாக கொண்டாடுவது ஆரியர்களுடைய மரபாக இருக்கலாம்... காலத்தை ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டுத் தொடக்கத்தை இளவேனிற் காலத்தின் ஆரம்ப நாளாகக் கொண்டு,தை மாதத்தினை தனது இனத்துக்கான புத்தாண்டாகப் பிரகடனப்படுத்திக் கொண்டான்... பொங்கல் திருநாளைத் தமிழர்கள் ‘புதுநாள்’ என்று அழைத்தார்கள்... பொங்கல் திருநாளுக்கு முதல் நாளை போகி (போக்கி) என்று அழைத்தார்கள்... போகி என்பது போக்கு - போதல் என்பதாகும். (ஓர் ஆண்டைப் போக்கியது- போகியது- போகி) பொங்கல் என்பது பொங்குதல் - ஆக்குதல்.இது தொழிற் பெயர்.புத்தொளி பொங்கல் என ஆகுபெயர் ஆகியுள்ளது...

// அது சரி.. புத்தாண்டு தினத்த மாத்துறது எந்த வகையில நல்ல விஷயம்..
புரியும்படி ஒன்னால சொல்ல முடியுமா ? //

புத்தாண்டு தினத்தை மாற்றியது நானோ, கருணாநிதியோ, பாரதிதாசனோ இல்லை... சித்திரை ஒன்றே தமிழ் புத்தாண்டு என்று (ஏ)மாற்றியவர்கள் ஆரியர்கள் என்று புரிந்துக்கொள்ளுங்கள்...

// மனுஷன் செத்ததுக்கப்புறம் சிலை வெச்சு மாலை போட்டு.. அவனக் கும்புடுறது மட்டும் எந்த வகையில அறிவு பூர்வம் ? //

இந்த மாதிரி வேலையெல்லாம் நான் செய்வதில்லை... யார் செய்கிறார்களோ அவர்களிடம் போய்க் கேளுங்கள்...

// சும்மா ஹிட்ஸ் வாங்கனும்னே ஏதாவது எழுதுறது.. அப்புறம் 'சாரி', கேக்குறது... //

ஹிட்ஸ் வாங்க வேண்டுமென்றால் ஒரு நடிகையின் கவர்ச்சிப்படத்தை போட்டு மிகவும் சுலபமாக ஹிட்ஸ் வாங்குவேன்... அந்த ஹிட்ஸ் அரசியலும் எனக்கு செய்யத் தெரியும், செய்திருக்கிறேன்... தேவையில்லாமல் தலைவர்களின் பெயரை பயன்படுத்தும் அவசியம் இல்லை... காந்திக்கு அதிக ஹிட்ஸ் கிடைக்குமா நமீதாவுக்கு அதிக ஹிட்ஸ் கிடைக்குமா என்று நீங்களே சொல்லுங்கள்... அது எனது கமர்ஷியல் பக்கம் அதனை இதோடு ஒப்பிட வேண்டாமென்று கருதுகிறேன்...

ஒரு சிலருடைய நிர்பந்தத்திற்காக காந்தியைப் பற்றி சரிவர புரிந்துக்கொள்ளாமல் எழுதினேன்... பின்னர் வருந்தினேன்... மன்னிப்பு கேட்டேன்... இதற்கும் மன்னிப்பு கேட்பேன் என்று எதிர்பார்க்க வேண்டாம்... இதை நான் படித்துப் புரிந்துக்கொண்ட பின்பே எழுதியிருக்கிறேன்...

// நல்லத (எனக்கு நல்லதுன்னு பட்டத) சொல்லுறதுக்கு ஊரு, பேரு முக்கியமில்லை.. மேட்டரு என்னான்னு பாரு.. அதான் முக்கியம்.. //

கருணாநிதி சொன்ன விஷயத்திற்கும் நான் இதையே தான் சொன்னேன்...

நீங்கள் தாராளமாக அனானியாக வந்து பின்னூட்டமிடலாம்... பெயரை குறிப்பிட விரும்பாதவர்களுக்காகவும், தைரியமில்லாதவர்களுக்காகவும் தான் அப்படி ஒரு ஆப்ஷன் வைக்கப்பட்டுள்ளது...

Philosophy Prabhakaran said...

@ bala, விக்கி உலகம்
உங்கள் இருவரது பின்னூட்டங்களிலும் கருணாநிதி மீதுள்ள காழ்ப்புணர்ச்சி தெரிகிறது... உங்களுக்கு கருணாநிதி மீது உள்ள அதே அரசியல் கோபம் எனக்கும் இருக்கிறது... அதனால் தான் ஒரு இடத்திலும் கலைஞர் என்ற சொல்லைக் கூட நான் பயன்படுத்தவில்லை... கருணாநிதி ஏமாற்றுப் பேர்வழி, போலி நாத்திகவாதி என்பதெல்லாமே ஓகே தான்... நான் அவருக்கு ஆதரவாக எதையும் கூறவில்லை... அவர் அறிவித்த தமிழ் புத்தாண்டு தினத்திற்கு மட்டுமே ஆதரவு தெரிவித்தேன்... அதையும் அவர் அறிவித்தார் என்ற காரணத்தினால் அல்ல...

Philosophy Prabhakaran said...

@ Jayadev Das
// தம்பி கூர்மதியன் கருத்துக்களே என்னுடையதும். [அனானியாக வந்து அநாகரிகமாக எழுதியிருப்பவரும் கிட்டத் தட்ட சரியாகவே சொல்லியிருக்கிறார்] //

இப்படி இருக்கையில் நான் ஏற்கனவே நான் தம்பி கூர்மதியானுக்கும் அனானிக்கும் பதில் அளித்துள்ளேன்... அந்த பதில்களே உங்களுக்கு போதுமானது என்று கருதுகிறேன்...

// யாராவது தமிழ் ஆசிரியர்களைப் பிடித்து சங்க இலக்கியங்களில் எப்போதிருந்து இது ஆரம்பித்தது என்பதற்கு ஆதாரம் தேடலாம்! //

தாராளமாக தேடுங்கள்... ஆனால் நீங்கள் குறிப்பிட்டது போல இலக்கியங்களில் இருந்து தேடுங்கள்... புராணங்களில் இருந்து தேடாதீர்கள்...

அவை வெறும் கட்டுக்கதைகளும் காமக்கதைக்களுமே ஆகும்...

Philosophy Prabhakaran said...

@ Jayadev Das
// கல்கி பகவான், சாயிபாபா போன்றவர்களை சக மனிதர்கள் என்ற முறையில் பார்த்தேன், மாநில நலத் திட்டங்களுக்கு உதவி கோரியுள்ளேன் என்று தப்பித்துக் கொள்ளலாம். ஆனால் நாத்திக வாதிக்கு விடாமல் பத்து வருடமாக மஞ்சள் நிறத் துண்டு எதற்கு? இவரைக் காண வருபவர்களும் [சோனியா காந்தி உட்பட] மஞ்சள் துண்டேதான் கையில் எடுத்து வருகிறார்களே! கட்சிக் கரை போட்ட துண்டு தொண்டனுக்கு மட்டும்தானா? சிலைகளுக்கு மாலை போட்டால் அந்த மரியாதை குறிப்பிட்ட நபர்களுக்கு போய் விடுமா? நினைவு நாள் அன்று சமாதிக்குப் போய் மலை வளையம் வைத்து மரியாதை செய்கிறார்கள், அங்கே சில நிமிடம் மவுனமாக நிற்கிறார்கள், அப்போது இவர்கள் செலுத்தும் மரியாதை அந்த செத்துப்போன தலைவருக்கு போய்ச் சேருகிறதா, அந்தத் தலைவருடன் பேசுகிறார்களா? அக்மார்க் பகுத்தறிவு வாதிகள் இவர்கள்தான் போலிருக்கு. //

கருணாநிதி ஒரு போலி நாத்திகவாதி என்னும் உங்கள் கருத்துக்கு நான் முற்றிலுமாக உடன்படுகிறேன்... அதைப்பற்றி நான் எனது பதிவில் எதுவுமே குறிப்பிடவில்லையே...

Philosophy Prabhakaran said...

@ செழியன்
// தங்களிடம் ஒரு பழக்கம் உள்ளது. சரியாக ஆராயாமல், முதிர்ச்சியின்றி எதையாவது சொல்லிவிடுகிறீர்கள், அதன் பிறகு திருத்திக்கொள்கிறீர்கள். இதே நிலைமை நீடித்தால் தங்களின் நம்பகத்தன்மை குறைந்துவிடும். இனிமேல் எதைக்கூற முற்பட்டாலும், ஆராய்ந்து, தெளிவான பின்னர் தெரிவியுங்கள். இதனை தங்களின் நலனுக்குத்தான் கூறுகிறேன். //

ஒரு சிலருடைய நிர்பந்தத்திற்காக காந்தியைப் பற்றி சரிவர புரிந்துக்கொள்ளாமல் எழுதினேன்... பின்னர் வருந்தினேன்... மன்னிப்பு கேட்டேன்... இதற்கும் மன்னிப்பு கேட்பேன் என்று எதிர்பார்க்க வேண்டாம்... இதனை நான் ஆராய்ச்சிகள் செய்த பின்னரே எழுதியிருக்கிறேன்...

reference links:
http://groups.google.com/group/minTamil/msg/67ff1cda9ee17595
http://santhyilnaam.blogspot.com/2009/01/blog-post_13.html
http://www.yarl.com/forum3/index.php?showtopic=33739
http://penathal.blogspot.com/2008/01/blog-post_24.html
http://manthiran.blogspot.com/2010/01/2010.html

Philosophy Prabhakaran said...

@ தம்பி கூர்மதியன், Anonymous, bala, விக்கி உலகம், Jayadev Das, செழியன்
ஹிட்ஸ், ஓட்டு, பின்னூட்ட எண்ணிக்கை இதுப்போன்ற அற்ப விஷயங்களை எல்லாம் தாண்டி எனது பதிவுலக வாழ்க்கைக்கே பிடிமானம் ஏற்படுத்துவதே உங்களைப் போன்றவர்கள் தான்... உங்களுடைய வருகைக்கும் கருத்துகளுக்கும் எனது நன்றி கலந்த வணக்கங்கள்... தொடர்ந்து வருகை தாருங்கள்...

Speed Master said...

Nice