அன்புள்ள வலைப்பூவிற்கு,
பீட்ஸா பாகம் 2 என்ற பெயருக்கு பின்னாலிருக்கும் அரசியலை சில மாதங்களுக்கு
முன்பாகவே கேபிள் சங்கர் மூலமாக அறிந்துக்கொள்ள முடிந்தது. வில்லா படத்திற்கு
பீட்ஸாவின் பெயரை சூட்டுவதை கார்த்திக் & தீபன் இருவருமே ஏற்றுக்கொள்ள
மாட்டார்கள். எந்தவொரு நல்ல படைப்பாளியாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால்
வியாபாரி...? அதுதான் நடந்திருக்கிறது. படத்தின் ட்ரைலரில் “இது சீக்வலா...?” என்று
ஒரு கதாபாத்திரம் கேட்க, “இல்ல சார், டோட்டலா வேற கதை” என்று கதாநாயகன் வாயிலாக
மிக நேர்மையாக ஒப்புக்கொள்கிறார் இயக்குநர். அப்போதே வில்லாவில் ஏதோ விஷயம்
இருக்கிறது என்று நம்பிக்கை பிறந்துவிட்டது. இருப்பினும், வில்லா பார்க்கப் போகிறவர்கள் இரண்டு
விஷயங்களை மிகவும் கவனமாக மனதில் கொள்ள வேண்டும்.
1. பீட்ஸா என்பதை சுத்தமாக மறந்துவிடுங்கள். யாராவது பீட்ஸா என்றால்
என்னவென்று கேட்டால் கூட சட்னியும், சாம்பாரும் தொட்டு சாப்பிடக்கூடிய வஸ்து என்று
சொல்லுமளவிற்கு மறந்துவிடுங்கள்.
2. எல்லா ஹாரர், ஃபேண்டஸி படங்களுக்கும் பொதுவானது. உங்களுக்கு பகுத்தறிவு
என்று ஏதாவது இருந்தால் தயவு செய்து அதனை இரண்டு மணிநேரங்களுக்கு செயலிழக்கச்
செய்துவிடுங்கள்.
அசோக் தொழில் நட்டம், தந்தையின் உயரிழப்பு ஆகியவற்றைக்
கடந்து பாண்டிச்சேரியில் தந்தையின் பெயரிலிருக்கும் ஒரு வில்லாவிற்கு அதனை
விற்கும் நோக்கத்துடன் செல்கிறான். அசோக்குடைய காதலி சஞ்சிதாவிற்கு வில்லா மிகவும்
பிடித்துவிடுகிறது. ஒரு கட்டத்தில் அசோக் சஞ்சிதாவின் முடிவுடன் சமாதானமாக
இருக்கும்போது வில்லாவில் ஒரு ரகசிய அறையை கண்டுபிடிக்கிறார். அங்கிருக்கும்
ஓவியங்களில் ஏற்கனவே நடைபெற்ற சம்பவங்களும், நடக்க இருக்கிற சம்பவங்களும் காணப்படுகின்றன.
அதன்பிறகு நடப்பவற்றை பார்வையாளர்களின் கவனத்திற்கே விட்டுவிடுகிறேன்.
முதலில், ஹாரர் என்றால் என்ன என்பதை கொஞ்சம் கவனித்துவிடலாம். ஹாரர்
என்ற சொல்லுக்கு அதீத பயம் என்று பொருள். ஒரு ஹாரர் படம் என்பது பார்வையாளர்களுக்கு
பயமூட்டுவதாக அமைய வேண்டும். ஆனால் பொதுவாகவே, வேறு சில ஜானர்களையும் ஹாரர்
படங்களோடு சேர்த்துவிடும் பழக்கம் விக்கிபீடியா காலம் தொட்டே இருந்துவருகிறது. இது
ஒரு புறமிருக்கட்டும் படத்தைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.
தமிழ் சினிமாவில் ஹாரர் படங்கள் என்றாலே வேலைக்காரி விநோதமாக
சிரிப்பது, வாட்ச்மேன் முறைத்து பார்ப்பது, அப்புறம் ரஜினிகாந்த் சந்திரமுகி
படத்தில் சொல்வாரே அந்த மாதிரியெல்லாம் நடக்கும். வில்லா அத்தகைய படங்களிலிருந்து
சற்று விலகியே பயணிக்கிறது. சமீபத்தில் ஒரு படத்தினை பற்றி
பேசிக்கொண்டிருக்கும்போது அந்த படம் குறுக்கெழுத்து புதிரை நிரப்புவது போல
சுவாரஸ்யமானது என்று நண்பர் ஒருவர் விளக்கினார். வில்லாவும் கிட்டத்தட்ட அதுபோல
தான். படத்தின் துவக்கத்திலிருந்தே ஆங்காங்கே நமக்கான ஹிண்ட்ஸ்
ஒளித்துவைக்கப்பட்டிருக்கிறது. அதனை புரிந்துக்கொள்ளும்போது பரவசமடைகிறோம். கதை
மிகவும் மெதுவாகவே நகர்கிறது. ஆனால் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்திக்கொண்டே
நகர்கிறது. அதுதானே கிக் ! ரகசிய அறையில் உள்ள ஓவியங்களை கதாநாயகன்
கண்டுபிடித்ததும் நம்மை நிமிர்ந்து உட்காரச் செய்கிறது. சரியாக இடைவேளைக்கு முன்பு
ஒரு அதிரடியை காட்ட வேண்டுமென்பதற்காக கிராபிக்ஸில் பொருட்கள் எல்லாம் விழுவதும்,
பறப்பதுமாக காட்டுகிறார்கள். அங்குதான் துவங்குகிறது வினை, படத்திற்கு !
தமிழ் சினிமா ஹாரர் படங்களில் இன்னொரு பொதுவான விஷயம் உள்ளது.
ஆன்மிகம், அறிவியல் இரண்டையும் பெனஞ்சு அடிச்சு ஆன்மிகமும் அறிவியல் தான் தெரியுமோ
? குனிஞ்சு நிமிந்து கோலம் போட்டா பூர்வாங்க உட்கட்டாசனா என்றெல்லாம் க்ளாஸ்
எடுக்க துவங்கிவிடுவார்கள். அதுபோக யாராவது ஒரு சாமியாரை வைத்துக்கொண்டு கபடியெல்லாம்
ஆடுவார்கள். சமகாலத்தில் சாமியாரை எல்லாம் காட்டினால் போங்கடா நொன்னைகளா என்று
சொல்லிவிடுவார்கள் என்பதால் ஃபிரெஞ்சு சூனியக்காரன், witchcraft என்றெல்லாம்
பாலிஷ்டாக சொல்லி அங்கிருந்து பில்லி, சூனியம், மாந்திரீகம் என்று படிப்படியாக
இறங்கி வருகிறார்கள். அதாவது விடுதலைக்கு முன்பு பாண்டிச்சேரியின் கட்டுப்பாட்டில்
இருந்தபோது நரபலியெல்லாம் கொடுக்கக்கூடிய ஒரு கொடூரமான ஃபிரெஞ்சு சூனியக்காரன்
கட்டிய வில்லா அது. அதனால் அந்த வீடு முழுக்க நெகடிவ் சக்தி நிறைந்து கிடக்கிறது.
நெகடிவ் சக்திகளை அழிக்கும் முயற்சியும் தோல்வியில் முடிகிறது. அதன்பிறகு வருவது
கிளைமேக்ஸ்.
ஹீரோ அசோக் செல்வனை பார்த்துவிட்டு நிறைய பேரு யாரு ? என்றே
கேட்கிறார்கள். சூது கவ்வும் படத்தில் பொட்டி தட்டுபவராக நடித்தாரே என்று சொல்லி
விளக்க வேண்டியிருக்கிறது. அதிகம் நடிக்க வாய்ப்பில்லாத கதாபாத்திரம்.
உறுத்தலில்லாமல் செய்திருக்கிறார். அவதார் முக நாயகி சஞ்சிதாவை மறுபடி பார்க்க
வேண்டியிருக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை. அவருக்கு இதுவே கடைசி படமாக அமையக்
கடவது.
ஒரு கதாபாத்திரம் பெரும்பாலும் தனிமையில் இருப்பதாக காட்டும்போது
பார்வையாளர்களுக்கு கதை சொல்ல ஒரு மீடியம் தேவைப்படுகிறது. அதற்கு அந்த
கதாபாத்திரம் யாரிடமாவது போன் பேசுவது போலவோ, டைரி எழுதுவது போலவோ வைப்பார்கள்.
அது மாதிரியோ என்னவோ ஒரு ஹீரோ நண்பன் கதாபாத்திரம் வைத்திருக்கிறார்கள். ஏற்கனவே
7G ரெயின்போ காலணி உட்பட சில படங்களில் நடித்தவர். பெயர் ராஜேஷ் என்று
நினைக்கிறேன். படத்தை தன் பங்குக்கு எவ்வளவு கெடுக்க முடியுமோ அவ்வளவு
கெடுத்திருக்கிறார். அப்புறம் நாசர், சில குறும்பட முகங்கள், ஒரே ஒரு காட்சிக்காக
எஸ்.ஜே.சூர்யா !
இயக்குநர் தீபன் தமிழ் சினிமாவிற்கு மற்றுமொரு நல்வரவு. சில தகவல்களை
மேலோட்டமாக தூவிவிட்டு விருப்பமிருந்தால் நீயே தேடி தெரிந்துக்கொள் என்று
பார்வையாளர்களின் கையில் விட்டுவிடுவது இவருடைய சிறப்பம்சம் என்று நினைக்கிறேன்.
கிட்டத்தட்ட முக்கால்வாசி படத்தை நன்றாகவே கடத்தியிருக்கிறார் அதன் பிறகு தான்
தடுமாற்றங்கள் துவங்குகின்றன. குறிப்பாக அடுத்த பாகத்திற்கு எப்படி தொடுப்பு
கொடுப்பது என்று யோசித்து யோசித்தே அதனை மட்டும் திறம்படச் செய்துவிட்டு இந்த
பாகத்தின் முடிவை கோட்டை விட்டிருக்கிறார். அப்புறம், சஞ்சிதாவின் கேரக்டர் என்ன
மாதிரியானது என்று சரிவர சொல்லப்படவில்லை. அவருக்கு அந்த வில்லா மீதும் அதன்
மர்மங்கள் மீதும் ஆசையா அல்லது பணத்தாசையா அல்லது உண்மையில் அசோக்கை காதலிக்கிறாரா
? என்று கடைசி வரை புரியவே இல்லை.
இறுதியாக இரண்டு விஷயங்கள். ஒன்று, பொதுவாக, ஹாரர் படங்களில் ஒரு
முடிச்சு இருக்கும், பின்பு அந்த முடிச்சு அவிழ்க்கப்பட்டு சிக்கல்கள் துவங்கும்,
இறுதியில் அந்த சிக்கல்கள் தீர்க்கப்படும் அல்லது தீர்க்கப்பட்டது போல தோன்றி
அடுத்த பாகத்திற்கான தொடுப்பு வைத்து முடிக்கப்படும். ஆனால், வில்லாவில் இறுதிவரை
தீர்வு என்பதே இல்லாமலிருப்பது தான் மிகப்பெரிய பலவீனம். ஒருவேளை அதுதான் மாற்று
சிந்தனை என்று இயக்குநர் முடிவெடுத்து விட்டாரோ என்னவோ...? அல்லது விஸ்வரூபம் போல
அடுத்த பாகத்தையும் சேர்த்துதான் ஒரு கதையாக பார்க்க முடியுமோ என்னவோ...?
இரண்டு, படத்தின் எந்த காட்சிகளும் பயமூட்டுவதாக இல்லை. முதல்
பத்தியில் படம் பார்ப்பதற்கு முன் இரண்டு விஷயங்களை கவனத்தில் கொள்ள வலியுறுத்தினேன்
அல்லவா...? அதனோடு இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள். வில்லா ஒரு ஹாரர் படம் கிடையாது.
வேண்டுமென்றால், மிஸ்ட்ரி வகையறாவில் வைக்கலாம். அந்த எண்ணத்தோடு வில்லா’வை
பார்த்தால் ரசிக்கலாம் ஒரு வித்தியாசமான முயற்சி என்பதற்காக வரவேற்கலாம்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
7 comments:
வித்தியாசமாக இருக்கும் போல இருக்கே ?
நடந்த சம்பவங்களுக்கெல்லாம் பீட்சாவில் செம ட்விஸ்ட் இருக்கும்..இங்கே அது மிஸ்ஸிங்.
கிளைமாக்ஸில் இன்னும் ரெண்டு ஓவியங்கள் என்று ட்விஸ்ட் வைத்து, அதற்ற்கு அடுத்த 5 நிமிடத்தில் ட்விஸ்ட் என்பது ஓகே. ஆனால் மெயின் கதையில் ட்விஸ்ட்டே இல்லாமல் இருக்கிற மாதிரி தோணிவிட்டது.
ஆனால், நிச்சயம் ஒரு நல்ல இயக்குநர் என்று தீபக் நிரூபித்திருக்கிறார். அடுத்த படத்தில் பார்ப்போம்.
பிரபா ,
புதுசா ஒரு தம்பதி,(அ) இளஞ்சோடி அல்லது ஒரு குருப்பு(ஆலிவுட் படம்னா கரிக்டா கில்மா செய்றாப்போ பேய் என்ட்ரி கொடுக்கும் ஹி...ஹி) ஒரு வீட்டுக்கு போகுதுனாலே அது "பூத் பங்க்ளா" தான்னு டெம்ப்ளேட் மட்டும் மாறவே மாறாதா அவ்வ்!
யாவரும் நலம் என்ற படமும், ஆனந்தபுரத்துவீடு படமும் பார்த்தால் ,வில்லா படம் பார்க்கவே வேண்டாம் போல இருக்கே அவ்வ்!
வவ்வால்,
ஆனந்தபுரத்துவீடு ஒரு காமெடி படம்... அதையெல்லாம் இதுகூட ஒப்பிடக்கூடாது...
urban legend என்ற பழைய இங்கிலீஷ் படம் தமிழில் அதை சுட்டு விசில்னு எடுத்தாங்க ,ஒரு புக்குல இருக்க கதை போலவே நிஜ சம்பவம் நடக்கும் அதுக்கு ஒரு ஃப்ளாஷ் பேக்னு, அநேகமா அந்த கதைய உல்டா செய்து தான் வில்லா-2 எடுத்திருக்கனும், கூடவே டெம்ப்ளேட்டா ..பழைய வீட்டுக்கு புதுசா போறவங்களுக்கு பேய் அனுபவம் :-))
# அனந்துபுரத்து வீடு ..இந்தில அமிதாப் நடிச்ச பூத்நாத் படத்தோட உல்டா ...பாசக்கார பேய் தாத்தா அமிதாப் அவ்வ்!
எலே எலே மருது
பிரபா எந்த ஊரு எருது??
பார்க்கலாம்....
Post a Comment