அன்புள்ள வலைப்பூவிற்கு,
மறுபடியும் விஜய் சேதுபதி – ஐஸ்வர்யா ஜோடியில் ஒரு படம். சென்ற வாரமே
பண்ணையாரும் பத்மினியும் பார்ப்பதென்று முடிவு செய்தாயிற்று. திரையில்
ஐஸ்வர்யாவின் பெயர் நான்காவதாய் தோன்றியபோது ஏதோ உறுத்தலாக இருந்தது.
ஒரு பத்மினி கார். அதனுடன் அதன் உரிமையாளருக்கும் ஓட்டுநருக்கும் உள்ள
உணர்வுப்பூர்வமான தொடர்பு தான் கதை.
டைட்டிலில் விஜய் சேதுபதியின் பெயர் முதலாவதாக வந்தாலும் கூட
ஜெயபிரகாஷ், துளசி, அப்புறம் அந்த கார் எல்லோருக்கும் அடுத்தபடியாகத்தான் விஜய்
சேதுபதி. பாலசரவணனுக்கு படத்தில் பீடை என்று பட்டப்பெயர். சில காட்சிகளில் சிரிக்க
வைக்கிறார். பல காட்சிகளில் எரிச்சல். ஜெயபிரகாஷ், துளசி இருவரும் தான் படத்திற்கு
உயிரூட்டியிருக்கிறார்கள். கெளரவ தோற்றங்களில் அட்டகத்தி தினேஷ் மற்றும் சினேகா.
நாயகி வேண்டும் என்ற கட்டாயத்திற்காக ஐஸ்வர்யா. ஐஸ்வர்யாவின் ரம்மி,
ப.ப தோற்றங்களில் ஏழு வித்தியாசங்கள் கண்டுபிடிப்பது கடினம். ரம்மியில் சின்ன
ஸ்டிக்கர் பொட்டு, அதற்கு மேல் சிறிய திருநீர்க்கீற்று. ப.ப.வில் கொஞ்சம் பெரிய
சைஸ் பொட்டு, திருநீர் கிடையாது. ரம்மியில் நேர் வகிடு. ப.ப.வில் பக்க வகிடு,
ரம்மியை விட ப.ப.வில் கழுத்துமணி நீளம் அதிகம். என்னுடைய தேர்வு ரம்மிதான்...! ஒன்று
மட்டும் நிச்சயம், எந்த படமாக இருந்தாலும் சரி. ஐஸ்வர்யாவின் கண்கள் விரியும்போது
மட்டும் நான் காணாமல் போய்விடுகிறேன்.
இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனுக்கு நல்வரவு. பின்னணி இசையைக்
கேட்டால் புதியவர் என்று சொல்ல முடியாது. பாடல்களில் ஒனக்காக பொறந்தேனே நின்று
பேசக்கூடிய ஒன்று.
பீரியட் படம் எடுப்பவர்கள் சுவரொட்டி, சுவர் விளம்பரங்கள் விஷயத்தில்
மட்டும் மிகவும் கவனமாக செயல்படுகிறார்கள். பழைய சிவாஜி, எம்ஜியார் பட போஸ்டர்,
அண்ணாமலை போஸ்டர் என்று காட்டுவதெல்லாம் சரி. ஆனால் வேறு சில விஷயங்களில் கவனத்தை
தவறவிடுகிறார்கள். ப,ப.வை எடுத்துக்கொண்டால் ஊருக்குள் முதன்முறையாக கார்
வருகிறது. ஊர்க்கார சிறுவர்கள் காருக்கு பின்னே ஓடிவந்து ஆரவாரிக்கிறார்கள்.
ஊருக்கு முதன்முறையாக பேருந்து வரும்போதும் ஆரவாரம் செய்கிறார்கள். ஆனால் அதே
ஊரில் மகேந்திரா வேன் ஒன்று கவனிப்பாரில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. புதிதாக
காரில் பயணிப்பவர்கள் நிறைய பேருக்கு அதன் கதவை எப்படி திறப்பது, எப்படி மூடுவது
என்பது இரண்டொரு நாட்களுக்கு புரியாத புதிராக இருக்கும். ஜெயப்பிரகாஷ் முதல்முறை
பத்மினியில் ஏறும்போதே பழக்கப்பட்டவர் போல ஏறி அமர்கிறார்.
படத்தின் பலம் ஜெயபிரகாஷ் – துளசி பாத்திரங்களுக்கு இடையே உள்ள காதல்
தான். குறும்படத்தில் கூட அந்த பகுதி கிடையாது. ஒருவரை ஒருவர் செல்லமாக சீண்டிக்
கொள்வது, தமது இணை வருத்தமாக இருக்கும்போது தமது வருத்தத்தை மறைத்துக்கொண்டு
ஆறுதலாக பேசுவது, ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுப்பது என்று கணவன் மனைவியின் மன
உணர்வுகளை அபாரமாக காட்சிப் படுத்தியிருக்கிறார்கள். அதிலும் நிறைய வசனங்கள்
இல்லாமல் சின்னச் சின்ன முகபாவனைகளிலேயே சொல்லியிருப்பது பாராட்டக்கூடியது. பண்ணையாரின்
மனைவியாக நடித்த துளசி விருது பெறத் தகுதியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
பண்ணையாரும் பத்மினி படத்தின் மிகப்பெரிய பலவீனம் என்னவென்றால்,
அப்படத்தில் காட்டப்படும் உணர்வுப்பூர்வமான தருணங்களில் ஒன்றையாவது நீங்கள்
உங்களுடைய நிஜவாழ்க்கையில் பெற்றிருந்தால் தான் அந்த உணர்வுகள் உங்களுக்குள்
ஊடுருவும். இல்லையென்றால் சிரிப்புதான் வரும். உதாரணத்திற்கு, உங்கள் கிராமத்து
பெரியவர் ஊரிலேயே முதன்முறையாக கார் வாங்கியிருக்கிறாரா...? நீங்கள் உங்கள்
நண்பர்களுடன் சேர்ந்து அந்த காருக்கு பின்னே ஓடியிருக்கிறீர்களா...? அதில்
ஒருமுறையாவது பயணம் செய்ய வேண்டுமென ஏங்கியிருக்கிறீர்களா...? இவையெல்லாம் நம்மில்
பெரும்பாலானவர்களுக்கு வாய்த்திருக்காது. குறைந்தபட்சம் கார் வாங்க வேண்டும் என்ற
வாழ்நாள் லட்சியத்தை நிறைவேற்றிய நெகிழ்ச்சியோடு அதனுள் அமர்ந்து கண்
கலங்கியிருக்கிறீர்களா...? ஏதாவது ஒரு கேள்விக்கு ஆம் என்று பதில்
சொல்லியிருந்தால் நிச்சயமாக பண்ணையாரும் பத்மினியும் உங்களுக்கு ஒரு
உணர்ச்சிக்குவியலாக இருக்கக்கூடும். தவற விடாதீர்கள்...!
மற்றவர்களை பொறுத்தவரையில், இயக்குநர் மன்னிப்பாராக. இரண்டரை மணி நேரம்
அரங்கில் அமர முடியவில்லை. ஒரு குறும்பட அளவு கதையை முழுநீளப்படமாக எடுப்பது
மிகப்பெரிய சவாலான காரியம் தான். ஆனால் ஏன் குறும்பட இயக்குநர்கள் இரண்டரை மணி
நேரங்கள் நீட்டி முழக்கி தங்களை மென்மேலும் சிரமப்படுத்திக்கொள்கிறார்கள் என்று
தெரியவில்லை. ஆங்கிலப்பட பாணியில் இரண்டு மணிநேரத்திற்கு குறைவாக முடிக்கலாம்
இல்லையா....? நிறைய பேர் சீக்கிரமா படத்தை முடிங்கடா என்று புலம்புவதை காதார
கேட்க முடிந்தது.
அடுத்தடுத்து வெளியானதால் ரம்மி, ப.ப. படங்களைப் பற்றிய சிறிய
ஒப்பீடு. இரண்டுமே பீரியட் படங்கள். முந்தையது 1987. இது 1992. செல்போன் என்ற
சாதனத்தை வைத்து லாஜிக் பின்ன முடியாத காரணத்திற்காக பீரியட் படங்கள்
எடுக்கிறார்களோ என்று சந்தேகமாக இருக்கிறது. ரம்மியில் காதல், நகைச்சுவை,
செண்டிமெண்ட், வன்முறை எல்லாமிருக்கிறது. ப.ப.வில் அப்படியில்லை மற்றவை
இருந்தாலும் கூட நெகிழ்ச்சிகள் மட்டும் பிரதானமாக நிரம்பியிருக்கின்றன. ஒட்டுமொத்தமாக
பார்க்கும்போது ரம்மி ஒரு மோசமான படம். ஆனால் அதன் காட்சிகள் ஆங்காங்கே ரசிக்க
வைத்தன. ப.ப நேரெதிர். ஒட்டுமொத்தமாக ஒரு நல்ல படம். ஆனால் காட்சிகள் நம் பொறுமையை
சோதிக்கின்றன. மொத்தத்தில் இரண்டும் சராசரி படங்களின் பட்டியலில் சேர்க்கப்பட
வேண்டியவை.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
5 comments:
படத்துக்கு 2 1/2 மணி நேரம் அதிகம் தான்.
படத்தின் பெரிய பலம் பண்ணையாரோட காதல் ....மற்றும் சில இடங்களில் இசை...அப்பறம் ஐஸ்வர்யா வோட கண்ணு....மத்த எல்லாம் படத்துக்கு பீடை தான்.....
//செல்போன் என்ற சாதனத்தை வைத்து லாஜிக் பின்ன முடியாத காரணத்திற்காக பீரியட் படங்கள் எடுக்கிறார்களோ என்று சந்தேகமாக இருக்கிறது//
:) உண்மைதான்! ஆனால், இன்றளவும் டிவி சீரியல்களிலும் சரி, திரைப்படங்களிலும் சரி காட்சிகளில் (செயற்கையான) பரபரப்பைக் கூட்டுவதற்காக, செல்போனை அந்த காட்சிகளில் வேண்டுமென்றே மறந்து விடுவார்கள்... வாகனங்களும் இது பொருந்தும்! ஒருவர், யாரையாவது அவசரமாக சந்திக்க வேண்டுமென்றால் - ஒரு ஆட்டோ கூட பிடிக்காமல் நடு ரோட்டில் பயங்கர டென்ஷனுடன் பத்து கிலோ மீட்டர் ஓடிப் போய் சந்திப்பார்கள்!!! :D
படம் டீவியில் வந்தால் பார்க்கலாம்.
படம் 1 1/2 மணி நேரம் மட்டுமே இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும்.
தமிழ்படங்களின் சாபம் போல இந்த 2 1/2 மணி நேரம் என்பது...
ஒரு சிறிய திருத்தம்: படத்தின் ஒரு காட்சியில், பிண்ணனியில் அண்ணாமலை திரைப்பட போஸ்டரை காட்டியதை நினைவு கூர்ந்து கதை நடக்கும் காலகட்டம் 1992 என்று கணித்திருந்தேன். ஆனால் சக்திமான் தொலைக்காட்சி தொடர் 1997ம் ஆண்டுதான் தொடங்கப்பட்டது. எனவே கதை நடக்கும் காலகட்டம் 1997க்கு அப்புறம் தான் :)
Post a Comment