அன்புள்ள வலைப்பூவிற்கு,
பொங்கல் படங்களுக்குப் பிறகு கோலி சோடா தவிர்த்து சொல்லிக்கொள்ளும்
வகையில் தமிழ் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. நன்றாக இருப்பதாக பேசப்பட்டாலும்
ஏனோ கோ.சோ பார்க்கத் தோன்றவில்லை. அதற்கெல்லாம் சேர்த்து விருந்து கொடுப்பதுபோல
அமைந்திருக்கிறது பிப்ரவரி மாதம். ரம்மி
சேர்ந்தாற்போல விஜய் சேதுபதியும் – அட்டகத்தி ஐஸும் அடுத்தடுத்து இரண்டு படங்களில்.
முதலாவது ரம்மி. அடுத்தது பண்ணையாரும் பத்மினியும்.
கதை எல்லாம் அப்புறம் பார்க்கலாம். முதலில் ஐஸ்வர்யாவைப் பற்றி
சொல்லிவிடுகிறேன். நார்கொடிக்ஸ் கண்ட்ரோல் பியுரோவிடம் சொல்லி ஐஸ்வர்யாவின் கண்களை
ஆராய வேண்டும். போதையேற்றும் மூலப்பொருள் ஏதேனும் அவற்றுள் இருக்கக்கூடும்.
இல்லையேல் அவருடைய கண்களை பெர்முடா வட்டங்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட
வேண்டும். சிவா மனசுல சக்தி படத்தில் ஜீவா சரக்கை போட்டுவிட்டு அவளோட ரெண்டு
கண்ணும் அப்படியே வயித்துக்குள்ள பாயுது மச்சி என்பார். தெளிவாகவே சொல்கிறேன்,
அதே தான். ஆனால் ஒரு விஷயம், இதுவரை ஐஸ்வர்யா நடித்த நான்கு படங்களிலும் அவருக்கு
கதைப்படியோ அல்லது என்ன எழவோ சரியான அலங்காரம், உடையமைப்பு வாய்க்கவில்லை. ம்ம்ம்
தமிழ் சினிமாவில் ஐஸ்வர்யா கடக்க இருக்கிற தூரம் நம் கண்களுக்கு எட்டாதது.
காத்திருக்கலாம்.
1987ல் நடைபெறுகிற கதை. சிவகங்கை மாவட்ட அரசு கல்லூரியில் பயிலும்
நாயகர்கள். ஆளுக்கொரு காதல். காமெடிக்கு பரோட்டா சூரி. சுமூகமாக
போய்க்கொண்டிருக்கும் கதையில் ஆங்காங்கே அரிவாளை காட்டி அலர்ட் செய்கிறார்கள்.
கதையின் பிற்பகுதியில் காதல்களுக்கு சிக்கல்கள் துவங்குகின்றன. அது எப்படி ரத்தக்களறியாகி
நிறைவு பெறுகிறது என்பதை முடிந்தால் திரையில் பார்த்துக்கொள்ளுங்கள்.
துவக்கத்தில் கொஞ்சம் சலிப்பூட்டாமல் நகர்கிறது படம். கொஞ்சம்
சுவாரஸ்யமான காட்சிகள், (வழக்கமாக மொக்கை போடும்) பரோட்டா சூரியின் சுமாரான நகைச்சுவை,
கல்லூரி, விடுதி சம்பந்தமான இயல்பான காட்சியமைப்புகள், விஜய் சேதுபதி – இனிகோ
பிரபாகரின் நட்பு என்று எல்லாம் சேர்த்து ஒரு தடவை பார்க்கலாம் என்பது போல இருந்தது.
படம் இறுதிக்கட்டத்தை நோக்கி செல்லும்வழியில் என்ன நடக்குமோ என்ற பரபரப்பு கூட
தொற்றிக்கொள்கிறது. ஆனால் பெரிதாக ட்விஸ்ட் எதுவுமில்லாமல் அதே சமயம் மிகப்பெரிய
ட்விஸ்டை வைத்துவிட்ட நினைப்பில் படத்தை முடித்திருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக
பார்க்கும்போது ரம்மியை ஒரு முழுமையான திரைச்சித்திரமாகவே ஏற்றுக்கொள்ள
முடியவில்லை.
இனிகோவிற்கு முதல் நிலை நாயகனாக பிரமோஷன் கிடைத்திருக்கிறது. விஜய்
சேதுபதி இரண்டாம் நாயகனாக வந்தாலும் கூட அரங்குகளில் விசில் பறக்கிறது. காயத்ரி
மொக்கை மூஞ்சி. பரோட்டா சூரியை சந்தானத்திற்கு இணையான நகைச்சுவை நடிகர் என்று
முன்னிறுத்தும்பொருட்டு ஆரவாரமான தொடக்கக்காட்சியெல்லாம் வைக்கிறார்கள். ஜோ மல்லூரியும்
அவருடைய தம்பிகளும் நன்றாக நடித்திருக்கிறார்கள். டைகர் கார்டன் தங்கதுரை,
சென்றாயன் போன்ற நல்ல மனித வளங்கள் வீணடிக்கப்பட்டுள்ளன.
கூட மேல கூட வச்சு என்ற பாடல் வந்தனாவின் குரலில் மனதிற்குள்
ஐஸ்க்ரீமாய் கரைகிறது. மற்ற பாடல்கள் அரங்கை விட்டு ஓடவைக்கும் வகை. பாடல்
காட்சிகளுக்கென தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்கள் அபாரம். ஆனால் எல்லா பாடல்களிலும் ஒரே
இடத்தையே காட்டுவது போல இருக்கிறது.
கதைப்படி ஐஸ்வர்யா செல்வச்சீமாட்டி. ஆனால் அவருடைய கழுத்துமணியும்,
உடையும் இன்னபிறவும் ஏழைப்பெண்ணை பிரதிபலிக்கின்றன. ஒருவேளை அவர் பெரிய
வீட்டுப்பெண் என்பதையே ஒரு ட்விஸ்ட் என்ற நினைப்பில் வைத்திருக்கலாம்.
நான்கு பிரதான வேடதாரிகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தாலும் கூட
ஏனோ அவர்களுடைய கதைகளை சரிவர பிணைக்க தவறியிருக்கிறார்கள். உதாரணமாக, தன்னை சகோதரன்
போல நினைக்கும் இனிகோவிடம் விஜய் சேதுபதி தன்னுடைய காதலைப் பற்றி சொல்லவில்லை.
போலவே, இனிகோ காதலை காயத்ரி ஏற்றுக்கொண்ட விஷயமும் விஜய் சேதுபதிக்கு
தெரிந்திருக்காது. ஐஸ்வர்யாவும் காயத்ரியும் ஒன்றுவிட்ட அக்காள் தங்கைகள். ஆனால்
க்ளைமாக்ஸில் மட்டும்தான் பேசிக்கொள்கிறார்கள்.
காதலும் சரி, வன்முறையும் சரி மனதில் அழுத்தமாக பதியவில்லை. கடைசியில்
ஐஸ்வர்யா எடுக்கும் உணர்வுப்பூர்வமான முடிவு கூட சிரிப்பையே வரவழைக்கிறது.
ரம்மி – காதல், சுப்ரமணியபுரம் போன்ற புலிகளை பார்த்து சூடு
போட்டுக்கொண்ட பூனை. கொஞ்சம் விலகியிருந்தாலும் சுந்தரபாண்டியன், குட்டிப்புலி
போன்ற அபத்த சினிமாக்களில் சேர வேண்டியது. கடைசியில் ரத்தம் தெறிக்க நியாயத்தை
நிலைநாட்டினாலும், இஸ்லாமிய செய்யது காதலிக்கக் கூடாது, பெற்றோரை இழந்த / கிறிஸ்தவ
ஜோசப் காதலிக்கக் கூடாது ஆனால் ஒரே மதத்தை சேர்ந்த பெண் வீட்டிற்கு நிகரான
சமூக அந்தஸ்து உள்ளவரென்றால் காதலிக்கலாம் என்று சொல்கிறார்களோ என்றெல்லாம்
தோன்றுகிறது. ரம்மி – 1987ல் நடைபெறும் கதை மட்டுமல்ல, வெளிவந்திருக்க வேண்டிய
படமும் கூட.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
11 comments:
கடைசியில் ரத்தம் தெறிக்க நியாயத்தை நிலைநாட்டினாலும், இஸ்லாமிய செய்யது காதலிக்கக் கூடாது, பெற்றோரை இழந்த / கிறிஸ்தவ ஜோசப் காதலிக்கக் கூடாது ஆனால் ஒரே மதத்தை சேர்ந்த பெண் வீட்டிற்கு நிகரான சமூக அந்தஸ்து உள்ளவரென்றால் காதலிக்கலாம் என்று சொல்கிறார்களோ என்றெல்லாம் தோன்றுகிறது.
ARUMAI......enakkum ithe ennam thaan thonriyathu.....
/// ரம்மி – 1987ல் நடைபெறும் கதை மட்டுமல்ல, வெளிவந்திருக்க வேண்டிய படமும் கூட./// அப்போது வந்திருந்தாலும் இதே ரிசல்டுதான்...ரிவிட்டுதான்.
ஆக மொத்தத்திலே...ரம்மி வெறும் டம்மிதானா ?
த ம+1
1987-ல் பல நல்ல படங்கள் மட்டுமே வந்தது...
ஐஸ்வர்யா - வெண்ணிலா ஐஸ் கண்களுடன் வரியா எனக்கேட்கும் வசீகரம். இந்த மாதிரி எப்பத்தான்....என்னமோ போய்யா!!
ஒரு நிமிஷம் நம்ம ஐஸ்வர்யாராய் ஐஸைப் பற்றித்தான் சொல்கிறீர்கள் என நினைத்துவிட்டேன்.. பெர்முடா மேட்டர் வைரமுத்துவே வர்ணிக்காத விசயமாச்சே... :-)
படம் பார்க்கணுமே !
என்னாது பெர்முடாவா ? யோவ் அதுக்கு இன்னும் ஒரு டபுள்மீனிங் அர்த்தம் இருக்கு அவ்வவ்...
Tha Ma +1
த ம+1
quite insightful input : நார்கொடிக்ஸ் கண்ட்ரோல் பியுரோவிடம் சொல்லி ஐஸ்வர்யாவின் கண்களை ஆராய வேண்டும். போதையேற்றும் மூலப்பொருள் ஏதேனும் அவற்றுள் இருக்கக்கூடும். cheers on the fab writing.
//என்னாது பெர்முடாவா ? யோவ் அதுக்கு இன்னும் ஒரு டபுள்மீனிங் அர்த்தம் இருக்கு அவ்வவ்..//
மனோ ,ரிப்பீட்டே ரகத்தில் கமெண்ட் போட்டு ரொம்ப ,நாளாச்சு, உங்க கமெண்ட் அதுக்கு வாய்ப்பை கொடுக்குது,
ஆமாம் சாமியோவ்!
ஹி...ஹி எத்தினி நாளைக்கு தான் ரிப்பிட்டேய்னே சொல்லிட்டு இருக்குது தமிழை வாழ வைப்போமே!
------------------
//நார்கொடிக்ஸ் கண்ட்ரோல் பியுரோவிடம் சொல்லி ஐஸ்வர்யாவின் கண்களை ஆராய வேண்டும். போதையேற்றும் மூலப்பொருள் ஏதேனும் அவற்றுள் இருக்கக்கூடும். //
பீரடிச்சுட்டு மப்பா இருக்குனு சொன்னாலே சிரிப்பு வரும், இதுல மோந்து பார்த்துட்டு சொன்னா எப்படி இருக்கும் அவ்வ்!
(கண்ணுனா ...அது கண்ணு...சுட்டும் விழிச்சுடரே ...ஹி..ஹி)
Post a Comment