அன்புள்ள வலைப்பூவிற்கு,
நான் சலூனுக்கும் மருத்துவமனைக்கும் அடிக்கடி செல்வதில்லை. வருடத்தில் ஒன்றிரண்டு முறை 'தலை' காட்டினால் பெரிய விஷயம். எப்போதாவது உடலில் ஏதாவது கோளாறு ஏற்பட்டாலும் கூட, 'டாக்டர்கிட்ட
போனா ஒரே வாரத்தில் சரியாகிடும். இல்லன்னா ஏழு நாள் நீடிக்கும்’ என்று
வியாக்கியானம் பேசக்கூடிய ஆள். என்னைப் பொறுத்தவரையில் டோலோ 650 ஒரு சர்வரோக நிவாரணி.
என்ன ஆனாலும் ஒரு டோலோவை விழுங்கிவிட்டு உறங்கி எழுந்தால் சரியாகிவிடும் என்று
திடமாக நம்புபவன். ஆமாம், ஏழு நாள் வரை
பிரச்சனையில்லை. ஆனால் எட்டாவது நாள் ஆகிவிட்டால் உடலில் ஏற்பட்ட கோளாறு மனதிலும்
தொற்றிக்கொள்ளும். வேறு வழியில்லாமல் மருத்துவமனைக்கு ஓடுவேன். அப்படித்தான்
சமீபத்தில் ஒருநாள் செல்ல வேண்டியதாகி விட்டது.
மருத்துவரின் மையத்தில் டோக்கன் ஒழுங்குமுறையெல்லாம் கிடையாது. நாம்
போனதும் கடைசியாக வந்தது யாரென்று கேட்டுவிட்டு அமர்ந்துகொள்ள வேண்டும். அந்த
கடைசி ஆள் எப்போது செல்வார் என்று காத்திருந்து அவருக்கு அடுத்ததாக உள்ளே செல்ல
வேண்டும். ஆனால் நம்முடைய நேரம் எப்படி இருக்கும் என்றால், சரியாக நமக்கு பின்னால்
கைக்குழந்தையோடு ஒரு அம்மா வருவார். கொயந்தைக்கு உடம்பு சரியில்லை என்று இறைந்து
மன்றாடுவார். சரி போகட்டும் என்று விடுவோம். அடுத்தது ஒரு நடுத்தர வயது பெண்மணி பத்து கிலோமீட்டர்
மாரத்தான் ஓடிவிட்டு வந்தது போல மூச்சிரைத்துக் கொண்டே வருவார். ஸ்ஸ்ஸ்ஸ்ஸபா
ம்ம்ம்ம்மா முடியலயேம்மா என்று தமக்குள் முனகிக்கொள்வார். உடனே ஒரு சோடாவை வாங்கி
புளிச் என்று அவருடைய முகத்தில் அடிக்காவிட்டால் ஏதாவது விபரீதம் ஆகிவிடுமோ என்று
நமக்கே பயமாக இருக்கும். அவரை சகல மரியாதையோடு நமக்கு முன்பாக அனுப்பி வைப்போம்.
அதற்குள் நமக்கு அடுத்து போக வேண்டியவர்கள் எல்லாம் நாங்க போன மாசமே வந்து
காத்திருக்கிறோம் தெரியுமா ? என்று நம்மை சத்தம் போட ஆரம்பிப்பார்கள். போய்த்
தொலைங்க என்று ஒவ்வொருவரையாக அனுப்பிக் கொண்டிருக்கும்போது யாரேனும் ஒரு இறக்க
சுபாவி புன்னகையுடன் நீங்க போங்க சார் என்பார். அவர் வேறு யாருமில்லை நம்மைப்
போன்ற இன்னொரு ஈனா வானா தான்.
உள்ளே போனால் அங்கே வீற்றிருப்பார் கந்தன். நியாயமாக பார்த்தால்
சேவித்துக்கொள்ள வேண்டும். எங்கள் குடும்ப மருத்துவர். எனது தாத்தாவில் துவங்கி
எனது மகள் வரை மருத்துவம் பார்த்துவிட்டார். சைல்ட் ஸ்பெஷலிஸ்ட். (இப்போது
புரிகிறதா நான் ஏன் அவரிடம் மருத்துவம் பார்க்கிறேன் என்று !). எனது பதின்பருவ
வயதில் அவரிடம் செல்லும்போது நானொரு அடல்ட் என்று காட்டிக்கொள்வதற்காகவே
தோள்பட்டையில் ஊசி குத்திக்கொள்வேன். இப்பொழுதெல்லாம் யாரும் யாருக்கும்
தோள்பட்டையில் ஊசி போடுவதாக தெரியவில்லை. புட்டம்தான். ஜெண்டாமைஸின், கேராமைஸின்
என்று (வயது முதிர்ந்த) செவிலியிடம் மருத்துவ மொழியில் ஏதோ சம்பாஷித்தார். அந்த
அம்மாள் எனது இரண்டு புட்டங்களையும் பஞ்சர் ஆக்கினார்.
வழக்கமாக என்னுடைய சிகை அலங்காரத்தைப் பற்றி ஏதாவது கோக்கு மாக்காக
கேள்வி கேட்பார் கந்தன். நானும் கோக்கு மாக்காக ஏதாவது பதிலளிப்பேன். இந்தமுறை அது
இல்லாததால் ‘ப்ளாக்’ பற்றி கேட்டார். அவரும் முன்பொரு காலத்தில் ‘ப்ளாக்’
வைத்திருந்ததாகவும் அதனை பராமரிக்க நேரமில்லை என்றும் கொஞ்சமாக வருத்தப்பட்டுக்
கொண்டார்.
இந்த இடத்தில் மருத்துவர் பற்றி கொஞ்சம் முன்னுரை வேண்டும்.
ஜிகர்தண்டாவில் சங்கிலிமுருகன் குருவம்மா என்றொரு கதை வைத்திருப்பார். அது அந்த
காலத்தில் வெளிவந்திருந்தால் பெரிய ஹிட் ஆகியிருக்கும் என்பார். உண்மையிலேயே
குருவம்மா என்றொரு திரைப்படம் வெளியாகியிருக்கிறது என்று கார்த்திக் சுப்பராஜிற்கு
தெரிந்திருக்காது. 2002ல் லிவிங்க்ஸ்டன், தேவயாணி நடிப்பில் வெளிவந்தது.
அத்திரைப்படத்தை திரையரங்கில் பார்த்த சொற்ப நபர்களில் அடியேனும் ஒருவன்.
பிளாட்பார வாசிகளுக்கு வீட்டின் தேவையைப் பற்றி உணர்த்த வந்த படம் அது.
அப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர்தான் மருத்துவர் கந்தன். (இன்னொருவர் தற்சமயம்
ச.ம.க சார்பாக நாங்குநேரி ச.ம.உ.வாக பணியாற்றும் எர்ணாவூர் நாராயணன்). அது
மட்டுமில்லாமல் அதற்கு முன்பே மருத்துவர் ‘நையாண்டி மேளம்’ என்கிற தமது கவிதை
தொகுப்பை வெளியிட்டிருக்கிறார்.
பேச்சு ‘ப்ளாக்’ வரை சென்றுவிட்டதால் மருத்துவரிடம் நையாண்டி மேளம்
ஒரு காப்பி கிடைக்குமா ? என்றேன். தற்சமயம் கைவசம் இல்லை. எடுத்து வைக்கிறேன்,
அடுத்த முறை வரும்போது வாங்கிக்கொள்ளுங்கள் என்றார். கிழிந்தது. அடுத்தமுறை நான்
அவரிடம் செல்ல மாதங்கள் ஆகக்கூடும். சரி என்று சொல்லிவிட்டு திரும்பினேன்.
தற்செயலாக திருவொற்றியூர் பொது வர்த்தகர் சங்க நூலகத்திற்கு சென்றபோது
அங்கே நையாண்டி மேளம் கிடைத்தது. பதினைந்து வருடங்களுக்கு முன்பே ஒரு
மருத்துவர் எழுதிய கவிதைகள் என்பதால் அதனை நியாயத்தராசில் எல்லாம் வைக்க மனம்
ஒப்பவில்லை.
மருத்துவர் எழுதிய மருத்துவக் கவிதை ஒன்று :-
உள்ளங்கையில் வெறுமனே
விளையாடிக் கொண்டிருந்தது
இருபத்தைந்து காசு வில்லை
திடீரெனத் தாவிவிட்டது
குழந்தையின் வயிற்றுக்கு
பதைத்துப் போனாள் தாய்
மூக்குத்தியைத் தடவியபடி
‘விழுங்கிவிட்டான் மருத்துவன்
இருபத்தைந்து ரூபாய் !’
இன்னொன்று :-
கருவுற்றாள் மனைவி என்றதுமே
நினைவெல்லாம் அவள் உருவமேயாகி
காலையில் தாமதமாய் கண்விழித்து
நேரத்தே துயில் கொளும்வரை
கண்காணித்து
செலவைக் குறைத்து
சிக்கன உண்டியலில் சேர்த்து
வயிற்றில் வலியென்றதும்
தன் நெஞ்சில் வலி கொண்டு
ஆட்டோ பிடித்து
மருத்துவமனை சேர்த்து
மருந்துக்கலைந்து
மூட்டையாய் வாங்கிக்கொடுத்து
வெளியில் காத்திருந்து
வயிறு காய்ந்து
ஒரு வழியாக
ஒரு வழி யாக
குழந்தை பிறந்ததுமே
நிம்மதி மூச்சுவிட்டு\
மருத்துவமனை
நீங்கும் வேளை
கட்டணப் பணத்தை
பெட்டியோடு கொடுத்திட்டு
தாயையும் சேயையும்
வாடகைக் காரினில் சுமந்து
வீடு திரும்பினால்
வாசலிலே வரவேற்பு
பிரசவம் பெண்ணுக்கு
வேதனை பெண்ணுக்கு மட்டுமா !
மேலதிக தகவல்கள்:
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
5 comments:
டாக்டர் கந்தன் கவிதையிலும் கலக்கி விட்டார்.
Dolo 650 ஹை டோசேஜ் பாரசிடமால். இதை பயன்படுத்தினால் தலைவலியோ காய்ச்சலோ உடனே நிவாரணம் கிடைத்துவிடும். அடிக்கடி பயன்படுத்தினால் இதைவிட குறைந்த டோசெஜ் மருந்துகள் பயன் தராது. para 650 யும் இந்த வகையே.
ஆமாம் ஏன் இப்போதெல்லாம் நிறையப் பேர் நீங்கள் ரோபாட் இல்லை நிருப்பிக்க சொல்கிறீர்கள்?
பதிவு அருமை...ஆமா உங்க வீட்ல தான் ஏற்கனவே ஒரு டாக்டர் இருக்காங்களே....அப்பறம் என்ன கொள்ள வந்துச்சி உனக்கு...
டாக்டர் திரு. கந்தன் அவர்களின் கவிதைகள் அருமை.
நானும் டோலோ 650 தான் போடுவது வழக்கம்.
ஊரில் இருந்து வாங்கி வந்து வைத்திருப்பேன்... கடுமையான தலைவலி வந்தால் மட்டுமே உபயோகிப்பது வழக்கம்.
டாக்டரின் கவிதைகள் நல்லாத்தான் இருக்கு! பகிர்வுக்கு நன்றி!
Post a Comment