21 October 2016

கொல்லிமலை - ஆகாயகங்கை

அன்புள்ள வலைப்பூவிற்கு,

கடந்த இடுகை: தொடக்கம்

கொல்லிமலை ஒரு தேனிலவு என்றால் அதில் மணப்பெண் ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி !

கொல்லிமலைக்கு சுற்றுலா செல்பவர்கள் ஆகாயகங்கையை தவிர்க்கவே கூடாதென்பது என் எண்ணம். ஆனால் அனைவரும் அணுகத்தக்க வகையில் இருக்கிறதா ஆகாய கங்கை என்றால் வருத்தத்துடன் இல்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

கொல்லியின் மைய சிற்றூரான செம்மேட்டிலிருந்து 12 கி.மீ தொலைவில், மலைகளுக்கிடையே உள்ள ஓர் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி. மலையிலிருந்து ஆயிரத்தி சொச்சம் படிக்கட்டுகள் இறங்கியபிறகே அருவியைக் காண முடியும். ஆயிரம் படிக்கட்டுகள் என்பதால் உடல் / மன உறுதி குறைபாடு கொண்டவர்களுக்கு உகந்ததல்ல. நீர்வீழ்ச்சியை சென்றடைய ரோப்-கார் சேவை வேண்டுமென்பது சுற்றுலா பயணிகளின் நீண்டகால விருப்பம். எனினும் அதன் நடைமுறை சாத்தியம் குறைவே என்று தோன்றுகிறது.

நீர்வீழ்ச்சிக்கு இறங்கும் இடத்தில் முடவாட்டு கால் கிழங்கு சூப் கிடைக்கிறது. ‘முடவாட்டு கால்’ என்பது கொல்லியில் விளையும் ஒரு கிழங்கு வகை. பார்ப்பதற்கு ஆட்டின் கால்களைப் போல இருப்பதால் இப்பெயர் பெற்றது. இது மூட்டு வலிக்கு உகந்தது என்று கூறப்படுகிறது. எனவே, படிக்கட்டுகளில் இறங்குவதற்கு முன்போ அல்லது ஏறிய பிறகோ சூப் குடிப்பது நல்ல பலனை தரக்கூடும்.

ஒரு காலத்தில் நீர்வீழ்ச்சிக்கு இறங்கிச்செல்ல சீரான படிக்கட்டுகள் எல்லாம் இருந்ததில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது அப்படியில்லை முறையான படிக்கட்டுகள், பிடிப்புக்கு இரும்புக்கம்பிகள், ஆங்காங்கே இளைப்பாறுவதற்கு தோதான இடங்கள் என போதிய வசதிகள் உள்ளன. பேரலில் இலவசக் குடிநீர் கூட வைத்திருக்கிறார்கள். ஆனால் இதனை அவ்வப்போது நிரப்புவதற்காக நியமிக்கப்பட்டுள்ள பணியாளர்கள் இறங்கியேற சிரமப்படுவதால் நூறு படிக்கட்டு தொலைவிலேயே குடிநீரை வைத்துவிடுகின்றனர். எனவே கட்டாயமாக குடிநீரும், தேவைப்பட்டால் க்ளுக்கோஸ் மற்றும் முதலுதவி பொருட்களையும் கொண்டு செல்வது நல்லது.

படிக்கட்டுகள் இறங்க இறங்க அருவியின் சிணுங்கல் கேட்கத் துவங்குகிறது. இதுவே நம் உடல் களைப்பை மறக்கடித்து அருவியின் மடிக்கு அழைத்துச் செல்கிறது. ஆயிரத்தில் ஒருவன் சினிமாவில் (2010) பல தடைகளை கடந்து சோழ நகரத்தை கண்டடையும் குழுவினர் பரவசமடைவார்கள், மரியான் இறுதிக்காட்சியில் கடலைக் கண்டதும் பெரும் நிம்மதியடைவார் தனுஷ். ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியை காணும் அந்த நொடியில் இவ்விரு உணர்வுகளும் நமக்கு ஒருங்கே கிடைக்கிறது. சுமார் நூற்றியைம்பது அடி உயரத்திலிருந்து (அவ்வளவாக) பாறைகளின் இடையூறு ஏதுமின்றி நேரடியாக பாய்கிறது அருவி !

ஏற்கனவே ஐந்தாண்டுகளுக்கு முன்பு அக்டோபர் மாதத்தில் ஆகாய கங்கைக்கு வந்திருக்கிறேன். அப்போது என்னால் அருவிக்கு அருகே கூட செல்ல முடியவில்லை. சுமார் நாற்பதடி தூரத்திலேயே அருவியின் சாரலும் கடுங்குளிரும் இணைந்து என்னை தடுத்து நிறுத்தியது. இப்போது அப்படியில்லை. அருவியின் சீற்றம் குறைந்துவிட்டதா அல்லது பருவ வேறுபாடா என்று தெரியவில்லை. இம்முறை நேரடியாக அருவியிலேயே தலைகாட்ட முடிந்தது, கொஞ்சம் சிரமப்பட்டு தான். காயமேற்படாமல் கற்களால் அடிப்பது போல பொத பொதவென்று ஊற்றுகிறது அருவி. கொல்லியில் உள்ள பல்வேறு மூலிகைகளை கடந்துவந்து பாய்வதால் அருவிக்கு மருத்துவ குணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. சுமார் அரைமணிநேரம் அருவியோடு உறவாடிவிட்டு திரும்பினோம்.

படியேறும்போது தான் எவ்வளவு பெரிய சிக்கலில் மாட்டியிருக்கிறோம் என்பதே புரிகிறது. நானாவது பரவாயில்லை. அவ்வப்போது கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டு ஏறினேன். சகாக்களில் ஒருவர் அவருக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால் அவருடைய மோஜோவிற்கு நான் வாழ்க்கை தர வேண்டுமென சொல்லிவிட்டு படுத்துக்கொண்டார். இதே போல பல நடுத்தர வயதுக்காரர்களும் ‘உஸ்ஸு, அஸ்ஸு’ என்று புலம்பிக்கொண்டு சரிவதைக் காண முடிந்தது. அதே சமயம் வயதான சிலர் கூட தெம்பாக படியேறுவதையும் காண வியப்பாக இருந்தது.


நண்பரின் ஐபோனில் எடுக்கப்பட்ட ஸ்லோமோஷன் வீடியோ. கீழே லுங்கியை அட்ஜஸ்ட் செய்பவரை பொறுத்துக்கொள்ளவும் :)

ஆயிரம் படிக்கட்டுகள் இறங்கி ஏறுவது சிரமம் தான். ஆனால் ஆகாய கங்கை தரும் அனுபவம் அந்த சிரமத்தை தாராளமாக ஈடு செய்துவிடுகிறது. ஆகாய கங்கை தவிர்த்து கொல்லியிலேயே வேறு சில அருவிகளும் உண்டு என்று கேள்விப்பட்டோம். அதற்கு முன் கொல்லியில் உள்ள சில கோவில்களைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்...

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

No comments: