5 April 2013

அந்தமான் - ஹேவ்லாக் கடற்கரைகள்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

அந்தமானை நோக்கிய என்னுடைய கப்பல் பயணத்தில், ஒரு வெள்ளைக்கார சோடியை பார்த்து உள்ளூர்வாசி சொன்னது, “இவுகல்லாம் ஹேவ்லாக் போயி அவுத்துப்போட்டு படுத்துக்குவாக...”. அப்போதிலிருந்தே என்னுடைய மனது அந்த ஒற்றைச் சொல்லை கவனமாக பற்றிக்கொண்டது - ஹேவ்லாக். அந்தமானில் காலடி எடுத்து வைத்த நாளிலிருந்து “சந்தைக்கு போகணும் காசு கொடு...” என்று சொல்லும் சப்பாணி போல, எப்ப பாஸ் ஹேவ்லாக்குக்கு அனுப்பி வைப்பீங்க என்று டிராவல் ஏஜென்ட்டை நச்சரித்துக்கொண்டே இருந்தேன்.

ஹேவ்லாக் நம் கவலைகளுக்கான பூட்டு ! அந்தமான் தீவுகளிலேயே போர்ட் ப்ளேர் தவிர்த்து வெளிநாட்டவர் தங்குவதற்கு அனுமதிக்கப்படும் ஒரே தீவு - ஹேவ்லாக். அதனாலேயே ஹேவ்லாக் கடற்கரைகள் பிகினி மயமாகவும் பிறந்தமேனியாகவும் காட்சியளிக்கின்றன. கொண்டாட்ட விரும்பிகள், தேனிலவு தம்பதிகள் ஹேவ்லாக்கில் ஒரு இரவாவது தங்கி விரிவாக சுற்றிப்பார்ப்பது உகந்தது. அந்தமான் சுற்றுப்பயணம் முழுவதையும் ஹேவ்லாக்கில் மட்டுமே செலவளிப்போரும் உண்டு.

கொஞ்சம் மெனக்கெட்டால் டிராவல் ஏஜெண்டுகளின் தலையீடு இல்லாமல் ஹேவ்லாக் சென்றுவரலாம். போர்ட் ப்ளேரில் இருந்து ஹேவ்லாக் செல்வதற்கு அரசாங்க கப்பல் பம்பூகாவும் தனியார் கப்பல் மாக்ரூஸும் இருக்கின்றன. பம்பூகாவில் டிக்கெட் விலை 250ரூ. மாக்ரூஸில் 900ரூ. உங்கள் டிராவல் ஏஜெண்ட் உங்களிடம் சீசன்  உச்சத்தில் இருப்பதால் அரசாங்க கப்பலில் டிக்கெட் கிடைக்காது என்று காதில் பூ சுற்ற முயற்சிப்பார். ஏமாற வேண்டாம். உண்மையில் பம்பூகா பாதியளவு கூட நிரம்புவதில்லை. தரமான இருக்கைகள், தொலைகாட்சி, கேண்டீன், துரித வேகம் என்று தனியார் கப்பலில் சில வசதிகள் இருப்பது உண்மைதான். என்னைப்பொறுத்தவரையில் போர்ட் ப்ளேரில் இருந்து ஹேவ்லாக் செல்லும்போது அரசாங்க கப்பலிலும் திரும்பிவரும்போது தனியார் கப்பலை நாடுவதும் சாலச்சிறந்தது. முந்தய பத்தியில் குறிப்பிட்ட தரப்பினர் தவிர்த்து மற்றவர்கள் காலையில் கிளம்பி மாலையில் திரும்பிவிடலாம்.

போர்ட் ப்ளேரிலிருந்து ஹேவ்லாக் செல்வதற்கு ஹெலிகாப்டர், ஸீ ப்ளேன் சேவைகள் கூட உள்ளன. சராசரி கட்டணம் தான். ஆனால் செல்வாக்கு உள்ள ஆட்களுக்கு மட்டுமே வாய்க்கும் என்று நினைக்கிறேன்.

ஹேவ்லாக்கில் மொத்தம் ஏழு கடற்கரைகள் உள்ளன, எனினும் அவற்றில் இரண்டு மட்டுமே சுற்றுலா பயணிகளுக்கு உகந்தது. ராதா நகர் கடற்கரை- ஆசியாவிலேயே தலைசிறந்தது என்று 2004ல் டைம்ஸ் மேகஸின் அறிவித்த கடற்கரை. ஹேவ்லாக் படகுத்துறையிலிருந்து 11கி.மீ தொலைவில் ராதாநகர் கடற்கரை அமைந்துள்ளது. ஆட்டோ பிடித்துக்கொள்ளலாம். இரு சக்கர வாகனங்கள் வாடகைக்கு கிடைக்கும், எனினும் அது தேவையற்றது. ஹேவ்லாக்கை பொறுத்தவரையில் வெட்கம் என்னும் கருமத்தை களைந்துவிடுவது நல்லது, கூடவே ஆடைகளையும், உங்களுடையதை தான். அபத்தமாக சூரியனை உள்ளங்கையில் பிடித்திருப்பது போல போட்டோவெல்லாம் எடுக்க வேண்டாம். ஜஸ்ட் என்சாய் ! கடலலை லேசாக உடலை நனைத்துவிட்டு செல்கிறபடி, மணலில் மல்லாக்கப் படுத்துக்கொள்ளுங்கள் - கடவுளை காணலாம்.

நான் ராதாநகர் கடற்கரைக்கு சென்றபோது மணி மாலை ஐந்தை நெருங்கியிருந்தது. சூரியன் மறைகிற தருணம். நிறைய பேர் SLR கேமராவை வைத்து திருகிக்கொண்டிருந்தார்கள். அருகிலேயே ஒரு ரிக்கி பாண்டிங் ஒரு துரையம்மாவின் இதழை சுவைத்துக்கொண்டிருந்தான். இந்தியா ஏன் இதுவரை வல்லரசு ஆகவில்லை என்ற உண்மை உரைத்தது. அப்படியே அலைகளை தொட்டபடி ஒரு நடை நடந்தேன். ஒரு பிகினி மங்கை குப்புற படுத்து புத்தகம் படித்துக்கொண்டிருந்தாள். அவள் புட்டத்தில் ஒட்டியிருந்த ஈரமணல் கொஞ்சம் கொஞ்சமாக காய்ந்துக்கொண்டிருந்தது. அந்த தருணம்... திருவள்ளுவர் ஏதோ சொல்லியிருக்கிறாரே, ஆங் உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே உலக்கை... என்ன எழவோ, அப்படித்தான் ஆகியிருந்தது என்னுடைய நிலை. மீண்டும் என் உணர்வுகளை சமநிலைக்கு கொண்டுவர நேரம் பிடித்தது.

ராதாநகர் கடற்கரையிலிருந்து மீண்டும் படகுத்துறைக்கோ அல்லது அறைக்கோ செல்லும்வழியில் மூன்று கி.மீ தொலைவில் எலிபேண்ட் பீச்சுக்கு செல்வதற்கான குறுக்குப்பாதை அமைந்துள்ளது. வாகனங்கள் செல்ல முடியாது. காட்டுவழிப்பாதையாக சில கி.மீ நடந்து சென்றால் எலிபேண்ட் கடற்கரையை சென்றடையலாம். சில வருடங்கள் முன்பு வரை இங்கே யானை சவாரி நடைபெறும் என்று சொல்கிறார்கள். மற்றபடி முந்தய பதிவுகளில் சொன்ன ஸ்கூபா டைவிங், ஸ்னார்கலிங் வகையறா விளையாட்டுகள் ஹேவ்லாக்கிலும் உண்டு. ஹேவ்லாக் படகுத்துறை - ராதாநகர் பீச் - எலிபேண்ட் பீச் : எளிய புரிதலுக்காக கூகுள் மேப்.

தங்குமிடங்களை பொறுத்தவரையில் ஹேவ்லாக்கில் நிறைய ஆப்ஷன்கள் உள்ளன. நான் ஹேவ்லாக் சென்ற சமயம், என்னுடைய பயணத்தின் கடைசி நாட்கள். ஏற்கனவே என்னுடைய ஏ.டி.ம். கறவை மாட்டின் மடி வற்றியிருந்தது. எனவே ட்ராவல் ஏஜெண்டிடம் பாடாவதி லாட்ஜாக இருந்தாலும் பரவாயில்லை என்று சொல்லி வைத்திருந்தேன். அந்த வசந்த மாளிகையின் பெயர் பிலாஷி லாட்ஜ். ம்ம்ம் குடிபோதையில் உள்ள ஒருவன் படுத்து உறங்குவதற்கு போதுமானதாகவே இருந்தது. இருப்பினும் கரப்பான்களுக்கு பயந்து இரவெல்லாம் மின்விளக்குகளை எரியவிட்டு, தொலைக்காட்சியை சத்தமாக வைத்துக்கொண்டு தூங்கிய கதையை தனி அத்தியாயமாகத்தான் எழுத வேண்டும்.

மிக முக்கியமான தகவலை மறந்துவிட்டேன்; ஹேவ்லாக் செல்லும்போது ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ஒரு ஃபுல் பாட்டில் சரக்காவது வாங்கிச் செல்லுங்கள். மக்கள் வசிக்கும் பகுதிதானே, மதுக்கூடம் இருக்கும் என்று நம்பி சென்றுவிட்டேன். இருந்தது. மூன்று கி.மீ ஆட்டோவில் செல்ல வேண்டும் என்றார்கள். அதையும் செய்தேன். சலூன் கடை அளவில் உள்ள மிகச்சிறிய இடம். டேபிள் எல்லாம் இல்லை. கடைக்காரர் ஊற்றிக்கொடுப்பார். அப்படியே வாங்கி குடிக்க வேண்டியது தான். சைட் டிஷ் எல்லாம் ஊற்றிக்கொடுப்பவரின் முன்னே இறைந்துக்கிடக்கும். அள்ளி வள்ளு வதக்கு'ன்னு வாயில போட்டுக்க வேண்டியது தான். ஒரு தனி மனிதனாக இதுபோன்ற அனுபவங்களை நான் ரசித்து ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் வருத்தப்பட்டு பாரம் சுமக்க விரும்பாதவர்கள் சரக்குபுட்டியை போர்ட் ப்ளேரிலிருந்து சுமக்கலாம். அடுத்தது, உணவகங்கள். கிட்டத்தட்ட இரவு எட்டரை மணிக்கெல்லாம் எல்லோரும் கடையை சாத்திவிடுகின்றனர். எனவே தாமதிப்பது உகந்ததல்ல. மதுக்கூடத்திற்கு அருக சில பெங்காலிகளின் வீட்டுவாசலில் டேபிள் சேரெல்லாம் போட்டு உணவு பரிமாறுகிறார்கள். அவற்றை தவிர்த்தால் படகுத்துறைக்கு அருகில் வழக்கம்போல பொரொட்டா, ஃபிரைட் ரைஸ் விற்கும் உணவகங்கள் உள்ளன.

என்னடா ரெண்டு பீச்சு தானே இருக்கு என்று தோன்றலாம். ஹேவ்லாக் என்பது ஒரு உணர்ச்சி. அதனை வார்த்தைகளால் புரிய வைப்பது கடினம். பழமொழி சொன்னா அனுபவிக்கணும் என்று சொல்வதுபோல ஹேவ்லாக்கையெல்லாம் அனுபவிக்கணும் !

பி.கு: அந்தமான் தொடர் இழுத்துக்கொண்டே செல்கிறதே; எப்பதான் முடிப்பீங்க'ன்னு ஒரு நண்பர் கேட்டிருந்தார். இன்னும் இரண்டு கட்டுரைகள் உள்ளன.

படங்கள்: கூகுள்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

4 comments:

Anonymous said...

//படங்கள்: கூகுள்//

அடச்சே....

Ponmahes said...

//அந்தமானில் காலடி எடுத்து வைத்த நாளிலிருந்து “சந்தைக்கு போகணும் காசு கொடு...” என்று சொல்லும் சப்பாணி போல, எப்ப பாஸ் ஹேவ்லாக்குக்கு அனுப்பி வைப்பீங்க என்று டிராவல் ஏஜென்ட்டை நச்சரித்துக்கொண்டே இருந்தேன்.

எங்க போனாலும் ஒன்னோட அரிப்பு அடங்காதா ல


//கடலலை லேசாக உடலை நனைத்துவிட்டு செல்கிறபடி, மணலில் மல்லாக்கப் படுத்துக்கொள்ளுங்கள் - கடவுளை காணலாம்.

http://3.bp.blogspot.com/-YmhnUKoLDxc/UV3wZIWiO5I/AAAAAAAACXE/hieZC4H96l0/s1600/beauty_po.jpg
ஓ இந்த படத்துல உள்ளது தான் நீ பாத்த கடவுளா ...நடத்து டா தம்பி


ஆமா அந்தமான் ல இருந்து போர்ட் ப்ளேர் எவ்வளவு தூரம் ???????

பதிவு அருமை ...சீக்கிரம் உன் பயணம் இனிதே முடிய வாழ்த்துக்கள்....

Philosophy Prabhakaran said...

பொன் மகேஸ், அரசாங்க கப்பலில் சென்றால் இரண்டரை மணிநேரம்... தனியார் கப்பலில் ஒன்றரை மணிநேரம்... தூரம்: 67 கி.மீ

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

போய்ட்டு வர மினிமம் பட்ஜெட் எவ்வளோ சொல்லுப்பா!