20 February 2013

அந்தமான் - வாழ்க்கைமுறை

அன்புள்ள வலைப்பூவிற்கு,

நான் அந்தமான் மண்ணில் கால்பதித்த சில நிமிடங்களிலேயே என் தந்தையின் நண்பருடைய செல்வாக்கை புரிந்துக்கொண்டேன். ஒருமாதிரி திருட்டுமுழியுடன் நுழைந்த என்னை கஸ்டம்ஸ் அதிகாரிகள் வழிமறித்து கேள்விக்கணைகளை தொடுத்தார்கள். இன்னாருடைய விருந்தினர் என்று சொன்னதும் மரியாதையாக அனுப்பிவைத்தார்கள். நான் தங்கியிருந்த தெலானிப்பூர் பகுதியில் கிட்டத்தட்ட எல்லோருக்குமே அவரை தெரிந்திருக்கிறது. அவருடைய பெயரைச் சொன்னால் ஸ்பெஷல் கவனிப்பு கிடைக்கிறது. தங்குமிடத்திற்காக அலைய அவசியமில்லாமல் போனது. விருந்தினருக்காக கட்டிவைக்கப்பட்ட சில அறைகளுள் ஒன்றை ஆக்கிரமித்துக்கொண்டேன். ஏசி இல்லை. மற்றபடி விசாலமான கட்டில், தொலைக்காட்சி, சுத்தமான குளியல் மற்றும் கழிவறைகள், பாத்ரூமில் ஹீட்டர் என்று செளகரியமாக இருந்தது. அடுத்தநாள் என்னுடைய சைட் ஸீயிங் இனிதே துவங்கியது. இப்போது சுற்றுப்பயணத்தில் தொபுக்கடீர் என்று குதிப்பதற்கு முன்பு அந்தமான் மக்களின் வாழ்க்கைமுறையை பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.

தமிழகத்தை பொறுத்தவரையில் நம் மக்களின் வாழ்வில் இரண்டற கலந்துவிட்ட இரண்டு - சினிமா & அரசியல். இரண்டினுடைய ஆதிக்கமும் அந்தமான் மக்களிடம் அதிகமில்லை.

சினிமா
கப்பலில் பயணிக்கும்போது தான் உள்ளூர்வாசிகள் அந்த அதிர்ச்சியைக் கொடுத்தார்கள் - அந்தமானில் திரையரங்குகள் இல்லை. லைட் அவுஸ், ஆனந்த் பேரடைஸ், சப்னா தியேட்டர் போன்ற அரங்குகள் சில வருடங்களுக்கு முன்புவரை இருந்திருக்கின்றன. ஆட்கள் வரத்து குறைந்து நாளடைவில் இழுத்து மூடப்பட்டிருக்கின்றன. இளைஞர்களை பொறுத்தமட்டில், சினிமா பார்ப்பதென்றால் டிவிடியில் தான் பார்ப்போம் என்கிறார்கள். அப்போதும் கூட புதுப்படம், உடனே பார்க்கவேண்டுமென்ற ஆர்வமெல்லாம் அவர்களுக்கு ஏற்படுவதில்லை. ரஜினி - கமல், அஜித் - விஜய் போன்ற பிம்பிள்ளிக்கி பிளாக்கி மோதல்கள் எல்லாம் அங்கே நடைபெறுவதில்லை.

அரசியல்
அந்தமான் & நிகோபர், பாண்டிச்சேரியை போலவே ஒன்றியப் பகுதியாகும். எனினும், அதன் அரசியல் மற்ற ஒன்றியப்பகுதிகளில் இருந்து வேறுபடுகிறது. அந்தமானுக்கென்று முதலமைச்சர் கிடையாது. ஆட்சியதிகாரம் ஆளுநரிடம் தான் உள்ளது. ஒரேயொரு லோக் சபா எம்.பி அந்தமானில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார். நீண்ட வருடங்களாக காங்கிரஸ் பிரமுகர் ஒருவர்தான் அங்கு எம்பியிருக்கிறார். ஆனால் தற்போது பி.ஜே.பி எம்பி அமர்ந்திருக்கிறார். “யோவ்... பி.ஜே.பிக்கு ஓட்டு போடுற அளவுக்கு மோசமான ஆளுகளாய்யா நீங்க...” என்று கேட்டால், அப்படியெல்லாம் இல்லை. இங்கே கட்சி, சாதி, மதமெல்லாம் பார்த்து வாக்களிக்க மாட்டோம். வேட்பாளரை பார்த்துதான் வாக்களிப்போம் என்கிறார்கள்.



உணவு
சொல்லித் தெரியவேண்டியதில்லை. கடல்சூழ் பகுதியென்பதால் கடல் உணவுகள் பிரசித்தி. என்ன ஒன்று, தமிழகத்தில் வஞ்சிரை, சங்கரா, வாளை, சுறா, இறால் என்று சொல்லப்படுபவை அங்கே இந்தி, வங்காள மொழிகளில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன. ஜிங்கான் மச்சி என்றால் இறாலை கொண்டுவந்து வைக்கிறார்கள். மற்றபடி, சுற்றுலா பயணிகளிடம் மான்கறி கிடைக்கும் என்றெல்லாம் சொல்லி ஆசை காட்டுகிறார்கள். அதேசமயம், மான்கறி சாப்பிட்டு மாட்டினால் கடுமையான தண்டனைகள் உண்டு என்று சொல்லி மிரள வைக்கிறார்கள்.



மது
ANIIDCO எனும் நிறுவனம் தான் அந்தமான் முழுவதும் சரக்கு சப்ளை செய்கிறது. தமிழகத்தில் TASMAC மாதிரி என்று சொல்ல முடியாது. ANIIDCO நேரடியாக சில கடைகளை அந்தமானில் நிறுவியுள்ளது. இதனை அங்குள்ளவர்கள் ‘சொசைட்டி’ என்று சொல்கிறார்கள். அத்தகைய கடைகளில் நீங்கள் சரக்கு வாங்க மட்டுமே முடியும். உட்கார்ந்து பருக இடமில்லை. மற்றபடி போர்ட் ப்ளேரில் இருபதடிக்கு ஒரு மதுக்கூடம் (பார்) அமைந்திருக்கிறது. மதுக்கூடங்களில் நம்மூர் தனியார் பார் முறைகள் பின்பற்றப்படுகின்றன. ஸ்மால், லார்ஜ், கட்டிங் அளவுகளில் மது, கண்ணாடி குடுவைகளில் பரிமாறப்படுகிறது. நான்கைந்து கிண்ணங்களில் சைட் டிஷ். விலையும் ஒப்பீட்டளவில் குறைவு. அதிலும் அருகிலிருந்த Holiday Inn மதுக்கூடத்தில் வேண்டப்பட்டவர் என்று அறிமுகப்படுத்தி விட்டதில் நல்ல மரியாதை கிடைத்தது.



பட உதவி: கூகிள்
பயணம்
அரசு பேருந்துகளை தேட வேண்டியிருக்கிறது. மினி பஸ் போன்ற அளவில் தனியார் பேருந்துகள் நிறைய தென்படுகின்றன. எந்தவொரு தீவுக்கும் மேம்பால போக்குவரத்து கிடையாது. திக்லிப்பூர், ரங்கத், மாயபந்தர் போன்ற தீவுகளுக்கு செல்வதென்றால் பேருந்தே கப்பலில் ஏறி பயணிக்கிறது. ஆட்டோக்காரர்கள் அதிகம் ஏமாற்றுவதில்லை. ஆனால், அந்த வேலையை டூரிஸ்டு ஏஜெண்டுகள் செவ்வனே செய்கிறார்கள். பெட்ரோல், டீசல் விலை தமிழகத்தை விட குறைவு.

மொழி & மதம்
தமிழும் வங்காளமும் ஆதிக்க மொழிகள். ஹிந்தி பொதுவாக அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. தெலுங்கு, மலையாளம் பேசும் மக்களும் இருக்கிறார்கள். முதலாளிகள், தொழிலதிபர்கள் பெரும்பாலும் தமிழர்களாகவே இருக்கிறார்கள். சமீபகாலமாக பெங்காலிகளின் கை ஓங்கியிருப்பதாக தெரிகிறது. ஹிந்துக்கள் பெரும்பான்மை. காளியும் விநாயகரும் இஷ்ட தெய்வங்கள். முருகனை வணங்குபவர்கள் நிச்சயம் தமிழர்கள் என்று கண்டுபிடித்துவிடலாம். அடுத்தபடியாக முறையே கிறிஸ்தவமும் இஸ்லாமியமும்.

மற்றவை
பாலிடெக்னிக், கலை, அறிவியல் கல்லூரிகள் மட்டுமே உள்ளன. அவை தவிர்த்து மேற்படிப்பு படிக்க விரும்பினால் தாயகத்திற்கோ, வெளிநாடுகளுக்கோ தான் செல்ல வேண்டும். இந்திய நகரங்களின் தீராத தலைவலியாக இருக்கும் போக்குவரத்து நெரிசல் அந்தமானில் மிக மிக குறைவு. சிக்னல் விளக்குகள் கிடையாது. ஆங்காங்கே போக்குவரத்து போலீசார் மட்டும் நிற்கிறார்கள். யாரையும் மடக்கி லஞ்சம் வாங்குவதில்லை. காய்கறி, பழங்கள் தாயகத்திலிருந்து அனுப்பப்படுவதால் கொள்ளை விலையில் விற்கப்படுகின்றன. யாரும் செய்தித்தாள்கள் படிப்பதில்லை. படிக்க வேண்டுமென்று நினைத்தாலும் மதியத்துக்கு மேல்தான் கிடைக்கும். சொல்லப்போனால் யாரும் செய்திகளை தெரிந்துக்கொள்ளவும் விரும்புவதில்லை.

தொடரும்

முந்தய பகுதிகள்:
பயணத்தொடர் ஆரம்பம்
கப்பல் பயணம்

மேலும் சில கேள்விகளும் பதில்களும்


1. சீசன் ?
டிசம்பர் - மே. மற்ற மாதங்களை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் சில தீவுகளில் சீசன் இல்லாத சமயம் பராமரிப்பிற்காக சுற்றுப்பயணிகளை அனுமதிக்க மாட்டார்கள். மழைக்காலத்தில் உள்ளூர்கப்பல்கள் முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்படும் அபாயங்கள் உள்ளன.

2. எத்தனை நாட்கள் தேவை ?
போக வர விமானப்பயணம் சேர்த்து எட்டு நாட்கள் இருந்தால் மனநிறைவோடு சுற்றிப்பார்க்கலாம். ஓரிரு நாட்கள் குறைவாக இருப்பின் சில இடங்களை தவிர்த்துவிட்டு சுற்றிப்பார்க்கலாம்.

3. சொகுசுக்கப்பல்கள் உண்டா ?
முந்தய பதிவில் குறிப்பிட்ட Azamara Journey எப்போதாவது ஒருமுறை பயணிக்கும். டிக்கெட் கட்டணம் 3500 அமெரிக்க டாலர்களில் துவங்கும். தவிர, AMET நிறுவனம் இயக்கும் கப்பல்களில் டிக்கெட் விலை பதினெட்டாயிரத்தில் ஆரம்பிக்கிறது.

4. கப்பல், விமானம் இரண்டில் எது சிறந்தது ?
கப்பலில் போக வேண்டுமென்று பேராவல் கொண்டவர்கள் தவிர்த்து மற்றவர்கள் விமானத்தையே தேர்ந்தெடுக்கவும். கப்பலில் பயணம் செய்தால் மூன்று நாட்கள் ஸ்வாஹா, விமானத்தில் மூன்றே மணிநேரங்கள். தவிர, தீவுகளுக்கிடையே சிறிய கப்பல்களில் பயணிக்கலாம்.

5. விமானக் கட்டணம்
நான்கைந்து மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டால் ஒருவழிப்பயணத்திற்கு 5000ரூ வரை செலவாகும். தேதி நெருங்க நெருங்க பதினெட்டாயிரம் வரை அதிகரிக்கும். வார இறுதி நாட்களை விட, வாரநாட்களில் குறைவாக இருக்கும்.

மேலும் கேள்விகள் வரவேற்கப் படுகின்றன...

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

28 comments:

அமுதா கிருஷ்ணா said...

குட்.கேள்விக்கெல்லாம் கரெக்டா பதில் சொன்னதற்கு.

கும்மாச்சி said...

அந்தமானில் பிகர்கள் கிடையாதா? அதை பற்றி எழுதி ஒன்றிரண்டு படம் போட்டால் என்ன குறைந்தா போய்விடுவீர்கள்.

இருந்தாலும் நல்ல பயணக்கட்டுரை.

Philosophy Prabhakaran said...

நன்றி அமுதா மேடம்...

Philosophy Prabhakaran said...

கும்மாச்சி, ஃபிகர்கள் இருந்தார்கள்... ஆனால் நமக்கு யார் போஸ் தர்றது...

தனிமரம் said...

நல்ல பயக்கட்டுரை பகிர்வுக்கு நன்றி பலவிடயங்களை அறிய முடிந்தது அந்தமான் பற்றி!

கார்த்திக் சரவணன் said...

ஆந்தமானில் முக்கிய பிஸினஸ் என்ன? சுற்றுலா பயணிகளைக் கவர அரசு என்ன செய்கிறது?

Ponmahes said...

அந்த மானின் நகர அமைப்பு மற்றும் சுத்தம் எப்படி பிரபா ...

நம்ப ஊர்ல மாதிரி வாயிக்கா தகராறு ஏதாவது உண்டா ????

//யாரும் செய்தித்தாள்கள் படிப்பதில்லை.
இது எப்படி சாத்தியம் ????????
அப்போ சாதி மத சண்டையே இருக்காதே ?????

அகில உலக ஆசாரிகள் சங்கம் said...

ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி...
ஆசாரிக்கு சொல்லியிருக்கோம்
ஆணியடிக்க ஆள் வருவான்

தனிமரம் said...

நல்ல பயணக்கட்டுரை அவசரத்தில் வந்த பின்னூட்டத்துக்கு மன்னிக்கவும்!

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான முறையில் அந்தமானை அலசி எழுதியதற்கு பாராட்டுக்கள்! சுவையான கட்டுரை!

உலக சினிமா ரசிகன் said...

நண்பரே...
இப்பதிவையையும் படியுங்கள்.
காலையில் கக்கா போக உதவும். http://veeduthirumbal.blogspot.com/2013/02/blog-post_20.html

உலக சினிமா ரசிகன் said...

அந்தமான் தொடரை தொடர்ந்து படித்து
வருகிறேன்.

என் கனவுப்பிரதேசங்களில் ஒன்றான அந்தமானுக்கு போகும் வாய்ப்பு கிட்டும் போது தொடர்பு கொள்கிறேன்.
தகவல் தந்து உதவவும்.

நம்பள்கி said...

அந்தமானில் கஸ்டம்ஸ் ஏன்? இந்தியாவில் தானே இருக்கு?

//அரசியல்
அந்தமான் & நிகோபர், பாண்டிச்சேரியை போலவே ஒன்றியப் பகுதியாகும்.//

Riyas said...

பிரபா அழகாக தொடர்கிறீர்கள்..

Philosophy Prabhakaran said...

நன்றி தனிமரம்...

Philosophy Prabhakaran said...

ஸ்கூல் பையன், அந்தமானில் பிஸினஸ் எல்லாம் சுற்றுலாப்பயணிகளை சார்ந்தே இருக்கிறது... டூரிஸ்ட் ஏஜெண்டுகள், லாட்ஜூகள், தனியார் பேருந்துகள், உணவகங்கள், சிறிய கப்பல் போக்குவரத்துகள் போன்றவை பிரசித்தி...

சுனாமிக்கு பிறகு அந்தமானில் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருக்கிறது... அதனால் இந்திய நடுவண் அரசு அலுவலர்களுக்கு சலுகைகள் கொடுக்கப்பட்டன என்று கேள்விப்பட்டேன்... முழுமையாக தெரியவில்லை...

Philosophy Prabhakaran said...

பொன் மகேஸ், மக்கள் வசிப்பிடங்களில் சுத்தம் தமிழகத்தைப் போல தான் இருக்கின்றன... ஆனால் சுற்றுலா தளங்களை மிகவும் கவனமாக பாதுகாக்கிறார்கள்...

சாதி, மத சண்டைகள் பற்றி கேள்விப்படவில்லை... ஒருமுறை தமிழர்களுக்கும் பெங்காலிகளுக்கும் இடையே இனக்கலவரம் ஏற்பட்டிருக்கிறது...

செய்திகளை தெரிந்துக்கொள்ள விரும்புபவர்கள் தொலைக்காட்சியை தான் பார்க்க வேண்டும்... உள்ளூர் செய்தித்தாள் ஆங்கிலத்தில் அந்தமான் செய்திகளை மட்டும் தாங்கி வருகிறது...

Philosophy Prabhakaran said...

நன்றி சுரேஷ்...

Philosophy Prabhakaran said...

உ.சி.ர... அந்த பதிவை படித்தேன், கழிந்தேன்... நாம ஏதாவது சொன்னா மோகன் குமார் சார் தேவையில்லாம டன்சன் ஆவாரு...

Philosophy Prabhakaran said...

நம்பள்கி, கஸ்டம்ஸ் ஆபிசர் என்ற வார்த்தைக்கு சரியான அர்த்தம் தெரியாமல் எழுதிவிட்டேன் என்று நினைக்கிறேன்... பொதுவாக அங்கே துறைமுகத்தில் இறங்கி வெளியே செல்பவர்களை சோதனையிட சிலர் இருக்கிறார்கள்... அவர்கள் எல்லோரையும் சோதனையிடுவதில்லை... சந்தேக்கப்படும் படியாக இருப்பவர்களை மட்டும் கவனிக்கிறார்கள்...

அவர்களை என்னவென்று சொல்வது என்று தெரியவில்லை...

Philosophy Prabhakaran said...

நன்றி ரியாஸ்...

நம்பள்கி said...

பெயர் முக்கியம் இல்லை. ஆனால், ஏன் சோதனை? இந்தியாவில் எங்கும் சுதந்திரமாக இந்திய குடிமகன் போகாலாம் என்று இருக்கும் போது அங்கு சோதனை ஏன்?

அது தான் கேள்வி. தெரிந்தவர்கள் பதில் கூறலாம்.

[[நம்பள்கி, கஸ்டம்ஸ் ஆபிசர் என்ற வார்த்தைக்கு சரியான அர்த்தம் தெரியாமல் எழுதிவிட்டேன் என்று நினைக்கிறேன்... பொதுவாக அங்கே துறைமுகத்தில் இறங்கி வெளியே செல்பவர்களை சோதனையிட சிலர் இருக்கிறார்கள்... அவர்கள் எல்லோரையும் சோதனையிடுவதில்லை... சந்தேக்கப்படும் படியாக இருப்பவர்களை மட்டும் கவனிக்கிறார்கள்...]]

Anonymous said...

அரிய படங்கள், விளிம்பு நிலை மான்கள் பேட்டி எங்கய்யா???

Unknown said...

நன்றீ பிரபா...பல விசயங்கள் தெரிந்து கொள்ள வைக்கும் பதிவு...தொடர்கிறேன்..

pshychic pshychartist said...

thnx praba u hv mentind d details again,,,

aavee said...

அந்தமானை தொடர்ந்து வருகிறேன்..

சீனு said...

சிறப்பான பயணக் கட்டுரை, சமீபத்தில் கப்பலில் செல்ல வேண்டும் என்று நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த பொழுது அந்தமான் செல்லலாம் சென்று கூறினார்கள், அப்பொழுது உங்கள் பயணம் தான் நியாபகம் வந்தது, இன்று தான் இந்தப் பயணத் தொடர் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது....

ஒரு பயண வழிகாட்டி போல் உள்ளது.. மொத்த தொடரையும் முடியுங்கள் அதன் பின் கேள்விகள் இருந்தால் கேட்கிறேன்

மாதேவி said...

அந்தமான் வாழ்க்கைமுறை கண்டுகொண்டேன்.