அன்புள்ள வலைப்பூவிற்கு,
புத்தாண்டு உற்சாகமாகவும் உணர்ச்சிமயமாகவும் துவங்கியிருக்கிறது.
உயிர்மையின் பத்து புதிய நூல்கள் கடந்த சனியன்று (03/01/2014) அண்ணா சாலை புக்
பாயிண்டில் வெளியானது. அவற்றில் இரண்டு எனது விருப்பப் பட்டியலில் உள்ள
எழுத்தாளர்களுடையது. அவ்விருவரும் வலையுலகின் கணேஷ் – வசந்த் போன்றவர்கள்
(இருவரில் யார் வசந்த் என்பதற்கு அரங்கிற்கு வந்த ரசிகைகள் சாட்சி). ஒன்று, ‘லக்கிலுக்’
யுவகிருஷ்ணா எழுதிய சரோஜாதேவி. மற்றொன்று, அதிஷாவின் ஃபேஸ்புக் பொண்ணு.
கொஞ்சம் தாமதமாகவே புக் பாயிண்டுக்கு சென்றோம். சூழ்நிலை
ஒத்துழைத்தால் சில புகைப்படங்கள் எடுக்கலாம் என்று கேமராவை (Canon powershot
SX150) எடுத்துச் சென்றிருந்தேன். அங்கே சென்றால், பிரபு காளிதாஸ், உமா மகேஸ்வரன்
லாவோ ஸு, சுதர்ஸன் ஹரிபாஸ்கர் போன்ற புகைப்பட ஜாம்பவான்கள் ஆளுக்கொரு SLR வைத்து
சுட்டுத் தள்ளிக்கொண்டிருந்தார்கள். போதாமைக்கு ஒருவர் வீடியோவும் எடுத்துக்கொண்டிருந்தார். கமுக்கமாக அமர்ந்துக்கொண்டேன்.
வானொலி தொகுப்பாளர் கண்மணி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துக்
கொண்டிருந்தார். எதிர்பார்த்த லவ் குரு வரவில்லை. எங்கெங்கு காணினும் பிரபலங்கள். வெளியிட
வேண்டிய புத்தகங்கள் வந்து சேரவில்லை. நீதியரசர் சந்துரு வேறு அவுட் ஆஃப் சிலபஸில்
ஏதோ பேசிக்கொண்டிருந்தார். கொஞ்ச நேரம் போரடிக்கத் தான் செய்தது.
சற்று நேரத்தில் வெளியே போன் பேசுவதற்கு சென்றுவந்த நண்பர் ‘புக்ஸ் வந்துடுச்சு’
என்ற இன்பத்தேனை என் காதில் பாய்ச்சினார். என்னது மொளகா பஜ்ஜி போட்டுட்டாங்களா ?
என்று பாய்ந்தோடி இரண்டு புத்தகங்களையும் முதல் ஆளாக வாங்கினேன், அதுவும் மேடையில்
புத்தகம் வெளியிடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பே.
இருவரிடமும் ஆட்டோகிராப் வாங்க வேண்டும். எங்கே பேனா இல்லை என்று
சொல்லிவிடுவார்களோ என்று எண்ணி அதையும் வீட்டிலிருந்தே கொண்டு வந்திருந்தேன்.
வெளியீடு முடிந்து எழுத்தாளர்கள் மேடையிலிருந்து இறங்கியதும், இருவரிடமும்
ஆட்டோகிராப் வேண்டி நின்றேன். கையொப்பத்திற்கு ஐயாயிரம் கேட்காத நல்லிதயம் கொண்டவர்கள். அதிஷா சுருக்கமாக ‘அன்புடன் அ’ என்று முடித்துக்கொண்டார். யுவகிருஷ்ணா
அவரிடமிருந்த சிகப்பு மை நிரப்பப்பட்ட ஹீரோ பேனாவால் ஏதோ எழுதி கையொப்பமிட்டார்.
ஆறு புத்தகங்கள் எழுதியவருக்கு கூட ஆட்டோகிராப் போடும்போது கை நடுங்கும் என்று
நான் உணர்ந்துகொண்ட தருணம் அது. யுவகிருஷ்ணா எனக்கான ஆட்டோகிராபில் என்ன எழுதினார்
என்பதை தட்டச்சினால் என் கைகளும் நடுங்கக்கூடும் (பார்க்க படம்). உணர்ச்சிமயமான தருணத்தில்
எனது தகுதிக்கு மீறிய அப்படியொரு வார்த்தையை யுவகிருஷ்ணா எழுதிவிட்டாலும் கூட,
அதனால் நான் கொண்ட மகிழ்ச்சி அளவில்லாதது. என்ன ஒன்று, வீட்டில் காட்ட முடியாத புத்தகம் என்பது தான் சிறிய வருத்தம்.
ஆக, ஃபேஸ்புக் பொண்ணு, சரோஜாதேவி ஆகிய புத்தகங்கள் அதனதன் ஆசிரியர்கள்
‘முதல்’ கையொப்பமிட்ட பிரதிகள் என்னிடம் உள்ளன. இதன் மதிப்பு சில வருடங்களுக்கு
பிறகு லட்சங்களில் இருக்கக்கூடும்.
ஃபேஸ்புக் பொண்ணை இன்னும் வாசிக்கவில்லை. சரோஜா தேவியை பொறுத்தவரையில்
ஏற்கனவே சொன்னதுபோல் எல்லாம் வலைப்பூவில் வாசித்த கட்டுரைகள். ஆயினும், என்னைப்
பொறுத்தவரையில் ஒரு சிலபஸ் புத்தகம் போல பாதுகாக்க வேண்டியது. சுஜாதா நாவல்களை
படிக்கும்போது வெறுமனே வாசகனாக இல்லாமல் நாமும் எழுத வேண்டுமென்ற உந்துதல் ஒன்று
ஏற்படும். யுவகிருஷ்ணாவின் எழுத்துகளும் அப்படித்தான். அவருடைய சொல்லாடல்கள் ‘எழுச்சி’யூட்டுகின்றன.
என்றும் இணைய சுஜாதா அவர் மட்டும்தான் !
ஒரு ஆறுதலான விஷயம், தினகரனின் முதன்மை ஆசிரியர் சில நாட்களுக்கு
முன்பு சரோஜா தேவி புத்தகத்தைப் பற்றி எழுதியிருந்தார். அதில் புத்தகத்தில் உள்ள
தலைப்புகளை வரிசையாக பட்டியலிட்டு இறுதியாக ‘காஜல் அகர்வால்’ என்று
முடித்திருந்தார். அதை வாசித்த நான்கூட கொஞ்சம் பொருமினேன். இப்போது இல்லை. அவர்
குறிப்பிட்டுள்ள தலைப்புகளில் காஜல் அகர்வால் உட்பட சுமார் ஏழு கட்டுரைகள்
புத்தகத்தில் இல்லை.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
11 comments:
இணைய சுஜாதா - இதைதான் ரொம்ப முன்னாடி சொன்னேன்.... நீங்க எழுதுறதயே வுட்டுடீங்க....எதையுமே சொல்ல பயமா இருக்கு இப்போ...
Ravi - rparaman from Canada
Hopefully see you this year. You are a great writer.
ஏலே...தம்பி முகவரியும் பணமும் அனுப்பினால் புத்தகத்தை நான் சொல்லுற முகவரிக்கு அனுப்ப முடியுமா????
இந்த நிகழ்ச்சிக்கு நண்பர் ஒருவர் அழைத்திருந்தார். சோம்பல் காரணமாக வரவில்லை. வந்திருந்தால் யார் வசந்த் என்று தெரிந்திருக்கும் சிறு வயதில் இருந்தே கிருஷ்ணாவை தெரியும். அவருடைய அண்ணனும் நானும் ஒன்றாகப் படித்தவர்கள். அதிஷாவை நேரில் பார்த்ததில்லை
சரோஜா என்ற பெயரில் ஏதோ இருக்கிறது.
சமீபத்தில் புதிய தலைமுறை இதழில் கடிதப் போட்டி ஒன்றை நடத்தினார்கள்
என்னைக் கவுத்துப் போட்ட சரோஜாவுக்கு"என்ற சென்னை தமிழில் எழுதிய கடிதம் தேர்ந்தெடுக்கப் பட்டது. உங்கள் மனம் கவர்ந்த அதிஷா, யுவகிருஷ்ணா இருவருக்கும் வாழ்த்துக்கள்.
ராஜ் கம்மெண்டில் ககுறிப்பிட்டது போல பிரபாகரனுக்கும் நல்ல எழுத்து நடை கைவரப் பெற்றிருக்கிறது. முயற்சி செய்தால் எழுத்துலகில் ஒரு ரவுண்டு வரலாம்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்
ஆட்டோ கிராப் வாங்கி அசத்தி இருக்கீங்க..!
இணைய சுஜாதா ன்னு சொல்றதுக்கு ஒரு மனசு வேணும்.
அது யுவகிருஷ்ணாகிட்ட இருக்கு...!
வழக்கம்போல படித்து ரசிக்கும்படியான பதிவு. வாழ்த்துகள் பிரபாகரன்..!
நன்றி பிரபாகரன்.
உங்களுக்கு துள்ளலான எழுத்துநடை இருக்கிறது. முன்பே பல சந்தர்ப்பங்களில் இதை நண்பர்களிடம் சொல்லியிருக்கிறேன். சுஜாதாவின் அடையாளமே அந்த துள்ளலான எழுத்து நடைதான்.
// அதில் புத்தகத்தில் உள்ள தலைப்புகளை வரிசையாக பட்டியலிட்டு இறுதியாக ‘காஜல் அகர்வால்’ என்று முடித்திருந்தார். அதை வாசித்த நான்கூட கொஞ்சம் பொருமினேன். இப்போது இல்லை. அவர் குறிப்பிட்டுள்ள தலைப்புகளில் காஜல் அகர்வால் உட்பட சுமார் ஏழு கட்டுரைகள் புத்தகத்தில் இல்லை. //
100 ரூபாய் விலையில் புத்தகத்தை தரவேண்டுமென்றால் நிறைய குறைக்க வேண்டியிருந்தது. எனவே கடைசிநிமிடத்தில் பல பக்கங்களை தியாகம் செய்துவிட்டேன்.
இப்படி வச்சுக்கலாம்.. ஒருத்தர் பெரிய சுஜாதா, இன்னொருத்தரு சின்ன சுஜாதா...:-)))))))))
சுஜாதாவை எனக்கு சுத்தமாகப் பிடிக்காது. ஆத்திகனாக இருந்துகொண்டு நாத்திக வேடம்போட்டு அலைந்தவர்..பெண்ணடிமைத்தனத்தை ரசித்தவர் ஆனால் பெண்ணியவாதியாக வேடம் போட்டவர்..
உங்க எழுத்து தரமானதுதான். ஆனால் உங்களுக்கு கிடைத்த இந்த "சுஜாதா பட்டம்" தான் என்னிடம் உங்க தரத்தை குறைக்கிறது..
நீங்க என் ஆர் பிரபாகரனாகவே இருக்கலாமே.. அப்படி இருந்தால்தான் சுஜாதைவைவிட ஒரு படி மேலே போக வாய்ப்பாவது கிடைக்கும்..
ரஜினி, எம் ஜி ஆர் பட்டம் பெறாத்தால்தான் இன்று "சூப்பர் ஸ்டார்" பட்டம் அவருக்கு கிடைத்தது. எம் ஜி ஆருக்கும் மேலே போய் விட்டதாகவும் பேசப்படுகிறது.
மாத்தி மாத்தி ஜால்ரா பின்னூட்டங்களாப் பார்த்து போர் அடிக்கக் கூடாதுனுதான் இது.. :)
இணைய சுஜாதா - நல்ல பெயர்...
வாழ்த்துக்கள்.
பொன் மகேஷ்,
இந்த புத்தகங்கள் இணையத்தில் கிடைக்கின்றன.
ஃபேஸ்புக் பொண்ணு - http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81-%252d-Face-book-ponnu
சரோஜா தேவி -
http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF-%252d-Saroja-Devi
யுவா,
நூறு ரூபாய்க்கு நாற்பது கட்டுரைகள் என்பதே தாராளம் தான்... சில கட்டுரைகளை நீக்க முடிவு செய்தபோது ஹோல்டன் போன்ற வேறு சில கட்டுரைகளை நீக்கியிருக்கலாம்...
இருபத்தி எட்டாவது கட்டுரையில் தனி கட்டுரையாக வர வேண்டிய இன்னொரு கட்டுரையும் சேர்ந்திருக்கிறது...
வருண்,
சுஜாதா அவரை வெளிப்படையாக நாத்திகன் என்று சொன்னதில்லை என்று நினைக்கிறேன்... பெரும்பாலும் கடவுள் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு அல்லது விஷயங்களில் பூசி மொழுகியே பதில் சொல்லியிருப்பார்... ஆன்மிகம், அறிவியல் இரண்டிலும் ஈடுபாடு கொண்டவர் என்பதால் கூட அப்படியொரு முரண் இருக்கலாம்...
//அவ்விருவரும் வலையுலகின் கணேஷ் – வசந்த் போன்றவர்கள்//
well said
Post a Comment