18 February 2013

பிரபா ஒயின்ஷாப் - 18022013

அன்புள்ள வலைப்பூவிற்கு,

உறவினர் ஒருவரின் குழந்தைக்கு பிறந்தநாள் விழா ! குழந்தைக்கு ஐந்து வயது இருக்கும். சுற்றமும் நட்பும் சூழ, கேக் தயாராகி, குழந்தை கேக்குக்கு முன்னால் நின்று வெட்டுவதற்காக காத்திருக்கிறது. குழந்தையின் தாயார் குழந்தையிடம், “செல்லக்குட்டி... கேண்டில்ஸை ஊதுறதுக்கு முன்னாடி கண்ணை மூடி என்ன வேணும்ன்னு கடவுள்கிட்ட வேண்டிக்கனும்... அப்புறம் தான் ஊதணும்... கடவுள் என்ன கேட்டாலும் கொடுப்பார்... அம்மா ஒன் டூ த்ரீ சொல்லுவேன்... ப்ரே பண்ணிட்டுதான் ஊதணும்...” என்று மறுபடி மறுபடி அழுத்தமாக சொல்லி கொடுத்துக்கொண்டிருந்தார். கேக் வெட்டும் நேரம் வந்தது. ஒன்... டூ... த்ரீ... குழந்தை, “கடவுளே... எனக்கு அந்த ப்ளு கலர் கேண்டில் வேணும்...” என்று வேகவேகமாக சொல்லிக்கொண்டே ஊதி முடித்தது.

*****

சில்லுன்னு ஒரு சந்திப்பு, வணயுத்தம், ABCD, நேசம் நெசப்படுதே, மெளன விழிகள், யாரது ? - என்று கடந்த வாரஇறுதி மொக்கைப்பட விரும்பிகளுக்கு விருந்து. முதல் மூன்றும் தப்பித்தவறி நன்றாக இருந்து தொலைத்துவிடும் அபாயம் இருப்பதால், அக்மார்க் மொக்கைப்படங்களான பிந்தைய மூன்றில் ஒன்றை தேர்வு செய்ய விரும்பினேன். தமிழில் ஒரு ஹாரர் மூவி என்ற ப்ளஸ் இருப்பதால் யாரது ? படத்திற்கு சென்றேன். லோ-பட்ஜெட் படங்களில் தொழில்நுட்பம், காட்சியமைப்புகள் படுகேவலமாக இருக்குமென்பது உ.கை.நெ.க. ஆனால் கதை ? ஒரு பெண்ணோட வாழ்க்கையில நாலு பேரு விளையாடிட்டாங்க. அந்த பொண்ணு ஆவியா வந்து பழி வாங்குறது போன்ற மொக்கையான கதையை எத்தனை முறைதான் சொல்வார்கள். ஊர்பக்கம் வாய்மொழியாக சொல்லப்படும் பேயக்கதைகளை வைத்தே இதைவிட சிறப்பாக படம் பண்ணலாம். கிராபிக்ஸில் டார்ச் லைட்டு அடிப்பது போல ஆவியை காட்டுவதெல்லாம்... போங்க பாஸ் கிச்சுகிச்சு மூட்டாதீங்க. பேயை காட்டாமலே அப்படி ஒன்று இருப்பதாக உணர்வு ஏற்படுத்துவது தான் உண்மையான ஹாரர் படத்தின் வெற்றி...!

*****

மேற்கண்ட நகைச்சுவை படத்தை மேற்கு மாம்பலம் ஸ்ரீநிவாசாவில் கண்டேன். நீண்ட நாட்களாக அங்கே செல்ல வேண்டுமென்று ஆவல். ஏரியா விட்டு ஏரியா போய் சினிமா பார்ப்பதில் ஒரு அலாதிப்பிரியம். மாம்பலம் ரயில்நிலையத்தில் இருந்து பொடிநடையாக நடந்து சென்றேன். கோதண்டராமன் கோவிலுக்கு அருகிலுள்ள வீடுகள் இன்னமும் நவீனமயமாக்கலின் மிச்சமாக இருந்துக்கொண்டிருக்கிறது. ஓட்டுக்கூரை, திண்ணை என்று அந்த வீடுகளை பார்க்கும்போது கொஞ்சம் பொறாமையாகத்தான் இருக்கிறது. ஸ்ரீநிவாசா - அமர்க்களம் ஷூட்டிங் நடந்த திரையரங்கம் என்று நினைக்கிறேன். புதிப்பிக்கப்பட்ட பிறகும் கூட 25ரூ, 30ரூக்கு டிக்கெட் கொடுத்து நியாயமாக செயல்படுகிறார்கள். முன்சீட்டின் மீது கால் வைத்தால் கூட காவலாளி டார்ச் லைட்டோடு வந்து விடுகிறார். இன்னும் சில வருடங்களுக்கு திருமண மண்டபமாகவோ, குடியிருப்பு பகுதியாகவோ மாறாமல் இருக்குமென்று நம்புகிறேன்.

*****

தொண்ணூறுகளின் மத்தியில் வடகொரியாவில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டு முப்பது லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் மடிந்தார்கள். அந்த சமயத்தில் யாரும் தங்களுடைய குழந்தைகளை வெளியே அனுப்ப மாட்டார்களாம், பசி தாளாமல் யாரேனும் கொன்று தின்றுவிட வாய்ப்பு இருந்ததால். மீண்டும் அப்படியொரு கொடுமையான சூழலை நோக்கி வடகொரியா பயணித்துக்கொண்டிருக்கிறது. ஒருவர் பசிக்கொடுமை தாளாமல் தான் பெற்ற மகளையும் கொன்றிருக்கிறார், சாப்பிடுவதற்காக. அதை தடுக்க வந்த மகனையும். வெளியில் சென்று வீடு திரும்பிய மனைவியிடம் உணவு கிடைத்ததைப் பற்றி மகிழ்ச்சியுடன் சொன்னாராம். அந்த தாய் காவல்துறைக்கு தகவல் சொல்லியிருக்கிறார். இன்னொரு பெரியவர் பஞ்சத்தின் காரணமாக இறந்துபோன தன்னுடைய பேரனின் பிணத்தை தோண்டி எடுத்து சாப்பிட்டிருக்கிறார். இதையெல்லாம் பொருட்படுத்தாத அரசாங்கம் அடுத்தடுத்து ஏவுகணை சோதனை நடத்திக்கொண்டிருக்கிறது.


*****

நம்ம சென்னை பிப்ரவரி இதழில் ஞாநி:
சிறந்த டூவீலர் ரைடர்களுக்கென்று தனி விருது ஏதாவது ஏற்படுத்தினால் அதற்கு பரிசீலிக்கப்படும் தகுதி நிச்சயமாக எனக்கு உள்ளது. ஒவ்வொரு காலகட்டத்திலும் என்னைப் பில்லியனில் கூட்டிக்கொண்டு சுற்ற நண்பர்கள் அமைந்துவிடுகிறார்கள். இதழியல் படிக்கும் மாணவர்கள் பயிற்சிக்காக ஓரிரு மாதங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு வருவார்கள். அவர்கள் ஒவ்வொருவரையும் ஒரு நிருபருடன் கோர்த்துவிட்டு நேரடி அனுபவம் பெற அனுப்புவது வழக்கம். என்னுடன் வந்த பெண் ஸ்கூட்டர் வைத்திருந்தாள். எழுபதுகளின் இறுதியில் அது மிக அபூர்வமான விஷயம். அதைவிட அன்று அபூர்வமானது ஒரு பெண் வண்டி ஓட்ட, பில்லியனில் ஆண் உட்கார்ந்து செல்வது. பொதுவாக பெண்களின் பேக் சீட் டிரைவராக நிஜ வாழ்க்கையில் இருக்கும் ஆண்கள், பைக்கில் பில்லியன் ரைடராக இருக்க விரும்புவதில்லை. என் சக ஆண்கள் சிலர் அவளுடன் செல்ல நேர்ந்தால், நாங்கள் ஓட்டுகிறோம் என்று அவளை பில்லியனில் உட்காரவைத்துவிடுவார்கள். அவளுக்கு அது பிடிக்காது. எனவே என்னோடு நிறைய அசைன்மெண்டுகளுக்கு வருவாள். அப்போது மட்டுமல்ல, இப்போதும் கூட ஒரு பெண் ஓட்டும் டூவீலரில் ஒரு ஆண் பில்லியன் ரைடராக இருந்தால், தெருப்பார்வைகள் வேறு மாதிரித்தான் இருக்கின்றன.


*****

சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவரை அணுகினேன். எனக்கு முன்பு ஒரு முதியவருக்கு வைத்தியம் பார்த்துக்கொண்டிருந்தார், ஊசியும் போட்டார். என்னுடைய முறை வந்து உள்ளே நுழைந்தேன். பெரியவர், “எப்பயும் ரெண்டு ஊசி போடுவீங்க... இன்னைக்கு ஒன்னுதான் போட்டிருக்கீங்க...” என்று அசடு வழிந்தபடி நின்றுக்கொண்டிருந்தார். “இல்லை தேவைப்படாது... அந்த இன்ஜெக்ஷன்லயே சரியாயிடும்...” என்றார் மரு. பெரியவர் அதில்லைங்க என்று ஆரம்பித்து மறுபடியும் பழைய வசனத்தையே ஒப்பித்தார். மருத்துவர் சிரித்துக்கொண்டே இன்னொரு ஊசியை போடும்படி உதவியாளரை பணித்தார். அந்த பெரியவருக்கு தேவை மருந்து, மாத்திரை அல்ல. தாம் மருத்துவம் பார்த்திருக்கிறோம் என்ற உணர்வு மட்டுமே. மனநல மருத்துவர்களை அணுகுபவர்களுக்கு உடலில் விளைவுகள் எதுவும் ஏற்படுத்தாத, அதே சமயம் பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாத மாத்திரைகளை கொடுப்பார்களாம். தாம் மாத்திரை உட்கொள்கிறோம் என்ற நினைப்பிலேயே நோயாளி தேற ஆரம்பித்துவிடுவாராம்.

அதனால், இந்த அவரை விதை இருக்கிறதே... அதை அகத்திக்கீரையுடன் வதக்கிச் சாப்பிட்டால், வாதம் தீருமா என்றால் தீரும். சிலபேர் தீராதுன்னு சொல்றான்... தீராதுன்னுறவனுக்கு தீராது. இவ்வாறாக சாப்பிட்டு வந்தால் இந்தநாள் மட்டுமல்ல, எல்லா நாளுமே இனிய நாளாக மலரும்...!


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

13 comments:

sethu said...

sarakku kuraiva irukku

Anonymous said...

சரக்கு சரியா மிக்ஸ் ஆகலை(டே பக்கடா....இப்ப ஓனர் கைய முறுக்குவார் பாரேன்).

சீனு said...

வட கொரியாவில் இப்படி ஒரு கொடுரம் நடந்து கொண்டிருக்கிறதா....

aavee said...

மொக்கை படம்னு தெரிஞ்சும் அத பாக்க போன உம்மை என்னவென்று சொல்வது??

ஹாலிவுட்ரசிகன் said...

படத்தோட போஸ்டரே Monster Houseங்கற அனிமேஷன் படத்தோட போஸ்டரை அப்படியே உருவி கொஞ்சம் போட்டோஷாப் பண்ணி செஞ்சிருக்காங்க.. இதுலயே படம் எப்படி இருக்கும்னு தெரியுது.. :-)

http://i2.listal.com/image/179472/936full-monster-house-poster.jpg

கும்மாச்சி said...

பாஸ் ஸ்ரீனிவாசா தியேட்டர் பற்றி எழுதி, என் பள்ளி, கல்லூரி கால நினைவுகளை தட்டி எழுப்பிவிட்டீர்கள்.

”தளிர் சுரேஷ்” said...

கதம்ப பகிர்வு! சிறப்பாக இருந்தது! நன்றி!

கோகுல் said...

திரைத்துறையில் நுழைய முயன்று கொண்டிருக்கும் பலரின் தேர்வு சீநிவாசா என கேள்விப்பட்டிருக்கிறேன்

Unknown said...

பேஷ் பேஷ்....ரொம்ப நன்னா இருக்கு

Philosophy Prabhakaran said...

தகவலுக்கு நன்றி ஹாரர் :)

Philosophy Prabhakaran said...

கும்மாச்சி, அப்படின்னா உடனே பதிவு போடுங்க :)

ஜீவன் சுப்பு said...

//ஓட்டுக்கூரை, திண்ணை என்று அந்த வீடுகளை பார்க்கும்போது கொஞ்சம் பொறாமையாகத்தான் இருக்கிறது//

வாழ்க்கையை கிராமத்தில் தொலைத்துவிட்டு நகரத்தில் தேடிக்கொண்டிருக்கும் அனைவருக்குமே பொறாமையாகத்தான் இருக்கும் .

Ponmahes said...

மொக்கை படம் பார்த்து விட்டு மொக்க பதிவு எழுதின பிரபாவுக்கு ஒரு குட்டு..

வணயுத்தம். ABCD???????????