அன்புள்ள வலைப்பூவிற்கு,
மார்ச் 23, 2003. ஞாயிற்றுக்கிழமை. இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும்
இடையே உலககோப்பை இறுதிப்போட்டி நடந்தநாள். ஞாயிறு தவறாமல் மாஸ்கான் சாவடிக்கு
சென்றுவரும் தந்தை அன்று திரும்பிவரும்போது எங்களுக்கெல்லாம் அளவுகடந்த
ஆனந்தத்தையும் சேர்த்து அள்ளிக்கொண்டு வந்தார். அப்பா கொண்டுவந்த
கூடைக்குள்ளிருந்து அழகாக எட்டிப்பார்த்தது அந்த நாய்க்குட்டி. நானும் என்
தங்கையும் அண்டை வீட்டு குழந்தைகளும் மாறி மாறி புது நாய்க்குட்டியுடன்
விளையாடிக்கொண்டிருந்தோம். அடுத்ததாக நாய்க்குட்டிக்கு பெயர்சூட்டுவிழா. உலககோப்பை
இறுதிப்போட்டியன்று வந்ததால் அப்போதைய இந்திய கேப்டன் கங்குலி பெயரை வைக்கலாமா
என்றுகூட விளையாட்டாக பேசிக்கொண்டோம்.
உண்மையில் எங்களுக்கு நாய்க்குட்டி என்பது புதியதல்ல. விவரம் தெரிய
ஆரம்பித்திருந்த புதிதில் கறுப்பு நிற நாய்க்குட்டி ஒன்றை இதேபோலதான் அப்பா வாங்கி
வந்தார். ஆனால் வந்த சில நாட்களிலேயே சாலை விபத்தில் உயிர் நீத்துவிட்டது
ப்ளாக்கி. யாராவது இறந்துவிட்டால் வருத்தப்பட வேண்டும் என்றுகூட தெரியாத வயது
எனக்கு. அதற்கடுத்து ஒரு பிரவுன் கலர் நாய்க்குட்டி. லியோ என்று அழைத்தால்
எங்கிருந்தாலும் நம்முன் வந்து காதை உயர்த்தி சிக்னல் காட்டும். பிற்காலத்தில்
லியோவிடம் நகக்கீறல் வாங்கியவர்கள் கடித்துவிட்டது என்று பயந்ததாலும், அண்டை
வீட்டு வாசல்களில் சிறுநீர் கழித்துவிடுகிறது என்ற குற்றச்சாட்டுகளினாலும் வேறு
வழியின்றி லியோவை பாதுகாப்பான ஒரு இடத்தில் விடவேண்டியதாகி போய்விட்டது.
இப்போது வந்திருக்கும் நாய்க்குட்டிக்கும் அச்சு அசலாக லியோவின்
சாயல். எனவே, லியோ என்றே பெயர் சூட்டிவிடலாம் என்று ஒருமனதாக முடிவு
செய்யப்பட்டது. நாய்களின் வளர்ச்சி அபாரமானது. சுமார் ஆறுமாத காலத்திலேயே லியோ
நன்றாக வளர்ந்துவிட்டது. அதன் அறிவும்தான். சிறுநீர், மலம் கழிக்க வேண்டுமென்றால்
ரொம்பவும் விவரமாக மொட்டைமாடிக்கு ஓடும். அப்படியே கட்டிப்போடப்பட்டிருந்தால் கூட
சன்னமான குரலில் குரைத்து அதன் நிலைமையை நமக்கு புரிய வைக்கும். முந்தய லியோவைப்
போல அண்டைவீட்டார்களிடம் அளவாகவே வைத்துக்கொள்ளும். மூன்றாவது வீட்டில்
குடியிருந்த அம்மையார் மட்டும் பைரவ சாமி என்று லியோவிற்கு அடிக்கடி படையல்
போடுவார்.
சுஜாதாவின் என் இனிய இயந்திரா படித்துவிட்டு ஒரு வாரத்திற்கு லியோவை
ஜீனோ... ஜீனோ... என்று கொஞ்சிக்கொண்டிருந்தேன். ஜீனோ அளவிற்கு இல்லையென்றாலும்
லியோவும் ஜீனியஸ்தான். எங்கள் வீட்டிற்கு யார் வந்தாலும் லியோ தன்னுடைய அதிநவீன
செயலாற்றல் கொண்ட மூக்கினால் சோதித்தபிறகே உள்ளே அனுப்பும். சமயங்களில் அதற்கு
திருப்தி இல்லையென்றால் அதகளம் தான். இருந்தாலும் லியோ பேசாம இருன்னு சொன்னா
போதும், பிரச்சனை எதுவுமில்லை என்று புரிந்துக்கொண்டு அமைதியாக தன்னுடைய
இடத்திற்கு சென்று அமர்ந்துக்கொள்ளும். அவ்வளவு சாந்தமான லியோ சகநாய்களை மட்டும்
எக்காரணம் கொண்டும் வீட்டிற்குள் அனுமதிக்காது. திடீரென ரோட்டில் இருந்து நாய்
அடிப்பட்டு அலறும சத்தம் கேட்கும். லியோவுக்கு ஏதோ ஆகிவிட்டது என்று பதறும்போதே
சில நொடிகள் கேப் கொடுத்து கம்பீரமான குரலில் குரைத்துக்காட்டும் லியோ. பாதிக்கப்பட்ட
நாய் பம்மியபடியே ஏரியாவை கடந்துபோகும்.
ஒரே வீட்டில் புறா, லவ் பேர்ட்ஸ், மீன்கள் ஆகியவற்றையும் வளர்த்து
லியோவையும் நாங்கள் வளர்த்தது மற்றவர்களுக்கு பிரமிப்பாகவே இருக்கும். காலை, மாலை
புறாக்களின் உணவு நேரங்களில் லியோவிற்கு இயற்கையின் அழைப்பு வந்தாலும் கூட
புறாக்கள் மிரளாதபடி பூனைநடை நடந்து மொட்டைமாடிக்கு செல்லும். அதேசமயம் புறாக்களை
வாசம் பிடித்து பூனைகள் வந்தால் அந்தர் பண்ணிவிடும்.
வீட்டுப்பெரியவர்களுக்கெல்லாம் பாசக்காரபிள்ளை லியோ. நாள் ஒன்றிற்கு
ஆறு டீயாவது குடிக்கும் தாத்தா, அளந்துபார்த்தால் அவற்றில் மூன்றையாவது
லியோவுக்குத்தான் ஊற்றியிருப்பார். அடுப்படியில் இருந்த ஆட்டுக்கறியை
ஆட்டையைப்போட்டு தின்றாலும் கூட கோபப்படவேமாட்டார் அய்யம்மா. எங்கள் தலையணைகளில்
பாதியை உரிமையோடு பரித்துக்கொள்ளும். எங்களைப்போலவே எங்கள் தாயோடு பாசமொழி பேசும்.
நாங்கள் அம்மாவோடு அதிக நெருக்கம் காட்டினால் கூட அதன் முகத்தில் பொறாமை
அப்பட்டமாக தெரியும். சில சமயங்களில் அம்மா மடியில் படுத்துக்கொண்டு எங்களையும்
பொறாமை படவைக்கும்.
நாய் என்றால் பால், பிஸ்கெட் சாப்பிடும் என்பது பாடப்புத்தகங்களில்
படித்ததோடு சரி. மற்றபடி எங்கள் லியோவிடம் எதைக் கொடுத்தாலும் ஒருபிடி
பிடித்துவிடும். முக்கியமாக பொங்கல் பண்டிகை நேரத்தில் லியோ கரும்பு சாப்பிடும்
ஸ்டைலை பற்றி சொல்லியே ஆகவேண்டும். இரண்டு கைகளாலும் கரும்பை அசையாதபடி லாவகமாக
பிடித்துக்கொண்டு கடவாய்ப்பல்லால் துவம்சம் செய்துவிடும். சோளக்கட்டை கிடைத்தாலும்
அதே டெக்னிக்தான். டீ, காபி, பாதாம் மில்க், ஃபேண்டா, பால்கோவா என்று படோடோபமாகவே
இருக்கும். தண்ணீரில் கூட Pure it தண்ணீர் தான். அதற்கென்று தனி மெத்தை இருந்தாலும்
கூட மக்களோடு மக்களாக உறங்க ஆசைப்படுவதில் லியோ ஒரு ராகுல்ஜி.
இப்படியெல்லாம் கடந்த ஒன்பது ஆண்டுகாலமாக எங்களோடு வாழ்ந்து எங்கள்
கவலைகளை மறக்கடித்த லியோ, மே 14ம் தேதி நள்ளிரவோடு தன்னுடைய மூச்சை
நிறுத்திக்கொண்டது. அதன் கடைசி நிமிட வேதனைகளை நினைத்தால் இப்பொழுதும் கதறி
அழத்தோன்றுகிறது. அன்றிரவு எங்கள் வீட்டில் யாரும் உறங்கவில்லை. உறங்குவது போல
நடித்துக்கொண்டுதான் இருந்தோம். எப்படியாவது திரும்பவும் உயிர் வந்துவிடாதா என்று
அதன் சடலத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். இன்னமும் எங்களுக்கு விடியவில்லை.
மீண்டுமொரு லியோ எங்களுக்காக பிறக்கும் என்ற நம்பிக்கையுடன்
வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம்.
கலங்கிய கண்களுடன்,
N.R.PRABHAKARAN
|
22 comments:
no funny comments please...
Nagaichchuvaiyodu solli vittu, kadaisiyil varuththappada vaiththu vitteergal. Leo marupadi kidaikkattum!
Mar 23,2003 was the final date
@ Anonymous
// Mar 23,2003 was the final date //
Thanks for the info... changed now...
எங்க வீட்டில கூட டைகர் என்று பெயரிட்டு ஒரு ஜீவனை வளர்த்தோம்.கிட்ட தட்ட பதிமூணு வருஷம்.அது இறக்கிற தருவாயில் நாங்கள் விட்ட கண்ணீர் இருக்கே...இரண்டு நாள் அவனின் ஞாபகத்திலேயே இருந்தோம்..இப்போது ஜாக்கி என்று பெயரிட்டு அவனை போலவே வளர்த்து வருகிறோம்..எங்கள் வீட்டிற்கு வரும் ஜந்து களை பாம்பு, தேள் போன்றவற்றை கண்டு பிடித்து எச்சரிக்கை செய்வது அவன் தான்.
எங்க வீட்டில கூட டைகர் என்று பெயரிட்டு ஒரு ஜீவனை வளர்த்தோம்.கிட்ட தட்ட பதிமூணு வருஷம்.அது இறக்கிற தருவாயில் நாங்கள் விட்ட கண்ணீர் இருக்கே...இரண்டு நாள் அவனின் ஞாபகத்திலேயே இருந்தோம்..இப்போது ஜாக்கி என்று பெயரிட்டு அவனை போலவே வளர்த்து வருகிறோம்..எங்கள் வீட்டிற்கு வரும் ஜந்து களை பாம்பு, தேள் போன்றவற்றை கண்டு பிடித்து எச்சரிக்கை செய்வது அவன் தான்.
////////////////////////////////
இந்த பின்னூட்டம் பிலாசபிக்கு ரொம்ம பிடிக்கும்.......ஜாக்கி! ஹேஹே!
எங்கள் வீட்டுல ஒரு ராக்கி அப்படிங்கற பக் வகை நாய் இருந்தது....! பசிச்சா அழும்! குழந்தை அழுதா நம்மை வந்து கடித்து இழுக்கும்! சிறுநீர் வந்தா சொல்லும்....!உணவு பிடிக்கவில்லையென்றால் விதாண்டாவாதம் செய்யும்! குடும்பத்தில் உள்ள நபர்கள் குறைந்தால் தேடும்! தகவலை நமக்கு சொல்லும்! அட கண்ணாமூச்சி விளையாடும் அழகா ஒளிந்து கொள்ளும் நாம பார்த்துட்டா துள்ளி குதிக்கும் நாய்களில் ஆறறரை அறிவு உள்ள வகை அது முடிந்தால் அடுத்ததா அந்த வகை வாங்குங்க பிரபா?
ஆறரரை அறிவு எப்படின்னா! அழும் நம்மோடு பேசும்....என்ன சாப்ட்டியா? அப்படின்னா மண்டைய ஆட்டும் “வு” அப்படிங்கும் பசிக்குதா அப்படின்னு கேட்டா மணடைய மேலும் கீழும் ஆட்டும்! மனிதனை விட அதற்கு ஒரு அரை அறிவு அதிகம்!
So Sorry Praba :(
என் Snowy இறந்தப்ப கூட இப்படி தான் ரொம்ப கவலையா இருந்தது
இன்னொரு நாய் வளர்க்கவும்.
அப்படியே வாசிச்சு முடிக்கேல புல்லரிச்சுருச்சு... பிரமாதமான பதிவு..
RIP Leo.
:-(
great writeup. keep it up
So sad. Hope your family have another pet soon.
Glad to see Yuvakrishna encouraging your writing style here.
:-(
great writeup. keep it up
:(
இன்னொரு நாயை வளர்க்க ஆரம்பித்தால் விரைவில் மாறிவிடும்.......!
கஷ்டம்தான், ஆனாலும் சரியாகிவிடும்
அட...பாறைக்குள்...பூகம்பம்.....!!!!????
இவை அனைத்தும் கடந்து போகும்...
வேறு ஒரு குட்டி தேவனோ அல்லது தேவதையோ வீட்டுக்கு வந்தால்......
மிக நீண்ட பின்னுட்டம் இட ஆசைதான்...
ஆனால்...நான் பதிவாக போடுகிறேன்....
லியோ சந்தோஷமாக படித்து வந்து கடைசியில் வருத்தத்தை தந்துவிட்டது...
எங்கள் வீட்டிலும் ஜூலி, ராஜா எல்லாரும் வாழ்ந்தார்கள்... இப்போ இல்லை.
எதுவும் கடந்து போகும்.....
பிலாசபிக்கே பிலாசபியா????
மனிதர்களை விட நாய்கள் நம்மோடு நெருங்கி உண்மையாக பழகுவார்கள். ஈழத்தில் என் தாத்தாவை தாக்க வந்த துப்பாக்கிக் குண்டை தான் தாங்கி.. 2 நாள் அவதிப்பட்டு இறந்தான் எங்கள் ஜானி.. காலம் உங்கள் கவலையைத் தீர்க்கட்டும்.
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_29.html) சென்று பார்க்கவும்... நன்றி...
What's up, I want to subscribe for this website to take latest updates, so where can i do it please assist. gmail login
Post a Comment