8 July 2016

பெங்களூரு தினங்கள் – 5 (கடைசி பகுதி)

அன்புள்ள வலைப்பூவிற்கு,

பெங்களூர் சூழல் கொஞ்சம் கொஞ்சமாக இணக்கமாகி வரும் சமயத்தில், அலுவலகத்தில் உயரதிகாரி அழைத்து அநேகமாக அடுத்த வாரத்தில் நீங்கள் சென்னைக்கு மாற்றலாகி விடுவீர்கள் என்றார். ஒரு கணம் மனதில் ஒரு கனம். சென்னைக்கு மாற்றலாவது நான் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த மகிழ்ச்சிதான் என்றாலும் அதனை கொஞ்சம் தள்ளிப் போட்டிருக்கலாம் அல்லது முன்கூட்டியே அறிவித்திருக்கலாம். பெங்களூர் வந்து ஒரு பெயருக்காக கூட லால் பாக், கப்பன் பார்க் சுற்றிப் பார்க்கவில்லை. பப் இருக்கும் திசையை நோக்கி நடந்துகூட செல்லவில்லை. இவ்வளவு ஏன் ? கண் எதிரிலேயே இருந்த சந்தியா தியேட்டர் காம்பவுண்டில் கூட நுழைந்ததில்லை. இது போதாதென்று கடைசி வாரத்திற்கு கடுமையான வேலைப்பளுவை சுமத்தி, “Take your own time. ஆனா நீங்க சென்னை போறதுக்குள்ள முடிச்சிட்டு போங்க” என்று கெடு ஒன்றை விதித்திருந்தார் டேமேஜர். ஆமாம், மாநிலம் மாறலாம், மொழி மாறலாம், டொமைன் மாறலாம், ஆனால் டேமேஜர்கள் மாறுவதில்லை !


ஏதேதோ திட்டமிட்டு வைத்திருந்தேன். கெடுவின் காரணமாக கடைசி வாரம் எதுவும் திட்டமிட்டபடி நடைபெறவில்லை. நண்பர்களை சந்தித்து விடைபெற, ஹெய்னகென் அருந்த, சந்தியா தியேட்டரில் காஞ்சூரிங் 2 நைட் ஷோ பார்க்க என்று எதுவுமே முடியவில்லை. சென்னை கிளம்புவதற்கு முந்தைய நாள் இரவு தன்மையான ஆந்திர நண்பரொருவரின் உதவியால் எனது வேலைகளை முடிக்க (முடிந்தது போல பாவனை செய்ய) முடிந்தது. பெங்களூரு நினைவுகளை அசை போட்டபடி பிருந்தாவன் விரைவு ரயிலில் சென்னை திரும்பினேன்.

பெங்களூரில் இருந்த இந்த கொஞ்ச நாட்களிலேயே அதன் வாழ்க்கைமுறை சில சமயங்களில் என்னை திகைக்க வைத்திருக்கின்றன. கடைசி நாள் இரவு. கடுமையான வேலைப்பளுவுக்கு மத்தியில் வயிற்றுக்கு சற்று ஈய்வதற்காக ஆந்திர நண்பருடன் வெளியே வந்திருந்தேன். சுமார் பத்து மணி இருக்கும். அந்த சாலையில் அதிக ஆள் நடமாட்டம் இல்லை. சாலையோரத்தில் மூடியிருந்த ஒரு வங்கியின் படிக்கட்டுகளில் ஒரு ஜோடி நெருக்கமாக அமர்ந்திருந்தது. எனக்கு அந்தப்பக்கம் திரும்பிப் பார்க்க கூச்சமாக இருந்தது. ஆனால் அவர்கள் காதல் புரிந்துக் கொண்டிருந்தார்கள் என்பது மட்டும் நிச்சயம். இதுபோன்ற ஒரு காட்சியை, நீங்கள் சென்னையில் இரவு வேளையில் பார்ப்பது கடினம். பொதுவாகவே, இங்குள்ள பெண்கள் கொஞ்சம் கூடுதல் சுதந்திரத்துடன் இருப்பது போல தெரிகிறது. ஆண்களைப் போலவே பல பெண்களும் வெளி மாநிலங்களில் இருந்து வந்து விடுதிகளில் தங்கி பணிபுரிவதால் கட்டுப்பாடுகள் தளர்ந்து சுதந்திரமாக இருக்கின்றனர். சென்னையில் புகை பிடிக்கும் பெண்கள் அரிது. அப்படியே யாரேனும் பிடித்தால் அவரை கடந்து செல்லும் ஆண்கள் அவளை குறுகுறுவென பார்த்து, அது சிகரெட் தான் என்பதை உறுதி செய்து சக ஆண்களிடம் அதுபற்றி வசைப்பாங்குடன் கருத்துரைப்பார்கள். பெங்களூரில் பெண்கள் புகைப்பிடித்தல், கவர்ச்சியுடை அணிதல், க்ளீவேஜ் தரிசனம் தருதல் எல்லாம் சாதாரண விஷயங்கள்.

தொடரை முடிக்கும் முன் பெங்களூருக்கு என சில பிரத்யேகமான இனிப்பு வகைகள் உள்ளன. அதுகுறித்து சொல்லிவிடுகிறேன். தமிழகத்தில் ஆவின் எப்படியோ அப்படி கர்நாடகத்தில் இந்த நந்தினி பார்லர்கள். பால் மற்றும் சம்பந்தப்பட்ட பொருட்கள், இனிப்பு வகைகள் தயாரித்து விற்பனை செய்யும் கூட்டுறவு நிறுவனம். இதன் விற்பனை நிலையங்கள் பெங்களூரில் பரவலாக காணப்படுகின்றன. குறிப்பாக ரயில் / பேருந்து நிலையங்களுக்கு அருகில் அதிகம் இருக்கின்றன. நீங்கள் பெங்களூர் அல்லது கர்நாடக மாநிலத்தின் பிற ஊர்களுக்கு சென்றாலோ இந்த கடைகளில் கண்டிப்பாக வாங்க வேண்டிய இரண்டு இனிப்பு பண்டங்கள் உள்ளன. ஒன்று, தர்வத் பேதா. இரண்டாவது, பேஸான் லட்டு!

தர்வத் பேதா என்பது உத்திர பிரதேசத்தில் இருந்து கர்நாடக மாநில ‘தர்வத்’ என்ற ஊருக்கு பஞ்சம் பிழைக்க வந்த ஒரு வணிகரின் கண்டுபிடிப்பு. ஆரம்பத்தில் அவருடைய குடும்ப ரகசியமாக வைத்துக் காப்பாற்றப்பட்ட தர்வத் பேதா செய்முறை. நாளடைவில் கர்நாடகம் முழுவதும் பிரபலமாகி, தற்போது மற்ற மாநிலங்களில் கூட விற்பனையாகிறது. பிரத்யேகமான சுவையுடன் விளங்கும் இந்த தர்வத் பேதா கால் கிலோ 70ரூவில் கிடைக்கிறது. அடுத்தது, பேஸான் லட்டு. இதனை நம்முடைய வீடுகளில் கூட நீங்கள் சாப்பிட்டிருக்கலாம். கடலை மாவுடன் நெய், சர்க்கரை, ஏலக்காய் இத்யாதிகளை கலந்து உருண்டையாக திரட்டி வைத்திருக்கிறார்கள். இதனுடைய சுவை நம்மை விடேன் விடேன் என்கிறது. கால் கிலோ 80ரூ. இவை இரண்டையும் தவிர்த்து, நான் கேள்விப்பட்டு ஆனால் நந்தினி பாலகத்தில் கிடைக்காத ஒரு பண்டம் பெல்காம் குண்டா. இதுவும் பால் பொருட்களின் கூட்டுறவில் தயாராகும் இனிப்பு வகையே.

சென்னை திரும்பியாயிற்று. கொஞ்ச நாட்கள் எனது வலைப்பூவில் முன்பு போல எழுத வாய்ப்பளித்த நாட்கள் இத்துடன் (தற்காலிகமாக) நிறைவு பெறுகிறது. இனி வரும் காலங்களில் நான் மீண்டும் பெங்களூர் வரலாம், சிறிது காலம் தங்கலாம். அப்போது புதிய தகவல்களுடன், அனுபவங்களுடன் மீண்டும் எழுதுகிறேன்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

1 comment:

kaniB said...

நந்தினி பொருட்கள் விற்பனை குறிப்பாக பெங்களூரில் சிறப்பாக செயல்படுத்தப் படுகின்றன. பால் மற்றும் இதர பொருட்களான தயிர், மோரே, நெய் போன்றவற்றையும் அதே சமயம் பாலிலிருந்து செய்யப்படும் இனிப்பு வகைகள், பாதாம் பால் போன்ற மற்றவைகளை சிறப்பாக விற்பனை செய்கின்றனர்.

இந்த பொருட்களின் விளம்பரங்களில் எனக்கு தெரிந்த வரை நடிகர்களில் புனித ராஜ்குமாரும், நடிகைகளில் ராகினி திவேதியும் நடித்துள்ளனர் என்பது முக்கியமான விஷயம் அதுவும் அரசு விற்பனை செய்யும் பொருள்களுக்கு.

ஆவின் பால் நிலைமை தமிழகத்தில் பால் பொருட்களையே ஏதோ கடமைக்கு விற்பதுபோல் விற்கிறார்கள். நிலைமை எந்த அளவுக்கு மோசம் என்றால் எனக்குத் தெரிந்து நந்தினி பால் சென்னையிலும் விற்பனை ஆவதாக கேள்விப்பட்டேன்.