அன்புள்ள வலைப்பூவிற்கு,
2004ம் ஆண்டு வாக்கில் சென்னையில் ரேடியோ மிர்ச்சியும் சூரியன்
பண்பலையும் அடியெடுத்து வைத்து புகழ் பெற்றிருந்த சமயம். அச்சமயத்தில் பேருந்துகளில்,
கடைகளில், உணவகங்களில், சிறிய தொலைக்காட்சிகளில் என எங்கும் பண்பலைகள் மயமாக இருக்கும்.
நிறைய பேர் மிர்ச்சி சுச்சியின் விசிறிகளாகியிருந்தனர், நான் உட்பட. நானெல்லாம்
சிறிய ரேடியோ ஒன்றை கையோடு வைத்திருப்பேன். பள்ளிக்கூடத்திற்கு கூட
எடுத்துச்சென்று திருட்டுத்தனமாக கேட்டது நினைவிலிருக்கிறது. ஞாயிறு தோறும் மாலை
ஆறிலிருந்து எட்டு வரை மிர்ச்சியில் டாப் 20 பாடல்கள் ஒலிபரப்புவார்கள். அதனை
எங்கிருந்தாலும் தவறாமல் கேட்டுவிடுவேன். நாளடைவில் வதவதவென நிறைய பண்பலை வரிசைகள்
வந்துவிட்டன. தொழில்நுட்பங்களும் நிறைய வளர்ந்துவிட்டதால் பண்பலைகள் மறந்து
போயிற்று. எனினும் இன்றளவும் பல சிறிய தொழிற்சாலைகளில் பணியாளர்கள் பண்பலையில்
பாடல்கள் கேட்டபடியே களைப்பு தெரியாமல் பணிபுரிகிறார்கள்.
என்னுடைய அலுவலகத்தில் பணியாளர்கள் வீடு திரும்ப தினசரி வாடகை
சீருந்து வசதி உண்டு. அப்படி நான் பயணம் செய்கிற வண்டியில் எப்போதும் பண்பலை
ஒலித்துக்கொண்டிருக்கும். ஆரம்பத்தில் எனக்கும் அது பிடித்திருந்தது. நாளடைவில்
தினசரி ஒரே மாதிரியான குரல்கள், ஒரே மாதிரியான பேச்சு, ஒரே மாதிரியான பாடல்கள் என்று
சலித்துவிட்டது. ஆனால் வாகன ஓட்டுநருக்கு சலிக்கவில்லை. உண்மையில் அவர் வாகன
ஓட்டுநர் மட்டுமல்ல, உரிமையாளரும் கூட. அவருடைய வண்டியிலேயே அமர்ந்துக்கொண்டு ரேடியோ
பொட்டியை கொஞ்சம் நிறுத்த முடியுமா ? என்று கேட்பது எனக்கு அவ்வளவு நாகரிகமாக
படவில்லை. அதுவுமில்லாமல் இரவு பன்னிரண்டு மணி வரை தூக்கத்தை கட்டுபடுத்திக்
கொண்டு உழைக்கும் மனிதரிடம் போய் பாடலை நிறுத்துங்கள் என்று சொன்னால் நன்றாகவா
இருக்கும். அதனால் இப்ப என்ன பெருசா கெட்டுப்போச்சு என்று கேட்டுக்கொள்ள
பழகிவிட்டேன். ஆனால் புலம்பலாம் இல்லையா...?
முதலில் ஒரு முன்ஜாமீன் போட்டுக்கொள்கிறேன். இக்கட்டுரையில் நான்
குறிப்பிட இருக்கின்ற மூவருமே உண்மையில் சிறப்பான வானொலி தொகுப்பாளர்களே. லபோ திபோ
என்று கத்துபவர்களோடு ஒப்பிட்டால் இவர்கள் மூவரும் ஆயிரம் மடங்கு பரவாயில்லை. இருப்பினும்
மோனோடோனஸாக அவர்களுடைய குரல்களையே கேட்டுக்கொண்டிருந்ததின் விளைவே இக்கட்டுரை.
உதாரணத்திற்கு, வா.மணிகண்டன் என்பவர் இணையத்தில் நன்றாக எழுதுகிறார். ஆனால்
தினமும் ஒரே மாதிரியாகவே எழுதிக்கொண்டிருந்தால் சலிப்பு தட்டுகிறது அல்லவா...? அது மாதிரிதான்...!
அன்பான அருண்
தினசரி இரவு பத்திலிருந்து பதினோரு மணிவரை சூரியன் பண்பலையில்
ஒலிபரப்பாகும் இனிய இரவு நிகழ்ச்சியின் தொகுப்பாளர். இவருடைய குரல் கேட்டதும்
பிடித்துவிடக் கூடியது, கேட்கக் கேட்க பிடிக்காமல் போகக்கூடும். மெட்ராஸ் பவன் சிவகுமார்
குரல் போலவே இருக்கும். அருண் ஜீவகாருண்ய கட்சியை சேர்ந்தவராக இருக்கக்கூடும்.
யாரையும் விளையாட்டுக்காக கூட கிண்டலடித்து பேசமாட்டார். தொலைபேசி நேயர்களை லைட்டா
கலாய்க்கக்கூட மாட்டார், அதுதான் அவருடைய மிகப்பெரிய பலவீனம் என்று நினைக்கிறேன்.
வெறுமனே தடவிக்கொடுத்துக்கிட்டே இருந்தா பூனை கூட செத்துப்போயிடும்’ன்னு ஜேஜே
படத்தில் ஒரு வசனம் உண்டு. அதுபோல இவருடைய பேச்சை கேட்டால் என்னடா இந்தாளு
எப்பப்பாரு கொழைஞ்சுக்கிட்டே இருக்கான்னு இயல்பாகவே தோன்ற ஆரம்பித்துவிடுகிறது.
அருணுடைய இன்னொரு சிக்கல் பொதுபுத்தி வார்த்தைகள். அதாவது நிகழ்ச்சியின் இடையில் அருமையான
கிளைமேட், மண் வாசனை வீசுற இந்த இனிய இரவு நேரத்துல ராஜா சார் பாடல்களை கேட்குறது
ஒரு சுகம்தான்ல்ல...? அப்படின்னு ஒரு ‘ல்ல’ போட்டு கேள்வியா முடிப்பார்.
உண்மையில் நாம் அப்போது ராஜா சார் பாடல்களை கேட்கும் மனநிலையில் இல்லையென்றாலும்
அவருடைய கேள்விக்கு ஆம் சொன்னதாக எடுத்துக்கொண்டு தொடர்ந்து பேசிக்கொண்டே
இருப்பார்.
லவ் குரு
அதே இரவு பத்து மணிவாக்கில் ரேடியோ சிட்டியில் ஒலிபரப்பாகும் லவ் குரு
நிகழ்ச்சியின் தொகுப்பாளர். இவரும் கிட்டத்தட்ட அருண் போல தான். யாருக்கும்
வலிக்காமல் பேசக்கூடியவர். எப்போதாவது தொலைபேசி நேயர்களிடம் மட்டும் லைட்டா...
ரொம்ப லைட்டா... கிண்டலடிப்பார். அருணுடைய குரல் பதிவர் சிவகுமார் போன்றது என்றால்
இவருடைய குரல் நடிகர் சிவகுமார் போன்றது. அதாவது ஒருமாதிரி தழுதழுத்த குரலில்
பேசுவார். கெரகம் அவர் தொகுத்து வழங்குகிற நிகழ்ச்சி அப்படி. தினசரி இரவு யாராவது
ஒரு காதலன் / காதலியுடைய உருக்கமான கடிதத்தை ஹஸ்கி வாய்ஸில் படித்துக்காட்டுவதே
இந்த நிகழ்ச்சியின் தீம். ஆனால் அந்த காதல் கடிதங்களை நிலையத்தினரே
உருவாக்குகிறார்களோ என்ற சந்தேகம் எனக்கு நீண்ட நாட்களாக உண்டு. நாட்டில் என்ன அத்தனை
கிறுக்கர்களா இருக்கிறார்கள்...? மேலும், மனமுதிர்ச்சியடையாத காதலர்களை நன்றாக
கிண்டிவிடக்கூடிய அளவில் லவ் குரு என்னைப்பொறுத்தவரையில் ஒரு மோசமான நிகழ்ச்சி.
இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் ஒரு ஒலியிடுகை வெளியிட்டேன்.
மிகவும் திட்டமிட்டு பதிவு செய்யப்பட்டாலும் கூட என்னால் தொடர்ச்சியாக மூன்று
நிமிடங்கள் கூட பேச முடியவில்லை. அப்படியிருக்கும்போது இந்த நிகழ்ச்சியில் பேசும்
காதல் தோல்வி ஆசாமிகள் எப்படி கனகச்சிதமாக பேசுகிறார்கள்...? தொடர்ந்து கேட்டால்
லவ் குரு ஒரு நல்ல ஜோடனை நிகழ்ச்சி என்று தெரிந்துவிடும்.
யாழ் சுதாகர்
அப்படியே இரவு பதினோரு மணியளவில் மீண்டும் சூரியன் பண்பலைக்கு
திரும்பினால் யாழ் சுதாகரை கேட்கலாம். ரயில் நிலையத்தில் அறிவிப்பு குரலை
கேட்டிருக்கிறீர்களா....? வண்டி எண், செல்லும் இடம், பிளாட்பார எண், புறப்படும்
நேரம் போன்றவற்றை உள்ளீடு செய்துவிட்டால் ஒலிபெருக்கியில் அறிவிப்பு வரும். அதுபோல
யாழ் சுதாகரின் குரல் டெம்ப்ளேட்டை மட்டும் வைத்துக்கொண்டு அதில் படத்தின் பெயர்,
பாடலின் முதல் வரி, பாடகர்கள் பெயர், பாடலின் ராகம் போன்றவற்றை உள்ளீடு செய்கிறார்களோ
என்பது என்னுடைய ஐயப்பாடு. பயணிகள் கவனத்திற்கு என்று துவங்கும் சொற்றொடர்
நம்மை எவ்வளவு வெறுப்பேற்றுமோ அதற்கு இணையாக வெறுப்பேற்றக்கூடிய சொற்றொடர் நாதகலாஜ்ஜோதி
இளையராஜ்ஜாவின் இசை வார்ப்பில். சூரியன் பண்பலையின் தாரக மந்திரமான கேளுங்க
கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க என்ற வரிகளை நம்மாளு தூயதமிழில் பொறுமையாக
வாசிக்கிறேன் பேர்வழி என்று படுத்தி எடுத்துவிடுவார். அடிக்கடி சுதாகர்
உச்சரிக்கும் இன்னொரு சொற்றொடர் பழைய பாடல்கள் தங்கம் என்றால் புதிய பாடல்கள்
தகரம் என்பேன். அப்படியென்றால் சூரியன் பண்பலையில் நாளின் மற்ற இருபத்தி
மூன்று மணிநேரங்கள் ஒலிபரப்பாகும் பாடல்கள் அனைத்தும் தகரம் என்று அவரே ஒப்புக்கொள்கிறாரா...?
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
14 comments:
யாழ் சுதாகர் நிகழ்ச்சி நீங்கள் சொல்வது போல்தான் உள்ளது .அவர் அடிக்கடி சில துணுக்கு எழுத்தாளர்களின் பெயரைக்கூறி அவர்களுக்கு பிடித்த பாடல் ,ராகத்தின் பெயரைக்கூறி அவர்களுக்கு பிடித்த ராகம் உஎன்றும் புரூடா விடுகிறார் ,எதற்காக இப்படி செய்கிறார் என்று புரியவில்லை !
தமிழ் மணம் like வோட்டு போட்டால் dislikeவோட்டும் விழுகிறது .என் தளத்திலும் இப்படி ஆகிறது .ஏனென்று தெரியவில்லை !
எதுக்கு தேவை இல்லாம மணிகண்டனை இழுக்கற? டேய் லூசு பயலே. நீ முதல்ல ஒழுங்காக எழுதுடா அப்புறம் அடுத்தவனை விமர்சனம் செய்ய போகலாம்.
ஒவ்வொருத்தரின் பாணி ஒவ்வொரு மாதிரி... எப்படியோ இரவு நேரத்தில் பழைய பாடல்கள் ஆனாலும் சரி... இடைக்கால பாடல்கள் ஆனாலும் சரி... பாடல்கள் கேட்பது மனதிற்கு இனிமை...
அனானி,
நல்லா எழுதுறவன் மட்டும்தான் அடுத்தவன் எழுத்தை விமர்சிக்க முடியும்'ன்னு ஏதாவது சட்டம் உள்ளதா...? அப்படியெனில் நீங்கள் எப்படி என்னை விமர்சிக்க முடியும்...?
சுசித்ரா போட்டோவ போட்டுட்டு அவங்கள பத்தி ஒன்னுமே சொல்லாம போனா எப்படி ஜி
நீங்க நான் ராஜா சார் உங்க கேப் ல போடுறது இல்லையா பிரபா.. எங்க டிரைவர் பேவரைட் அது தான்.. கேப் டிரைவர்ஸ் பத்தியே ஒரு பதிவு எழுதனும்னு எண்ணம்.. முடிஞ்சா சீக்கிரம் எழுதனும்
சாட்டியரு சாட்டியரு பிரபா ஒரு சாட்டியரு
சண்டியரு சண்டியரு பிரபா ஒரு சண்டியரு
பிரபா,
பண்பலைகளில் 4 நிமிடப்பாட்டுக்கு 5 நிமிடம் பேசிக்கொல்வாய்ங்க தோல்வாயனுங்க/ளுங்க அவ்வ்!
இரவில் மட்டும் கேட்பதால் யாழ் சுதாகர்,பணப்பாக்கம் சுகுமார் போன்றப்பெயர்கள் காதில் விழும்.
அடிக்கடி கேட்டுக்கிட்டு இருந்தா, பேசுற பேச்சுலாம் தானா "ஆடியோ ஃபேட் அவுட் ஆகி, பாடல் வரும் போது மட்டும் ஃபேட் இன் ஆகும் :))
# வாகன ஓட்டிகளுக்கு ரொம்ப பயனளிக்குது, கடலூர் -சென்னை இடையே ஓடும் அரசுப்பேருந்துகளில் எல்லாம் டிரைவர் செலவில் எஃப்.எம் ரேடியோசெட் வாங்கி பஸ் பானட்மேல கட்டி வச்சிருப்பாங்க, பயணம் முழுக்க "பண்பலை பாடல்கள்" கச்சேரி தான்!!!
நெறைய கால் டாக்சி டிரைவர்கள் ராத்திரியிலும் போன்ப்பண்ணி விருப்பப்பாடல்கள் கேட்பாங்க அவ்வ்!
//அப்போது ராஜா சார் பாடல்களை கேட்கும் மனநிலையில் இல்லையென்றாலும்//
அப்புறம் என்ன " "த்துக்கு வெட்டியா அந்த நிகழ்ச்சிய கேக்கணும்?
//உதாரணத்திற்கு, வா.மணிகண்டன் என்பவர் இணையத்தில் நன்றாக எழுதுகிறார். ஆனால் தினமும் ஒரே மாதிரியாகவே எழுதிக்கொண்டிருந்தால் சலிப்பு தட்டுகிறது அல்லவா...? அது மாதிரிதான்...//
பொறாமை படாதிங்கண்ணே.
சூப்பர் பதிவு பிரபா.நான் கூட சென்னை பண்பலைகள் என்று ஒரு பதிவு எழுதி ரொம்ப நாளாய் முற்று பெறாமல் ட்ராப்டில் இருக்கிறது.
ஆஹா எப் .எம்மில் காலையில் சின்ன மாப்பிள்ளை பெரிய மாப்பிளை என்று பேசுவார்கள்.அதில் ஒரு பெண் வேறு.அதில் இரட்டை அர்த்தம் வரும்படியும் சில சமயங்களில் முகம் சுளிக்கும்வகையிலும் இருக்கும் நேரடியான உரையாடல்களும் உண்டு
நான் அன்புடன் அருண் குரலுக்கு ரசிகன் அவரது அந்த குரல் தேனில் நீராடி வந்தது போல் இருக்கும்
யாழ் சுதாகரின் காற்று மண்டலத்தை கற்கண்டு மண்டலமாய்..... என்று அவர் ஆரம்பிக்கும் அழகே அழகு
//நல்லா எழுதுறவன் மட்டும்தான் அடுத்தவன் எழுத்தை விமர்சிக்க முடியும்'ன்னு ஏதாவது சட்டம் உள்ளதா...? அப்படியெனில் நீங்கள் எப்படி என்னை விமர்சிக்க முடியும்...?//
ஏங்க பிரபா, அநானி உங்களை மாதிரியே செமக் காமடியாத்தானே பின்னூட்டத்தை எழுதியிருக்கறாரு? என்ன, கொஞ்சம் 'டேய்'-ன்னு ஏக வசனத்துல எழுதிட்டாரு, மற்றபடி நீங்க கலாய்க்குறேன்னு பிறரை கேவலப்படுத்தற மாரியேதான் அவரும் எழுதறாரு. அவரைப் போய் இப்படி கேட்டா நல்லவா இருக்கு?
நல்லா இருக்கு தம்பி... சுச்சி அக்காவ பத்தி ஒண்ணுமே சொல்லல....
ஏலே ...எதுக்கு தேவை இல்லாம மத்த பதிவர்கள பத்தி எழுதி கண்டவன்(அனானி) கிட்ட திட்டு வாங்குற....
வாழ்த்துக்கள்.....
Post a Comment