12 August 2011

ஹிட்லரின் தத்துபித்துவங்கள்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஹிட்லர் எழுதிய "மெய்ன் காம்ப்" புத்தகத்தின் தமிழ் பதிப்பான "எனது போராட்டம்" என்ற நூலில் இருந்து சில பத்திகளை உங்கள் முன்பு சமர்ப்பிக்கிறேன். இவை தத்துவங்களா அல்லது பித்துவங்களா என்று நீங்களே தரம் பிரித்துக்கொள்ளுங்கள். எழுத்துநடையில் ஆரிய வாசனை கலந்திருப்பது மொழிபெயர்ப்பாளர் கைங்கரியம் - அதற்காக வருந்துகிறேன்.

பத்திரிகைகள்:

பத்திரிக்கைகளின் சக்தி பிரமாதமென்று கூறப்படுகின்றது. அது உண்மையே. சகலருக்கும் பள்ளிக்கூட கல்வியானது இளம்வயதில் முடிந்துவிடுகிறது. அதற்குப் பின்னர் எல்லோருக்கும் கல்வி போதித்து வருவது பத்திரிகைகள் தான். பத்திரிகை வாசிப்போர் மூன்று பிரிவினராவர்:
1.        தாங்கள் வாசிப்பதை எல்லாம் நம்புகிறவர்கள்.
2.        தாங்கள் வாசிக்கும் எதையும் நம்பாதவர்கள்.
3.        தாங்கள் வாசிப்பதை ஆராய்ந்து, தங்கள் பகுத்தறிவைக் கொண்டு எது நல்லது எது கெட்டதென்ற தீர்மானத்திற்கு வருவோர்.

முதலாவது கோஷ்டியினரின் தொகைதான் மிகவும் அதிகம். பெரும்பாலான பாமர ஜனங்களும் அக்கொஷ்டியைச் சேர்ந்தவர்களே. பிறர் சமைத்து வைத்த பதார்த்தங்களை, நல்லதாயினும் கெட்டதாயினும் ருசி பார்க்காமல் சாப்பிட்டுவிடுவதுபோல், அவர்கள் பிறர் எழுதும் விஷயங்களையும் அப்படியே நம்பிவிடுகிறார்கள். அதற்கு ஓரளவு திறமையின்மையும், ஓரளவு அறியாமையுமே காரணம். இதைத்தவிர, சோம்பேறித்தனம் காரணமாகவும் அவர்கள் தங்களுடைய யோசனா சக்தியை உபயோகிப்பதில்லை. எனவே தினசரி பிரச்சனைகள் விஷயத்தில் அவர்களுடைய நிலைமையை உருவாக்குவது முற்றிலும் பத்திரிக்கைகளேயாகும். சத்திய சந்தர்களும் பேரறிஞர்களும் எழுதுவதை எல்லாம் அவர்கள் நம்புவதன் மூலம் அளவற்ற நன்மையே உண்டாகும். ஆனால் பத்திரிகைகளில் எழுதுவோர் எல்லாம் அவ்விதமிருக்கின்றனரா? அயோக்கியர்களும், பொய்யர்களும் எழுதுவதை ஜனங்கள் நம்பிவிடுவதன் மூலம் பிரமாத ஆபத்தே நேரிடுகிறது.

இரண்டாவது கோஷ்டியினரின் தொகை முதல் கோஷ்டியினரின் தொகையைக் காட்டிலும் சிறிது குறைவாகும். இவர்களில் பலர் ஏற்கனவே முதல் கோஷ்டியிலிருந்தவர்கள். பத்திரிக்கைகளின் கூற்றுகளை நம்பி அடுக்கடுக்காக ஏற்பட்ட ஏமாற்றங்களால் சலித்துப்போனவர்கள். எனவே அச்சடித்த எதையும் அவர்கள் நம்பமாட்டார்கள். பத்திரிகைகளைக் கண்டாலே அவர்களுக்கு நஞ்சைக்கண்டது போலிருக்கும். பத்திரிக்கைகளை வாசிக்கமாட்டார்கள். வாசித்தாலும் அவைகளில் காணப்படும் விவரங்களை எல்லாம் வெறும் பொய்க் களஞ்சியங்கள் என்றும் தவறான கூற்றுகள் என்றும் தள்ளிவிடுவார்கள். அவ்வாறு நம்பிக்கையிழந்தவர்களைச் சமாளிப்பது தான் கடினமான காரியம். தீவிரமான எவ்வித அலுவலுக்கும் அவர்கள் தகுதியற்றவர்களாகி விடுகிறார்கள்.

மூன்றாவது கோஷ்டியினர் மிகச்சிறுபான்மையானவர் ஆவர். அவர்கள் தான் பகுத்தறிவுள்ளவர்கள்; எவ்விஷயத்தையும் தங்கள் சொந்த புத்தியையும், பகுத்தறிவையும் கொண்டு சீர்த்தூக்கிப் பார்த்து ஒரு முடிவிற்கு வரும் குணமுடையவர்கள். பத்திரிக்கைகளிலுள்ள விஷயங்களைக் கண்மூடித்தனமாக நம்பிவிடமாட்டார்கள். ஒரேயடியாக மூடப்பிடிவாதங்கொண்டு நம்பாமலிருக்கவும் மாட்டார்கள். தங்கள் சொந்த அறிவை உபயோகித்து, சக்கையைத் தள்ளிவிட்டு சாத்திரத்தை மாத்திரமே கிரகிப்பார்கள். எனவே பத்திரிக்கைப் புளுகுகளால் அவர்களிடையே எவ்வித ஆபத்தும் ஏற்படாது.

சரித்திரப்பாடம்:
நம் பள்ளிக்கூடங்களில் உலக சரித்திர பாடம் கற்றுக்கொடுக்கும் முறை மிகவும் அதிருப்திகரமாக இருக்கிறது. சரித்திரப்பாடம் கற்றுக்கொடுப்பதன் நோக்கம், சில தேதிகளையும் சம்பவங்களையும் மாணவர்கள் மொந்தையுருப்போட்டு மனப்பாடம் செய்துக்கொள்ள வேண்டுமென்பதல்ல. இதைப் பெரும்பாலான உபாத்தியாயர்களும் உணர்ந்துக்கொள்வதில்லை. ஒரு குறிப்பிட்ட தளபதியோ அல்லது வேறெவறோ பிறந்த தினத்தையோ அல்லது ஓர் யுத்தம் ஆரம்பமான தேதியையோ, ஒரு மன்னரின் பட்டாபிஷேக நாளையோ அறிந்துக்கொள்வதில் மாணவர்களுக்கு என்ன சிரத்தையிருக்க முடியும்? அவை எல்லாம் அவ்வளவு முக்கிய விஷயங்களா?

சரித்திர பிரசித்தமான சம்பவங்களுக்குக் காரணங்களையும், அச்சம்பவங்களை உருவாக்கிய சக்திகளையும் ஆராய்ந்தறியும்படி செய்வதுதான் சரித்திரப்பாடத்தின் தத்துவம்.

டிஸ்கி: இந்த புத்தகத்தை படிப்பதற்கு இரவல் தந்த நண்பர் "அஞ்சாசிங்கம்" செல்வினுக்கு நன்றி.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

4 comments:

idroos said...

நீங்கள் வெளியிட்டுள்ள இந்த பகுதியில் எந்த கைங்கரியமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை(முடிசூட்டு விழா என்பதற்கு பதில் பட்டாபிஷேகம் என வந்துள்ளதை தவிர). அநியாயத்துக்கு நல்லவரா இருக்கீங்களே. ஹிட்லர்/மொழிபெயர்பாளர் தவறுக்கு நீங்க என்ன பண்ணமுடியும் பாஸ்.

Sivakumar said...

அஞ்சா சிங்கம் ரொம்ப நாளா கூண்டை விட்டு வெளியவே வரமாட்டேங்குதே?

Sivakumar said...

//ஒரு குறிப்பிட்ட தளபதியோ அல்லது வேறெவறோ பிறந்த தினத்தையோ அல்லது ஓர் யுத்தம் ஆரம்பமான தேதியையோ, ஒரு மன்னரின் பட்டாபிஷேக நாளையோ அறிந்துக்கொள்வதில் மாணவர்களுக்கு என்ன சிரத்தையிருக்க முடியும்? அவை எல்லாம் அவ்வளவு முக்கிய விஷயங்களா?//

About Me
பெயர்: பிரபாகரன்
வயது: 22
பிறந்த தேதி: 28.9.1988
பிறந்தது: சாத்தூர், விருதுநகர், தமிழ்நாடு, இந்தியா
வளர்ந்தது: திருவொற்றியூர், சென்னை, தமிழ்நாடு, இந்தியா

Kavi said...

Varalaru Romba mukkiyam amaichare!!