20 November 2013

Nuances of யாருக்கு யாரோ ஸ்டெப்னி !

அன்புள்ள வலைப்பூவிற்கு,

யாருக்கு யாரோ ஸ்டெப்னி என்கிற உன்னதமான சினிமா 2007ம் ஆண்டு வெளிவந்தபோது அதனை ரசிகர்கள் அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. திரை மொழியை மிகச்சரியாக புரிந்துக்கொண்டு காட்சிகளின் மூலம் பல தகவல்களையும் சிந்தனைகளையும் குறியீடுகளாக உணர்த்திய அத்திரைப்படத்தை தமிழர்களால் எளிதாக புரிந்துக்கொள்ள முடியவில்லை என்று நினைக்கிறேன். அவைகளை விளக்கும் பொருட்டு இதோ என்னுடைய கோனாரு உரை !

- முதலில் படத்தின் தலைப்பு. படத்தின் கதைக்கருவான முக்கோண காதலை குறிக்கும்படி ‘யாருக்கு யாரோ’ என்ற பதத்தையும், காருக்கு பின்னால் உள்ள ஸ்டெப்னி என்பதோடு சேர்த்து மிக பொருத்தமாக ‘யாருக்கு யாரோ ஸ்டெப்னி ?’ என்று சூட்டியிருக்கிறார்கள். தலைப்பில் ஸ்டெப்னி என்ற சொல் கதை நாயகிகளை குறிக்கிறது. பெண்களை ஸ்டெப்னி என்று குறிப்பிட்டு இழிவு படுத்தியிருப்பதாக எண்ணுதல் தவறு. கதைப்படி நாயகன் டேவிட்டின் கனவு கார் தொழிற்சாலை அமைப்பது. அவ்வாறாக கார் என்பது டேவிட்டின் வாழ்க்கையோடு ஒன்றியிருக்கிறது. காருக்கு பிற்பகுதியில் ஸ்டெப்னி இருக்கிறது. அதுபோல டேவிட் என்ற மனிதனுக்கு பின்னால், அவனுடைய வெற்றிக்கு பின்னால் இருக்கக்கூடிய பெண்ணை ‘ஸ்டெப்னி’ என்று சுட்டிக்காட்டுகிறார்.

- அடுத்தது படத்தலைப்பு திரையில் தோன்றிய விதம். வெகுஜன சினிமாக்களில் தோன்றுவது போல ரகளையான கிராபிக்ஸ் எல்லாம் இல்லை. மிக ரம்மியமான பின்னணி இசையினூடே தலைப்பு தோன்றுகிறது. முக்கியமாக கவனிக்க வேண்டியது, ‘யாருக்கு யாரோ ஸ்டெப்னி’ என்ற தலைப்பு திரையில் அலைபாய்ந்தபடி தோன்றுகிறது. அது டேவிட்டுடைய மனது தீபா, ஜோதி காதல்களுக்கிடையே அலைபாய்வதற்கான குறியீடு. தலைப்பில் ‘ஸ்டெப்னி’ என்ற சொல் ஆங்கிலத்தில் ‘STEPNEE’ என்று காட்டப்படுகிறது. உண்மையில் அந்த வார்த்தையுடைய ஸ்பெல்லிங் ‘STEPNEY’ என்று இயக்குநருக்கு தெரியாமலா இருந்திருக்கும். டேவிட் வாழ்க்கையின் வெற்றிப்படிக்கட்டுகளின் STEP NEE என்பதனால் அப்படி காட்டியிருக்கிறார்.

- கதையின் நாயகன் டேவிட்டின் அறிமுகக்காட்சி. தீபாவின் கழுத்துச்சங்கிலியை சமூக விரோதிகள் பறித்துக்கொண்டு பைக்கில் பறக்கின்றனர். அந்த நேரம் பார்த்து அங்கே டேவிட் வருகிறார். கீழே விழுந்து கிடக்கும் தீபாவை பொருட்படுத்தாமல் திருடர்களை துரத்துகிறார். இக்காட்சியின் மூலம் டேவிட் உணர்வுப்பூர்வமாக சிந்திப்பதை காட்டிலும் தர்க்கரீதியாக சிந்திப்பதை விரும்புபவன் என்று ரசிகர்கள் மனதில் பதியப்படுகிறது. கூடவே, அவனுடைய அபார நினைவாற்றல், துறை சார்ந்த அறிவு, இசை நாட்டம், கொடை பண்பு போன்றவற்றையும் நேர விரயம் செய்யாமல் எளிமையாக சொல்லிவிடுகிறார் இயக்குநர்.

- படம் முழுக்க கருப்பு நிறத்தை அறிவின் குறியீடாகவும், சிகப்பு நிறத்தை அன்பின் குறியீடாகவும் பயன்படுத்தியுள்ளார் இயக்குநர். டேவிட் கருப்பு நிற ஸ்கூட்டியையும், தீபா சிகப்பு நிற ஸ்கூட்டியையும் பயன்படுத்துகிறார். அதே சமயம் டேவிட் தீபாவின் மீதும், செயின் திருடர்கள் மீதும் அன்பு செலுத்தும் காட்சிகளில் சிகப்பு நிற சட்டை அணிந்து தோன்றுகிறார். தீபாவும் அன்பை வலியுறுத்தும் பாடலோடு தான் அறிமுகமாகிறார். முக்கியமான காட்சிகள் அனைத்திலும் சிகப்பு நிற உடையணிந்து வருகிறார். மற்றொரு நாயகியான மஞ்சு, கனடாவிலிருந்து சிகப்பு நிற காரில் வந்து இறங்குகிறார். டேவிட்டும் மஞ்சுவும் உணர்வுகளால் சங்கமிக்கும் காட்சியில் இருவரும் சிகப்பு நிற உடை அணிந்துள்ளனர்.

- என்னதான் கதை கார், காதல் சம்பந்தப்பட்டதாக இருந்தாலும் அதன் கரு மதநல்லிணக்கத்தை உணர்த்தும்விதமாக கட்டமைக்கப்பட்டுள்ளது. ‘யாருக்கு யாரோ’ என்ற தலைப்பினைக் கூட யாருக்கு யாரோ கடவுளாக இருந்தாலும் எல்லோரும் ஒற்றுமையாக வாழ வேண்டுமென்று குறிப்பதாக புரிந்துக்கொள்ளலாம். ஹிந்துப்பெண் தீபா கிறிஸ்தவ துதிப்பாடலை பாடுவதாக படம் துவங்குகிறது. மற்றொரு காட்சியில் கிறிஸ்தவரான டேவிட்டை பார்த்து ‘கண்ணா, நீ எங்கே...?’ என்று தீபா பாடுகிறார். டேவிட் அணிந்துள்ள சிலுவை குறியீடு கொண்ட சங்கிலியை தீபாவுக்கு கொடுக்கிறார். இந்த சிலுவை டாலர் தான் படத்தின் உயிர்நாடி...! எப்படி என்பதை பின்னால் பார்க்கலாம்.

- பாடல்கள், அதில் நடிகர் / நடிகை வெளிப்படுத்தும் நடனம் அருமையானதொரு வாழ்க்கை தத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது. வாழ்க்கையில் மனிதன் வெற்றி பெற்றுவிட்டால் ஓவராக ஆட்டம் போடக்கூடாது அல்லவா ? அதை உணர்த்தும்பொருட்டு அளவாக ஆடுகிறார் டேவிட். வாழ்க்கை எத்தனை எளிமையானது என்பதை உணர்த்துவதற்காகவே டேவிட் மிகவும் எளிமையான நடன அசைவுகளை செய்து காட்டுகிறார் என்று புரிந்துக்கொள்ளலாம். அதனை உறுதிப்படுத்தும் விதத்தில் பாடல்கள் அனைத்தும் நம் மன-உளைச்சலை போக்கி ஆறுதல் தருவதாக அமைந்துள்ளது.

- ஒரு காட்சியில் கடற்கரையில் வைத்து தீபாவும், டேவிட்டும் சந்திக்கிறார்கள். டேவிட் தன்னுடைய தொழிற்சாலையை துவங்க கடன் கிடைக்க இருப்பதாக சொல்கிறான். அதைக் கேட்ட தீபா மகிழ்ச்சியில் துள்ளிகுதித்து ஓடுகிறாள். டேவிட் அவளை பின்தொடர்ந்து ஓடுகிறாள். அப்போது அவனுக்கு இடையூறாக ஒரு கட்டுமரம் எதிர்ப்படுகிறது. அதாவது தீபா – டேவிட் காதலுக்கு ஏதோவொரு இடையூறு இருக்கிறது என்ற எச்சரிக்கை ஊட்டப்படுகிறது. இரண்டாவது பாதியில் மஞ்சு கதைக்குள் நுழைந்து தீபா – டேவிட் காதலுக்கு இடையூறு செய்வதன் மூலம் அது ஊர்ஜிதமாகிறது.

- ‘ராசாத்தி என் ஆசை ராசாத்தி’ என்றொரு பாடல். காதலிக்கும்போது பொங்கியெழும் உணர்ச்சிகளை வெளிக்காட்டும் விதமாக துள்ளிசையை வழங்கியிருக்கிறார் இசையமைப்பாளர் ஜோ ஸ்டேன்லி. பாடலில் ஒவ்வொரு முறை ‘ராசாத்தி’ என்ற வார்த்தையை உபயோகிக்கும் போதும் வெவ்வேறு தொனியில் வெவ்வேறு உணர்ச்சிகளை பாடகர் வெளிப்படுத்துவதை உன்னிப்பாக கவனித்து கேட்டால் உணர முடியும். பாடலின் இடையிடையே வண்ண வண்ண உடைகளணிந்து தீபாவும் டேவிட்டும் ஓடுவதாக காட்சியாக்கப்பட்டுள்ளது. அது அவர்களுடைய காதல் வாழ்க்கை நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமாக ஓடுவதற்கான குறியீடு.

- கார் தொழிற்சாலைக்கு கடன் வழங்கும்பொருட்டு ஃபைனான்சியர் வருகிறார். டேவிட்டும் நண்பர்களும் ஆளுயுர மாலையோடு அவரை வரவேற்கின்றனர். ஃபைனான்சியர் வெண்ணிற ஆடை மூர்த்தி தனக்கே உரிய பாணியில் டேவிட்டின் அசையும் சொத்துகள், அசையா சொத்துகள் பற்றி விசாரிக்கிறார். அவருக்கு முழு திருப்தியில்லை. கடன் வழங்க முடியாது என்ற தன்னுடைய நிலையைச் சொல்லிவிட்டு கிளம்புகிறார். காட்சி சோகமயமாகிறது. அப்போது ஒரு கதாபாத்திரம் ஃபைனான்சியருக்கு போட்ட மாலையை எடுத்துச்சென்று சுவற்றில் மாட்டப்பட்டிருக்கும் கார் படத்திற்கு போட்டுவிட்டு சோகமாக நிற்கிறார். இது குவென்டின் டொராண்டினோ பாணியிலான ப்ளாக் காமெடி !

- ‘லவ் ப்ரோபோசல்’ காட்சியில் இயக்குநர் தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை சொல்லப்படாத கவித்துவமான காட்சியமைப்பை பயன்படுத்தியுள்ளார். ‘ஐ லவ் யூ’ – ‘லவ் யூ டூ’ போன்ற அபத்தங்கள் இல்லை. தீபா டேவிட்டிடம், தீடிரென ‘உங்க லைப் பார்ட்னரு யாரு ?’ என்று கேட்கிறார். டேவிட் நேரடியாக பதில் சொல்லவில்லை. ‘கார் படத்தை எனக்கு கொடுத்த மகாராணி !’ என்று குறிப்பால் உணர்த்துகிறார். தீபா அதனை கச்சிதமாக புரிந்துக்கொள்கிறார். உடனே டூயட் பாட ஓடிவிடாமல் தங்கள் எதிர்கால வாழ்க்கை குறித்த ஆலோசனையில் ஈடுபடுகிறார்கள் டேவிட் – தீபா தம்பதியர்.

- டேவிட்டின் மனநிலை மாற்றங்களைக் கொண்டு நமக்கெல்லாம் ஒரு ஜென் நிலையை சொல்லிக் கொடுக்கிறார் இயக்குநர். கார் தொழிற்சாலைக்கு கடன் கிடைக்க இருப்பது, அது ரத்தாகி போவது, தீபாவுடன் காதல் பரிமாற்றம், மஞ்சுவின் வருகை, தீபாவின் பிரிவு என்ற சகல விதமான காட்சிகளுக்கும் டேவிட் அழுகையோ, சிரிப்போ அல்லது எந்தவிதமான உணர்ச்சிகளையோ வெளிக்காட்டாமல் புத்தரைப் போல காட்சியளிக்கிறார். நாமும் அதைப்போல வாழ்க்கையில் எத்தகைய இன்ப துன்பங்கள் ஏற்பட்டாலும் சமநிலையில் இருக்க வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது.

- டேவிட்டின் சிலுவை டாலர் கதையின் உயிர்நாடி என்று கூறினேன் அல்லவா ? இங்கே சிலுவை என்பது மனது அல்லது காதலை குறிக்கின்றது. முதலில் மஞ்சு தன்னுடைய மனதை, அதாவது சிலுவை டாலரை டேவிட்டிடம் கொடுக்கிறார். பின்னர், அதனை டேவிட் தீபாவிடம் கொடுக்கிறார், தீபா முதலில் வாங்கிக்கொள்ள மறுக்கிறார். டேவிட்டை புரிந்துக்கொண்டபிறகு தீபாவே அதனை விரும்பிக்கேட்டு வாங்கிக்கொள்கிறார். இறுதியில் தீபா அந்த டாலரை மஞ்சுவிடமே ஒப்படைத்துவிடுகிறார். அதாவது டேவிட்டின் காதல் மஞ்சுவிடம் சேர்பித்து விடப்படுகிறது. டாலர் மஞ்சுவிடமிருந்து மஞ்சுவிற்கே திரும்ப கிடைப்பதன் மூலம் ‘வாழ்க்கை ஒரு வட்டம்’ என்ற உண்மையும் உணர்த்தப்படுகிறது.

- உச்சக்கட்ட காட்சி. தீபா சிலுவை டாலரையும், ஸ்டெப்னியையும் ஒப்படைத்துவிட்டு வெளியேறுகிறார். சிறிய ஊடலுக்கு பின்னர் டேவிட்டும் மஞ்சுவும் இணைகிறார்கள். அவர்கள் இருவரும் சேர்ந்து ஹுண்டாய் காரை மூன்று முறை சுற்றி வருகிறார்கள். அதாவது தங்களின் தொழிலான காரையே கடவுளாக கருதி சுற்றி வருவதோடு படம் முடிந்து திரை இருள்கிறது.

அடுத்து வருவது: கோவை நேரம்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

18 comments:

கார்த்திக் சரவணன் said...

அட, அட அட... இவ்வளவு குறியீடுகள் இருக்கிற இந்தப் படத்தை எப்படியாவது பாத்தாகணுமே...

Manimaran said...

ஹா ஹா ......அப்படிஎன்றால் இது தமிழில் ஒரு உலக சினிமா என்கிறீர்கள் ..?

Unknown said...

மற்றொரு நாயகியான மஞ்சு, கனடாவிலிருந்து சிகப்பு நிற காரில் வந்து இறங்குகிறார்.
//////////////////////
கனடாவில் இருந்து காரிலேவா..?
செத்தான்டா சேகரு!

Anonymous said...

/ அடுத்து வருவது: கோவை நேரம்/

Waiting...

சூரியா இராஜப்பா said...

தமிழ் சினிமா வரலாற்றில் 2007 முதல் நாளை வரை ஓடும் வெற்றி படம் sir. மேலும் இந்த படத்தில் TASMAC காட்சி இல்லை.

Anonymous said...

புளகாங்கித புன்முறுவலுக்கும், ஆதிசார் ஆத்மார்த்தத்திற்குமான நூலிழை வெளியில் 'என் எதிர்கால வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கான ஒவ்வொரு ஸ்டெப்பும் நீயா இருக்கணும்னுதான் நெனச்சேன். ஒவ்வொரு ஸ்டெப்பும் நீயா, ஸ்டெப்பும் நீயா, ஸ்டெப்பும் நீயாத்தான் இருக்கணும்தான் நெனச்சனே தவிர ஸ்டெப்னியா உன்ன நெனைக்கவே இல்லம்மா' என கதைப்பார் சாம்.

The man at the back of a buffalo எனும் பல்கேரியா நாட்டு திரைப்படத்தில் கூட இவ்வசனத்திற்கான அடிநாதம் மேற்படிமமாக பூசப்பட்டிருக்கும். அனுமானங்களை கடந்த அவதானிப்புகளும், பதின் நிலை பவ்யங்களை பாசிச துளியுடன் ஆராதிக்கும் ஆகமங்களும் சேர்ந்து உலுக்கும் தருணங்கள் அவை.

வவ்வால் said...

பிரபா,

மரிச்சு மார்ச்சுவரிக்கு போய் ,மக்கி மண்ணாப்போன படத்துக்குலாம் "கட்டுடைத்தல்" செய்யும் இழிநிலைக்கு உம்மை கொண்டு சென்ற இச்சமூகத்தினை என்ன வென்பது , இத்துன்பியல் நிகழ்வுக்கு காரணம் தமிழ் திரையுலகமே ஆகும், துரோகம், புல்லுக்கட்டு முத்தம்மா போன்ற கலைக்காவியங்கள் வாரம் ஒன்று என வந்திருந்தால் இப்படி "புராதன படங்களை' மீளாய்வு செய்யும் இழிநிலைக்கு ஆளாகியிருக மாட்டீர்! அவ்வ்!

ஒரு நல்ல "கலைப்படைப்பு" என்பது காலங்கடந்த பின்னும் செருப்பில் ஒட்டிக்கொண்ட துப்பிய பபிள் கம் போல ஆழ்மனதில் ஒட்டிக்கொண்டு நினைவில் நிழலாடி நினைவுக்கூற செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் பார்த்தால் "யாருக்கு யாரோ" - ஸ்டெப் நீ" ஒரு உன்னத கலைப்படைப்பாக தன்னை தானே தகுதிக்கு உள்ளாக்கிக்கொண்டுள்ளது என சொன்னால் அது மிகையில்லை அவ்வ்!

# //சிறிய ஊடலுக்கு பின்னர் டேவிட்டும் மஞ்சுவும் இணைகிறார்கள். அவர்கள் இருவரும் சேர்ந்து ஹுண்டாய் காரை மூன்று முறை சுற்றி வருகிறார்கள். அதாவது தங்களின் தொழிலான காரையே கடவுளாக கருதி சுற்றி வருவதோடு படம் முடிந்து திரை இருள்கிறது. //

இந்து ஞானமரபின் தொன்ம விழுமியங்களினை இக்காட்சி மூலம் இயக்குனர் "படிமமாக" முன் வைக்கிறார் என்பது ,எத்தனைப்பேருக்கு தெரியும்? உமக்க்கும் தெரியலையே அவ்வ்வ்!

திருமணச்சடங்கு என்பது வெறும் தாலிக்கட்டுவதில் மட்டும் இல்லை, பாணிக்கிரகணம் செய்து அக்னி சாட்சியாக கைப்பற்றி மும்முறை வலம் செய்தால் மட்டுமே முழுமை அடையும்.

"காரையே" கண் கன்ட தெய்வமாக நாயகன் நினைக்கிறான் ,மேலும் செந்நிறம் என்பது அக்னியின் குறியீடு, மேலும் கார் எஞ்சினின் சிலிண்டரில் பெட்ரோல் எரிவதால் தான் இயங்குகிறது, எனவே ஒரு கார் என்பது அக்னியின் நவின மரபுவடிவம், அதனை மும்முறை வலம் வந்து தனது காதல்நாயகியுடன் இணைவதாக காட்டுவதன் மூலம் "இந்து ஞானமரபின்" தொன்ம விழுமியங்களின் தாத்பரியத்தை இயக்குனர் குறியீடாக காட்டியுள்ளார் அவ்வ்!

இன்னும் கிரேக்க,ரோமானிய,எகிப்திய,சொராஸ்ட்ரிய, சமண தொன்ம விழுமியங்களின் அகக்குறியீடுகளை கொண்டும் விளக்க முடியும் என்பதை பணிவுடன் தெரிவித்துக்"கொல்கிறேன்"

அமுதா கிருஷ்ணா said...

சீன் பை சீன் 2007-லிருந்து ரசித்து பார்த்து கொண்டேயிருக்கீங்க போல...

VOICE OF INDIAN said...

இந்தப் படத்தை நான் ஏற்க்கனவே பார்த்துவிட்டேன். நல்லது பண்றவன் ஒழுக்கமானவன் கீரோனு காட்டுனா எவனும் பார்க்கறதில்லை கொலைகாரன் கொள்ளையடிப்பவன் கர்ப்பளிப்பவன் திருடன் குடிகாரன் இப்படி ஒரு கீரோனு காமிச்சாதான் படம் பார்க்கவறான் என்று சினிமாக்காரர்களே வருந்தி சொல்லும் நிலைதான் இன்று நல்ல படங்களுக்கு வரவேற்ப்பு அளிக்கும் உண்மையில் நல்லதொரு விமர்சனம் வாழ்த்துக்கள் மேலும் டாஸ்மாக் காட்சி இல்லாத படம் என்று ஹைலைட் கொடுத்திருப்பது சிறப்பு

Muraleedharan U said...

Ippo intha padathai kizhikka madrasbhavan mattum waiting !!!

வெளங்காதவன்™ said...

அருமையாக எழுதியுள்ளீர்கள்.

தொடரவும்.

வாழ்த்துக்களுடன்,

வெ.

#தக்காளி. கைக்குச் சிக்காமப் போயிடுவ? இருக்குடி...

Ponmahes said...

ஏன் டா இந்த கொலைவெறி....நல்லா இருக்கு...வாழ்த்துக்கள்.....

'பரிவை' சே.குமார் said...

ரொம்ப பொறுமையான ஆள்தான் நீங்க... என்னால ராசாத்தி... என் ஆச ராசாத்தியவே பாக்க முடியலையே....

Anonymous said...

Thambi nalla thana poikittu irunthahtu, yen intha Kolaveri?!

வவ்வால் - you too...

வெளங்காதவன்™ - I like this "தக்காளி. கைக்குச் சிக்காமப் போயிடுவ? இருக்குடி..."

-Eswar

ஜீவன் சுப்பு said...

@ சிவா & வவ்வால் -

யப்ப்ப்ப்பப்ப்ப்பப்பா பின்னுறீங்க போங்க ....! மெய்யாலுமே நீங்க ..... நீங்கதாங்க ...!

ஜீவன் சுப்பு said...

//கனடாவில் இருந்து காரிலேவா..?
செத்தான்டா சேகரு!//

ஹாஹா ஹா ஹா ...!

Anonymous said...

இந்திய சினிமா வரலாற்றிலேயே மைல்கல்லான இத்திரைப்படத்தை ஒவ்வொரு இந்தியரும் கண்டு களித்து பேரானந்த பரவச நிலையை எய்த வேண்டும். இதற்கு தேசிய விருது, தங்க மயில், தங்க இறகு, பித்தளை சிங்கம், ஆஸ்கார் கொடுத்து படத்தின் தரத்தைக் குறைத்துவிடக் கூடாது என்பதால் தான் எவ்வித விருதுகளும் வேண்டாம் என திரைப்பட குழு அறிவித்து விட்டது. இந்திய வரலாற்றிலே டிடிஎச் என்பது வரும் முன்னரே யுடுயுப்பில் படத்தை வெளியிட்டு கோடிக்கணக்கானோர் உள்ளத்தில் இடம்பிடித்த முதல் படமே இது தான். இத்தகைய திரைப்படத்தை தமிழக இயக்குநர்கள் கொண்டாட வேண்டும், புதிய படைப்பாளிகள் பாடம் படிக்க வேண்டும். :P

உங்களுள் ஒருவன் said...

டேய் நீ எல்லாம் நல்லா இருப்பியா... ஒரு மொக்க படத்தை எடுத்த உலக சினிமா ரேஞ்சுக்கு or Vice versa. ஒரு தேர்ந்த எழுத்தாளன் தான் எழுத முடியும்.. நீங்கள் ஒரு சிறந்த எடுத்து காட்டு....