12 November 2013

அப்ரைசல் பற்றி கபிலர் !


அன்புள்ள வலைப்பூவிற்கு,

சங்கக்கால மன்னர்கள் அள்ளிக்கொடுப்பதில் கலியுக கங்காணிகளுக்கு நேரெதிர் மனோபாவம் கொண்டவர்கள். யாராவது தேடி வந்து பூ மாரி தென் மாரி என்று பாடிவிட்டால் போதும், பொற்காசுகளை அள்ளி வீசியிருக்கிறார்கள். சங்கக்கால மன்னர்களுள் யார் சிறந்தவர் என்றெல்லாம் சங்க இலக்கியங்களை வைத்து நாம் எந்தவொரு முடிவுக்கும் வந்து விட முடியாது. வரலாறு மிக முக்கியம் அமைச்சரே என ஐடியா கொடுக்கும் மங்குனி அமைச்சர் வாய்த்தவர்கள் உப்புமா புலவர்களை வைத்தேனும் பாடல்களை பாடி வைத்திருக்கலாம். உண்மையில் நல்லாட்சி புரிந்த மன்னர்களுக்கு ஆள் செட்டப் செய்து பாடல் இயற்றுவதற்கெல்லாம் நேரம் இல்லாமல் இருந்திருக்கலாம். எல்லாம் ‘கலாம்’ தான். உண்மை என்னவென்று யாருக்குத் தெரியும் ?

மலையமான் திருமுடிக்காரி. அவரைப் பற்றி ஓரளவுக்கு விரிவாக ஏற்கனவே பார்த்திருந்தோம். ஒரு உபரித்தகவல். காரி கொடை குணத்தில் சிறந்தவன் என்று தெரியும். எவ்வளவு சிறந்தவன் என்றால் போற்றிப் பாடி பரிசில் பெற வரும் புலவர்களை சீர்த்தூக்கி பாராமல் எல்லோருக்கும் சகட்டுமேனிக்கு கொடை அளிப்பவன். அதாவது ஃபெர்பாமன்ஸ் பேஸ்ட் அப்ரைசல் கிடையாது. கற்றுத்தேர்ந்த புலவரானாலும் கற்றுக்குட்டி புலவரானாலும் ஒரே வகையான பரிசில் தான். இது காரியுடன் கூடவே சுற்றிய கபிலர் போன்ற திறமைசாலிக்கு உறுத்தியிருக்க வேண்டும். தன்னுடைய அப்ஜெக்ஷனை புறநானூற்றில் பதிந்திருக்கிறார்.

ஒரு திசை ஒருவனை உள்ளி, நாற்றிசைப்
பலரும் வருவர், பரிசில் மாக்கள்;
வரிசை அறிதலோ அரிதே; பெரிதும்
ஈதல் எளிதே, மாவண் தோன்றல்;
அது நற்கு அறிந்தனை யாயின்,
பொது நோக்கு ஒழிமதி, புலவர் மாட்டே!

(புறம் – 121)

அதாவது, “மிகுந்த வண்மை குணம்கொண்ட தலைவனே...!  வள்ளியோன் ஒருவன் இருந்தால், நான்கு பக்கங்களிலிருந்தும் மக்கள் பலர் பரிசிலை நாடி அவனிடம் வருவார்கள். அவர்களின் தராதரத்தை அறிதல் மிகவும் அரிது. அவர்கட்குப் பொருள் ஈதல் மிகவும் எளிது. நீ அவ்வரிசையறிதலை நன்கு அறிந்தாய் ஆயின், புலவர்களிடம் வரிசை கருதாது ஒரு தரமாகப் பார்ப்பதை விட்டுவிடுக...” என்கிறார். சுருங்கச் சொல்வதென்றால், “பாத்திரமறிந்து பிச்சையிடு” என்கிறார்.

கேட்டாரா காரி ? புலவர் கூறியதை அவன் மனம் சிறிதும் கொள்ளாமல் மடமையிலேயே இருந்தது என்கிறது வரலாறு.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

10 comments:

Yaathoramani.blogspot.com said...

இதுவரை அறியாத அற்புதமான கவிதை
பதிவாக்கி அறியத் தந்தமைக்கு
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

tha.ma 2

Manimaran said...


//ஃபெர்பாமன்ஸ் பேஸ்டு அப்ரைசல்// ஹி..ஹி நம்ம ஊர் சட்டமன்றம் ஞாபகம் வருகிறது.

அப்ரைசல் எப்படி கொடுக்கணும்னு பேஸ்புக் ஸ்டேடஸ் மாதிரி கபிலர் எழுதியிருக்கார். :-))

ஜீவன் சுப்பு said...

வண்மம் & வள்ளியோன் ... அப்டின்னா ?

//ஒரு தரமாகப் பார்ப்பதை விட்டுவிடுக...//

ஒரே தரமாகப் பார்ப்பதைன்னு வருமா ...?

Philosophy Prabhakaran said...

ஜீவன் சுப்பு,

வண்மை, வள்ளியோன் இரண்டிற்கும் ஒரே பொருள் தான் - வள்ளல் தன்மை


// ஒரே தரமாகப் பார்ப்பதைன்னு வருமா ...? //

ஆமாம்...

கோகுல் said...

பாத்திரம் அறியாமலே போட்டுட்டாரோ.இப்ப இருக்கும் பல நிறுவனங்களின் அப்ரைசல் முறைகளுக்கு முன்னோடியா இருந்திருக்கார்.ம்ம்ம்

Ponmahes said...

அருமை....வாழ்த்துக்கள்...தம்பி...

Dino LA said...

அருமையான கவிதை

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

காரியின் மடமை என்று கூற முடியாது.எல்லாத் துறைகளிலும் சராசரிகளே அதிகம். பரிசு கொடுத்தலில் பாரபட்சம் கட்டி இருந்தால் காரி இத்தனை புகழ் பெற்றிருக்க முடியாது.
அப்படிப் பாடியதற்கு பொறாமையும் காரணமாக இருக்கலாம்.
அது சரி!இதை நுணுக்கமாக கண்டு பிடித்தது எப்படி? சங்க இலக்கியங்களில் ஆய்வு ஏத்னும் செய்ய உத்தேசமா?
பாராட்டுக்கள்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நான் கருத்தில் "காட்டி" என்பதற்கு பதில் கட்டி என்று வந்து விட்டது.திருத்தி வாசிக்கவும் (எல்லாம் ஜெமோவின் ஆசைப்படி தங்க்லீஷில் டைப் செய்ததால் ஏற்பட்ட விளைவு)