17 April 2013

ஸ்ரீனு வைட்லா வாரம்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

இந்த வாரம்... ஸ்ரீனு வைட்லா வாரம் !

அரங்குகளில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் பாட்ஷா (தெலுங்கு) படத்தில் ஒரு காட்சி. தெலுங்கு படங்களின் பெயர்களையும் அதன் இயக்குனர்களின் பெயர்களை மாற்றி மாற்றி இணைக்கிறார் ஒரு நகைச்சுவை நடிகர். அவருடைய தெலுங்கு சினிமா அறியாமைக்காக ஜூனியர் என்.டி.ஆரும் காஜலும் சேர்ந்து அவருக்கு கும்மாங்குத்து குத்துகிறார்கள். நானும் தெலுங்கு சினிமா அறிவில் அவரைப் போலத்தான். சில மாதங்களுக்கு முன்பு தவறான திரையரங்கிற்குள் நுழைந்த குற்றத்திற்காக கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் என்கிற சினிமாவில் த்ரிஷாவின் ஆளோடு நயன்தாரா கும்மி அடிப்பதை பார்க்க வேண்டிய துயர நிலைக்கு ஆளானேன். அதற்கு முன்பு கன்னுக்குட்டிக்காக மகதீராவின் தமிழ் மொழிபெயர்ப்பு பார்த்திருக்கிறேன், அவ்வளவுதான். இப்பொழுதும் அப்படித்தான். கன்னுக்குட்டிக்காக பாட்ஷா, சம்முக்குட்டிக்காக தூக்குடு !

முதலில் பார்த்தது பாட்ஷா. இஸ்லாமிய போராளிகள் பற்றிய செய்திப்படத்துடன் கதை துவங்குகிறது. அவர்களை அழிக்க நினைக்கும் காவித் தீவிரவாதியாக ஜூனியர் என்.டி.ஆர். போக்கிரி கதைக்கும் பாட்ஷா கதைக்கும் ஏழு வித்தியாசங்கள் கண்டுபிடிக்க முடியாது. ஆஷிஷ் வித்யார்த்தி, மகேஷ் ராவத் என்று சில லோக்கல் வில்லன்கள். அவர்களை கொன்றுவிட்டு ஹாங்காங்கிலோ பேங்காக்கிலோ இருக்கும் மெயின் வில்லன் கெல்லி டார்ஜியை உச்சக்கட்ட காட்சியில் கையாலே அடித்து சாகடிக்கிறார். ஷாயாஜி ஷிண்டே கூட நடித்திருக்கிறார். மொழி புரியாததால் படத்தில் யார் நல்லவர் ? யார் கெட்டவர் ? என்றே புரிந்துக்கொள்ள முடியவில்லை. மொழி புரிந்தாலும் அப்படித் தானிருக்கும் என்று நினைக்கிறேன். எப்படியும் ஒரு கோஷ்டி ஹிந்திக்கார வில்லன்கள் தெலுங்கு பட உலகை அதகளம் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக பாரதி என்கிற படத்தை எடுத்துத் தொலைத்ததற்காக திராவிடன் எப்படியெல்லாம் வேதனை அனுபவிக்கிறான் ?

வழக்கம்போல காதுகளில் தாழம்பூவை சுற்றும் ஒரு நம்பகத்தன்மையில்லாத காட்சியில் ஜூனியர் என்.டி.ஆர் அறிமுகமாகிறார். அன்னாருக்கு யார் மேக்கப் போட்டார்கள் என்று தெரியவில்லை. உடல் முழுக்க ஹீரோ மாதிரி அலங்கரிக்கப்பட்டவர், உதட்டில் மட்டும் ஹீரோயின் போல அலங்கரிக்கப்பட்டுள்ளார். நடனத்தின்போது சாட்டையிலிருந்து விடுவிக்கப்பட்ட பம்பரம் போல சுற்றிச்சுழல்கிறார். இரண்டு கால்களையும் ‘V’ வடிவத்தில் அகட்டி வைத்துக்கொண்டு பாதங்களை அப்படியும் இப்படியுமாக திருக்குவது தான் ஜூ.என்.டி.ஆரின் ஸ்பெஷாலிட்டி என்று நினைக்கிறேன். ஒரு காட்சியில் சில ஆண்ட்டிகளோடு சேர்ந்து அவருடைய அப்பா மாதிரி ஆ(ட்)டிக்காட்டும் போது தியேட்டரில் உள்ள பத்து பேரும் பாப்கார்ன் கொறிக்கிற சத்தம் விண்ணைப் பிளக்கிறது.

கன்னுக்குட்டி கதைப்படி சமூக ஆர்வலர். வாழ்க்கையை ரசித்து வாழ்பவர். அதாவது நாம் கன்னுக்குட்டியை ரசித்துக்கொண்டே வாழ்கிறோமே அப்படித்தான். ஒரு காட்சியில் சிகப்பு நிற சல்வார், பச்சை நிற ஷால் அணிந்துவரும்போது அப்படியே தூக்கிவைத்து... கொஞ்சலாம் போல இருக்கிறது. அடிக்கடி ஜூ.என்.டி.ஆரை நெஞ்சோடு சாய்த்து நம் வயிற்றில் ஜெளுசிலை விதைக்கிறார்.

இரண்டாவதாக பார்த்தது தூக்குடு. தமிழில் அதிரடி வேட்டை. பிரதான கதையில் பெரிய மாற்றமில்லை. தந்தையை கொன்றவர்களை பழிவாங்கும் கதை. கூடவே உள்ளூர், உலக வில்லன்களை பந்தாடுகிறார். அப்புறம் கொஞ்சம் அப்பா செண்டிமெண்ட். தமிழ் மொழிப்பெயர்ப்புக்காக கொஞ்சம் டிங்கரிங் வேலைகள் செய்திருக்கிறார்கள். என்.டி.ஆருக்கு பதில் எம்.ஜி.ஆர், தாராவியை காட்டிவிட்டு மெட்ராஸ் என்கிறார்கள், நடுநடுவே ரஜினி - கமல் ஜல்லியெல்லாம் அடித்திருக்கிறார்கள். ஜூனியர் என்.டி.ஆருடன் ஒப்பிடும்போது மகேஷ் பாபு கொஞ்சம் அடக்கி வாசிப்பவராகவே தெரிகிறது.

சம்முக்குட்டி ஐ.பி.எஸ் ஆக வேண்டுமென்பது அவருடைய தந்தையின் விருப்பம். சம்முவோ அப்பாவை ஏமாற்றிவிட்டு இத்தாலியில் ஃபேஷன் டிசைனிங் படிக்கிறார். ஆனால் பார்ப்பதற்கு குத்து விளக்கு ஏற்றுவதற்கு ஏற்ற ஆளாக தோற்றமளிக்கிறார். இரண்டாம் பாதியில் காணாமல் போனது மென்-சோகம்.

மேற்கண்ட ஸ்ரீனு வைட்லாவின் இரண்டு படங்களுக்கு கூட பெரிய வித்தியாசமில்லை. அதே டெம்ப்ளேட். இரண்டிலும் மாஸ் ஹீரோ, லட்டு ஹீரோயின், பிரம்மானந்தம், எம்.எஸ்.நாராயணா, அதே வில்லன் நடிகர்கள், அதே ஆண்ட்டி நடிகைகள், ஃபாரின் லொக்கேஷன், முதல் பாதியில் ஒரு பார் டான்ஸ் பாடல், இரண்டாம் பாதியில் ஒரு குத்துப்பாடல், இரண்டாம் பாதியின் பிற்பகுதியில் பனிப்பிரதேசத்தில் ஆடும் ஒரு ஹிட் பாடல் என்று நிறைய அதே அதே. நீயா நானா இடைவேளையின் போது சாப்பிட்டு பாருங்க ஜம்முன்னு இருக்கும்'ன்னு ஒரு அம்மையார் சொல்லுவாரே... அவரு ஸ்ரீனுவுக்கு ரொம்ப பிடிக்கும் போல. இரண்டிலும் ஐட்டமாய் ஆடி அசத்துகிறார். ஆனால் உள்ளூர் ஊறுகாய் மீனாட்சி தீட்சித்துக்கு மேற்கத்திய ரக பார் டான்ஸ் பாடலையும், ப்ரேசில் ஸ்காட்ச் நிகோல் எமி மேடலுக்கு நாட்டுப்புற ரக குத்தாட்டத்தையும் கொடுத்த ஸ்ரீனுவின் நகைமுரண் ரசிக்க வைக்கிறது.

பாட்ஷாவில் ரிவேஞ்ச் நாகேஸ்வர ராவ் என்று ஒரு கதாபாத்திரம், அதீத வன்முறை காட்சிகளையும், தூக்கலான ஆபாசக் காட்சிகளையும் படமாக்கும் இயக்குனர்களின் மீது காறித் துப்புகிறது. அந்த எச்சில் ஸ்ரீனுவின் மீதும் பட்டுத் தொலைக்கிறது. கழுத்தில் துப்பாக்கியால் சுடுவது, இடுப்புக்கு கீழே ஸ்க்ரூ ட்ரைவரை வைத்து குத்துவது என்று மேற்கூறிய இரண்டு படங்களிலும் ஏதோ சிகப்பு நிற திரவம் ரசிகர்கள் மீது தெறிக்கிறது. அது தக்காளி ஜூஸாக இருக்கக்கூடும். கவர்ச்சியை பொறுத்தவரையில் ஸ்ரீனு அடக்கி வாசித்திருப்பது ஏமாற்றத்தையே தந்திருக்கிறது. டோலிவுட்டில் ஸ்ரீனுவுக்கு தமிழில் கே.எஸ்.ரவிகுமார் மாதிரி ஆட்களுக்கு இருக்கக்கூடிய மரியாதை இருக்கலாம். அதனால் சக தெலுங்கு மசாலாப்பட இயக்குனர்களை போல இறங்கி அடிக்க தயங்கலாம். அந்த காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு ரிவேஞ்ச் நாகேஸ்வர ராவ் கதாபாத்திரமாக இருக்கலாம்.

ஆனால் ஒன்று, காஜலையும் சமந்தாவையும் வைத்து சைவ சினிமா எடுப்பதற்கு பதிலாக ஸ்ரீனு வைட்லா தன்னுடைய இரண்டு கரங்களையும்.... கூப்பிவைத்து சாமி கும்பிடலாம் !


இரண்டு படங்களை அடுத்தடுத்து பார்த்ததைப் பற்றி நண்பர் ஒருவரிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். காஜல், சமந்தா இருவரில் யாரை அதிகம் பிடிக்கும் என்று கேட்கிறார். நான் அவரிடம் பதில் கேள்வி கேட்டேன் - உங்களுக்கு உங்களுடைய இரண்டு கண்களில் எது அதிகம் பிடிக்கும் ?

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

9 comments:

Prem S said...

//காஜல், சமந்தா இருவரில் யாரை அதிகம் பிடிக்கும் என்று கேட்கிறார். நான் அவரிடம் பதில் கேள்வி கேட்டேன் - உங்களுக்கு உங்களுடைய இரண்டு கண்களில் எது அதிகம் பிடிக்கும் //

அச்சச்சோ ஒரு கண்ண சித்தார்த் எடுத்து கிட்டாரே

Prem S said...

உங்க இரண்டு கன்னு குட்டியையும் 3வது படத்தில் அப்படி நிக்க வைச்சுட்டீங்களே

aavee said...

// போக்கிரி கதைக்கும் பாட்ஷா கதைக்கும் ஏழு வித்தியாசங்கள் கண்டுபிடிக்க முடியாது. //

அது நீங்க தெலுங்கு படங்கள் குறைவாக பார்ப்பதால் அப்படி தெரிகிறது.. தெலுங்கு படங்கள் அனைத்தும் ஒரே பார்முலாவைத்தான் பாலோ பண்ணி எடுத்திருப்பாங்க..

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

//தியேட்டரில் உள்ள பத்து பேரும் பாப்கார்ன் கொறிக்கிற சத்தம் விண்ணைப் பிளக்கிறது.//
முதல்ல சரியா படிக்காம கைதட்டல் விண்ணை பிளக்குதுன்னு தப்பா புரிஞ்ககிட்டேன்.
நல்ல காமெடிதான்
ஜாலியான விமர்சனம்

sharfu said...

http://www.youtube.com/watch?v=3A8lBTx1ghQ//

http://www.youtube.com/watch?v=z_Hf8E3QHrE

Anonymous said...

பதிவு தெலுங்கு படம் பார்த்த மாதிரி இருக்கு...:-)))

-வலையன்.

'பரிவை' சே.குமார் said...

தெலுங்குப் படம் மாதிரியே அதிரடி ஆக்ஷன் பாட்டு என்று கலக்கலான பகிர்வாக அமைந்திருக்கிறது...

வாழ்த்துக்கள் பிரபாகரன்...

தமிழன் said...

திருமதி தமிழ் விமர்சனம் எங்கே? விரைவில் விடவும், காத்திருக்கிறோம்!

Anonymous said...

பத்திரிகையாளரின் ஆபாசநடத்தை http://thinathee.blogspot.in/2013/04/1.html