அன்புள்ள வலைப்பூவிற்கு,
பாரி – கடையேழு வள்ளல்களில் முதன்மையானவர், அதிக புகழ் பெற்றவரும்
கூட. ஓரறிவு உயிரான முல்லைக்கொடிக்கு தேர் கொடுத்தவர் என்பதே அதற்கு காரணம்.
சிவகங்கை மாவட்டத்தில் சமகாலத்தில் பிரான்மலை என்ற பெயரோடு விளங்கும்
குன்றுக்கூட்டம் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பறம்புமலை என்று
வழங்கப்பட்டது. பறம்புமலை முன்னூறு கிராமங்களை தன்னகத்தே கொண்டிருந்தது. சிரிப்பது
போன்று சலசலக்கும் அருவிகள், ஓடைகள், கனி நிறை மரங்கள், மலர் நிறை சோலைகள், இசை
நிறை பறவைகள், எழில் நிறை காட்சிகள் என பல நல்வளங்களை கொண்டிருந்தது பறம்புமலை.
அதனை வேளிர்குல வழிவந்த சிற்றரசர்களே பல்லாண்டுகளாய் ஆண்டுவந்தார்கள். அவர்களுள்
பெரும்பான்மையோர் முடியுடை வேந்தர்க்கு அடங்கியும், அவர்களோடு அன்புகொண்டும்
வாழ்ந்து வந்தார்கள். அந்த சிற்றரசர்களின் வழிவந்தவர் தான் பாரி.
வேளிர்குலத்தோன்றல் என்பதால் அவரை பாரிவேள் என்றும் வேள்பாரி என்றும் அழைப்பர்.
பாரி அரசனான பின் குடிகளிடத்தில் மிகவும் அன்புடையவனாய் இருந்தான்.
குடிகளும் அவனைப் பொன்னேபோல் போற்றி வந்தனர். அவனுடைய ஆட்சியில் குடிகள்
முன்னையினும் பன்மடங்கு நலமுற்று இன்பம் துய்த்தார்கள். பறம்பு மக்கள் எள்ளளவும்
சோம்பலின்றி உழைப்பவர்களாக இருந்தனர். தினை, வரகு, எள், கிழங்கு வகைகள் போன்றவற்றை
விளைவித்து அவற்றுடன் மா, பலா, வாழை போன்ற கனிகளையும் கொண்டுசென்று மலையடிவார
ஊர்களில் பண்டமாற்று செய்து வாழ்ந்து வந்தனர். பொதுவாகவே, மக்கட்பிறப்பை அடைந்தவர்
எல்லோரும் நல்ல உடல்பலம் பெற்றிருக்க வேண்டுமென்பது பாரியின் எண்ணம். ஆகையால்,
அவன் நாட்டின் ஊர்கள்தோறும் சிலம்புக்கூடங்கள் ஏற்படுத்தியிருந்தான். வாலிபரைச்
சிறந்த வித்தைகளைப் பயிலச்செய்தான். பாரியும் அவர்களுக்கு முன்னுதாரணமாக
விளங்கும்பொருட்டு தேகபலம் கொண்ட மிகச்சிறந்த வீரனாய் இருந்தான். காரணமாக, அவனுடைய
படை பலம் வாய்ந்ததாக அமைந்திருந்தது.
பாரி படை வீரத்தில் மட்டுமின்றி கொடை தீரத்திலும் சிறந்திருந்தான். அவனை
நாடிவந்த புலவர்கள், பாணர்கள், கூத்தர்கள், விறலியர்கள் மற்றும் இரவலர்களுக்கு
அள்ளி அள்ளி கொடுத்தான். எங்ஙனம் கொடுத்தான் என்றால், கேட்டவர்கள் ‘போதும்,
போதும்’ என்று சொல்லும்வரையில் கொடுத்தான். கேட்பதற்கு முன்பே கூட முகக்குறிப்பும்
அங்கக்குறிப்பும் கண்டுணர்ந்து ஈந்தான். பறம்புநாடு இரவலர்களுக்கு ஒரு
பரிசுப்பெட்டகமாக அமைந்திருந்தது. பழமரம் நாடும் பறவைகள் போல கூட்டம் கூட்டமாக
வந்த இரவலர்களை பறம்புநாடு வரவேற்றது. அக்காலத்தில் இப்படிப் பரிசில்
பெற்றுச்செல்லும் இரவலர்கள் எவரும் சுயநலமிகளாக இல்லை. ‘தாம் பெற்ற இன்பம் பெறுக
இவ்வையகம்’ என்ற நோக்கோடு தன்போன்ற இரவலர்கள் எதிர்ப்பட்டால் அவர்களிடம்
வலியச்சென்று பாரியின் பெருமையை எடுத்துச்சொல்லி அனுப்பி வைப்பார்கள். இதனால்
பாரியின் புகழ் பரவியது.
அதியமானுக்கொரு ஒளவையார் போல பாரிவேளுக்கு கபிலர் என்னும்
பெரும்புலவர் உயிரினும் மேலான நண்பராய் இருந்துவந்தார். பாரியும் கபிலரும் நட்பான
கதையை எழுதுவதென்றால் பல பதிவுகள் தேவைப்படும். சுருக்கமாக சொல்வதென்றால்,
பாரியின் கொடைப்பண்பை அறிந்த கபிலர் அவனிடம் பொருள்பெற வந்தார். கபிலரின் இணையற்ற
புலமையைக் கண்டுவியந்த பாரி அவரை தன்னுடன் தங்க வைத்துக்கொண்டார்.
பாரிவேள் அவ்வப்போது தன்நாட்டு மக்களையும் மலைவளங்களையும் காண்பதற்கு
சென்றுவரும் வழக்கத்தைக் கொண்டிருந்தான். அதில் அவனுக்கு அளவிலா ஆனந்தம். ஒருமுறை
அதுபோல தன்னுடைய தேரை எடுத்துக்கொண்டு சென்றபோது வழியில் ஒரு முல்லைப் பூங்கொடி,
கொழுக்கொம்பு இல்லாமல் காற்றால் அலைந்துக்கொண்டிருந்தது. ஆதரவற்ற அனாதைபோல,
வாடிச்சோர்ந்து தவிக்கும் ஒரு பரிதாபத்திற்குரிய வறியனைப் போலத் தோன்றிய அக்கொடி
பாரியின் கவனத்தை ஈர்த்தது. ஈர்த்ததோடா... உடனே இயங்கவும் செய்தது. தேரைவிட்டு
இறங்கி, அதனை முல்லைக்கொடிக்கு அருகில் கொண்டு சென்றான். குதிரைகளை அவிழ்த்து
அப்பால் விட்டான். பிறகு தேரின் மீது கொழுக்கொம்பிற்கு அலையும் முல்லைக்கொடியை
எடுத்து பாங்குற படரவிட்டான். பின்னர் குதிரைகளுள் ஒன்றின்மீது ஏறிக்கொண்டு ஏனையவை
பின்தொடர அரண்மனையை சென்றடைந்தான். ஓரறிவு உயிருக்கும் இரங்கும் அவனது ஒப்பற்ற
கொடைத்திறன் நாடெங்கும் பரவியது.
பாரியின் புகழை முடியுடை வேந்தர் மூவரும் அறிந்தார்கள். அறிந்ததும்
என்ன செய்தார்கள் ? அவன்மேல் அடங்காத அழுக்காறு கொண்டார்கள். மூவரும் ஒன்றுகூடி
தத்தம் சேனைகளை திரட்டி பறம்புமலையைச் சூழ்ந்தார்கள். பாரி, தன் பலத்தையும்
எதிரிகளின் பலத்தையும் எண்ணிப் பார்த்தான். போர் செய்வது இயலாத செயலாகப்பட்டது.
ஆகையால் தற்காப்புப் பணியில் தன் கவனத்தை செலுத்தினான். மலைமேலுள்ள அரண்களை
செப்பம் செய்தான். எதிரிகள் எவ்வழியிலும் நுழைய முடியாதபடி செய்ததோடு அவர்களை
மறைந்து தாக்கும் மறைவிடங்களையும் அமைத்தான். பறம்பு மக்களும் உயிரையே பணயம்
வைத்து ஒரு மூச்சாக செயல்பட்டனர்.
ஒருநாள் ஆயிற்று. ஒரு வாரம் ஆயிற்று. வாரம் மாதம் ஆனது. மாதம்
ஒருமையிலிருந்து பன்மையாயிற்று. மூவேந்தர்களும் பறம்புமலையினுள் நுழைய முடியாமல்
விழிபிதுங்கி நின்றனர். ‘இப்படை தோற்கின் எப்படை வெல்லும்’ என்ற இறுமாப்புடன்
இருந்த மூவேந்தர்களுக்கும் பாரியின் தற்காப்பு சவாலாக அமைந்திருந்தது. ஒருமுறை
மலையடிவாரத்திலிருந்த போர் வீரர்களின் கூடாரத்திற்கு ஒரு ஓலை வந்து விழுந்தது.
அதனைக் கண்டதும் பாரி சரணடைந்துவிட்டான் என்று அகமகிழ்ந்த மன்னர்கள், அதைப்
படித்தபோது ஏமாற்றத்தின் எல்லைக்கு தள்ளப்பட்டார்கள். அது கபிலர் இயற்றிய பாடல்.
“அளிதோ தானே பாரியது பறம்பே !நளிகொண் முரசின் மூவிரு முற்றினும்உழவர் உழாதன நான்கு பயனுடைத்தே;ஒன்றே, சிறியிலை வெதிரினெல் விளையும்மேஇரண்டே, தீஞ்சுளைப் பலவின் பல மூழ்க்கும்மே;மூன்றே, கொழுங்கொடிவள்ளிக்கிழங்கு வீழ்க்கும்மே;நான்கே, அணிநிற வோரிபாய்தவின் மீதழிந்துதிணிநெடுங் குன்றம் தேன் சொரியும்மே.வான்க ணற்றவன் மலையே; வானத்துமீன்க ணற்றதன் சுனையே; யாங்குமரந்தொறும் பிணித்த களிற்றினி ராயினும்,தாளிற் கொள்ளலிர், வாளிற் றரலன்;யானறி குவனது கொள்ளு மாறே,சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணிவிரையொலி கூந்தனும் விறலியர் பின்வரவாடினர் பாடினர் செலினேநாடும் குன்றும் ஒருங்கீ யும்மே.”(புறம் – 109)விளக்கம்: பாரியினுடைய பறம்புமலை வெல்வது எளிதல்ல. நீங்கள் மூவரும் வெற்றிமுரசு கொட்டி, ஒன்றுகூடி பலநாள் முற்றுகையிட்டாலும் அதனை உங்களால் வெல்ல முடியாது. ஏனெனில், பறம்புமலை அகலத்தாலும் நீளத்தாலும் உயரத்தாலும் வான் போன்றது. வெண்மையான தோற்றம்கொண்ட அருவிகள் பலவாய்ப் பிரிந்து ஓடுவதற்குக் காரணமாயுள்ள நீர் நிரம்பிய சுனைகள் நிறைந்துள்ளன. அதனால், உழவர்கள் உழாமலேயே அந்நாட்டு மக்களுக்கு வேண்டிய உணவுப்பொருட்கள் கிடைக்கின்றன. அவற்றுள் முக்கியமானவை நான்கு :-- மலையிடத்து ஓங்கி வளரும் சிறிய இலையை உடைய மூங்கில்களிலிருந்து நெல் விளையும்.- மலையடிவாரத்தில் வளரும் பலாமரங்களில் கனித்து வெடித்த பழங்களிலிருந்து இன்சுவை சுளைகள் உதிரும்.- நிலத்தின் வெற்றிடங்களில் கொழுந்துவிட்டுத் தழைத்து ஓடும் வள்ளிக்கொடிகள் நிலம் வெடிக்கும்வண்ணம் பருத்த கிழங்குகளை ஊன்றும்.- மலையில் பல தேன்கூடுகள் உள்ளன. அழகிய நீலநிறமுடைய பெரிய தேனீக்கள் தேனில் வீழ்ந்து அமிழ்வதால் வழிந்துவரும் தேனும் உண்டு.ஆகையால், எம் அரசனையும் எம் நாட்டையும் ஒருபோதும் உங்களால் வெல்ல முடியாது. நீங்கள் பறம்புமலையை பெற விரும்புவீர்களானால், வாசனை வீசும் நறுமண மலர்களைச் சூடிய கூந்தல் உடைய உங்கள் அன்புள்ள பெண்கள், வடித்துக் கூர்மையாக்கப்பட்ட நரம்புகளை உடைய யாழை ஏந்திக்கொண்டு இனிய பண்ணோசை ஒலிக்கப் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் முன்வர நீங்கள் பின்செல்லல் வேண்டும். அப்போது, பாரி தன்நாட்டையும் மலையையும் ஒருங்கே ஈவான்.
கபிலர் வரைந்த பாடலைக் கண்டதும் அவர்கட்கு இன்னது செய்வதெனத்
தெரியவில்லை. மூவரும் கூடி ஆலோசித்தார்கள். பாரியின் குடியை உறவாடிக் கெடுப்பதென
முடிவு செய்தார்கள். பாரிக்கு ஆண்மக்கள் இல்லை. அழகிய பெண்கள் இருவர் இருந்தனர்.
அவர்கட்கு பாரி சூட்டிய பெயர் இன்னதென்று சங்கநூல்களில் குறிப்பு இல்லை. ஆயினும்,
பிற்காலத்தவர் அவர்களை அங்கவை சங்கவை என்பர். (அங்கவை சங்கவையை பற்றி பிற்பாடு தனி
இடுகையில் எழுத முயல்கிறேன்). அன்பும், அறிவும், அழகும், வனப்பும் ஒருங்கே
அமையப்பெற்ற மகள்கள் பாரிக்கு உளர் என்பதை மூவேந்தர்கள் அறிந்தார்கள்.
மூவேந்தர்களும் தனித்தனியே பெண்வேண்டி பாரியிடம் தூது அனுப்பினார்கள். பின் ஒன்று
சேர்ந்தும் பெண்களை வேண்டினார்கள். பாரி மறுத்துவிட்டான். காரணம், ஒருவனுக்கே
இரண்டு பெண்களையும் கொடுத்துவிட்டால் மற்ற இருவருக்கும் கலக்கமுண்டாகும். அன்றி,
ஆளுக்கு ஒருத்தியாக கொடுத்தாலும் மூன்றாமவனுக்கு வருத்தம் வரும். பாரியின்
மறுப்பிற்கான காரணத்தை மூவேந்தர்கள் அறிந்திருக்கவில்லை.
மூவேந்தர்களும் பாரியின் மீது சினம்கொண்டு முன்பைவிட அதிகமான சேனைகளை
திரட்டினார்கள். இம்முறையும் அவனை வெல்லாமல் திரும்பிவிடின் நம்குடிகளும் நம்மை
மதியார்களே என்று ஐயுற்றார்கள். உடனே ஒரு ஒற்றனை அழைத்து, பாரியின் நிலையை அறிந்து
வரும்படி கூறி அனுப்பினார்கள். ஒற்றன் பறம்புநாட்டிற்குச் சென்றான். பாரியின்
மாளிகையைக் கண்டான். பறம்புமலையின் மேலேறினான். அங்கிருந்த அரணது சிறப்பையும்,
வலிமையையும் உணர்ந்தான். மலையின் வளங்களை அறிந்தான். மற்றும் அறியவேண்டிய
எல்லாவற்றையும் ஆங்காங்கு ஆராய்ந்து தெரிந்துக்கொண்டான். மிக்க வியப்புடன்
மூவேந்தர்களிடம் திரும்பினான். பாரியை அவர்களுடைய படைபலத்தால் ஒருபோதும் வெல்ல
முடியாது என்ற உண்மையை எடுத்துரைத்தான்.
முற்றுகை முயற்சி முட்டாள்த்தனமானது என்று அவர்களுக்கு தெளிவாக
தெரிந்துவிட்டது. வேறு என்ன செய்யலாம் என்று யோசித்தபோது கபிலருடைய புறநானூற்றுப்
பாடலின் (மேலே குறிப்பிடப்பட்டுள்ளது) கடைசி நான்கு வரிகள் அவர்களின் நினைவுக்கு
வந்தன. ஒரு பெளர்ணமி நாளில் மூவேந்தரும் முதிய புலவர்போல வேடம் பூண்டனர்.
ஆளுக்கோர் யாழினைக் கையிலேந்தி பாரியை அணுகினர். பாரி அவர்களை அன்புடன் வரவேற்று
தக்க ஆசனங்களிட்டு அமர்த்தி வழக்கம்போல் நல்லுரை பல புகன்றான். அப்போது
மூவேந்தர்கள் சால அன்புடையவர்கள் போல நடித்து பாரியை மிகவும் புகழ்ந்து பாடி, அவன்
உயிரையே தமக்குப் பரிசிலாகத் தரவேண்டினார்கள். அதனைக் கேட்ட பாரி உள்ளங்கொள்ளா
மகிழ்ச்சிகொண்டு அவர்கள் வயமாகி மரணம் எய்தினான். சிலர் மேற்கூறிய வரிகளில்
மூவேந்தர்கள் வேடமணிந்து சென்றது வரைக்கும் தான் உண்மை என்றும் அவர்கள் பாரியின்
உயிரை பரிசிலாக கேட்காமல் அவன் அசந்த சமயத்தில் கூர்வாளை அவன்மீது பாய்ச்சினார்கள்
என்றும் கூறுகின்றனர். எப்படியோ மூவேந்தர்களின் வஞ்சத்திற்கு பாரி பலியாகிவிட்டான்.
பறம்புமலை வரம்பு இல்லா வேதனையில் தவித்தது.
முந்தய பதிவு: அதியமான்
தொடர்புடைய சுட்டி: வள்ளல் பாரி வேள் வரலாறு
என்றும்
அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
10 comments:
//சிரிப்பது போன்று சலசலக்கும் //அருவிகள், ஓடைகள், கனி நிறை //மரங்கள், மலர் நிறை சோலைகள், //இசை நிறை பறவைகள், எழில் நிறை //காட்சிகள் என பல நல்வளங்களை //கொண்டிருந்தது பறம்புமலை.
thambi super da...
பாரியின் சரித்திரமும், புலவர் பாடிய பாடலும், அதற்கான பொருளும், அந்த நாட்டின் வளமும், நன்கு புரிந்துகொள்ள முடிந்தது.
அழகான பதிவு. பாராட்டுக்கள்.
ஆனாலும் பாரியின் மரணம் வருந்தத்தக்கதாக உள்ளது.
Good one Piraba. You are reminding me the writer சாண்டில்யன்.
Ravi Paraman
@ பொன் மகேஸ் & ரவி பரமன்
கடையேழு வள்ளல்கள் சீரிஸை பொறுத்தவரையில் என்னிடமுள்ள புத்தகங்களிலிருந்தும் இணைய தேடல்களிலிருந்தும் எடிட் செய்து, கம்பைல் செய்து, டைப் அடிப்பது மட்டுமே என்னுடைய பங்களிப்பு... வார்த்தைகள் என்னுடையது அல்ல...
பிரபா,
அட டா மாமாவோட மல்லுக்கட்டியதில் இந்தப்பதிவை கவனிக்காம போயிட்டேன், வள்ளல் வரிசையில் பார்வேள் பற்றி சுருக்கமாக சொன்னாலும் தெளிவாக வந்திருக்கு, பழங்கால மன்னர்கள் வரலாறுப்பற்றி தெளிவான வரலாறு இல்லை,அல்லது படிக்க கிடைப்பதில்லை என்பது பெருங்குறை,நானும் பல முறை தேடி சலித்துப்போவதுண்டு, இன்னும் கூட நிறைய அறியாத தகவல்கள் உள்ளது,யாரேனும் தீவிரமாக ஆய்வு செய்து வெளிக்கொண்டு வந்தால் தேவலாம்.
நம்ம பதிவுக்கும் சுட்டியளித்தமைக்கு நன்றி!
சங்கப்பாடல்கள் அடிப்படையில் குமரன் எழுதிய தொடர் பற்றி குறிப்பிட்டதை கவனிக்கலையோ, அவரது பதிவையும் இணைத்தால்,பாடல்கள் அடிப்படையில் பாரியை தெரிந்துகொள்ள விரும்புவோருக்கு உதவியாக இருக்கும்.
# பாரியின் மகள்களை மணக்க போர் என்பது கொஞ்சம் பொருந்தாத காரணமாக தெரிகிறது, ஏன் எனில் போரில் வென்றால் உடனே பெண்களைக் கைப்பற்றி மணப்பது என்பதும் அக்கால போர் மறபில் உள்ள ஒன்றே, பாரி இறந்ததும் ,மணமுடித்திருப்பார்கள்,ஆனால் அவர்கள் சில(பல) காலம் மணம் முடிக்க முடியாமல் கபிலர்,அவ்வையார் உடன் அலைந்தார்கள் என்றே வரலாறு உள்ளது. எனவே பெண்களை அடைய போர் புரிந்தார்கள் என்பது முரண்படுகிறது.
//புத்தகங்களிலிருந்தும் இணைய தேடல்களிலிருந்தும் எடிட் செய்து, கம்பைல் செய்து, டைப் அடிப்பது மட்டுமே என்னுடைய பங்களிப்பு... வார்த்தைகள் என்னுடையது அல்ல...//
ஆனாலும் இம்புட்டு நேர்மையா உண்மைய சொல்லப்படாது, கஷ்டப்பட்டு நானே சிந்திந்த்து எழுதினேன்னு சொல்லிக்க வேண்டாமோ, பொழைக்க தெரியாத ஆசாமியா இருக்கிரே அவ்வ்!
பட் ஐ லைக் இட்!
பாரி குறித்த பகிர்வு அருமை...
பிரான்மலை போயிருக்கிறேன்...
நல்ல முயற்சி, பிறகு பொறுமையாக படிக்கிறேன்!
வவ்வால்,
எழுத்துநடை சாண்டில்யன் மாதிரி இருக்குன்னெல்லாம் சொன்னா என்னதான் பண்றது ? அப்ரூவர் ஆகிட வேண்டியது தான்...
குமரன் எழுதிய தொடரை கவனித்தேன்... அது மிக மிக விரிவாக உள்ளது... லிங்க் போடுவது குறித்து யோசிக்கவில்லை...
ஏற்கனவே கொஞ்சம் அறிந்திருந்தாலும் படிக்க சுவாரசியமாகவே இருந்தது. பல தகவல்களை திரட்டி தனி நடையில் வழங்கியதற்கு பாராட்டுக்கள்.
Nice to see
Post a Comment