22 February 2013

அந்தமான் - ராஸ் / வைபர் / நார்த் பே தீவுகள்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

அந்தமானில் மிக மிக எளிமையாக, குறைந்தபட்ச வழிகாட்டுதலோடு சுற்றி பார்க்கக்கூடிய தீவுகள். ராஜீவ் காந்தி வாட்டர் ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் எனும் சிறிய பூங்காவிலிருந்து படகுகள் காலையில் கிளம்பும். நகரின் மையப்பகுதியில் இருந்து பூங்காவிற்கு ஆட்டோவில் செல்ல இருபது அல்லது முப்பது ரூபாய் ஆகலாம். மதிய உணவு உட்பட மூன்று தீவுகளையும் சுற்றிப்பார்க்க 500 ரூபாய் கட்டணம். டிக்கெட் கவுண்ட்டர், கூட்டம் பற்றிய கவலை வேண்டாம். பூங்காவின் முகப்பிலேயே நான்கைந்து தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தினர் ஸ்டால் அமைத்து டிக்கெட் தருகிறார்கள். தனித்தனியாக மூன்று தீவுகளையும் கூட சுற்றிப்பார்க்கலாம். ஆனால் அது அவசியமில்லாதது. ஏன் என்று பதிவின் இறுதியில் உங்களுக்கே புரியும். நார்த் பே, ஜலகிரீடைகளின் தலைநகரம் என்பதால் டவல், மாற்றுத்துணி அவசியம் எடுத்துச்செல்லுங்கள். மதுப்பிரியர்கள் தங்கள் தகுதிக்கேற்ப குவாட்டரோ, ஹாஃபோ எடுத்துச்செல்வது சாலச்சிறந்தது. அப்புறம் தேவைப்பட்டால் கேமரா.

நாம் இப்போது பார்க்கப்போகும் மூன்று தீவுகளுமே நிரந்தர வசிப்பிடம் கிடையாது என்பதை நினைவில் கொள்ளவும். இவை சுற்றுலா பயணிகள் காலையிலிருந்து மாலை வரை மட்டுமே அனுமதிக்கப்படும் சிறிய அளவிலான தீவுகள்.

ராஸ் தீவு
போர்ட் ப்ளேரில் இருந்து கண்ணுக்கெட்டிய தூரம், இருபது நிமிட படகு பயணத்தில் ராஸ் தீவு. அங்கே கிட்டத்தட்ட அனைவருமே ரோஸ் ஐலேன்ட் என்றுதான் உச்சரிக்கிறார்கள். சுற்றிப்பார்த்துவிட்டு மறுபடி படகிற்கு வர இரண்டு மணிநேர அவகாசம் கொடுப்பார்கள். அதுவே போதுமானது. தீவை அடைந்ததும் அழகிய மான்குட்டிகள் நம்மை வரவேற்கின்றன. போட்டோ எடுக்க முனைந்தால் மட்டும் மிரண்டு ஓடுகின்றன.

ராஸ் தீவு சுதந்திரத்திற்கு முன்பு அந்தமானின் நிர்வாக தலைமையிடமாக விளங்கிய பகுதி. 1941ல் ஏற்பட்ட நிலநடுக்கம், பின்னர் ஜப்பானிய படையெடுப்பு என்று உருக்குலைந்து விட்டது. அந்த பழைய இடிபாடுகளுடன் கூடிய கட்டடங்கள் தான் தற்போதைய ராஸ் தீவை சுற்றுலா தளமாக வைத்திருக்கிறது. 



பாவம் போக்கிய தேவாலயம்
மருத்துவமனை, தேவாலயம், கல்லறை தோட்டம், அச்சகம், டென்னிஸ் கோர்ட் போன்றவை இருந்திருக்கின்றன என்பதை அங்கிருக்கும் பலகைகளும், எஞ்சியிருக்கும் கட்டிடங்களும் சொல்கின்றன. கெளதம் கார்த்திக் உள்ளங்கையிலிருந்து துளசி பாவத்தை துடைத்துவிடுவாரே அந்த தேவாலயம் இங்குதான் உள்ளது.

இந்த வரலாறெல்லாம் எங்களுக்கு வேண்டாம் பாஸு என்று சொல்லும் கொண்டாட்ட விரும்பிகள் சற்றே மக்கள் மந்தை செல்லும் பாதையிலிருந்து விலகினால் மனித நடமாட்டமில்லாத கடலை அடையலாம். நிர்வாணக்குளியல் போடலாம். காதலிக்கும் ஆசையில்லை கண்கள் உன்னைக் காணும்வரை என்று பாடிக்கொண்டே ஆடலாம். ஆனால் இரண்டு மணிநேரங்களுக்குள் மறுபடியும் படகிற்கு வந்துவிடவும்.



ஆளில்லாத கடற்கரையில்...!
வைபர் தீவு
மற்றொரு குட்டி தீவு. இங்கே பதினைந்து நிமிடங்களுக்கு மேல் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. படகு பணியாளே நம்முடன் வந்து வைபர் தீவை பற்றி சிறிய உரை ஒன்றை ஆற்றுவார். அந்த உரையை கேட்ட பலரும் ஒருமுறையாவது “உச்சு” கொட்டுவார்கள். சிலர் கண்ணீரே விடுவார்களாம்.

முதன்முதலாக ஆங்கிலேயர்கள் வைபர் எனும் கப்பலில் இங்கு வந்தடைந்ததாலும், இங்கே வைபர் எனும் விஷப்பாம்புகள் உள்ளதாலும் இப்பெயர் பெற்றுள்ளது. அந்தமான் என்றதுமே நம் நினைவுக்கு வருவது ஜெயில். அந்த ஜெயில் கட்டுவதற்கு முன்பு வரை வைபர் தீவு ஒரு திறந்தவெளி சிறைச்சாலையாக இருந்துள்ளது. இந்திய விடுதலை போராளிகளை கை, கால்களை பிணைத்து இங்கு விட்டுவிடுவார்களாம். தொடர்ச்சியாக உணவு, குடிநீர் கிடைக்காமல் வெயிலிலும், மழையிலும், குளிரிலும் வாடி, பாம்புகளிடம் கடிப்பட்டு மிகுந்த துயரத்தோடு மடிந்தார்களாம் இந்திய போராளிகள். இதனை சொல்லி முடிக்கும்போது அந்த கைடே சற்று உணர்ச்சிவசப்பட்டு கண்களில் கண்ணீர் வழிய வந்தே மாதரம், ஜெய் ஹிந்த் என்று கோஷம் எழுப்பினார்.

மறுபடி படகிற்கு வந்ததும் உணவுப்பொட்டலங்கள் வழங்கப்படும். விஜிடபிள் பிரியாணி. அதனை அப்புறம் சாப்பிடலாம் என்று பைக்குள் திணிக்காமல் படகிலேயே வைத்து சாப்பிட்டுவிடுவது உசிதம். ஏனெனில், நார்த் பே நிறைய நீர் விளையாட்டுகள் அடங்கிய கொண்டாட்டத்தீவு.



இன்றைய பிணத்தின் மீது நாளைய பிணமொன்று...!
நார்த் பே
அந்தமானில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கிடைக்கும் நீர் விளையாட்டுகள் மொத்தமாக கிடைக்கப்பெறும் ஒன் ஸ்டாப் ஷாப். இந்த தீவை உங்களுக்கு நன்றாக தெரியும். பழைய இருபது ரூபாய் நோட்டுகளில் தென்னை மரங்களால் சூழப்பட்ட, கலங்கரை விளக்கமாக பொறிக்கப்பட்டிருக்கும். இங்குள்ள தீரச்செயல் வாய்ப்புகளை ஒருநடை பார்த்துவிடுவோம். எளிதான புரிதலுக்காக படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

ஸ்கூபா டைவிங்
டிஸ்கவரி வகையறா சேனல்களில் பார்த்திருப்பீர்கள். இதற்கென வடிவமைக்கப்பட்ட பிரத்யேக உடையை அணிந்துக்கொண்டு மீன்களோடு நீந்திவிட்டு வரலாம். சிறிதளவு நீச்சல் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். கட்டணம் ரூ.4000/-

ஸீ வாக்
நீச்சல் தெரியாதவர்கள் இதனை தேர்ந்தெடுக்கலாம். ஹெல்மெட் மற்றும் பிரத்யேக ஆடையுடன் கடலின் உள்ளே மணல் படுகையில் நடந்து செல்லலாம். கட்டணம் ரூ.2700/-

ஸ்னார்கலிங்
கடலுக்குள் நீந்த வேண்டிய அவசியமில்லை. தலையை மட்டும் நீருக்குள் செலுத்தியபடி மிதக்க வேண்டும். சுவாசத்திற்காக நீர்பரப்பிற்கு மேலிருந்து பிளாஸ்டிக் குழாய் இணைக்கப்பட்டிருக்கும். கடலுக்கு அடியில் உள்ள மீன்களை, பவளப்பாறைகளை ரசிக்கலாம். கட்டணம் ரூ.500/-

பனானா ரைடு
தொலைகாட்சியில் டகேஷி கேஸில் பார்ப்பவர்களுக்கு மிகவும் பிடிக்கும். ஸ்பீட் போட்டின் பிற்பகுதியில் வாழைப்பழ வடிவ பலூன் இணைக்கப்பட்டிருக்கும். அதன் மீது நால்வரோ, ஐவரோ அமர படகு வேகமெடுக்கும். குறிப்பிட்ட தொலைவு வரை சென்றதும் படகை வேண்டுமென்றே திசைதிருப்பி நம்மை கடலுக்குள் தள்ளிவிடுவார்கள். கட்டணம் ரூ.250/-

ஸ்பீட் போட் & வாட்டர் ஸ்கூட்டர்
ரொம்ப ஸ்பெஷல் இல்லை. குடும்பத்தோடு செல்பவர்கள் ஸ்பீட் போட்டில் பயணிக்கலாம். சாகச விரும்பிகளை போட்டின் கூம்பு வடிவ முற்பகுதியில் அமர்த்தி வேகமெடுக்கிறார்கள். வாட்டர் ஸ்கூட்டரை நிறைய சினிமா பாடல் காட்சிகளில் பார்த்திருப்பீர்கள்.

குறிப்பிடப்பட்டுள்ள எதற்கும் பயப்பட தேவையில்லை. லைப் ஜாக்கெட் கொடுப்பார்கள். அருகிலேயே நீச்சல் தெரிந்த உதவியாளர்கள் இருப்பார்கள். தேவைப்பட்டால் உடன் வருவார்கள். மேலும் இவையனைத்தும் உங்கள் வாழ்நாளில் ஒருமுறை அனுபவமாக இருக்கக்கூடும். அதனால் தவறவிட்டு பின்னர் வருந்தாமல், குதூகலமாக கும்மியடித்துவிட்டு வாருங்கள்.

உடை மாற்றிக்கொள்ளவும், குளிக்கவும், கழிக்கவும் - தென்னை ஓலையால் மூடப்பட்ட தற்காலிக அறைகள் உள்ளன. தண்ணீரில் ஆட்டம் போட்டதும் பசியெடுக்கும், அதற்கு தகுந்தாற்போல கடல் உணவுகள் கிடைக்கின்றன.

மாலை நாலரை மணிவாக்கில் மறுபடியும் போர்ட் ப்ளேருக்கு வந்துவிடலாம். படகில் எங்களோடு ஒரு தமிழ்க்குடும்பம் பயணித்தது. வழக்கமாக குழந்தைகளுக்கு என்னைக் கண்டாலே பிடிக்காது. எனக்கும் குழந்தைகளோடு இணக்கமாக பழகத் தெரியாது. அவர்கள் வீட்டுக்குழந்தை அநியாயத்திற்கு என்னுடன் ஒட்டிக்கொண்டது. என்னுடைய நீளமான கைவிரல் நகத்தை தொட்டுபார்த்துக்கொண்டே இருந்தது. போர்ட் ப்ளேர் திரும்பியதும் அவர்களிடமிருந்து விடைபெற, குழந்தை என் கரங்களை பற்றிக்கொண்டு ஒரே அடம். கொஞ்சம் சிரமப்பட்டு தான் வசிப்பிடம் திரும்பினேன்.

அடுத்ததாக நாம் காணவிருப்பது பழங்குடியினர் வசிக்கும் பகுதியை கடந்து செல்ல வேண்டிய பாராடங்...!

தொடரும்


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

24 comments:

சக்தி கல்வி மையம் said...

அசத்தல் கட்டுரை பிரபா.. கட்டுரை முடியட்டும் நிறைய கேள்விகள் காத்திருக்கிறது.. நன்றி..

r2 said...

நான் அந்தமான் செல்லும்போது, எனக்கு உங்கள் குறிப்புகள் மிகவும் உதவியாக இருக்கும். ராஜா.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அது இன்றைய பிணம் இல்ல, நேற்றைய பிணம்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// அவர்கள் வீட்டுக்குழந்தை அநியாயத்திற்கு என்னுடன் ஒட்டிக்கொண்டது./////

குடும்பஸ்தர் களை வந்துடுச்சி போல....

Admin said...

பயணத்தொடரின் முந்தைய பகுதிகளையும் வாசித்தேன். அந்தமானை அறிந்துகொள்ள உதவுகிறது..

ஜீவன் சுப்பு said...

//குறிப்பிடப்பட்டுள்ள எதற்கும் பயப்பட தேவையில்லை.//

இப்டி சொன்னாலே பயமா இருக்கு . நல்ல விரிவான பயணப் பதிவு ...

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//இன்றைய பிணத்தின் மீது நாளைய பிணமொன்று...!//

இப்படம் -ஒரு கல்லறைக்கு கொடுக்கவேண்டிய மதிப்பைக் கொடுக்கவில்லை.

”தளிர் சுரேஷ்” said...

நல்லதொரு பயணத்தொடர்!நன்றி!

நாடோடிப் பையன் said...

Really good travelouge. I had been to Andaman and Ross Island. After reading your blog, I want to make another trip there.

Philosophy Prabhakaran said...

நன்றி கருண்...

Philosophy Prabhakaran said...

நன்றி ராஜா...

Philosophy Prabhakaran said...

நேற்றைக்கு, இன்றைக்கு, நாளைக்கும் கூட அது பிணம் தான் :)

Philosophy Prabhakaran said...

நன்றி மதுமதி...

Philosophy Prabhakaran said...

நன்றி ஜீவன் சுப்பு...

Philosophy Prabhakaran said...

தகவலுக்கு நன்றி யோகன்...

Philosophy Prabhakaran said...

நன்றி சுரேஷ்...

Philosophy Prabhakaran said...

மிக்க நன்றி நாடோடிப் பையன்...

தனிமரம் said...

அருமையான தொகுப்பு தொடரட்டும் பயணம்!

aavee said...

//இன்றைய பிணத்தின் மீது நாளைய பிணமொன்று...!
//

Rest in Peace ன்னு சொல்லித்தான் புதைக்கறாங்க. பிணத்துக்கு ரெஸ்ட் கொடுக்கமாட்டீங்க போலிருக்கு?

கார்த்திக் சரவணன் said...

பதிவு அருமை... நிறைய உதவியான குறிப்புகள்... நன்றி...

அஞ்சா சிங்கம் said...

பார்றா ...........................புதுசா ஒரு நேருமாமா ..

Jayadev Das said...

My post on this with many pictures:

http://jayadevdas.blogspot.com/2012/12/1-north-bay-ross-viper-islands.html

மாதேவி said...

அந்தமான் தீவுகள் பற்றி நன்கு அறிய முடிந்தது.

Ponmahes said...

தீவுகள் பற்றிய தகவல்கள் அருமை...பதிவும் கூட.....வாழ்த்துக்கள் பிரபா..........