அன்புள்ள வலைப்பூவிற்கு,
அந்தமானில்
பிற தீவுகள் தவிர்த்து போர்ட் ப்ளேரிலேயே பார்க்க வேண்டிய இடங்கள்
இருக்கின்றன. சொல்லப்போனால் முன்னுரிமை கொடுக்கவேண்டியவை. காரணம் இந்த
இடங்களை சுற்றிப்பார்க்கும்போது உங்களுக்கு அந்தமானை பற்றி நிறைய தகவல்கள்
கிடைக்கும். எஞ்சியிருக்கிற பயணத்தை எப்படி திட்டமிடலாம் என்கிற எண்ணம்
கிடைக்கும். நினைவிருக்கட்டும் என்னுடைய கட்டுரைத் தொடரில் குறிப்பிட்டுள்ள
இடங்கள் தவிர்த்து அந்தமானில் நிறைய சுற்றுலா தளங்கள் உள்ளன.
மொத்தத்தையும் சுற்றிப்பார்க்க மாதங்கள் ஆகலாம். எனவே சரியான தேர்வு,
திட்டமிடல் அவசியமாகிறது. அதனால் அந்தமான் சுற்றுலாவின் முதல்நாளாக போர்ட்
ப்ளேர் நகருலாவை வைத்துக்கொள்வது உகந்தது.
டூர்
ஏஜெண்டுகளை அணுக வேண்டிய அவசியமில்லை. பத்தடிக்கு ஒன்றாக இருக்கும்
ஏதாவதொரு டிராவல்ஸில் இருந்து நபர்களின் எண்ணிக்கையை பொறுத்து ஒரு காரை
புக் செய்துக்கொள்ளவும் அல்லது ஆட்டோ ஒன்றை டிரைவரோடு சேர்த்து வாடகைக்கு
பிடித்துக்கொள்ளவும். மாற்றுத்துணி எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை.
ஆனால் முழுக்க முழுக்க தகவல் சார்ந்தது என்பதால் விருப்பமிருந்தால்
குறிப்பெடுக்க நோட்டு - பேனா எடுத்துச்செல்லலாம். காலை எட்டு மணிக்கு டிபனை
முடித்துவிட்டு கிளம்புவது உத்தமம்.
சாத்தம் மர-அறுவை தொழிற்சாலை
சாத்தம்
என்கிற தனித்தீவில் அமைந்துள்ள வரலாற்று பெருமைகள் நிறைந்த தொழிற்சாலை.
அந்தமான் தீவுகளிலேயே பாலத்தால் இணைக்கப்பட்ட ஒரே தீவு. ஆசியாவின் பழமையான
தொழிற்சாலைகளுள் ஒன்று. இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் குண்டுமழை
பொழிந்த இடம். தொழிற்சாலையில் இன்னமும் போர்த்தளும்புகள் இருக்கின்றன.
நிறைய தமிழ் தொழிலாளிகள் தென்படுகின்றனர். அவர்களிடம் அன்பு என்ற
சமாச்சாரத்தை கொஞ்சம் காட்டினால் போதும், அவர்களாகவே முன்வந்து உங்களுக்கு
தொழிற்சாலையை சுற்றிக்காட்டி அங்கு நடைபெறும் பணிகளை விளக்குவார்கள்.
தொழிற்சாலை வாயிலில் அருங்காட்சியகம் ஒன்றும் உள்ளது. தொழிற்சாலையை
பற்றியும் ஜப்பானிய படையெடுப்பை பற்றிய தகவல்கள் ஆங்கே
தொகுக்கப்பட்டுள்ளது. மரத்தில் செய்யப்பட்ட கைவினைப் பொருட்களும் விற்பனை
செய்யப்படுகின்றன.
சாமுத்ரிகா அருங்காட்சியகம்
இந்திய
கடற்படையின் பராமரிப்பின் கீழ் உள்ள அருங்காட்சியகம். வாயிலிலேயே
பிரம்மாண்ட திமிங்கலத்தின் எலும்புக்கூடு வரவேற்கிறது. இந்த
அருங்காட்சியகத்தில் அந்தமானின் வரலாறு மற்றும் புவியியல் சார்ந்த தகவல்களை
தெரிந்துக்கொள்ளலாம். மேலும் அந்தமானின் கடல்வளங்கள், மீன்கள்,
பவளப்பாறைகள் பற்றிய தகவல்களும் அடக்கம். சாமுத்ரிகாவின் எதிரிலேயே
உயிரியல் அருங்காட்சியம் ஒன்றும் அமைந்துள்ளது. சரியான திட்டமிடல் காரணமாக
அங்கே செல்ல முடியவில்லை. பெயரின்படி அந்தமானின் உயிரியல் வளங்கள், அரிய
வகை முதலைகள், ஆமைகள் பற்றிய தகவல்கள் அங்கே இருக்கலாம்.
மனிதவியல் அருங்காட்சியகம்
அந்தமானில்
அவசியம் பார்க்கவேண்டிய அருங்காட்சியகம். அந்தமான் மக்களின் மத, மொழி,
கலாசார பழக்கவழக்கங்கள் பற்றிய தகவல்கள் இங்கே சேகரிக்கப்பட்டுள்ளன. தவிர
அந்தமானின் வெவ்வேறு வகையான பழங்குடியினரை பற்றிய அரிய புகைப்படங்கள்,
நிறைய தகவல்கள், பயன்படுத்தும் பொருட்கள் போன்றவற்றை தெரிந்துக்கொள்ளலாம்.
அருங்காட்சியகத்தின் கீழே சில கடைகள் அமைந்துள்ளன. ஜரவா பொம்மைகள்,
டீ-ஷர்ட்டுகள், கைவினைப்பொருட்கள் முதிலியன கிடைக்கின்றன. முக்கியமாக
அந்தமான் டூரிஸ்ட் கைடு கிடைக்கிறது. விலை 100ரூ.
செல்லுலர் ஜெயில்
அந்தமானில்
பார்த்தே தீரவேண்டிய வரலாற்று சிறப்பிடம். முதலில் சில அறைகளில் சிறை
குறித்த வரலாற்று தகவல்களும் ஓவியங்களும் இடம் பெற்றிருக்கின்றன. அங்கே
கொடுக்கப்பட்ட தண்டனைகள் பற்றிய வடிவமைப்புகள் கதிகலங்க வைக்கின்றன. முந்தய
பதிவு ஒன்றில் குறிப்பிட்டது போல அந்தமானை பொறுத்தவரையில் காந்திக்கு
இணையாக வீர சவார்க்கர் போற்றப்படுகிறார். சவார்க்கர் முப்பது ஆண்டுகளுக்கு
மேல் அங்கே சிறைப்படுத்த பட்டுள்ளார். சாவர்க்கரின் நண்பர்கள் பலர்
சிறைக்குள்ளிருந்தபடி பல போராட்டங்கள் நிகழ்த்தி ஆங்கிலேயர்களால்
தண்டனைகளுக்கு உட்பட்டு உயிர்த்தியாகம் செய்திருக்கிறார்கள். அந்தமான்,
அந்தமான் சிறை சுதந்திரத்திற்கு முன்பு காலா பாணி (கருப்பு நீர்) என்று
அழைக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய துணைக்கண்டத்தில் இருந்து அந்தமான்
சிறைக்கு ஒருவர் கப்பலேற்றப்பட்டுவிட்டால் அவர் உயிரோடு திரும்புவதற்கு
சாத்தியமில்லை என்னுமளவிற்கு கொடுமையான இடம். அவ்வாறு உயிரிழப்பவர்களை
கல்லைக் கட்டி கடலில் வீசும் முறை கையாளப்பட்டிருக்கிறது.
மீன் காட்சியகம் & அறிவியலகம்
மீன்
காட்சியகம் சிறையிலிருந்து நடை தொலைவிலேயே அமைந்துள்ளது. இரண்டு சிறிய
அரங்கங்களில் மீன்கள், பவளப்பாறைகள், அவற்றை பற்றிய தகவல்கள்
இடம்பெற்றுள்ளன. அறிவியியலகத்திற்கு சரியான திட்டமிடல் காரணமாக செல்ல
முடியவில்லை. ஆனால் அது அவசியம் பார்த்திருக்க வேண்டிய இடம் என்று
அறிகிறேன்.
இதுவரையிலும் குறிப்பிட்ட இடங்களை நீங்கள் காலை எட்டரை மணிக்கு துவங்கி மாலை மூன்று மணிக்குள் பார்த்திருக்க வேண்டும்.
காந்தி பார்க்
நகரின்
மையப்பகுதியில் அமைந்துள்ள சிறிய பூங்கா. மாலை மூன்று மணிக்கு முன்பு
பெரிதாக ஆரவாரங்கள் இருக்காது. காதலர்கள் அமர்ந்து அளவளாவ உகந்த இடம்.
மாலையில் படகு சவாரி நடைபெறுகிறது. சிறிய அளவிலான ஜப்பானிய வழிபாட்டு
தளத்தை காணலாம்.
ரைட்டு. நான்கு அல்லது நான்கரை மணிக்கு காந்தி பூங்காவிலிருந்து கிளம்பி கார்பின்ஸ் கோவ் கடற்கரையை அடைவது உத்தமம்.
கார்பின்ஸ் கோவ்
மெரீனாவோடு
ஒப்பிடும்போது கார்பின்ஸ் கோவ் மிக மிகச் சிறியது. எனினும் அநியாயத்துக்கு
பராமரிக்கிறார்கள். நாயத்துக்கு நாமெல்லாம் (சென்னை வாசிகள்) மெரீனாவின்
புகைப்படத்தை நடுஹாலில் மாட்டிவைத்து தினமும் கும்பிட வேண்டும். வாட்டர்
ஸ்கூட்டர் சவாரி கிடைக்கிறது. ஒரு ட்ரிப்புக்கு 350ரூ. கார்பின்ஸ் கோவுடைய
சிறப்பு அங்குள்ள சாய்வுப்பலகைகள் தான். பேசாமல் மல்லாக்க படுத்து கொஞ்ச
நேரம் அமைதிக்கடலில் மூழ்கலாம். உணர்ச்சிவசப்பட தேவையில்லை. அந்தமானில்
கும்மாளம் போடுவதற்கு வேறுசில கடற்கரைகள் உண்டு. கார்பின்ஸ் கோவ் சாத்விக
கடற்கரை. அமைதியாக அமர்ந்து ரசித்துவிட்டு திரும்புவதே சிறந்தது.
அங்கிருந்து
கிளம்பும்போது மணி ஆறு அல்லது ஆறரை ஆகியிருக்கலாம். நேரமும் விருப்பமும்
இருப்பவர்கள் மறுபடியும் செல்லுலர் ஜெயிலுக்கு சென்றால் அங்கே ஒளியும்
ஒலியும் காட்டுவார்கள். (Sound & Light show). அதை பார்த்துவிட்டு இரவு
பாருக்கு திரும்பலாம்.
அடுத்து வருவது: அந்தமான் - ஹேவ்லாக் கடற்கரை
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
7 comments:
//அந்தமானில் பிற தீவுகள் தவிர்த்து போர்ட் ப்ளேரிலேயே பார்க்க வேண்டிய இடங்கள் இருக்கின்றன.
அந்தமானில் பிற தீவுகள் தவிர்த்து போர்ட் ப்ளேரிலேயே பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய இருக்கின்றன.
//பத்தடிக்கு ஒன்றாக இருக்கும் ஏதாவதொரு டிராவல்ஸில் இருந்து நபர்களின் எண்ணிக்கையை பொறுத்து ஒரு காரை புக் செய்துக்கொள்ளவும்.
ஆமா அவங்க எவ்வளவு துட்டு கேட்பாங்க ன்னு சொல்லவே இல்ல ...
//சரியான திட்டமிடல் காரணமாக அங்கே செல்ல முடியவில்லை.
அது எப்படி... சரியாக திட்டமிட்ட பிறகு எப்படி செல்ல முடியாமல் போகும் ..
அப்போ அது தவறான திட்டமிடல் தானே
தவறான திட்டமிடல் காரணமாக அங்கே செல்ல முடியவில்லை...//இது தானே கரெக்ட்
செல்லுலர் ஜெயில் பற்றிய புகைப்படங்களை பகிர்ந்திருந்தால் இன்னும் சிறப்பாய் இருந்திருக்கும்.
இது எப்போ முடிய போகுது? எபிசொட் எபிசொட் ஆக சீரியல் மாதிரி இழுத்துகிட்டே போகுது... சட்டுபுட்டுன்னு முடிங்கப்பு!
படிக்காமலே கமெண்ட் போட்டது.
அந்தமான் தீவுக்கே இத்தனை போஸ்டுன்னா.....ஆஸ்திரேலியா ட்ரிப் போனீங்கன்னா?.. நினைச்சு பாக்கவே முடியல.
பயணம் கொஞ்சம் டல்லான மாதிரி இருக்கே.
இவ்வளவு இருக்கா?
என்னைக்காவது போனா(இந்த சன்மத்தில் இல்லை)உதவியா இருக்கும்!
அந்தமானில் பார்ப்பதற்கு நிறைய இடங்கள் இருக்கின்றன என்று சொல்லிவிட்டீர்கள்.
இன்று பலஇடங்கள் பார்த்துவிட்டோம். தொடர்ந்து மகிழ்ச்சியாகப் பார்க்கின்றோம். நன்றி.
அனானி, அந்தமான் பயணம் இன்னும் இரண்டு அல்லது மூன்று பதிவுகளில் முடிந்துவிடும்...
i am facing some fot issue. unable to read this post
Post a Comment