அன்புள்ள வலைப்பூவிற்கு,
நிகழ்வாரத்தில் நான்கைந்து லோ-பட்ஜெட் படங்கள் வெளிவந்திருப்பது
போல தெரிகிறது. எனக்கும் கடல்லயே இல்லாத ‘மீன்’ கிடைத்திருப்பதால் ஏதாவதொன்றை பார்த்துவிடும்
நோக்கத்தோடு செய்தித்தாளை புரட்டினேன். பனிவிழும் மலர்வனம் என்றொரு படம். போஸ்டரை
பார்த்ததும் முதலில் லைப் ஆஃப பையை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுகிறார்கள் என்று
நினைத்துவிட்டேன். அதையே தேர்ந்தெடுத்துவிடலாம் என கிட்டத்தட்ட முடிவெடுத்துவிட்ட
நிலையில் நல்லவேளையாக தெகிடி ட்ரைலர் பார்த்தேன். அந்த கணமே தெகிடியை பார்த்துவிடுவதென்று
தீர்மானித்துவிட்டேன்.
அசோக் செல்வனுக்கு உளவு வேலை பார்ப்பதில் பேரார்வம். சென்னையில் ஒரு
துப்பறியும் நிறுவனத்தில் பணிக்கு சேர்கிறார். நிறுவனம் சார்பாக சில மனிதர்களை
பற்றி தகவல் சேகரித்து தருகிறார். நிறுவனம் ஜனனியை உளவு பார்க்கச் சொல்கிறது. ஆனால்
அசோக் ஜனனியை காதலிக்கத் துவங்கிவிடுகிறார், ஜனனியும். மறுபுறம், அசோக் உளவு
பார்த்த நபர்கள் ஒவ்வொருவராக விபத்தில் இறக்கிறார்கள். அவை கொலை என்று அசோக்
கண்டுபிடிக்கிறான். அப்படியென்றால் ஜனனியின் கதி என்ன...? யார், எதற்காக கொலை
செய்கிறார்கள்...? என்பதே மீதிக்கதை.
அசோக் செல்வனுடைய வளர்ச்சி கவனிக்கத்தக்கது. மனிதர் ஆரம்பத்தில் சிறுசிறு
வாய்ப்புகளை தேடியலைந்திருக்கிறார். நல்லவேளையாக அவருக்கு அப்படிப்பட்ட வேடங்கள்
அதிகம் கிடைக்கவில்லை. நலன் குமாரசாமியின் சூது கவ்வும் படத்தில் வாய்ப்பு
கிடைத்து, தற்சமயம் கதாநாயக அந்தஸ்து பெற்றுவிட்டார். ஒருவேளை அவர் கதைகளை கவனமாக
தேர்ந்தெடுக்கிறார் என்றால் வாழ்த்துகள். தொடர்ந்து அதையே செய்யுங்கள். தற்செயலாக
அமைந்ததென்றால் கவலை வேண்டாம், சரியான பாதையில் போய்க் கொண்டிருக்கிறீர்கள்.
தெகிடியில் அசோக் செல்வனுக்கு ஈயம் பூசியும் பூசாதது போல ஹீரோயிசம் உள்ள வேடம்.
ஒரு காட்சியில் ஜெயபிரகாஷை முன்னே விட்டு பின்னால் அசோக் வருகிறபோது அரங்கத்தில்
விசில் சத்தத்தை கேட்க முடிந்தது. ரசிகைகளை பெற்றுத் தரக்கூடிய முகம்
வாய்த்திருக்கிறது அசோக் செல்வனுக்கு. சரியான வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டால்
அஜித் அளவிற்கு உயரம் தொடலாம்.
கதாநாயகி ஜனனி அய்யர் – அய்யய்யேர் ! சாமிகளா... உங்களுக்கு கோடம்பாக்கத்தில்
வேறு கதாநாயகியே கிடைக்கவில்லையா...? படத்தில் ஜனனிக்கு சிறிய அளவிலான வேடம்தான்.
முதல் பாதியில் ஒருசில காட்சிகள், கொஞ்சம் காதல், இரண்டாம் பாதியில் அவ்வப்போது தலை
காட்டுகிறார், அப்புறம் வழக்கம்போல கிளைமாக்ஸ், அவ்வளவுதான். இதைச் செய்ய ஜூனியர்
ஆர்டிஸ்டுகள் யாரையாவது நடிக்க வைத்திருந்தால் கூட நான் வருத்தப்பட்டிருக்க
மாட்டேன். உண்மையில் ஜனனியுடைய வேடம் சில இடங்களில் ரசிக்கக்கூடியது. ஒரு
காட்சியில், நீங்க சின்னச்சின்ன விஷயத்துக்கெல்லாம் ஃபீல் பண்ணுவீங்களா’ன்னு
அசோக் கேட்கிறார். அதற்கு ஜனனி, வாழ்க்கை ரொம்ப சின்னது. அதில் சின்னச் சின்ன
விஷயங்களையெல்லாம் ரசிக்கணும் என்கிறார். ஆனால் அதைச் சொல்வது சிறிய அளவில் கூட ரசிக்க முடியாத ஜனனி என்பதைத்தான்
ஏற்றுக்கொள்ள முடியவில்லை. குறைந்தபட்சம் க்ளோஸப் காட்சிகளையாவது தவிர்த்திருக்கலாம்.
ப்ச்...!
சினிமா விருது விழாக்களில் சப்போர்டிங் ரோல் என்று ஒன்றைச்
சொல்வார்களே அந்த பதத்திற்கு பொருத்தமான வேடத்தில் காளி (அசோக்கின் நண்பராக
நடித்திருப்பவர்). மேலோட்டமாக பார்க்கும்போது சாதாரண வேடம் போல தெரியும் இவர்
மட்டும் இல்லையென்றால் இயக்குநர் திணறியிருக்கக்கூடும். பல காட்சிகளில்
நாயகனுக்கும், பார்வையாளர்களுக்கும் இடையேயான உரையாடல் காளியின் ஊடாக
நடைபெறுகின்றன. வில்லாவில் நண்பராக வரும் ராஜேஷை போல அல்லாமல் தேவைக்கேற்ப
நடித்திருக்கிறார். சைலேஷ் வேடத்திற்கு புரஃபெஷனல் தோற்றம் கொண்ட வேறு யாரையாவது
நடிக்க வைத்திருக்கலாம். ஜனனியின் தோழியாக வரும் அந்த கருப்பழகி கவனிக்கப்பட
வேண்டியவர்.
பாடல்களில் யார் எழுதியதோ, விண்மீன் விழிகள் இரண்டும் ஹிட்டடிக்கும்.
மற்றவை அவ்வளவாக ஈர்க்கவில்லை. எல்லா பாடல்களும் ஏறத்தாழ ஒரே சாயலில் இருப்பது போல
தோன்றுகிறது. முடிவாக, அறிமுக இசையமைப்பாளர் நிவாஸ் பிரசன்னா குப்பனோ சுப்பனோ
இல்லை என்பது மட்டும் நிச்சயம். ஜெயகுமாருக்கும் அசோக்குக்கும் இடையே நடைபெறும் ஒரு
சிறிய சண்டைக்காட்சி நேர்த்தியாக அமைந்திருந்தது.
படத்தின் டைட்டிலை என்னால் சுலபமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தெகிடி
என்றால் சூது என்று அகராதியில் தேடி கண்டுபிடித்தேன். இருக்கட்டும். ஒரு நல்ல
தமிழ் பெயரை தேடியெடுத்து சூட்டியமைக்காகவும், எங்களுக்கு
அறிமுகப்படுத்தியதற்காகவும் பாராட்டுகள். ஆனால் அந்த டைட்டிலே படத்திற்கு
வரவேண்டிய கூட்டத்தை குறைத்திருப்பது அசம்பாவிதமானது. யாரிடமாவது தெகிடி என்று
சொன்னால் தமிழ் படமா என்றுதான் முதலில் கேட்கிறார்கள். சமூக வலைதளங்களில் நிறைய
பேர் தெகிடி என்றால் என்னவென்று கேட்டுத் தெரிந்துகொள்வது மகிழ்ச்சியான
விஷயம்தான். ஆனால் அவர்கள் கேட்டுத் தெரிந்துகொண்டு படம் பார்க்க வருவதற்குள்
அடுத்த வார படங்கள் வெளியாகியிருக்கும். இயக்குநர் ரமேஷ் அடுத்த படத்திற்கு பெயர்
சூட்டும்போது கவனத்தில் கொள்ளவும்.
படத்திற்கு பெரிய அளவில் விளம்பரம் செய்ததாக தெரியவில்லை. அதுவே கூட ஒரு
பலம்தான். அதிக எதிர்பார்ப்பில்லாமல் பார்த்ததும் தெகிடியை பிடித்துவிடுகிறது. ஆங்கிலத்தில்
வெளிவரும் ஷெர்லாக் ஹோம்ஸ் பாணி என்கிறார்கள். நான் ஷெர்லாக் ஹோம்செல்லாம்
பார்த்ததில்லை. என்னளவில், இரண்டு மணி நேர படம். அதில் நடுவே எந்த இடத்திலும்
தொய்வில்லாமல் விறுவிறுவென போகிறது என்ற வகையிலும் தமிழில் சமீபத்தில் அதிகம்
வெளிவராத ‘க்ரைம் மிஸ்ட்ரி’ வகையறா என்பதாலும் பிடித்துவிட்டது. க்ளைமாக்ஸில்
ட்விஸ்ட் வேண்டிய கட்டாயத்தில் வைக்கப்பட்டுள்ள காட்சி சற்று சலிப்பை ஏற்படுத்தியது
உண்மைதான். அது சற்று எளிதாக கண்டுபிடிக்கக்கூடிய ட்விஸ்டும் கூட. எனினும்
ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது தெகிடி தமிழ் சினிமா ரசிகர்கள் தவறவிடக்கூடாத
படம்...!
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
6 comments:
அப்புறம் ரசிகரே அத பத்தி :)
பிரபா,
//படத்தின் டைட்டிலை என்னால் சுலபமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தெகிடி என்றால் சூது என்று அகராதியில் தேடி கண்டுபிடித்தேன். இருக்கட்டும். ஒரு நல்ல தமிழ் பெயரை தேடியெடுத்து சூட்டியமைக்காகவும், எங்களுக்கு அறிமுகப்படுத்தியதற்காகவும் பாராட்டுகள். ஆனால் அந்த டைட்டிலே படத்திற்கு வரவேண்டிய கூட்டத்தை குறைத்திருப்பது அசம்பாவிதமானது. //
இப்படி வித்தியாசமா பேரு வைப்பதே "கவனத்தை" ஈர்க்கத்தான் இந்த பேரு கூட வைக்காட்டி ,இப்படி ஒரு படம் வந்ததே பலரின் கவனத்துக்கும் போயிருக்காது. ஏன் எனில் குறைவான செலவில் எடுக்கப்பட்டு ,பெரிய விளம்பரம் எல்லாம் இல்லையே.
எனவே என்னப்பா இது "தெகிடி" என அறிய முயல்வார்கள் இல்லைனா மனசில் பதியும். இப்படி பேரு வைக்கவே பலப்பேரிடம் ஆலோசனைக்கேட்டு அலையிறாங்க உதவி இயக்குனர்கள் அவ்வ்!
# தெகிடியின் பொருள் என்னனு டேக் லைனில் "the dice rolls" எனப்போட்டு சொல்லிடுறாங்களே!
# கொரியன் டிடெக்டிவ் சீரியல் ஒன்று ,அது படமாகவும் வந்ததா கேள்வி, அதன் கதை இப்படித்தான் இருக்கும்.
டிடெக்டிவ் விசாரிச்சவங்க எல்லாம் வரிசையா சாகவே ,அவங்களை கொன்னது டிடெக்டிவ்னு போலீஸ் சந்தேகப்படும்,எனவே உண்மையான குற்றவாளியை கண்டுப்பிடிக்கிறது கதை.
காதலியா வரப்பொண்ணு வில்லியாகிடும்( காதலியா எனத்தெரியல,கூட வரப்பொண்ணு) ஆனால் அந்த பொண்ணும் உண்மையான வில்லியல்லனு போகும், பார்ட் பார்ட்டா போகுது முழுசா பார்க்கலை.
யு டியூபில் இருக்கு. சுட்டி தேடிப்பார்க்கிறேன்.
தெகிடின்னா திமிர் பிடிச்ச பொண்ணுன்னு அர்த்தம் எங்க ஊர்ல..தெகிடி மாதிரி போறா பாருன்னு சொல்லுவாங்க(திருவாரூர்மாவட்டம்-முஸ்லீம்களின் பேச்சு வழக்கு)
லோகேஷ்,
நான் ஆரூர் மூனாவிடமிருந்து வாங்கும் புத்தகங்கள் தாள்பிரதிகள். PDF கோப்பு அல்ல.
அந்த புத்தகங்கள் உங்களுக்கு தேவைப்பட்டால் அரூர் மூனாவை தொடர்பு கொள்ளவும். நான் படித்து முடித்ததும் அவரிடம் கொடுத்துவிடுவேன். நீங்கள் வாங்கிக்கொள்ளலாம்.
வவ்வால்,
இந்த கவன ஈர்ப்பு சமாச்சாரம் க்ளாஸ் ரசிகர்களிடம் தான் ஒத்துவரும். மற்றவர்கள் சுலபமாக புறக்கணித்து விடுவார்கள். தேடி அர்த்தம் கண்டுபிடிக்கும் அளவிற்கெல்லாம் நிறைய பேருக்கு பொறுமை கிடையாது. இப்போது கூட பாருங்கள் தெகிடி என்றால் என்னவென்று நிறைய பேர் சமூக வலைதளங்களில் கேட்பதாக எழுதியிருந்தேன். கூகிளில் போட்டு தேடினால் தெரிந்துக்கொள்ளலாம். ஆனால் அதற்கெல்லாம் நம்மாட்களுக்கு பொறுமை இருப்பதில்லை.
ஷபி,
அழகான பெண்களை ஜிகிடி என்று சில சொல்லக் கேள்விப்பட்டதுண்டு.
Post a Comment