அன்புள்ள வலைப்பூவிற்கு,
நான் பிழைப்பிற்காக தகவல் தொழில்நுட்ப
துறையை அண்டியிருந்தாலும் கூட, இன்னமும் கலாசார ரீதியாக என்னுடைய சக
பணியாளர்களுடன் ஒன்ற முடியாத நடுத்தர வர்க்க சாதாரணனாகவே
வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன். ஆறாயிரம் ரூபாய்க்கு கூலர்ஸ் வாங்குவது, இரண்டாயிரம்
ரூபாய்க்கு சென்ட் பாட்டில் வாங்குவது என சில த.தொ பணியாளர்கள் செய்யும்
அழிச்சாட்டியங்களை பார்த்து கடுகடுப்பானாலும் கூட இணையவெளியில் அதனை
வெளிக்காட்டிக் கொண்டதில்லை. அவ்வாறு வெளிக்காட்டுவது மல்லாக்க படுத்துக்கொண்டு
உமிழ்ந்துக் கொள்வதற்கு சமம் அல்லது நம்முடைய பதிவை தெரியாத்தனமாக மேனேஜர் படித்துவிட்டு
“வொர்க் கல்ச்சருன்னா என்னன்னு தெரியுமாய்யா உனக்கு ?” என்று லெக்ச்சர் எடுக்கக்கூடும் என்ற பயமும்
காரணமாக இருக்கலாம்.
அதையும் தாண்டி வா.மணிகண்டனுடைய சமீபத்திய பதிவை
படித்ததும் ஒரு வயிற்றுக்கடுப்பு கிளம்பியது. கூடை வச்சிருக்குறவங்களுக்கெல்லாம்
லைட்டு கொடுக்குறதில்லை என்பது போல பின்னூட்டப்பெட்டியை மூடி
வைத்திருப்பவர்களுக்கெல்லாம் கருத்து / எதிர்வினை சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை.
இருப்பினும் வா.மணியின் பதிவை படிக்கும் பொது தரப்பு ஆட்கள், த.தொ பணியாளர்களை
பார்த்து அய்யோ பாவம் என்று உச்சு கொட்டுவதற்குள் என்னுடைய கருத்தை பதிவு
செய்துவிட விரும்புகிறேன்.
வா.மணியின் பதிவை நான் முழுமையாக
எதிர்க்கவில்லை. பிள்ளைகள் பெற்ற ஒரு குடும்பத்தலைவராக அவர் அவருடைய கவலைகளை
எடுத்துச் சொல்லியிருக்கிறார். அதில் இடம்பெற்றுள்ள சில சால்ஜாப்பு காரணங்களை
படிக்கும்போது தான் எதைக்கொண்டு சிரிப்பது என்று தெரியவில்லை. தவிர, பிற துறைகள்
சிலவற்றைக் குறிப்பிட்டு அவர்கள் த.தொ ஆட்களை விட அதிகம் சம்பாதிப்பதாக
குறிப்பிட்டிருக்கிறார். த.தொ பணியாளர்களும் எல்லோரைப் போலவும் கடுமையாக
உழைக்கிறார்கள் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் மற்ற வேலைகளோடு ஒப்பிடும்போது
த.தொ பணியாளர்கள் அதிகம் உழைக்கிறார்கள் என்ற பிம்பத்தை ஏற்படுத்துவதை
ஒப்புக்கொள்ள இயலாது.
அவருடைய சாஃப்ட்வேர்க்காரன் பற்றிய
பதிவு – “என்னத்த சம்பாதிக்கிறோம் ? வேன் ஹியூசனில் சட்டை வாங்குவதற்கும்,
கே.எப்.சியில் கோழிக்கறி சாப்பிடுவதற்கும், பிள்ளைக்குட்டிகளை ஷாப்பிங்
மால்களுக்கு அழைத்துச் செல்வதற்கே மொத்த பணமும் காலியாகிவிடுகிறது. ஆச்சு
பார்த்தீங்களா ? மாசக்கடைசியில் நாங்களும் கடன் வாங்கித்தான் பொழப்பை ஓட்டுறோம்.
நாங்களும் உங்களை மாதிரி அன்றாடங்காய்ச்சிகள் தான் !” என்கிற ரீதியில் செல்கிறது.
மணிகண்டனின் பதிவுடைய முதல் சில
பத்திகள் பொருளாதார வீழ்ச்சிக்கு பிந்தைய த.தொ பணியாளர்களின் வாழ்க்கையைப் பற்றி
புலம்புகிறது. சில வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியில் த.தொ
ஆட்களின் சம்பளம் கணிசமாக குறைந்துவிட்டது உண்மைதான். ஆனால் திறமை உள்ளவர்கள்
யாரும் தெருவுக்கு வந்துவிடுவதில்லை. “ஆடி” காரில் போய்க்கொண்டிருந்தவர்களை
திடீரென அம்பாஸடருக்குள் அமர வைத்தால் எப்படியிருக்குமோ அப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறது
இவர்களுடைய வாழ்க்கை. அதன்பிறகு, “என்னய்யா பெருசா காசை வாங்கிட்டோம் ? மிஞ்சி
மிஞ்சிப்போனா பிச்சைக்காசு ஐம்பதாயிரம். அதை வைத்துக்கொண்டு நாங்கள் எவ்வளவு
கஷ்டப்படுகிறோம் தெரியுமா ?” என்று தொடர்கிறார்.
// ஐ.டி கம்பெனிகள் என்ன
கரட்டடிபாளையத்திலும், வள்ளியாம்பாளையத்திலுமா இருக்கின்றன? பெங்களூரிலும் சென்னையிலும் இரண்டு படுக்கையறை
கொண்ட வீட்டை பன்னிரெண்டாயிரத்துக்கு குறைவாக வாடகைக்கு பிடிக்க முடிவதில்லை-
அதுவும் கூட ஊருக்கு ஒதுக்குப் புறமாகத்தான் இந்த வாடகையில் கிடைக்கும். //
பெருநகரங்களில் சொந்தவீடு இல்லாமல்
தங்கி பணிபுரிவது என்பது சிரமமான விஷயம் தான், அதிலும் குடும்பம் குட்டியோடு
இருப்பதென்றால் ரொம்ப கஷ்டம் தான். ஆனால் பெருநகரங்களில் வாடகை வீடுகளில்
வசிக்கும் அனைவருமே பன்னிரெண்டாயிரம் கொடுத்து தான் வசிக்கிறார்களா ? ஏன்
ஆறாயிரம், எட்டாயிரத்திற்கெல்லாம் வாடகை வீடுகள் கிடைப்பதில்லையா ? நிச்சயமாக
கிடைக்கும். ஆனால், பகட்டாக வாழ்ந்து பழக்கப்பட்ட நம் ஆட்கள் கொஞ்சம் விசாலமாக,
கார் பார்க்கிங்குடன் கூடிய, பால்கனி வசதி கொண்ட போன்ற சில சொகுசுக்களை
எதிர்பார்ப்பதால் பன்னிரெண்டாயிரம் கொடுத்து தொலைக்க வேண்டியிருக்கிறது. (வீட்டு
வாடகையை பொறுத்தவரையில் இந்த விலைவாசி உயர்வுக்கு காரணமே பொருளாதார வீழ்ச்சிக்கு
முந்தய த.தொ சமுதாயம் தான் என்பதை மறந்துவிட வேண்டாம்). அப்புறம் பெட்ரோல் செலவு,
இன்டர்நெட் செலவு (!!!), பிள்ளைகளின் படிப்புச் செலவு போன்ற சில நியாயமான
காரணங்களை சொல்லியிருக்கிறார்.
// இது போக பெரும்பாலான கம்பெனிகளில்
திங்கள், செவ்வாய் ‘ஃபார்மல்
ட்ரஸ்’, புதன், வியாழன்
‘செமி ஃபார்மல்’, வெள்ளியன்று ‘கேசுவல்’ என்ற
நடைமுறை உண்டு. வான் ஹூசனிலும், பீட்டர் இங்க்லாண்டிலும் இரண்டாயிரம்
ரூபாய்க்கு குறைவில்லாமல் சட்டை எடுக்க முடிகிறதா? அதுவும்
டீம் பாலைவனமாக இருந்துவிட்டால் பரவாயில்லை. ஒன்றிரண்டு ஃபிகர்கள் இருந்துவிட்டால்
அவர்களுக்கு வேண்டியாவது மாதம் ஒரு செட் துணி எடுக்க வேண்டியிருக்கும். ஆக இதுக்கு
சராசரியாக மாதம் ஒரு ஐந்திலிருந்து நான்காயிரம் வரை. //
கவுண்டர் வாய்ஸ்: அவனவனுக்கு ஒன்னுக்கு வரலைன்னு
வருத்தப்படுறான். இவனுக்கு இளநியில தண்ணி வரலையாம் !
நான் தெரியாமல் தான் கேட்கிறேன்,
சென்னை / பெங்களுருவில் வேன் ஹியூசன், பீட்டர் இங்க்லேண்ட் தவிர வேற ஜவுளிக்கடைகளே
இல்லையா ? ஒருவேளை பிராண்டட் சட்டை அணியாவிட்டால் உடலில் அரிப்பெடுக்குமா ? (ஃபிகர்களுக்காக
புதுத்துணி எடுக்க வேண்டியிருக்கிறது என்பது நகைச்சுவைக்காக எழுதிய வரிகளாக
இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன்).
// இந்தச் செலவை எல்லாம் செய்து
முடித்தாலும் சம்பளப் பணத்தில் பத்தாயிரம் ரூபாய் மிச்சமிருக்கிறது அல்லவா? அதுக்கு வினை வைக்கத்தான் கிரெடிட் கார்ட், பெர்சனல் லோன் EMI என்று ஏதாவது வந்து சேர்ந்துவிடுகிறது. //
ஏதோ செய்யாத பாவத்திற்கு தண்டனை
அனுபவிக்கும் தொனியில் எழுதியிருக்கிறார். நீ ஏன் மேன் லோன் வாங்குற ? எதுக்கு EMI
கட்டுற ? பகட்டான வாழ்க்கையைத் தேடி வாங்கிய கடனைத்தானே ஓய் அடைக்கிறீர்கள் ?
// இத்தனையும் போக கே.எஃப்சி, பீட்ஸா கார்னர் என்று வாயைத் திறந்து
கொண்டிருக்கும் பூதங்களுக்கு கிள்ளியும் அள்ளியும் போட வேண்டியிருக்கிறது. //
கே.எப்.சி, பீட்சா கார்னரில்
சாப்பிட்டுத் தொலைக்காமல் பெருநகரங்களில் வாழவே முடியாதா ? எனக்குத் தெரிந்து
எல்லா மென்பொருள் நிறுவன வளாகங்களின் சுற்று வட்டாரங்களிலும் ஓரிரு தள்ளுவண்டிக்கடைகள்,
ஃபாஸ்ட் ஃபுட் நிச்சயமாக இருக்கும். நம்மவர்களும் கரட்டடிபாளையத்தில் இருந்து
சென்னைக்கு வந்த புதிதில் அந்த மாதிரி கடையில் எல்லாம் சாப்பிட்டிருப்பார்.
இப்பொழுது கொஞ்சம் அதிகம் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டதால் அதுபோன்ற ரோட்டுக்கடைகளை
பார்த்தால் முகம் சுழிப்பதும் ஸ்டோமக் அப்செட் ஆகிடும் என்று சொல்லி சீன்
போடுவதுமாக பொழுதைக் கழிக்கின்றனர்.
// அரசு ஊழியர்களுக்கும், பத்திரிக்கை நண்பர்களுக்கும், கல்லூரி பேராசிரியர்களுக்கும் சம்பளம்
எந்தவிதத்திலும் குறைவில்லை. இப்பொழுதெல்லாம் அரசாங்க ஊழியர்களின் சம்பளமே நாற்பது
ஐம்பதைத் தொடுகிறது. அவர்களுக்கு சம்பளமா முக்கியம்? கிம்பளம்தானே
மெயின் மேட்டர். சேனல்களில் எழுபதாயிரம்
ரூபாய் சம்பளம் வாங்குபவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். கல்லூரி
பேராசிரியர்கள் சர்வசாதாரணமாக ஐம்பதுகளைத் தொடுகிறார்கள். ஐடிக்காரன் மட்டும் என்ன
பாவம் செய்தான்? //
பிற துறையினர் எல்லாம் நோகாமல் நோம்பி
கும்பிடுவது போல அல்லவா இருக்கிறது. கல்லூரி பேராசிரியர்கள் சர்வசாதாரணமாக ஐம்பதை
தொடுகிறார்களாம். என்னடா இது சோதனை ? ஒருவேளை வயதை குறிப்பிடுகிறாரோ ? யாரும்
வேலைக்குச் சேர்ந்ததும் போய் பேராசிரியராக அமர்ந்துவிட முடியாது. பேராசிரியராக
முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும், விரிவுரையாளராக அனுபவம் பெற்றிருக்க
வேண்டும் போன்ற விதிமுறைகள் மணிகண்டனுக்கு தெரியாதா என்ன ? முனைவர் பட்டம் எல்லாம்
ஒரு விஷயமா என்று வெளியிலிருந்து பார்ப்பவர்கள் வெகுசாதாரணமாக சொல்லிவிடலாம், த.தொ
தொழிலாளர்கள் எளிதாக பணம் சம்பாதிப்பதாக வெளியாட்கள் நினைக்கிறார்களே அது போல.
பொதுவாகவே மணிகண்டனின் வரவு செலவு கணக்கு
தப்புக்கணக்காக தோன்றுகிறது. கணக்கு பாடத்தில் அவரு கொஞ்சம் வீக் போல. இருவரும்
சம்பாதிக்கிறோம் என்றபடி ஆரம்பித்த அவருடைய பதிவு போகப் போக இருவருக்கும் பொதுவான
செலவுகளை அவருடைய சம்பளத்திலிருந்து மட்டும் குறைத்துக்கொண்டு ஆச்சு பார்த்தீங்களா
? ஐம்பதாயிரம் காலி என்று கணக்கை முடித்துவிட்டார். தவிர, மணிகண்டன் போல பிள்ளைக்குட்டிகள்
பெற்றெடுத்த த.தொ பணியாளர்கள் இந்நேரம் சொந்த வீடு, கார், சுவற்றில் மாட்டுகிற
தொலைக்காட்சி என்று செட்டில் ஆகியிருப்பார்கள்.
// ஒருவேளை ப்ரோமோஷன் கிடைத்து சம்பளம்
லட்ச ரூபாயைத் தொட்டாலும் எதுவும் மிச்சம் ஆகாது. கார் வாங்கி அதற்கு EMI, பெட்ரோல், ஒருவேளை
டிரைவர் வைத்தால் அவர் சம்பளம் பன்னிரெண்டாயிரம் ரூபாய். //
இதுதான் ஃபினிஷிங் டச். ஆக, ஒரு
லட்சமில்லை எத்தனை லட்சங்கள் வாங்கினாலும் கூட எல்லாவற்றையும் தங்கள்
வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கோ / பகட்டான வாழ்க்கைக்கோ செலவு செய்துவிட்டு
மாசக்கடைசியில் எங்க பர்ஸும் காலியாத்தான் இருக்கு, நாங்களும் ஏழைங்க தான் என்று
புலம்புவார்கள். மனிதர்கள் அவரவர் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்வது இயல்புதான்.
ஆனால் புலம்பக்கூடாது. நாய் வேஷம் போட்டா குரைச்சுதான் ஆகணும்னு தமிழில் ஒரு
பழமொழி உண்டு. அதுபோல த.தொ வேலை என்பது நாமாகவே வேண்டி விரும்பி ஏற்றுக்கொண்ட நாய்
வேடம். குரைத்து தான் ஆகவேண்டும். விருப்பமில்லையென்றால் சர்வசாதாரணமாக ஐம்பதை
தொடுகிற பேராசிரியராக பணிபுரியலாமே ? பொறியியல், MCA முடித்தவர்களுக்கு நிச்சயமாக
கல்லூரி விரிவுரையாளர் பணி கிடைத்துவிடும். அதுவும் இல்லையென்றால் த.தொ இளைஞர்கள்
அடிக்கடி ஃபேஷனுக்கு சொல்வதைப் போல ஊருக்கு போயி வெவசாயம் பார்க்கலாம் அல்லது
கரட்டடிபாளையத்திற்கோ வள்ளியாம்பாளையத்துக்கோ போய் எருமை மாடு மேய்க்கலாம் !
என்றும்
அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
46 comments:
அருமை.........
மச்சி அருமை...
அவரின் பின்னூட்டம் பூட்டி வைக்கப்பட்டுள்ளதால் கருத்து சொல்ல இயலவில்லை...
நான் சொல்ல நினைத்த பலவற்றை நீங்கள் சொல்லி இருப்பது மகிழ்ச்சி...
நான் மட்டுமல்ல நிறைய பேர் உங்க பதிலுடன் ஒத்துப்போவார்கள்...
உங்களுடைய பெரும்பாலான கருத்துக்கள் ஏற்புடையதே. மணிவண்ணன் பல நேரங்களில் இயல்பாக இருப்பதை சொன்னாலும் இவ்விஷயத்தில் உண்மைக்கு எதிர்மறையாக எழுதியுள்ளார்.
என்ன பிரச்னை என்றால் இதை அவரிடம் கூற நினைக்கிறேன் ஆனால் முடியவில்லை. உங்கள் பதில் பதிவில் பதில் எழுதுவது கஷ்டம்.
மாப்ள உன்னுடைய பதிலில் நானும் ஒத்துப்போகிறேன்.,
அத்தனை கருத்துக்களும் மிக ஆழமான உண்மைகள்... வெகு அழகாக உண்மையை விளாசியிருக்கிறீர்கள் பிரபா...
அவனவன் எதுக்கெல்லாமோ ஓட்டு போடுறான்...இதற்கு நான் த.ம. ஓட்டு போட்டே ஆகவேண்டும்...
முனைவர் பட்டம் வாங்கும் ஐகுடியா ஏதும் உண்டா?
He thinks he is a great writer.He boasts of having 2000 readers.Neo narcism.Lot of head weight.
//Lot of head weight//
he is jetli part 2. ada mandaya sonnenppa
Varun Prakash
நிறைய கருத்துகள் என் கருத்தோடு ஒத்து போகின்றது
He has mentioned something like this on his blog.
Comments are disabled in this blog. You may please contact below email ID/Phone #
vaamanikandan@gmail.com
+91 9663303156
//பெருநகரங்களில் வாடகை வீடுகளில் வசிக்கும் அனைவருமே பன்னிரெண்டாயிரம் கொடுத்து தான் வசிக்கிறார்களா ? ஏன் ஆறாயிரம், எட்டாயிரத்திற்கெல்லாம் வாடகை வீடுகள் கிடைப்பதில்லையா ? //
அருமை. அனநித்து கருத்துக்களும் உண்மை. இவர்களுக்கு பகட்டுத்தான் முக்கியம். பகட்டாக வாழவேண்டுமானால் வட்டி கட்டிதான் ஆவணும்.
நன்றி,
ஊருக்கு போயி வெவசாயம் பார்க்கலாம் அல்லது கரட்டடிபாளையத்திற்கோ வள்ளியாம்பாளையத்துக்கோ போய் எருமை மாடு மேய்க்கலாம் !
////////////////////
மாடு மேய்க்கும் தொழிலில் சாப்ட்வேர் பீப்பிளை விட இருமடங்கு வருமாணம் வரும் தொழில் அதனால் இதை வன்மையாக கண்டிக்கின்றேன்....!
வேணுன்னா ஈமு கோழி மேய்க்கலாம்...!
Suresh. U r wrong.... I cant write more. Wanna clarification, lets discuss in Cbe with remi
சிறப்பான பதில்! அருமை! நன்றி!
நான் மத்திய அரசு ஊழியன் எல்லா படிகளும் சேர்த்து மாதம் 24000 சம்பளம் வாங்குகிறேன். அதைத்தவிர OT இதர அலவன்ஸ் என ஒன்றும் கிடையாது. வயது 33 ஆகிறது. இவர் சொல்வது போல் 50000 வாங்க நான் 55 வயது வரை காத்திருக்க வேண்டும். எனது கிரேடு பே 2400,
எனது மேலதிகாரி Section Engineer அவரது கிரேடு பே 4200, மொத்த சம்பளம் 35000 இந்த சம்பளத்தை விட அதிகமாக பெற வேண்டுமானால் பல வருடங்கள் ஆகும். இதற்கும் உயரதிகாரியாக நேரடியாக தேர்வு பெற வேண்டுமெனில் IRS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அது IASக்கு நிகரானது.
இதே வயதில் த.தொ துறையில் எங்களை விட பலமடங்கு சம்பாதிப்பவர்கள் தான் அதிகம். வா. மணிகண்டன் சொல்வது போல் அரசு ஊழியர்கள் அவ்வளவு சம்பளம் வாங்குவதில்லை. ஐம்பது வயதை கடந்தவர்கள் மட்டுமே 50000 கிட்ட சம்பளத்தில் நெருங்குகிறார்கள்.
nalla naaka pudungara mathiri keteenga anna...
முக்கியமான செலவான ஆறு மாசத்திற்கொருமுறை புத்தம் புது மாடல் செல்போன் வாங்கும் செலவை இருவருமே கைவிட்டிருப்பதை கண்டிக்கிறேன்.
/////பேராசிரியராக முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும், விரிவுரையாளராக அனுபவம் பெற்றிருக்க வேண்டும் /////
ஒருத்தரு பேராசிரியராகி 50 வாங்குறதுக்குள்ள ஐடிக்காரன் அஞ்சு வீடு வாங்கி ஆறாவது வீட்டுல செட்டில் ஆகிடுவான்......
உண்மை தான் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுவோர் அமெரிக்காவில் கிட்டத்தட்ட ஒரு மணிக் கூறுக்கு 2000 ரூ. முதல் 6000 ரூ. வரைப் பெறுகின்றனர், அப்போ இந்தியாவில் ?! அதுவும் 12 - 16 மணி நேரம் ஒரு நாள் பணியாற்றுகின்றனர், மருத்துவக் காப்பீடுகள், பிரசவ விடுப்பு, தொழிற்சங்கம் எவையும் இந்திய ஐ.டி ஊழியர்களுக்கு இல்லை. நவீனக் கொத்தடிமை போன்றதே.. நிற்க அண்ணாந்துப் பார்த்தால் நாம் தாழ்நிலையில் தான் இருப்போம், அதற்காக வீண் பகட்டுச் செலவுகளை எல்லாம் கூறி யாமும் அன்றாடங் காட்சிகள் என புலம்புவதும், பிராண்டட் சட்டைப் போட, கார் வாங்க, வீடு வாங்க, மால்கள் போக, என அடுக்கி அடுக்கி புலம்புவது எல்லாம் ஓவர் தான், தம் பணியை பேராசிரியர் பணியோடு ஒப்பிட்டு குட்டு வாங்கியும் விட்டார், நல்ல காலம் துப்புரவுத் தொழிலாளரோடு ஒப்பிட்டு அவர்களுக்கு பேட்டா உண்டு தமக்கில்லை என புலம்பவில்லை. அது சரி, விவசாயம் பார்ப்பது அவ்வளவு எளிதா என்ன?!
அருமை!!!
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. எல்லா செலவையும் நாமே ஏற்படுத்திக்கொண்டு காசில்லை என்று புலம்புவது என்ன ஞாயம்? அதுவும் மாதம் ஒரு டிரஸ் வாங்க வேண்டியிருக்கிறது என்று புலம்புவதிலும் டிரைவர் வைத்தால் அதற்க்கும் 12000 கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் புலம்புவது மகா எரிச்சல்!
அந்த சாரு, பெரிய சாரு மாதிரியே எயுதராரு.
போவும் போது என்னத்த கொண்டு போவப் போறோம். வாங்குற சம்பள எல்லாத்தையும் அந்த மாசமே செலவழிச்சுருங்க.எனக்கு பிடித்த பதிவரை இப்படி கலாய்த்திருக்கிறீர்களே. தினமும் ஒரு பதிவு எழுதி விடுகிறாரே என்ற பொறாமையா?
அவரே பெங்களூரில் மாடு மேய்ப்பது எவ்வளவு லாபமான தொழில் என்று ஒரு பதிவிட்டிருக்கிறார்.அது ஏன் உங்கள் கண்களுக்கு தென்படவில்லை?
ஐ டி துறை போல் கொடுத்து வாய்த்த வாழ்வு எதிலும் இல்லை.
அதில் வரும் வருமானம் மிக அதிகம் மற்ற தொழில்களை காட்டிலும் .
ஒருவர் 6 வருடத்தில் 4 அடுக்கு மாடி வீடுகள் வாங்கி விட்டார் (சில வீடுகள் கோடிக்கு மேல்). பொறியியல் படிப்பு தான் .
எதோ பக்கத்தில் தாம்பரம் சென்று வருவதை போல மாதம் ஒரு முறை அமெரிக்கா சென்று வர வாய்ப்பு . இல்லாவிடில் இங்கும் சம்பளம் தந்து போகும் நாட்டிலும் பணம் தந்து வேலை. வரும் போதும் போகும் போதும் துபாய் சென்று நகைகள் வாங்கி வியாபாரம் .
பிசினஸ் வகுப்பு விமான பயணம் ,போனஸ் , கம்பனி பங்குகள் , கார் ,மருத்துவம் , கல்வி என்று பற்பல சலுகைகள்.
மேலும் கூட்டாக சேர்ந்து சிறப்பு சலுகைகள் பெறுவது, கணினி துறையில் இருப்பதால் முக்கிய அனுகூல செய்தி முந்தி பெறல் , இன்னும் பல வசதிகள்.
சுக வாழ்வு இந்த துறை போல் எங்கும் இல்லை . எங்கும் இல்லை .
சில வருடம் சிரமமாக இருந்தாலும் , பிறகு சுக வாழ்வு.
இவர்கள் போல் மற்ற துறைகளிலும் அதே அளவு வேலை தான் , ஆனால் இவர்களுக்கு அள்ளி தரப்படுகிறது
இவர்கள் மற்ற துறைகளில் இருப்பவர் சிரமம் தெரிந்தால் தங்கள் நிலை எண்ணி பெருமை படுவர். அடிப்படை தேவைகளே நிறைவேறாத நிலையில் பல்லோர் இருக்க, வேலை தேடிபலர் அலைந்து வாட இவர்கள் நிலை மிக சிறப்பு
பிரபா.... செம ...செம .....அட்டகாசமான பதிவு ..
software காரங்களுக்கும் இவ்வளவு பிரச்சனையா கஷ்டம் தான்
இந்திய கம்பெனி , தொழிலாளர் சட்ட படி, மருத்தவ வசதி, பிரசவ விடுப்பு போன்றவை தரப்பட வேண்டும். பதிவு செய்ய பட்ட கம்பெனி நிச்சயம் தரவேண்டும் . கேளுங்கள் தரப்படும் . அது தான் தொழில் சங்கம் இல்லாமலேயே எல்லாம் கிடைக்கிறதே .. பின்
எதற்கு தொழில் சங்கம் .
பிரபா,
தினசரி எதையாவது எழுதியே ஆகணும்னு அவஸ்தையில எழுதுறவங்க இப்படித்தான் என்ன ,ஏதுனு நிதானமே இல்லாமல் மேம்போக்காக எழுதி தள்ளுவார்கள்,ஆனால் அவர்களுக்கு உள்ளுக்குள் ஒரு நினைப்பு தினம் எதுனா எழுதிக்கிட்டே இருந்தா தானா பெரியா எழுத்துக்காரர் ஆகிடலாம்னு ,வேண்டுமானால் பத்திரப்பதிவு அலுவகலத்தில் டாக்குமெண்ட் ரைட்டராகலாம் :-))
//வான் ஹூசனிலும், பீட்டர் இங்க்லாண்டிலும் இரண்டாயிரம் ரூபாய்க்கு குறைவில்லாமல் சட்டை எடுக்க முடிகிறதா? //
இந்த பிரான்ட் சட்டையெல்லாம் ஒருக்கா கூட வாங்கி இருக்க மாட்டார்னு நினைக்கிறேன், பீட்டர் இங்கிலாண்ட் ஃபார்மல் சட்டைகள் ரூ 500 முதல் கிடைக்கிறது, வான்ன் ஹீசைன் 1500 முதல். அதிலும், ஈரோபா, மெகாமார்ட் அல்லது ஃபேக்டரி அவுட்லெட்களில் எப்பொழுதும் 50 சதவீதம் தள்ளுபடி, அல்லது "buy one take one free" ஆஃபர்களில் கிடைக்கும். ஏகப்பட்ட மென்பொருள் ஆட்கள் அங்கே தான் அள்ளுறாங்க :-))
சைதாப்பேட்டை ஹால்டா சந்திப்பில் கூட ஒரு ஈரோபா கடை இருக்கு,ஒருக்கா முயற்சித்து பாரும்.
// கல்லூரி பேராசிரியர்கள் சர்வசாதாரணமாக ஐம்பதுகளைத் தொடுகிறார்கள். ஐடிக்காரன் மட்டும் என்ன பாவம் செய்தான்?//
நாட்டு நிலவரமே தெரியாம இருக்காரே, அரசு கல்லூரிகளில் தான் யுஜிசி பே ஸ்கேல், தனியார் கல்லூரிகளில் யுஜிசி பே ஸ்கேல் தருபவை தமிழ்நாட்டில் மொத்தம் 10 இருந்தாலே உலக அதிசயம் எனலாம். பொதுவாக ரூ 15,000-20000 தான் பெரும்பாலான தனியார் கல்லூரிகளில் சம்பளம்.
அரசு கல்லூரியில் வேலைக்கு சேர குறைந்த பட்சம் முதுகலை படித்திருக்க வேண்டும்,பின்னர், NET,SLET, ஆகிய தேர்வுகள் எழுதி நல்ல மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.
அதன் பின்னர் அஸிஸ்டண்ட் புரஃபெசர்/லெக்சரர்(A.P), அதில் 6 ஆண்டு பணி அனுபவம் முடித்தால் அசோசியேட் புரபசர் (ASP)ஆகாலம், அதன் பின்னர் பிஎச்டி இருந்தால் மட்டுமே மேலும் 6 ஆண்டு பணி அனுபவத்திற்கு பின்னர் புரபசர் ஆகலாம், 16 ஆண்டு பணி அனுபவம் இருந்தால் மட்டுமே HOD,dean post ஆசைப்பட முடியும். ஆக மொத்தம் குறைந்தது 12 ஆண்டு பணி அனுபவம் இருந்து, பிஎச்டியும் படித்திருந்தால் மட்டுமே பேராசிரியர் ஆகலாம். சும்மா வேலைக்கு சேர்ந்தன்னிக்கே பேராசிரியர் ஆகிட முடியாது, இந்த 12 ஆண்டுகாலத்தில் மென் பொருள் துறையில் லைஃப்பே செட்டில் ஆகிட முடியும்.
Aanalum yegappatta thimiru andha aaluku... nalla kudutheenga oru shot.... raanuvathula azhinchavanavida aanavathula azhinchavanga than jaasthi....
Another jackiesekar in suya puranam polambal.....idhuku melayachum thirundhina seri.....
அருமை...
நான் சொல்ல நினைத்த பலவற்றை நீங்கள் சொல்லி இருப்பது மகிழ்ச்சி...
-Maakkaan.
எருமை மாடு மேய்ப்பது அவ்வளவு கேவலமாக ஆகிப்போச்சு!
எல்லா பாலையும் சிக்ஸரா அடிச்சு தூக்கி இருக்க...ராஜா.
எங்கயாவது ‘காட்சி’ஆயிரப்போகுது என்ற பதட்டம் பதிவை படிக்கும் போது ஏற்பட்டது.ஆனா ‘நாட் அவுட்’ஆகாமா டபுள் செஞ்சுரி ஸ்கோர் போட்ட ‘தம்பி’ ‘பிரபாகரனுக்கு’ வாழ்த்துக்கள்.
[பிரபாகரன் பெயர் வச்சாலே புலியா மாறி விடுவோர்களோ!]
எருமை மாடு மேய்க்கலாம் ! ....இல்லை
எருமை மாடு மேக்கிறவனுக்கு இந்த வேலையை தெரியாதனமா கொடுத்திட்டாங்க...
இவங்களை பார்த்தா வடிவேலும் எண்ணை கிணறும்..... ஞாபகம் வருது...
my brother mark from Dubai speaking...
Ravi Paraman
அரசு வேலை செய்ப்வர்களை மற்றவர்கள் ஒரு வித பொறாமையுடன் பார்த்தது அந்தக் காலம் ஐ,டி காரர்களின் மீது லேசான பொறாமை அரசு ஊழியர்களுக்கும் உண்டு. 20 ஆண்டுகளாவது பணியற்றினால்தான் அலுவலர் நிலையில் உள்ளவர்களே 40 ஆயிரத்தை தாண்ட முடியும்.
நான் பதிவுலகம் என்றால் என்ன என்பதை அறியுமுன்
மோகன் என்பவர் வானவில் எண்ணங்கள் என்ற வலைப்பூவில்
ஐ.டி பற்றிய ஒரு தொடர்பதிவை படித்தேன். ஐ.டி. சூழலை புட்டுப்புட்டு வைத்திருந்தார். கிட்டத்தட்ட உனது கருத்துக்கு அது ஒத்துப் போகும் என்று நினைக்கிறேன்.
வானவில் எண்ணங்கள்
அவர் இப்போது எழுதுவதில்லை
பணம் இருக்கு... பகட்டை காட்டறாங்க...
எங்கள மாதிரி ஆட்கள் அவங்க கூட ஒத்து போவதில் பொருளாதாரம் இடம் தராது பிரபா.....
பட்டாஸ்
என்ன ல... தம்பி... பிரிச்சி மேஞ்சிருக்க போல ...இனிமே அந்த ஆளு பதிவு எழுதுவதையே விட்ருவாறு போல ..பாவம்... புள்ள குட்டி காரரு போல... பாத்து ஏதாவது பண்ணு ...
அநீதியை எதிர்த்து போராடி, தர்மத்தை காத்த மாவீரன் பிரபாகரன் வாழ்க. பின்னூட்ட பெட்டி மூடியிருந்தாலும், தன் பிளாக்கை தொறந்து லிங்க் கொடுத்து பொரட்டி எடுத்த முனைவர் வாழ்க. அதற்கு "அவர் அப்படிதான். ரொம்ப கெட்டவரு... நாலு பேர ரேப் பண்ணியிருக்கார்..." என்ற ரீதியில் கமெண்டு போட்ட அல்லக்கைகள் வாழ்க.
அவர் பகுத்தறிவு இல்லாத சக மக்களை போல பேசியிருப்பது பிரபாவால் தாங்கி கொள்ள முடியவில்லை. தமிழ் மணத்தில் தென்படும் அவர் பதிவை படித்து யாருக்கும் த.தொ துறை வேலையின் மேல் உள்ள எண்ணம் தவறாய் மாறி விட கூடாது என்ற அக்கறையாய் கூட இருக்கலாம். அந்த நபரை பற்றி தெரியாமல் அதிகம் அவர் பிளாக்கை படிக்காமல் அவரை பற்றி என்னால் எதுவும் கூற முடியாது. அவர் எப்படி பட்டவராய் இருந்தாலும் உங்களுடைய பதிவுக்கு அவர் பதில் பதிவு போடாமல் இருப்பதில் தான் அவர் சுயமரியாதை அடங்கியிருக்கிறது.
//அநீதியை எதிர்த்து போராடி, தர்மத்தை காத்த மாவீரன் பிரபாகரன் வாழ்க. பின்னூட்ட பெட்டி மூடியிருந்தாலும், தன் பிளாக்கை தொறந்து லிங்க் கொடுத்து பொரட்டி எடுத்த முனைவர் வாழ்க. அதற்கு "அவர் அப்படிதான். ரொம்ப கெட்டவரு... நாலு பேர ரேப் பண்ணியிருக்கார்..." என்ற ரீதியில் கமெண்டு போட்ட அல்லக்கைகள் வாழ்க.
அவர் பகுத்தறிவு இல்லாத சக மக்களை போல பேசியிருப்பது பிரபாவால் தாங்கி கொள்ள முடியவில்லை. தமிழ் மணத்தில் தென்படும் அவர் பதிவை படித்து யாருக்கும் த.தொ துறை வேலையின் மேல் உள்ள எண்ணம் தவறாய் மாறி விட கூடாது என்ற அக்கறையாய் கூட இருக்கலாம். அந்த நபரை பற்றி தெரியாமல் அதிகம் அவர் பிளாக்கை படிக்காமல் அவரை பற்றி என்னால் எதுவும் கூற முடியாது. அவர் எப்படி பட்டவராய் இருந்தாலும் உங்களுடைய பதிவுக்கு அவர் பதில் பதிவு போடாமல் இருப்பதில் தான் அவர் சுயமரியாதை அடங்கியிருக்கிறது./////
i know who posted this comment...
இந்த அனோனிகளின் தொல்லை தாங்க முடியலப்பா!
திறமை உள்ளவனுக்கு அல்லக்கை... என்பது... திறமையை பாராட்டும் பெரிய மனம்... என்று எம்மை
உயர்த்திய அன்பார்ந்த அனோனிக்கு நன்றி.
ரவி பரமன்
100% ஒத்து போக வேண்டிய உண்மை! எங்க கிராமத்துல இதுக்கு "அருவாமனையை " வச்சு ஒரு பழமொழி உண்டு...சபையில சொல்ல முடியாது! ஆனா நீங்க நச்-னு சொல்லிடீங்க!..
பி.கு: அடியேனும் தா.தொ.பணியாளன் தான்
எதிர்வினைக்கு எதிர்வினை
http://www.nisaptham.com/2013/08/blog-post_2.html
ரெண்டு புக்கு போட்டாரு..அவ்ளோதான்...இலக்கியவாதி நெனப்புல மனுஷ்யபுத்திரன், ஜெமோகன், சாரு எல்லாரையும் சகட்டு மேனிக்கு கிண்டல்...அப்புறம் "தெனமெழுதியாவனுமில்லன்னாமசிருனட்டுக்கும்" [Thenameluthiyaavanumillannaamasirunattukkum] அப்டின்னு ஒரு மோசமான வியாதி வேற..
ஒரு பக்கம் இலக்கியத் தாகம்..மறுபக்கம் கணிப்பொறியாளனாக வாழ நேர்ந்த மிடில் கிளாஸ் அவலம்...எல்லாரும் கழுவிக்கழுவி ஊத்தியும் பின்னூட்டப் பெட்டிய மூடிக்கிட்டு இப்டி எதையாவது 'இலக்கியத்தரமா எழுதி வர்றாரு..பாவம்..
////அநீதியை எதிர்த்து போராடி, தர்மத்தை காத்த மாவீரன் பிரபாகரன் வாழ்க. பின்னூட்ட பெட்டி மூடியிருந்தாலும், தன் பிளாக்கை தொறந்து லிங்க் கொடுத்து பொரட்டி எடுத்த முனைவர் வாழ்க. அதற்கு "அவர் அப்படிதான். ரொம்ப கெட்டவரு... நாலு பேர ரேப் பண்ணியிருக்கார்..." என்ற ரீதியில் கமெண்டு போட்ட அல்லக்கைகள் வாழ்க.
அவர் பகுத்தறிவு இல்லாத சக மக்களை போல பேசியிருப்பது பிரபாவால் தாங்கி கொள்ள முடியவில்லை. தமிழ் மணத்தில் தென்படும் அவர் பதிவை படித்து யாருக்கும் த.தொ துறை வேலையின் மேல் உள்ள எண்ணம் தவறாய் மாறி விட கூடாது என்ற அக்கறையாய் கூட இருக்கலாம். அந்த நபரை பற்றி தெரியாமல் அதிகம் அவர் பிளாக்கை படிக்காமல் அவரை பற்றி என்னால் எதுவும் கூற முடியாது. அவர் எப்படி பட்டவராய் இருந்தாலும் உங்களுடைய பதிவுக்கு அவர் பதில் பதிவு போடாமல் இருப்பதில் தான் அவர் சுயமரியாதை அடங்கியிருக்கிறது.////
கொண்டைய மறைப்பா மணி..:):)
Post a Comment