அன்புள்ள வலைப்பூவிற்கு,
ஜே.கே – உண்மையில் எனக்கு ஜே.கே பார்க்கும் ஆர்வம்
துளி கூட இல்லை. C2Hன் முதல் முயற்சியை ஆதரிக்கும் ஒரு சமிக்ஞையாக குறுந்தகடை மட்டும் வாங்கி
வைத்திருந்தேன். பிறிதொரு சமயத்தில் படத்தை ஓடவிட்டு நகம் வெட்டுவது, காது குடைவது
மற்றும் ஹாலில் நடை பயில்வது போன்ற உபயோகமான அலுவல்களுக்கு மத்தியில் கொஞ்சம்
படமும் பார்த்தேன்.
பொதுவாக விமர்சகர்கள் கழுவி ஊற்றிய ஒரு
படத்தை எந்த எதிர்பார்ப்புமின்றி பார்க்கும்போது, படம் ஒன்றும் அவ்வளவு
மோசமில்லையே என்று தோன்றும். கத்தி, லிங்கா படங்களை நான் பின்னாளில் பார்த்தபோது
எனக்கு அவை அவ்வளவாக ஏமாற்றம் அளிக்கவில்லை. ஜே.கேவும் அந்த லிஸ்ட் தான்.
ஏதோ வண்டி ஓடுது என்று
சலித்துக்கொள்பவர்களுக்கு ஒரு புத்துணர்ச்சி தரக்கூடிய படம். என்ன ஒன்று, கேன்சர்,
ப்ரைன் டியூமர் போன்ற இத்யாதிகளை இன்னமும் பிடித்து தொங்கிக்கொண்டிருப்பதை
தவிர்த்திருக்கலாம். சித்தார்த், ப்ரியா ஆனந்த் அப்புறம் இதே நித்யா நடித்த
நூற்றியெண்பது படம் அங்கங்கே ஞாபகத்துக்கு வருகிறது.
அபாரமான தரம் என்பதாலும், விலை வெறும் ஐம்பது ரூபாய் மட்டும் தான் என்பதாலும் படம் சுமாருக்கு கீழ்தான் என்பதை மறந்துவிட்டு தாராளமாக ஜே.கே டிவிடியை வாங்கலாம்.
ராஜதந்திரம் – ஏற்கனவே செத்து புதைத்த படத்தை பற்றி
எழுதுவதால் யாருக்காவது ஏதாவது நன்மை இருக்கிறதா என்று தெரியவில்லை. மீஞ்சூர்
மணியில் இந்த வாரம் வெளியான படத்தை இரண்டே நாட்களில் தூக்கி வீசிவிட்டார்கள்.
திருவொற்றியூர் திரையரங்கு ஒன்றில் ஐ’யும் வேலையில்லா பட்டதாரியும் ஓடிக்கொண்டிருக்கின்றன.
இதில் சென்ற வாரம் வெளியான படம் எம்மாத்திரம். நான் சென்றபோது என்னையும் சேர்த்து
சரியாக பதினைந்து பேர் மட்டும் திரையரங்கில் இருந்தோம்.
தமிழ் சினிமாவின் ஒரு சாபக்கேடு, ஒரு
படம் வெற்றியடைந்துவிட்டால் தொடர்ந்து அதே பாணியில் படங்கள் எடுப்பது. தற்சமயம்
ட்ரெண்டில் இருப்பது ஏமாற்றுவது, கொள்ளையடிப்பது. ஆங்கிலத்தில் இதனை heist படங்கள்
என்கிறார்கள்.
ராஜதந்திரத்தின் காட்சிகள் அப்படியே
நமக்கு அதே சாயலில் சமீபத்தில் வெளியான மற்ற படங்களை நினைவூட்டுகின்றன. எவ்வளவு
நாளைக்குத்தான் சின்ன சின்னதா அடிக்கிறது ? பெருசா அடிச்சிட்டு செட்டில் ஆயிடணும் என்கிற
வசனம் வரும்போதும், எம்.எல்.எம் மீட்டிங்கில் எல்லோருமாக சேர்ந்து கை தட்டும்போதும்
இதெல்லாம் ஏற்கனவே பார்த்த விஷயங்கள் ஆயிற்றே என்று நெருடுகிறது. உச்சகட்டமாக
நகைக்கடை நூதன கொள்ளை காட்சி சதுரங்க வேட்டையை நினைவூட்டுவது மட்டுமல்லாமல் காட்சி
படமாக்கப்பட்ட இடம் கூட அதே தானா என்று சந்தேகிக்க வைக்கிறது.
மற்றபடி, நூற்றிமுப்பது நிமிட படத்தில்
கடைசி இருபது நிமிடங்கள் வரை யார் யாருக்கு பின் அடிக்கிறார்கள் என்று எந்த
க்ளுவும் கொடுக்காமல் நகர்த்தி இருப்பது பாராட்டிற்குரியது. மிஷெல் டி’மெல்லோவை
வைத்து தெலுங்கு சினிமாவில் என்னவெல்லாம் சாகசம் செய்கிறார்கள் தெரியுமா ? இங்கே
என்னடா என்றால் அழவும், கதாநாயகனுக்கு அறிவுரை சொல்லவும் பயன்படுத்துகிறார்கள். கதாநாயகனின்
துறுதுறு நண்பராக நடித்திருப்பவர் நல்ல ரிசோர்ஸ். யாரென்று விசாரித்தால் பண்பலை
வானொலியை ஒருகாலத்தில் கலக்கிக்கொண்டிருந்த தர்புகா சிவாவாம். நல்வரவு தர்புகா
சிவா.
விமர்சனங்களை படித்துவிட்டு நல்ல
படத்தை தவற விட்ட குற்ற உணர்ச்சிக்கு ஆளாக வேண்டாம் என்று அடித்து பிடித்து கடைசி
நாளன்று திரையரங்கில் பார்த்த படம், அவ்வளவு மோசமில்லை என்றாலும் இவ்வளவு
ஆர்பாட்டங்களுக்கு பொருந்தாத ஒரு சுமாரான படமாகவே தோன்றுகிறது.
என்றும்
அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
2 comments:
ஜே.கே. பாதி பார்த்ததோட இருக்கு....
ராஜதந்திரம் விமர்சனங்கள் படித்து விட்டு படம் பார்க்க ஆர்வமாய் இருந்தேனே
Post a Comment