அன்புள்ள வலைப்பூவிற்கு,
நீண்ட நாட்களுக்குப்பிறகு ஒயின்ஷாப் திறக்கப்படுகிறது. இனி வாராவாரம்
திறக்கப்படும் என்று நம்புவோமாக !
555 பார்த்தேன். படம் வெளிவந்த சமயத்தில் சொல்லி வைத்தாற்போல பல
வலைப்பதிவர்கள் உண்மையில் அப்படி ஒரு காதலி இருந்தாரா ? இருந்தார் என்றால் ஏன்
அந்த உண்மை நாயகனிடம் இருந்து மறைக்கப்படுகிறது ? என்பதை திரையில் பார்த்து
தெரிந்துக்கொள்ளுங்கள் என்று எழுதி முடித்திருந்தார்கள். அதுவே படத்தின் மீது
ஒரு ஆர்வ குறுகுறுப்பை ஏற்படுத்திவிட்டது. விக்கிபீடியாவை நாடி கதையின் ‘ப்ளாட்’
என்னவென்று தெரிந்திருக்கலாம் எனினும் நான் எழுத்து வடிவமாக தெரிந்துக்கொள்ள
விரும்பாமல் காத்திருந்து பார்த்துவிட்டேன். உண்மையாகவே வித்தியாசமான படம்.
க்ளைமாக்ஸில் வழக்கமான தமிழ் சினிமா போல வரும் பாழடைந்த குடோன் சண்டைக்காட்சியை
மட்டும் வேறு மாதிரி செய்திருக்கலாம். கதையை ஏதேனும் உலக சினிமாவிலிருந்து
உருவியிருப்பார்களோ என்ற சந்தேகமும் எழுகிறது. பரத் கதைக்கு தேவையே இல்லையென்றாலும்
சும்மாக்காட்டி பழநி படிக்கட்டு வளர்த்து காட்டியிருக்கிறார். ஹீரோயின் மிர்த்திகா
செதுக்கி வைத்தாற்போல முக அமைப்பு. பிஹைண்ட்வுட்ஸில் பேட்டி பார்த்தேன். கேரள
பிறப்பு. ஆனால், சிக்கலில்லாமல் தமிழ் பேசுகிறார். என்ன, சில சமயங்களில் உயர்திணை
/ அஃறினை குழப்பம் செய்கிறார்.
49O என்பது அரசாங்கத்திற்கும், அனைத்து வேட்பாளர்களுக்கும் காட்டுகிற
நடுவிரல் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். திருவாளர். ஞாநி போன்றவர்கள் அதனை
அப்படித்தான் முன்னிறுத்தினார்கள். ஆனால் அது அப்படியில்லை என்று சமீபத்தில்
விளக்கம் கொடுத்திருக்கிறது தேர்தல் கமிஷன். வாக்குச்சீட்டு முறையில் ஒன்றுக்கு
மேற்பட்ட சின்னத்தின் மீது முத்திரை இருப்பின் அது செல்லாத வாக்கு என்று கணக்கில்
கொள்ளப்படும். 49Oவும் செல்லாத வாக்கைப் போலவே கணக்கில் கொள்ளப்படும் என்று
தெரிகிறது. அதாவது ஒரு தொகுதியில் எல்லா வேட்பாளர்களை விடவும் 49O வாக்குகள்
அதிகமிருந்தாலும் கூட எஞ்சியிருக்கும் வாக்குகளில் அதிகம் பெற்றவர் வென்றவராக
அறிவிக்கப்படும் என்று தேர்தல் கமிஷன் கூறுகிறது. எனவே இது ஜனநாயகத்திற்கு கிடைத்த
மிகப்பெரிய வெற்றி, புரட்சியின் ஆரம்பம் என்றெல்லாம் புளங்காகிதம்
அடையத்தேவையில்லை. வேண்டுமென்றால் மாற்றத்தின் ஒரு சிறிய தொடக்கமாக கருதி அதே
சிறிய அளவில் அகமகிழ்ந்து கொள்ளலாம்.
தி.பி நான் எனக்காக செலவிடும் நேரம் குறைந்துவிட்டது. குறைந்துவிட்டது
என்ற வருத்தத்தை விட முற்றிலுமாக அழிந்துவிடவில்லை என்பதே ஆறுதலாக இருக்கிறது. அரிதாக
எனக்காக கிடைக்கும் நேரத்தை செயலூக்கம் உடையதாக பயன்படுத்த முயற்சி
செய்துக்கொண்டிருக்கிறேன். அதன் ஒரு பகுதியாக என்னுடைய பையில் எப்போதும் ஒரு
புத்தகம் இருக்குமாறு பார்த்துக்கொள்கிறேன். நேரம் கிடைக்கும்போதெல்லாம் இரண்டு
பக்கங்கள் புரட்டுவேன். இப்போது பையிலிருப்பது எப்போதோ கிழக்கு பதிப்பக
தள்ளுபடியில் வாங்கிய ராயர் காப்பி கிளப். இணையத்தில் தமிழ் அடியெடுத்து வைத்த
புதிதில் யாஹூ குரூப்ஸ் புழக்கத்தில் இருந்த காலகட்டத்தில் ராயர் காப்பி கிளப்
என்னும் குழுவில் இரா.முருகன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. படிக்கும்போது இதனை
பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு இணையத்தில் வாசித்திருந்தால் எப்படி
இருந்திருக்கும் என்று மனம் யோசிக்கிறது. கூடவே நான் என்னுடைய கன்னி கணினியை
எப்படியெல்லாம் வீணடித்திருக்கிறேன் என்கிற நினைப்பு தோன்றி கவலையூட்டுகிறது.
2005ம் ஆண்டு எங்கள் வீட்டில் கணினி வாங்கினோம். அப்போது இணைய வசதி
கொடுக்கவில்லை. மொத்தமே 40GB கொள்ளளவு தான் ! அதிலும் முழுக்க கேம்ஸ் நிறைந்து
கிடக்கும். நாளொன்றில் இருபத்தி இரண்டு மணிநேரம் கேம் விளையாடுவதற்கு செலவிடுவேன்.
அப்புறம் சில வருடங்களுக்குப் பின் இணைய வசதி கொடுக்கப்பட்டது. இந்தமுறை கேம்ஸின்
இடத்தை எது நிரப்பியது என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அறைக்குள் யாரேனும்
நுழைந்தால் கணினித்திரை உடனடியாக தெரியாதபடி திருப்பி வைத்திருப்பேன். நாளொரு மேனி
! பொழுதொரு வண்ணம் !! புகைப்படங்கள், காணொளிகள், PDF வடிவில் கதை புத்தகங்கள் என்று
ஒரு கலெக்ஷனே வைத்திருந்தேன். வைத்திருக்கிறேன். 2009க்கு பின்னர் தான் வலைப்பூ
ஆரம்பித்து, பதிவுலக அறிமுகம் எல்லாம். இப்பொழுது யோசித்துப் பார்த்தால் இன்னுமொரு
இரண்டு வருடங்களுக்கு முன்பாவது நமது இணையச்சேவையை தொடங்கி இருக்கலாமோ என்று
தோன்றுகிறது.
சத்யம் திரையரங்கில் படம் போடுவதற்கு முன்பு காட்டிய விளம்பரங்களினால்
தோன்றிய எண்ணங்கள். சென்னையை பொறுத்தவரையில் சத்யம் தான் சிறந்த திரையரங்கம்.
ஆனால் டிக்கெட் விலையை பொறுத்தவரையில் பெரும்பாலும் அரசு நிர்ணயித்த தொகையையே
வாங்குகிறார்கள். சில புறநகர் திரையரங்குகளில் மட்டும் மாஸ் ஹீரோக்கள் படங்கள்
வெளிவரும்போது அதிக விலைக்கு டிக்கெட் விற்று போங்காட்டம் ஆடுகிறார்கள். எனவே
திரையரங்கை பொறுத்தவரையில் மேட்டுக்குடி, நடுத்தர வர்க்கம் என்ற பாகுபாடெல்லாம்
இல்லை. எதற்காக இதையெல்லாம் சொல்கிறேன் என்றால் சத்யம் திரையரங்கில் படம்
பார்ப்பவர்கள் அனைவரும் கோடீஸ்வரர்கள் அல்ல. ஆனால் அங்கே காட்டப்படும்
விளம்பரங்களை பார்க்கும்போது ஏதோ தமிழகத்தில் பாலும் தேனும் ஓடிக்கொண்டிருப்பது
போலவும், நாமெல்லாம் நிறைய பணத்தை கையில் வைத்துக்கொண்டு அதை வைத்து என்ன
செய்வதென்று திண்டாடுவது போலவும் இருக்கிறது. தங்கமுங்கறான், வைரமுங்கறான் அய்யா
அதுகூட பரவாயில்லை மருத்துவமனைக்கெல்லாம் விளம்பரம் வருகிறது. எப்படி மருத்துவமனை
விளம்பரம் பார்த்து ஈர்க்கப்பட்டுவிட்டால் உடனடியாக ஒரு மாரடைப்பை
வரவழைத்துக்கொண்டு அங்கே போய் சேர்ந்து விடுவார்களோ என்னவோ ? மேற்படி விளம்பரங்களை
பார்க்கும்போது இரண்டு விஷயங்கள் புரிகின்றன. ஒன்று, பணம் படைத்தவர்கள் அதனை
தங்கம் வாங்கியும், அபார்ட்மெண்ட் வாங்கியும் முதலீடு செய்கிறார்கள். இரண்டு, பணம்
அதிகம் சேர்ந்துவிட்டாலே நோய்களும் வந்து சேர்ந்துக்கொள்கின்றன.
இமான் இசை, ஷ்ரேயா
கோஷல் குரல், பிந்து மாதவி கண்கள் மூன்றும் ஒன்றுகூடி
அடிவயிற்றில் ஒரு பந்தினை உருட்டுகிறது !
பாடலை கேட்டுக்கொண்டே பார்க்கும்போது
இரண்டு விஷயங்கள் புலப்படுகின்றன :-
1. ஷ்ரேயா கோஷல் நன்றாக தமிழ்
உச்சரிக்க பழகிக்கொண்டார்.
2. பிந்து மாதவியை 'சுமார்
மூஞ்சி' என்று எழுதிய கைகளை கருக்கிவிட வேண்டும்.
சின்ன வயதில் நஸ்ஸுக்குட்டி !
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
11 comments:
ஷட்டர் ஐலண்ட் கதையை உல்ட்டா செய்தால் 555 :-))
#டேசி பாபா பார்த்தே கண்ணு வீங்கி போயிருக்குமே :-))
#ஷட்டர் ஐலண்ட் முன்னரே ஒரு படம் உண்டு, நாஸி படை ,இங்கிலாந்து வீரனைப்பிடிச்சு ஜெர்மனியில் வச்சு ,இதான் இங்கிலாந்து, விபத்துல கோமாவில், முன்ன நடந்தது மற்ந்துட்டபோட்ட பிளா, னை சொல்லு, என டிராமா போடும். படம் பேர் மறாந்து போஸ்சு.
49 'O ' என்பதே ஜனநாயகக் கடமைப் படி வாக்களிப்பேன்.. ஆனால் என் வாக்கு எவருக்கும் கிடையாது என்பதுதான். அதுக்கு ஓட்டுச்சாவடிக்கு போகாமலே இருந்து விடலாமே என்று கேட்டால் இன்னொரு வசதி இருக்கு. எல்லா வேட்பாளர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு யாருக்குமே வாக்களிக்காமல் 49 'O ' பட்டனை அழுத்திவிட்டு வரலாம்... இதெல்லாம் ஞாநி போன்ற நடுநிலை நக்கிகளுக்கு வரப்பிரசாதம்.. :-))))))
நஸ்ரியா வீடியோ செம..!
நஸ்ரியா சாங் சூப்பர்..எங்கயா இதெல்லாம் தேடிப்பிடிக்கிறீங்க...
எங்க இந்த ஆவிப்பயல காணோம்..நஸ்ரியானா இன்னேரம் வந்து இருப்பானே...
555 படத்திற்கு பாழடைந்த குடோன் மற்றும் பழநி படிக்கட்டு தேவையே இல்லைதான்
//தி.பி நான் எனக்காக செலவிடும் நேரம் குறைந்துவிட்டது. குறைந்துவிட்டது என்ற வருத்தத்தை விட முற்றிலுமாக அழிந்துவிடவில்லை என்பதே ஆறுதலாக இருக்கிறது.// இப்படிச் சொன்னால் எப்படி, பின் வரும் தலைமுறை திருமணத்தைக் கண்டு அஞ்சாதோ?
சத்யம் திரையரங்கில் நிறைய விசயங்கள் பிடித்தாலும், பிடிக்காதது ஒன்று உள்ளது. எவளோ நல்ல படமா இருந்தாலும் கைத்தட்டல் மட்டும் தான், விசில் அடித்து கலாட்டா செய்யும் கூட்டம் அங்கு மிகக் குறைவு .
தல சூப்பர்யா ...
49 ஓ பற்றி தெளிவாக அறிந்து கொண்டேன் ...
பிந்து கண்ணுக்கே விழுந்து கெடக்கலாம் .. இப்பதான் தெரியுது சில்க்குக்கு அம்புட்டு கூட்டம் கூடுச்சின்ன்னு /// தொடரவும் பிரபா
//மேற்படி விளம்பரங்களை பார்க்கும்போது இரண்டு விஷயங்கள் புரிகின்றன//
.//பாடலை கேட்டுக்கொண்டே பார்க்கும்போது இரண்டு விஷயங்கள் புலப்படுகின்றன// :-
ஒயின் ஷாப்பில் இருந்து யோசிப்பதால் எல்லாம் இரண்டிரண்டாகத் தெரிகிறதா?
நல்லா இருக்கு லே....வாழ்த்துக்கள்....நல்லா இரு.....
நல்லா இருந்தது படிக்க படிக்க
உங்க எழுத்துக்கு புதிய ரசிகன் நான். நன்றி for the wit and pun. வாழ்க வளமுடன் bro :)
Post a Comment