அன்புள்ள வலைப்பூவிற்கு,
அலுவலக நண்பர்கள் சிலர் பெலித்தாவில் இரவு உணவு சாப்பிடப்போவதாக பேசிக்கொண்டனர். உணவகத்தின் பெயரே விந்தையாக இருந்ததால் என்னதான் இருக்கிறதென்று பார்த்துவிட முடிவு செய்தேன். சென்னையின் பல பிரபல உணவகங்கள் அமைந்துள்ள தி.நகர், சர் தியாகராயா சாலையில் அமைந்திருந்தது அந்த உணவகம். உணவகத்தின் முழுப்பெயர் “பெலித்தா நாசி கான்டார்”. (சரியாகத்தான் உச்சரிக்கிறேனா...???)
பெயர்க்காரணம்:
பெலித்தா – நம்மூர் சிம்னி விளக்கு வகையறாவில் ஒரு விளக்கை குறிக்கிறது. (பார்க்க: உணவகத்தின் லோகோ). நாசி கான்டார் – முதலில், ஹோட்டல் ஆரம்பித்தவரின் ஜாதிப்பெயராக இருக்குமென்று அபத்தமாக எண்ணினேன். நாசி என்றால் சாதம் / சோறு என்று பொருள். கான்டார் என்றால் வியாபாரிகள் பயன்படுத்தும் துலாபாரம் போன்றது. முன்பொரு காலத்தில் இதன் ஒரு பக்க கூடையில் சோற்றையும் மறுபுற கூடையில் சிக்கன், மட்டன், மீன், இறால் இத்யாதி குழம்புகளுடன் வியாபாரிகள் தெருத்தெருவாக மொபைல் வியாபாரம் செய்வார்களாம்.
மலேசிய உணவகம்:
தமிழ்நாட்டில் சரவண பவன் எந்த அளவிற்கு பிரபலமோ அதைவிட மலேசியாவில் பிரபலம் வாய்ந்த உணவகம் பெலித்தா. மலேசியாவில் மொத்தம் 27 கிளைகள் உள்ளதாக இவர்களுடைய மெனு கார்டை பார்த்து தெரிந்துக்கொண்டேன். திருநெல்வேலிக்கு அல்வா எப்படியோ, தூத்துக்குடிக்கு மக்ரோன் எப்படியோ அதுபோல மலேசியாவுக்கு, அதிலும் குறிப்பாக பினாங் மாநிலத்திற்கு விருந்தினர்கள் யாராவது வந்தால் பெலித்தாவில் சாப்பிட்டீர்களா என்று ஒரு பேச்சுக்காகவாவது விசாரிப்பார்களாம். மலேசியாவில் பெலித்தா உணவகங்கள் 24 மணிநேரமும் செயல்படுகின்றன. சென்னைவாசிகளுக்கு அந்த கொடுப்பினை இல்லை.
உணவகத்தின் வடிவமைப்பை பற்றி சொல்லியே ஆகவேண்டும். இயற்கை சூழல் விரும்பிகளுக்காக வெளியே வராந்தா பகுதியில் சிலபல (சிம்மக்கல் கவனிக்க...!!!) மேஜைகள் இருந்தன. நான் சென்றது கோடைகாலம் என்ற காரணத்தினால் வெளியே ஒன்றிரண்டு பேர் மட்டுமே அமர்ந்திருந்தனர். அதைத்தாண்டி உள்ளே சென்றால் ஏசி அறைகள். குடும்பத்துடன் வருபவர்களுக்கென்று தனியாக சோபா இருக்கைகளும் இருக்கின்றன. இது தவிர மாடியறையும் உள்ளது. அங்கே நான் சென்று பார்க்கவில்லை.
மெனு கார்டே நான்கைந்து பக்கங்களுக்கு விஸ்தாரமாக இருந்தது. பல உணவுவகைகளின் பெயர்களே வாயில் நுழையாத நிலையில் அத்தகைய உணவுவகைகள் வாயில் நுழையுமா என்று சந்தேகமாகவே இருந்தது. உடன் வந்த நண்பர்கள் மீன் குழம்பு சாப்பாடு நன்றாக இருக்குமென்று சொன்னதால் எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் நானும் அதையே ஆர்டர் செய்தேன். ஒரு தட்டில் சாப்பாடும், மற்றொரு கிண்ணத்தில் மீன் குழம்பும் வந்தது. இரண்டு வகையான காய்கறி பொரியல், கடித்துக்கொள்ள ஒரு அப்பளம், அப்புறம் வேகவைத்த வெண்டைக்காய் இரண்டு. இந்த காம்பினேஷன் மிகவும் வித்தியாசமாக இருந்தது. ஆனாலும் பிடித்திருந்தது. இதையெல்லாம் விட எதிர் டேபிளில் குடும்பத்துடன் வந்து அமர்ந்த மலேசிய இளைஞியை ரொம்பவும் பிடித்திருந்தது.
ஐஸ் கச்சாங் |
இட்லி, தோசை என்று நம்மூர் உணவுவகைகளை சாப்பிட்டு பழக்கப்பட்டவர்களுக்கு பெலித்தா உண்மையிலேயே ஒரு ஒளிவிளக்குதான். அதிலும் நீங்கள் அசைவப்பிரியர்கள் என்றால் கொண்டாட்டம்தான். மீன் வகை உணவுகள் பெலித்தாவில் பிரசித்தம். இது தவிர இறால் உணவுவகையான சம்பல் உடாங், நண்டு வகையான கெடாம் மசாலா, மட்டன் குழம்புவகையான கம்பிங் ரோஸ், சிக்கன் குழம்பு ஐயாம் குர்மா ஆகியவைகளையும் ஒருபிடி பிடிக்கலாம். தெலுர் மசின் என்ற பெயரில் வேகவைத்த வாத்து முட்டைகள் கிடைக்கின்றன. முக்கியமாக ஐஸ் கச்சாங் என்ற ஐஸ்கிரீம் வகையறா உள்ளது. இதை தவறவிட்டால் பெலித்தாவிற்கு போனதற்கே அர்த்தமில்லாமல் போய்விடும்.
பொருளாதார அடிப்படையில் பார்த்தால் கொஞ்சம் காஸ்ட்லியான உணவகம்தான். இரண்டு பேர் திருப்தியாக சாப்பிட வேண்டுமென்றால் நானூறிலிருந்து எழுநூறு ரூபாய் வரை ஆகலாம்.
என்னுடைய ரேட்டிங்:
உணவு: 7/10
சர்வீஸ்: 6/10
செலவு: 5/10
உணவக முகவரி:
பெலித்தா நாசி கான்டார்,
எண்: 17 & 18, அப்பாசாமி டவர்ஸ்,
சர் தியாகராயா ரோடு, தி.நகர்,
சென்னை – 600017.
தொலைபேசி எண்: +91-44-24335759
நேற்றைய பதிவு 1: ஆனந்த தொல்லையும் ஏஞ்சலினா ஜோலியும்
நேற்றைய பதிவு 2: மனைவி கிடைத்தாள் - காஜல் அகர்வால்
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
15 comments:
அடுத்த முறை வரும் போது, taste பண்ணிற வேண்டியதுதான். :-)
மலேசியத்தோழி ஒருவருடன் அங்கே சாப்பிட்டது நினைவுக்கு வருது. எனக்கும் அந்த ஐஸ்கச்சாங் ரொம்பப் பிடிச்சதுங்க.
எனக்கு வேண்டியதை தோழியே ஆர்டர் செஞ்சுட்டதால் மெனு படிக்கும் வேலையில் இருந்து தப்பிச்சேன்:-)
ஸ்டார் ரேட்டிங் போட்டு இருப்பது சூப்பர்.அங்கு பிரபலமான மீங்கொரைங்.முர்தபா,ஸ்குயிட் கிரேவியை மிஸ் பண்ணி விட்டீர்களே.
//“பெலித்தா நாசி கான்டார்”. (சரியாகத்தான் உச்சரிக்கிறேனா...???)
ரொம்ப ரொம்ப சரி தான்.... சரியான உச்சரிப்பு..... கரேக்ட்டு.... சந்தேகமா இருந்தா போர்ட் பாருங்க :)
அங்கே நாசி கோரிங் தான் என் சாய்ஸ்
பெலித்தா நாக்கு ஊறவைக்கிறதே.... :)
//மீங்கொரைங்.முர்தபா,ஸ்குயிட் கிரேவியை மிஸ் பண்ணி விட்டீர்களே.///
///அங்கே நாசி கோரிங் தான் என் சாய்ஸ்//
ஆஹா அங்க போகும்போது இந்த பதிவை பிரிண்ட் எடுத்துகிட்டு போகனும் போல இருக்கே!
add your post and get more traffic add our voting widget http://udanz.com
இன்னும் கொஞ்சம் டீடெய்லா எழுதலாமே பிரபா..:)
கேபிள் சங்கர்
//சிலபல (சிம்மக்கல் கவனிக்க...!!!) மேஜைகள் இருந்தன//
சில, பலவானது கவனித்தேன் சார். ஆனாலும் கொஞ்சம் நகைச்சுவை. உணவு விடுதியில் அதுவும் மக்கள் நெருக்கமினிறைந்த தி. நகரில், 'பல' மேசைகள் இல்லாமலிருக்குமா ? U cd hav avoided such simplistic statements.
அஃதென்ன கோடைகாலம்? சென்னையில் குளிர்காலம் என்று ஏதாவது உண்டா? விடிகாலையில் மட்டுமே மார்கழியில் கொஞ்சமாகக் மகிழ்ச்சியூட்டும் குளிர். அதுவும் காலை 7 மணிக்கு ஓடிவிடும். கோடைக்காலமென்று சொல்வதைவிட எந்தமாதத்தில் போனீர்கள் என்று சொல்லியிருந்திக்கலாம். But it s also a simplistic statement.
//உணவு: 7/10சர்வீஸ்: 6/10செலவு: 5/10//
உணவகங்களைப்பற்றி ஊடகங்களில் எழுதுவதற்கென்றே அவர்கள் நிருபர்களை வைத்திருக்கிறார்கள். They r called Food Critics. அவர்களுக்கெனத் தனியாகச் செய்து அசத்துவார்கள் கடைக்காரர்கள். மேலும், அவர்களிடம் பணம் வாங்க மாட்டார்கள்.
'நான் உங்கள் கடையைப்பற்றி விமர்சனம் அல்லது பதிவு போடப்போடுகிறேன் தமிழ்மணத்தில் தற்போது நான் நடச்த்திரப்பதிவாளன்' என்றிருந்தால், உங்களைத் தனியாகக் கவனித்து இருப்பார்கள். பணமும் நோ.
But w/o any advantage to u, u hav given free ad to them. So, Hema said she wanted to visit. The hotel s getting customers because of u.
ரேட்டிங்கஸ் போடும்போது,
1. உணவின் தரம்
2. சேவையின் தரம்
3. பண்டங்களின் விலைகள்
4. கடையின் தோற்றம் அமைப்பு இருக்குமிடம் (ambiance) என்று நிருபர்கள் ரேட்டிங் போடுவார்கள். உங்களிடம் நான்காவதைக் காணவில்லை. ஒருவேளை, "பதிவின் உள்ளேயே சொல்லிவிட்டேன், தேடிக்கொள்ளவும்" என்கிறீர்களோ ?
Ambiance is important. The high society members like u give credit or debit, as the case may be, to such factor b4 going. Some go only if see ambiance attractive.
விலையுயர்வு. இஃதெல்லாம் மேட்டுக்குடி சமாச்சாரம்.
High Life and Low Life - Both have interesting features
Experience the second; don't waste ur chance of the star blogging and write a blog on Low Life b4 the time runs out. Madras offers awesome low life experiences. Walk through. If I were the star blogger, I wd take the readers to the low, lower and the lowest life of Tamil people.
பதிவு நன்றாக இருக்கிறதென்பதை விட சொல்லப்பட்ட செய்தியே சிறப்பு.. மற்றவர்களுக்குத் தெரியா புதுமைச்செய்திகளை ஒரு பதிவாகப்போடுவததைச் சிலர்தான் செய்கிறார்கள்.
Well done.
அப்போ சென்னை வந்தா பிரபா செலவுல இந்த ஹோட்டல்ல சாப்பிடலாம்
சரிதான் அண்ணன் இன்னைக்கி ஒரு ஓசி சாப்பாடுக்கு பதிவு எழுதிருக்காரு போல (நாங்க எப்போவும் கொஞ்சம் கொடூரமாத்தான் யோசிப்போம் )
வர வர பிரபாகர் 'ஜூனியர் கேபிள் சங்கராக' வளர்ந்து வந்து கொண்டிருக்கிறார். வாழ்த்துக்கள்.
நீங்கள் சாப்பிட்ட மலேசிய உணவகத்தின் பூர்வீகம் தமிழ்நாடுதான். தமிழகத்தின் இராமநாதபுரம் பகுதியிலிருந்து மலேசியாவுக்கு சுமார் நூறாண்டுகளுக்கு முன்பு குடிபெயர்ந்த இஸ்லாமியர்களால் அமைக்கப்பட்ட உணவகம்தான் பெலித்தா நாசிக்கன்டார். இதில் நாசி என்பது அரிசி உணவைத்தான் குறிக்கிறது.
உண்மையில் மலேசியாவில் புகழ்பெற்ற ஓர் தமிழரின் உணவு விடுதி - மலேசிய பெயரில் அதன் பூர்வீக மண்ணுக்கு திரும்ப வந்துள்ளது.
இந்த உணவகம் சென்னையில் திறக்கப்பட்ட போது - "பெலித்தா நாசிக்கன்டார் அதன் சொந்த மண்ணில் திறக்கப்படுகிறது" என்று மலேசிய நாளிதழ்களில் எழுதினார்கள்.
நானும் சில வருடங்களாகவே நினைத்துக் கொண்டிருக்கிறேன் அங்கே போய் சாப்பிட்டு பார்க்கனும்னு, ஆனா எப்படியோ தவறிப்போகுது.... அடுத்த வாட்டி போய்டவேண்டியதுதான்....!
என் அலுவலகம் பெலிட்டா ஹோட்டலுக்கு அருகில் தான் இருந்தது. உங்கள் பதிவை வாசிக்கவில்லை. பேரைப் பாத்ததும் நேரா கமெண்ட்க்கு வந்துட்டேன். அடுத்தமுறை அங்குபோகும் போது பனானா பராத்தா (banana paratha) சாப்பிட்டுப் பாருங்கள். அசத்தும்!
அடுத்த தடவை ஊர் வரும் போது டிரை பண்னிடுவோம் :-))
Post a Comment