அன்புள்ள வலைப்பூவிற்கு,
சில வருடங்களுக்கு முன் இணையவெளியில் பரபரப்பாக பேசப்பட்ட படம் –
லூஸியா (கன்னடம்). பொதுவாக இதுபோல ஊரே சிலாகித்து கொத்து பரோட்டா போட்டுவிடும்
படங்களை பார்க்கும் ஆர்வம் மொத்தமாக வடிந்து விடுவதுண்டு. நான் இன்னமும்
‘திருஷ்யம்’ பார்க்கவில்லை. லூஸியாவை தமிழில் எடுக்கிறார்கள் என்பதில் எனக்கிருந்த
ஒரேயொரு ஆர்வம் அதன் தமிழ் தலைப்பு. (கமலின் எனக்குள் ஒருவன் சிறுவயதில் என்னை
அதிர்ச்சிக்குள்ளாக்கிய படங்களுள் ஒன்று). என்னதான் இருக்கிறது என்று லூஸியாவின்
விக்கிபீடியா பக்கத்தை திறந்தேன். சைக்காலஜிக்கல் த்ரில்லர் என்று தொடங்கியது.
அப்படியே மூடி வைத்துவிட்டேன். அதையே உங்களுக்கும் பரிந்துரைக்கிறேன். படம்
பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள் இங்கேயே நிறுத்திக்கொள்வது
உத்தமம்.
-- SPOILER ALERT –-
புராதன கால திரையரங்கு ஒன்றில் பணிபுரியும் கடைநிலை ஊழியன் விக்னேஷ்
தூக்கமின்மையால் அவதிப்படுகிறான். ஒரு சந்தர்ப்பத்தில் லூஸியா என்கிற போதை
மாத்திரைகள் அவனுக்கு கிடைக்கிறது. அதனை உட்கொண்டால் நமக்கு விருப்பமான வாழ்க்கையை
கனவுலகில் வாழலாம். அப்படி திரையரங்க ஊழியன் திரைப்பட கதாநாயகனாக கனவு காண்கிறான்.
போதும். கதை சொல்வதை நிறுத்திக்கொள்கிறேன்.
ஆரம்பத்தில் சில நிமிடங்கள் அவ்வளவு நம்பிக்கையூட்டுவதாக இல்லை.
குறிப்பாக, ஜான் விஜய் அரை கிறுக்கன் போல அறிமுகமாகும் காட்சியை பார்த்ததும்
எனக்கு எரிச்சலாகிவிட்டது. லூஸியாவை தொட்டதும் தான் நிமிர்ந்து உட்கார முடிகிறது.
அங்கிருந்து இரண்டு கிளைகளாக ஒரே சீராக நகரும் கதை இறுதியில் சில ஆச்சர்யங்களுடன்
நிறைந்த உணர்வை கொடுக்கிறது.
சித்தார்த்துக்கு இரண்டு பறக்கோடி வேடங்கள். இரண்டிலும் மிகச்சிறப்பாக
நடித்திருக்கிறார். இரண்டு வேடங்களுக்கும் இடையே காட்டும் வித்தியாசம்
வியப்பூட்டுகிறது. அதில் சினிமா ஹீரோ வேடம் சித்தார்த்துக்கு ஹோம் கிரவுண்ட்
மாதிரி. நிதானமாக அசத்தியிருக்கிறார்.
தீபா சன்னிதிவிற்கு ஒடுங்கிய கன்னங்கள். பார்ப்பதற்கு வெகு சுமாராகவே
இருக்கிறார். மேகா படத்தின் கதாநாயகி ஸ்ருஷ்டி சில காட்சிகளில் வருகிறார். முக்கிய
வேடங்களில் ஆடுகளம் நரேனும், (ஆஃபீஸ் புகழ்) உதயபானு மகேஸ்வரனும் கச்சிதம்.
இசை சந்தோஷ் நாராயண்தானா என்று சந்தேகமாகவே இருக்கிறது. பாடல்கள்
அப்படியொன்றும் பிரபலமானதாக தெரியவில்லை. பிரபலமாகவே பாடலும் ஏண்டி
இப்படி பாடலும் நன்றாக இருக்கின்றன. மற்றவை உறுத்தாமல் வந்து போகின்றன.
பவன் குமார் |
எனக்குள் ஒருவன் திரைப்படத்தின் பிரதான அம்சம் அதன் கதை. எல்லாப்
புகழும் பவன் குமாருக்கே. ஒரு கனவு எப்படி இருக்கும் என்பதை நுணுக்கமாக பதிவு
செய்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு, நிஜத்தில் எஜமானராக வருபவர் கனவில் அதற்கு
நேர்மாறாக பணியாளராக வருகிறார் (அல்லது வைஸ் வெர்ஸா). ‘பேரடாக்ஸ்’ என்ற சித்தாந்தத்தை
சிறப்பாக கையாண்டிருக்கிறார்கள். உணர்வுப்பூர்வமான ஒரு கருத்தையும்
சொல்லியிருக்கிறார்கள்.
குறைகள் என்று பார்த்தால் முதலில் வருவது அடிக்கடி டைம் பார்க்க
வைக்கும் மெதுவான திரைக்கதை. ஆடுகளம் நரேனின் குடும்பக்கதை எல்லாம் தேவையில்லாதது
போல தோன்றியது. கமர்ஷியல் மூவி பப்ஸுகளுக்கு கண்டிப்பாக பிடிக்காது. திரையரங்கம்
விட்டு வெளியே வரும்போது நிறைய பேர் சலம்பிக்கொண்டே வெளியேறுவதையும், வற்புறுத்தி
அழைத்து வந்த நண்பனை கடிந்துகொண்டதையும் பார்க்க முடிந்தது.
மற்றபடி, நல்ல சினிமாவை தேடுபவர்கள் தவறாமல் பார்க்க வேண்டிய படம்.
நம்மவர்கள் அடிக்கடி ‘ஹாலியுட் தரத்தில்’ என்பார்கள். அதாவது தொழில்நுட்பத்தை
ஒப்பிட்டு. எனக்குள் ஒருவன் அதைவிட ஒரு படி மேலே போய் கதையம்சத்தில் ஹாலியுட்
தரத்தில் வெளிவந்திருக்கிறது. தவறவிடாதீர்கள் !
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
2 comments:
Off the records:
உதயம், காசி போன்ற சினிமாக்கார ஏரியாக்களில் முதல் காட்சி பார்த்துவிட்டு வெளியே வரும்போது ஏதாவது டிவிக்காரர்கள் மைக்கோடு நின்றுக்கொண்டிருப்பார்கள். நான் இவர்களை தவிர்ப்பதற்காக சுற்றி வேறு வாசல் வழியாக வெளியேறுவேன். படம் நன்றாகவே இருந்தாலும் கூட அப்படித்தான். இந்தமுறை என்னையே அறியாமல் மைக்கில் ‘படம் செமையா இருக்கு’ என்று சொல்லிவிட்டு வந்தேன்.
அப்ப படம் சீக்கிரம் ஓடிரும் ன்னு சொல்லு
Post a Comment