20 March 2013

பரதேசி

அன்புள்ள வலைப்பூவிற்கு,

இனி இயக்குனர் பாலா படங்களை பார்ப்பதில்லை என்று முடிவு செய்திருந்தவர்களில் நானும் ஒருவன். விமர்சகர்களின் ஏகோபித்த ஓகோபித்த ஆதரவு தான் என்னை திரையரங்கிற்கு நகர்த்திச் சென்றது. எப்போதுமே ஒரு படத்தை வெளிவந்ததும் சுடச்சுட பார்ப்பதற்கும், நான்கைந்து நாட்கள் ஆறப்போட்டு அடிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. சஸ்பென்ஸோடு படம் பார்க்கும்போது அது ஏற்படுத்தும் தாக்கம், விமர்சனங்களை படித்துவிட்டு பார்க்கும்போது கிடைப்பதில்லை.

பரதேசியைப் பற்றி ஏற்கனவே பலதரப்பட்ட விமர்சனங்கள் வெளிவந்துவிட்டன. புதிதாக சொல்வதற்கு ஏதுமில்லை என்று நினைக்கிறேன்.

சில மாதங்களுக்கு முன்பு நான் Grotesque என்கிற படத்தை பார்த்தேன். திரைப்பட வரலாற்றில் அதீத வன்முறை கொண்ட பத்து திரைப்படங்களை பட்டியலிட்டால் Grotesque கண்டிப்பாக இடம்பெறும். முதன்முதலில் அதனை பார்த்தபோது அது பிடித்ததா இல்லையா என்று எனக்கே தெரியவில்லை. ஆனால் கடுமையான தாக்கத்தை எனக்குள் ஏற்படுத்தியது. இன்றளவும் அந்த படம் என்னை அடிக்கடி மன உளைச்சலிலிருந்து விடுவிக்கிறது. உங்கள் முகத்தில் தொடர்ந்து கரியை பூசிக்கொண்டே இருக்கும் இருபெரும் அரசியல்வாதிகளைப் பற்றி நினைத்தாலே உங்களுக்கு காறி உமிழ தோன்றுகிறது என்று வைத்துக்கொள்வோம். எனினும் உங்களுடைய கோபம் அவரை துளியளவு கூட பாதிக்கப்போவதில்லை. போன்ற சமயங்களில் Grotesque படத்தில் துன்புறுத்தப்படும் மனிதர்களாக அந்த இருபெரும் அரசியல்வாதிகளை நினைத்துக்கொண்டால் ஒருவித மனநிம்மதி கிடைப்பதை உணருவீர்கள். வன்முறை, செக்ஸ் என்று நம்முடைய உணர்ச்சிகளுக்கு கட்டாயம் ஒரு வடிகால் தேவை. இல்லையென்றால் ஒரு கட்டத்தில் அது வெடித்துச் சிதறிவிடும். Noctural emission கேள்விப்பட்டதில்லையா ? அதுபோல பாலாவுடைய ஆழ்மன வன்முறை உணர்வுகளுக்கு அவருடைய படங்கள் வடிகாலாக இருக்கலாம்.

கார்த்திக்கு ஒரு பருத்தி வீரன் கிடைத்தது போல, அதர்வாவிற்கு பரதேசி கிடைத்திருக்கிறது. முதல் படமாக கிடைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அதர்வாவின் நடிப்பு ஒன்றும் உறுத்தலாக இல்லையென்றாலும், சாலூர் ராசா என்கிற அந்த வேடத்தில் கச்சிதமாக நடிப்பதற்கு தமிழ் சினிமாவில் அதர்வாவை விட திறமைசாலிகள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

வேதிகாவும், தன்ஷிகாவும் நாயகிகள். தன்னுடைய பட நாயகிகளை அவலட்சணமாக காட்சிப்படுத்த முனையும் திருவாளர் பாலாவிற்கு இந்தமுறை தோல்வியே கிடைத்திருக்கிறது. குறிப்பாக தன்ஷிகா, ஒரு பத்து லோடு கரியை இறக்கி தன்ஷியின் முகத்தில் தேய்த்தால் கூட அவர் அழகாகவே இருப்பார். 

கவிஞர் விக்கிரமாதித்யனும், அதர்வாவின் பாட்டியும் மனதைவிட்டு அகல மறுக்கின்றனர். கிராமத்தில் வசிப்பவர்கள், நிச்சயமாக விக்கிரமாதித்தன் கதாபாத்திரம் போன்ற ஒருவரையாவது தங்கள் வாழ்நாளில் சந்தித்திருப்பார்கள். 

ஆமாம், பரதேசியில் பவர்ஸ்டார் நடிப்பதாக இருந்ததே. இப்படிப்பட்ட கதைக்கு எப்படி பவர் பொருந்துவார் என்று உங்களுக்குள் ஒரு கேள்வி எழலாம். இரண்டாம் பாதியின் பிற்பகுதியில் வருகிற மருத்துவர் பரிசுத்தம் - அதுதான் பவருக்கு ஒதுக்கப்பட்ட வேடம். இப்போது நடன இயக்குனர் சிவசங்கர் நடிப்பில் வெளிவந்திருக்கிறது. அந்த வேடத்தில் மட்டும் பவர் ஸ்டார் நடித்திருந்தால், பரதேசி பஞ்சராகியிருக்கும்.

அவத்த பையா பாடலும் அதன் பெண்குரலும் அநியாயத்திற்கு வசீகரிக்கின்றன. மற்றபடி இசையைக் காட்டிலும் கேமரா அதிக கவன ஈர்ப்பு செய்கிறது. முதல்காட்சியில் சாலூர் கிராமத்திற்குள் நம்மை அழைத்துச் செல்வதிலிருந்தே கேமராவின் ஆளுமை துவங்கிவிடுகிறது. 

வழக்கமாக பாலா படங்களில் காணப்படும் சில விஷயங்கள் பரதேசியில் இல்லாதது அதிர்ச்சியான ஆறுதல். போலீஸ், நீதிபதிகளை கிண்டலடிக்கவில்லை; திருநங்கை அல்லது போன்ற கதாபாத்திரங்கள் இல்லை; உச்சக்கட்ட காட்சியில் நாயகன் பொங்கி எழுந்து வன்முறையில் இறங்கவில்லை. இப்படி நிறைய இல்லைகள்.

பரதேசியிலிருந்து இருவேறு தரப்பினரும் புரிந்துக்கொள்ள விஷயங்கள் இருக்கிறது. நமக்கு கீழே பணிபுரிபவர்களை அன்பாக நடத்தவேண்டும், அவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். அதே சமயம், நம் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் மேல்மட்டத்திற்கு நேர்மையான உழைப்பை தரவேண்டும். அதையெல்லாம் விட முக்கியமாக சுதந்திரத்தின் மேன்மையை சமகால இளைஞர்களுக்கு உணர்த்தியிருக்கிறது பரதேசி.

நமக்கு ஃபீலிங் படமெல்லாம் பிடிக்காது என்பவர்களுக்காக சொல்கிறேன் - பரதேசி ஒரு நல்ல ஃபீல் குட் திரைப்படம். நல்ல நிறுவனத்தில் வேலை செய்து, கைநிறைய ஊதியம் வாங்கினாலும் கூட என்ன வாழ்க்கைடா இது ? என்கிற ரீதியில் புலம்புபவர்கள் பரதேசியை பாருங்கள். உங்களுடைய நிலையை மனமகிழ்வுடன் ஏற்றுக்கொள்ள பழகிவிடுவீர்கள்...!

என்னையும் சேர்த்து, பரதேசியின் மீது மட்டரகமான எதிர்பார்ப்பை வைத்திருந்த அனைவருடைய முகத்திலும் கரியை பூசிவிட்டார் பாலா...!

தொடர்புடைய சுட்டி: Grotesque

அடுத்து வருவது: அந்தமான் - போர்ட் ப்ளேர் நகருலா

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

14 comments:

Anonymous said...

எளிய விமர்சனம் மென்மையாக...நன்றி.

Maakkaan.

கும்மாச்சி said...

பிரபா நானும் நேற்று பரதேசி பார்த்தேன், முடிந்தால் என் விமர்சனத்தை படித்து கருத்தை சொல்லுங்க.

Anonymous said...

இந்த படத்தை இன்னமும் பார்க்கவில்லை, ஆனால் பரதேசி என்ற தலைப்பும், கதைக் கருவும், கண்காணிகளின் அராஜகங்களும், வெள்ளை முதலாளிகளின் சுரண்டல்களும் முன்னோட்டத்தில் பார்க்கும் போது, எனக்கு சட்டென நியாபகம் வந்தது, 150 ஆண்டுகளுக்கு முன்னால் வறுமையில் வாடிய தலித்களை ஏமாற்றி பொடி நடையாகவே இலங்கையின் மத்திய மாகாணத்துக்கு கொண்டு போய், போற வழியில் லட்சக்கணக்கானோர் இறந்து மடிய, மிச்சம் மீதி இருப்பவர்களை ஒரு கொத்தடிமைகளாக மாற்றி இன்றளவும் சீரழிந்து கிடக்கும் மலையகத் தமிழர்கள் தான். அதுவும் மலையகத்தில் கண்காணிகளாக இருந்தவர்கள் பெரும்பாலும் யாழ்பாணத் தமிழர்கள், அவர்களின் கொடுமைகளை, சாதி வெறிகளை பல்வேறு மலையக இலக்கியங்கள் சித்தரித்துள்ளன. அத்தோடு இலங்கை விடுதலை அடைந்த போது, அவர்கள் குறித்து சிறிதும் கவலைப்படாது நடுத்தெருவில் விட்டுச் சென்ற பிரித்தானியாரும், அந்நிய செலவாணியை அள்ளித் தர கடுமையாக உழைத்த அவர்களில் பலரை யாழ்ப்பாணத் தமிழர், சிங்களவர் சகிதமாக இந்தியாவுக்கு விரட்டி, மிச்சம் மீதி இருந்தவருக்கு இழுத்து இழுத்து குடியுரிமைக் கொடுக்காமல் மறுத்து, சொல்ல முடியாத துயரங்களை சந்தித்த ஒரு மாபெரும் கூட்டமே என் கண்கள் முன்னால் விரிந்தன. இவர்களை மதம் மாற்றத் துடித்தவர்கள், அடிமையாக்கியவர்கள் என என்னக் கொடுமைகள்,.

பரதேசி ( அயலவராக , வடக்கத்தியராக, தோட்டக் காட்டு சக்கிலியராக, ஈனத் தமிழராக ) துன்பட்ட கதைகளின் பிம்பம் தான் இக்கதையோ என்ற எண்ணமும் எனக்குள் எழுந்தது,. படம் பார்த்த பின் மீதியை கூறுகின்றேன்.

கார்த்திக் சரவணன் said...

நமக்கு அழுகாச்சி படம்னாலே ஆகாது. இருந்தாலும் உங்க விமர்சனத்துக்காக பார்க்க முயற்சி செய்கிறேன்...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

பலரும் நல்லவிதமாகவே விமர்சனம் எழுதி உள்ளனர். பாலாவிற்கு வெற்றியே பல விமர்சனங்களை படித்துவிட்டதால் இனி படத்தை பார்த்தால் இரண்டாம் முறை பார்ப்பது போல் தோன்றும். என்று நினைக்கிறேன்.

REACHING OUT said...

யாருடன் சென்றிர்கள் ?? நான் கூப்பிட்டபோது வர மறுத்தீர்களே!

Ponmahes said...


பாலா படத்துக்கு இப்படி ஒரு review உன்கிட்ட இருந்து எதிர் பாக்கல ...

ஆனா சாரு, ஞாநி போன்றவர்கள் எதிர்மறை விமர்சனகளையே கொடுத்திருக்கிறார்கள்.முக்கியமா படத்தோட ஒளிப்பதிவு பற்றி.மேலும் பாலா இந்த உண்மையான நாவல்(ரெட் tea i think ) கதையை திரித்து விட்டதாக சொல்கிறார்கள் ...

//ஒரு பத்து லோடு கரியை இறக்கி தன்ஷியின் முகத்தில் தேய்த்தால் கூட அவர் அழகாகவே இருப்பார்.

அந்த பத்து லோடு கரியை இறக்கி தன்ஷியின் முகத்தில் தேய்க்காவிட்டால் கூட அவர் கருப்பாகத் தான் இருப்பார் பிரபா ...
உனக்கு பிடிச்ச பிகருன்னு ஏகத்துக்கும் அள்ளி விடாத ....

என்னையும் சேர்த்து, பரதேசியின் மீது மட்டரகமான எதிர்பார்ப்பை வைத்திருந்த அனைவருடைய முகத்திலும் கரியை பூசிவிட்டார் பாலா...!

எப்பா டேய் இது உலக மகா அந்தர் பல்டி டா சாமி .

Philosophy Prabhakaran said...

இக்பால், உங்கள் பதிவை எதிர்பார்க்கிறேன்...

Philosophy Prabhakaran said...

ஜோசப், நீங்கதான் ரீச்சிங் அவுட்டா ? இப்போதுதான் தெரிந்தது... நான் தனியாகத்தான் பார்த்தேன்... முன்முடிவு ஏதுமில்லாமல் பார்த்ததால் உங்களை அழைக்க முடியவில்லை...

Philosophy Prabhakaran said...

சாரு விமர்சனத்தையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை... அது இலக்கியவாதிகளுக்குள் நடக்கும் உட்கட்சி பூசல்கள்... ஞாநி டீசர் பார்த்த கடுப்பில் எழுதியிருக்கிறார்...

எந்த ஒரு நாவலையும் திரைப்படமாக எடுக்கும்போது கச்சிதமாக எடுப்பது மிகவும் சிரமம்... மற்ற நாவல் சினிமாக்களோடு ஒப்பிடும்போது பரதேசி நன்றாக இருக்கிறது... நாவல் படித்துவிட்டு பார்ப்பவர்களுக்கு உறுத்தலாகத் தான் இருக்கும்...

'பரிவை' சே.குமார் said...

அருமையான படம்...
முடிவில் அந்தப் பாடல்... நெஞ்சை விட்டு அகல மறுக்கிறது....

Anonymous said...

அவத்த பையா பாடலும் அதன் பெண்குரலும் அநியாயத்திற்கு வசீகரிக்கின்றன.///...

ஆமா தமிழை கொலை செய்யும் குரல் தான் தமிழனுக்கு பிடிக்கும்...ஏய்ய் தல பேஷ் மாட்டேன் அப்படின்னு தமிழை கொலை செய்பவன்தான் இங்க தல...இது தமிழனின் கேடுகெட்ட ரசனை

நட்சத்திரா said...

Nice review

Philosophy Prabhakaran said...

வடக்குப்பட்டி !