26 June 2016

பெங்களூரு தினங்கள் - 3

அன்புள்ள வலைப்பூவிற்கு,

பெங்களூரு வந்து மூன்று வாரங்களாகி விட்டன. எல்லா வார இறுதிகளிலும் தவறாமல் சென்னை வந்துவிடுகிறேன். முதல்முறையாக சென்னையை விட்டு கிளம்பியது ஒரு துயரம் என்றால் வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னையை விட்டு கிளம்புவது பெருந்துயரம். சனிக்கிழமை எப்படி, எங்கே போனதென்றே தெரியாது. ஞாயிற்றுக்கிழமை மதியத்தை தாண்டியதும் மனச்சலனம் துவங்கிவிடும்.

மனப்போராட்டங்கள் ஒருபக்கம் என்றால் ரயிலில் / பேருந்தில் டிக்கட் எடுப்பது, பயணிப்பது எல்லாம் இன்னொரு வகையான போராட்டம். முதல் வார இறுதிக்கு, சில மாதங்கள் முன்பே ரயில் டிக்கட் முன்பதிவு செய்து வைத்திருந்ததால் பிரச்சனையில்லை. அடுத்தடுத்த வாரங்களுக்கு தட்கல் டிக்கட் புக் செய்ய வேண்டியிருந்தது.

தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வது என்பது ஒரு கலை. இதுகுறித்து BLADEPEDIAவில் விரிவாக எழுதியுள்ள பதிவு நல்ல பலனளித்தது. காலையில் பத்தரை மணியளவில் குளித்து முடித்து சுத்தமாக, கடவுள் நம்பிக்கை இருந்தால் தொழுதுவிட்டு கணினி முன்பு வந்து அமர்ந்துகொள்ள வேண்டும். சோர்ஸ், டெஸ்டினேஷன் ரயில் நிலைய மூன்றிலக்க குறியீடுகளை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். எந்த ரயில், எந்த தேதி, எந்த நேரம் என்பதையெல்லாம் கவனமாக மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். பயணம் செய்பவர்களின் பட்டியலை முன்கூட்டிய மாஸ்டர் பாசஞ்சர்ஸ் லிஸ்டில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். சரியாக பத்து ஐம்பத்தி எட்டுக்கு ஒருமுறை லாக் அவுட் செய்து லாகின் செய்துகொள்வது நலம். IRCTC சர்வரில் சரியாக பதினோரு மணியானதும் துரித கதியில் டிக்கெட் புக் செய்ய வேண்டும். பெங்களூருக்கு பரவாயில்லை. அதிக போராட்டங்கள் இல்லாமல் கிடைத்துவிடுகிறது.

ரயிலில் அடிக்கடி பயணம் செய்யும் இளைஞர்கள் ‘வாரணம் ஆயிரம்’ சமீரா போல தங்களுக்கு ஒருபோதும் சகபயணி அமைவதில்லை என்று புலம்புவதை பார்த்திருப்பீர்கள். ஒருவேளை சமீரா போன்ற சகபயணி கிடைத்தால் இந்த இளைஞர்கள் என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை. ஆனால் பெங்களூரு செல்லும் இரவு ரயிலை பொறுத்தவரையில் சமீரா மாதிரி அல்ல, சமீராவே வந்தாலும் பிரயோஜனமில்லை. ஏனென்றால் ரயில் கிளம்பிய அடுத்த நிமிடமே அனைவரும் அவரவர் பெர்த்தில் ஏறி படுத்துக்கொள்கின்றனர். அத்தோடு கண்டோன்மென்ட் வந்ததும் தான் துயில் எழுகின்றனர். இருந்தாலும் சார்ட்டில் நம் கம்பார்ட்மென்டில் யுவதிகள் யாரேனும் உளரா பார்ப்பதில் ஒரு கிக் இருக்கிறது. ஒருமுறை இப்படி சார்ட் பார்க்கும்போது F28 ஒன்று இருந்தது. ஆளை பார்க்கும் ஆவலில் பெர்த்தில் ஏறி படுக்காமல் காத்திருந்தேன். ரயில் கிளம்பும் தருவாயில் ஒரு முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க அம்மாள் வந்து நான் எதிர்பார்த்த பெண்ணுக்குரிய சீட்டில் படுத்துக்கொண்டார். அவர்தான் அந்த F28 என்பதை ஜீரணிக்கவே எனக்கு சில நிமிடங்கள் தேவைப்பட்டன. ரயில் டிக்கட் புக் செய்யும்போதாவது உங்கள் உண்மையான வயதை குறிப்பிட்டுத் தொலைக்கலாமே லேடீஸ்? அடுத்தமுறை ஒரு F26 இருப்பதை கவனித்தேன். நான் எதுவும் எதிர்பார்க்கவில்லை. அமைதியாக சீட்டில் அமர்ந்து ரயில் கிளம்புவதற்காக காத்திருந்தேன். இந்தமுறை நிஜ யுவதிதான். பவ்யமாக என்னிடம் வந்து என்னுடையது மிடில் பெர்த், அதை நீங்கள் எடுத்துக்கொண்டு உங்கள் அப்பர் பெர்த்தை எனக்கு தர முடியுமா என்று வினவினார். அழகான பெண்கள் கேட்டால் அப்பீல் உண்டா. ஒரு நொடிகூட தாமதிக்காமல் மாற்றிக்கொண்டேன். இன்னொரு முறை எனக்கு லோயர் பெர்த் கிடைத்திருந்தது. சார்ட்டில் எல்லோரும் பெருசுகள் என்பதால் வெளியில் காத்திருந்து ரயில் கிளம்புவதற்கு ஒரு நொடிக்கு முன் ஏறினேன். என் பெர்த் அருகே சென்றதும் எதிர் லோயரில் இருந்த முதியவர், அவருடைய மனைவி பக்கத்து கோச்சில் தனியே இருப்பதால் என்னை அங்கே மாற்றிக்கொள்ளுமாறு பணித்தார். சரி என்றதும் விறுவிறுவென பக்கத்து கோச்சுக்கு நடந்து, அங்கு லோயர் பெர்த்தில் உறங்கிக்கொண்டிருந்த ஒரு அம்மாளை எழுப்பினார். அவர் எழுந்து சில நொடிகளுக்கு முதியவரை முறைத்துப் பார்த்தார். பெரியவர் ஏதோ நினைவுக்கு வந்தவராய் அடுத்த கம்பார்ட்மென்ட் லோயர் பெர்த்துக்கு போய் அங்கிருந்த அம்மாளை எழுப்பினார். முதலில் எழுப்பியது அவருடைய மனைவி இல்லை போலும்.

IRCTC ஒரு பக்கம் என்றால் SETCயில் டிக்கெட் புக் செய்வது இன்னொரு வகையான தலைவலி. SETC தளத்திற்கு சென்றால் ஆறரை, ஏழு, ஏழரை என்று அரைமணிக்கொரு பேருந்து இருப்பதாக காட்டுகிறது. ஆனால் பேருந்து நிறுத்தத்தில் நாய் மாதிரி காத்திருந்தால் ஆறே முக்காலுக்கு வர வேண்டிய பேருந்து ஏழு இருபதுக்கு சாவகாசமாக வருகிறது. தாமதமாக வருவது குறித்த குற்ற உணர்ச்சி துளிகூட ஓட்டுநரிடமோ, நடத்துநரிடமோ இல்லை. இவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால் டிக்கெட் குறைவாக புக் ஆகிற காரணத்தினால் ஆறரை, ஏழு மணி பேருந்துகளை ஒரே பேருந்தாக்கி விடுகின்றனர். KSRTC பேருந்துகள் மாலை நேரங்களில் சென்னைக்கு இயக்கப்படுவதில்லை. இதுவரையில் தனியார் பேருந்துக்கு முயற்சி செய்யவில்லை. IRCTC, SETC இரண்டும் காலை வாரும்போது தனியாரிடம் தான் செல்லவேண்டும்.

கொஞ்சம் கொஞ்சமாக பெங்களூரு பரிட்சயமாகி வருகிறது. மடிவாளா என்பது நம்ம ஏரியா என்று மனதில் பதிய ஆரம்பித்திருக்கிறது. இது அதிகம் இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதி என்று சொல்லப்படுகிறது. சுலபமாக கிடைக்கும் பீஃப் பிரியாணி இதனை உறுதிப்படுத்துகிறது. பிரம்மாண்டமாக இருக்கும் ஹனுமான் சிலைதான் இந்த ஏரியாவுக்கு நம்மை வரவேற்கிறது. திப்பு சுல்தானுக்கு விழா எடுக்கிறார்கள். மொட்டை மாடியில் இயங்கும் ஒரு கிறிஸ்தவ ஆலயமும் உண்டு. திடீரென அம்பேத்கர் பேந்தர்ஸ் சார்பாக கூட்டம் நடக்கிறது. மொத்தத்தில் மடிவாளா ஒரு லிட்டில் இந்தியா என்றுதான் சொல்லவேண்டும். இப்போது கொஞ்சம் ஏரியா பழக்கமாகிவிட்டதால் எங்கெங்கே என்னென்ன கிடைக்கும் என்று தெரிகிறது. BDA காம்ப்ளக்ஸில் உள்ள ஒரு பேக்கரியில் அற்புதமான லெமன் டீ கிடைக்கிறது. பொமனஹல்லி கிருஷ்ணா தியேட்டர் அருகிலுள்ள வண்டிக்கடையில் அட்டகாசமான சிக்கன் ஃப்ரைட் ரைஸ் கிடைக்கிறது. 

இவை தவிர்த்து, பெங்களூருக்கென சில பிரத்யேக வாசனைகள் உள்ளன. தெருவோரத்தில் மாம்பழம் விற்கும் கடைகளை கடக்கும்போது கும்மென்று ஒரு வாசம் வரும். மறுபடியும் ஒருமுறை அந்தப்பக்கம் நடந்து போகலாமா என்று தோன்றும். அடுத்தது, பானிப்பூரி வாசனை. கடுந்தவம் புரியும் முனிவரிடம் இந்த பானிப்பூரி வாசத்தை காட்டினால் தவம் கலைந்துவிடும். பெரும்பாலான டீக்கடைகளில் லெமன் டீ சாதாரணமாக விற்கப்படுகிறது. தமிழகத்தில் இது அரிதாக சில டீக்கடைகளில் மட்டும்தான் பார்க்க முடியும். சென்னை சத்யம் திரையரங்கின் எதிரில் மசாலா பெப்ஸி என்று ஒன்று கிடைக்கும். பெரிய விசேஷமில்லை. பெப்ஸியில் ஜல்ஜிரா மசாலாவை கலந்தால் மசாலா பெப்ஸி. பெங்களூரில் இது ரெடிமேடாகவே கிடைக்கிறது. பிந்து ஃபிஸ் ஜீரா மசாலா என்கிற பெயரில் கிடைக்கும் இந்த பானம் கர்னாடகத்தின் காளிமார்க். டீ / ஜுஸ் கடைகளிலும் ஜல்ஜிரா டீ, மசாலா கோக், மசாலா 7UP போன்றவை கிடைக்கின்றன.

பெரிய பெரிய ஸ்டார்கள் எல்லாம் செருப்பு விளம்பர பதாகைகளில் சிரிக்கிறார்கள். லுனாருக்கு உபேந்திரா, பாரகனுக்கு சுதீப் மற்றும் சமந்தா, வி.கே.சி. பிரைடில் கன்னுக்குட்டிக்கு பதிலாக திவ்யா ஸ்பந்தனா. இந்த பதாகைகள் ஹைவேஸில் இருநூறுக்கு அடிக்கு ஒன்றாக முளைத்திருக்கின்றன. செருப்புகளுக்கு அவ்வளவு பெரிய மார்க்கெட் இருக்கிறதா என்று யோசிக்க வேண்டியிருக்கிறது.

புதிய வேலை என்பதால் அலுவலகத்தில் அதிகம் வாட்டுவதில்லை. பெங்களூர் சூழலும் கொஞ்சம் இலகுவாகி வருவதால் தினசரி ஒரு புத்தகம், அரை சினிமா, பக்கத்து ஏரியாவுக்கு போய் நைட் ஷோ படம் பார்ப்பது என்று செட்டில் ஆகிக்கொண்டிருக்கும் நிலையில் அலுவலகத்திலிருந்து ஒரு (இன்ப) அதிர்ச்சி கொடுத்தார்கள்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

1 comment:

குரங்குபெடல் said...

மிக சுவாரசியம் . . . பகிர்தலுக்கு நன்றிகள்