அன்புள்ள வலைப்பூவிற்கு,
கொல்லிமலை – மலைகளின் இளவரசி ! தென்னிந்தியாவில் உள்ள மலை
வாசஸ்தலங்களிலேயே குறிப்பிடத்தக்கது கொல்லிமலை. ஏனென்றால் வரலாற்றுச்
சிறப்புகளையும், ஆன்மிகப் பெருமைகளையும் கொண்ட, அதே சமயத்தில் சுற்றுலாவிற்கும்
உகந்த மலை வாசஸ்தலம் கொல்லிமலை. மேலும் சென்னையிலிருந்து ஒப்பீட்டளவில் குறைந்த
தூரம். தோராயமாக 370 கி.மீ.
கொல்லிமலைக்கு இன்னொரு சிறப்பம்சமும் உண்டு. கொல்லி
மலையுச்சிக்கு சென்றடைய மொத்தம் 70 கொண்டையூசி வளைவுகளை கடக்க வேண்டும். இதனை
கூகிள் மேப்ஸில் பார்த்தால் நம் இதயத்துடிப்பு அதிகரிக்கும். அதிகரித்த
இதயதுடிப்பை ECGயில் ப்ளாட் செய்தது போலிருக்கும். சுயமாக வாகனம்
ஓட்டிச்செல்பவர்களுக்கு இது ஒரு கொடுப்பினை. இதையெல்லாம் கணக்கில் கொண்டுதான்
கொல்லிமலைக்கு செல்வதென்று முடிவு செய்தோம்.
ஒரு நிறைந்த வெள்ளிக்கிழமை, அதிகாலை நான்கு மணிக்கு துவங்கியது எங்கள்
பயணம். மூன்று பேர், இரண்டு வாகனம், ஒரு இலக்கு – கொல்லிமலை.
நேர்த்தியான திட்டமிடலுடன், ராணுவ ஒழுங்குடன் துவங்கியது எங்கள் பயணம்.
ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை இடைவேளை. சராசரியாக மணிக்கு 50 கி.மீ. தூரத்தை கடக்க
வேண்டுமென திட்டம் வகுத்துக்கொண்டோம். அதன்படி அதிகாலை நான்கு மணிக்கு கிளம்பிய
நாங்கள் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை,
(கள்ளக்குறிச்சிக்கு முன்பாக ஒருமணிநேர உணவு இடைவேளை) கள்ளக்குறிச்சி, ஆத்தூர்,
திம்மநாயக்கன்பட்டி வழியாக மலையடிவார கிராமமான காரவள்ளியை மதியம் 12:15க்கு
சென்றடைந்தோம்.
இதில் ஆத்தூரிலிருந்து திம்மநாயக்கன்பட்டி வழியாக வந்தது மட்டும்
மோசமான அனுபவமாக அமைந்தது. இந்த பாதையில் நிறைய சாலை பராமரிப்பு பணிகள் நடைபெற்று
வருவதாலும், பொதுவாகவே மோசமான சாலைகள் என்பதாலும் வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தையும்
சினத்தையும் ஏற்படுத்தியது. திம்மநாயக்கன்பட்டி வழிக்கு பதிலாக கொஞ்சம் சுற்றி
சேலம், ராசிபுரம் வழியை தேர்ந்தெடுத்திருந்தால் சாலை நன்றாக இருந்திருக்கக்கூடும்.
காரவள்ளியில் சிறிது நேரம் இளைப்பாறிவிட்டு 70 கொண்டையூசி வளைவுகளை ஸ்பரிசிக்கத்
துவங்கினோம். கடந்தமுறை ஏலகிரி சென்றபோது சில கொண்டையூசி வளைவுகளை கடந்ததுமே நல்ல
உயரத்தை அடைந்துவிட்டோம் என்று உணர முடிந்தது. கொல்லிமலை அப்படியில்லை. ஒரு
தேர்ந்த உற்சாக பானத்தைப் போல கொஞ்சம் கொஞ்சமாகத்தான் ஏற ஆரம்பித்தது.
கொண்டையூசி வளைவுகளினூடே பயணம் செய்யும்போது நீங்கள் நின்று
புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளவோ, இளைப்பாறிக்கொள்ளவோ உகந்த நோக்குமுனை முப்பத்தி
நான்காவது வளைவில் அமைந்துள்ளது.
இவ்வளைவில் மன்னர் வல்வில் ஓரியை பற்றிய புறநானூற்றுப் பாடலையும் பாடலின் ஓவிய வடிவையும் காணலாம். இச்செய்யுள் குறித்து நீங்கள் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கலாம். கேள்விப்படாதவர்களுக்காக சுருக்கமாகச் சொல்கிறேன். மன்னர் ஓரியின் வில்லாற்றலை புகழ்ந்து எழுதப்பட்ட செய்யுள் அது ! அதாவது ஓரி ஒரேயொரு அம்பினை எய்தினால் அது யானை, புலி, கலைமான், பன்றி ஆகிய விலங்குகளை துளைத்து ஊடுருவி இறுதியாக தரையிலிருக்கும் உடும்பின் மீது பாயுமாம் !
இவ்வளைவில் மன்னர் வல்வில் ஓரியை பற்றிய புறநானூற்றுப் பாடலையும் பாடலின் ஓவிய வடிவையும் காணலாம். இச்செய்யுள் குறித்து நீங்கள் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கலாம். கேள்விப்படாதவர்களுக்காக சுருக்கமாகச் சொல்கிறேன். மன்னர் ஓரியின் வில்லாற்றலை புகழ்ந்து எழுதப்பட்ட செய்யுள் அது ! அதாவது ஓரி ஒரேயொரு அம்பினை எய்தினால் அது யானை, புலி, கலைமான், பன்றி ஆகிய விலங்குகளை துளைத்து ஊடுருவி இறுதியாக தரையிலிருக்கும் உடும்பின் மீது பாயுமாம் !
மன்னரின் பராக்கிரமங்களை வியந்தபடி எஞ்சியிருக்கும் கொண்டையூசி
வளைவுகளையும் கடந்து செம்மேடு என்ற சிற்றூரை அடைந்தோம். கொல்லிமலையை
பொறுத்தவரையில் செம்மேடு தலைநகரம் போன்றது. குறிப்பாக சுற்றுலா பயணிகளுக்கு
உண்ணவும், உறங்கவும், வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பவும், செல்பேசிக்கு
மீள்நிரப்பு செய்யவும் ஒற்றை நிறுத்தமும், மையப்புள்ளியும் செம்மேடுதான். சகாக்களில்
ஒருவரின் ஆலோசனைப்படி வசந்தமாளிகை உணவகத்தில் மதிய உணவை முடித்துக்கொண்டோம்.
அறை தேடும் படலம் துவங்கியது. கொல்லியில் தங்குமிடங்கள் ஒப்பீட்டளவில்
மிகவும் குறைவுதான். பொதுவாக எந்த சுற்றுலா தளத்தை எடுத்துக்கொண்டாலும் அங்கே ரிஸார்ட்
எனப்படும் உல்லாச போக்கிடங்கள் இருக்கும். உல்லாச போக்கிடம் என்றால் குறைந்தபட்சம்
நீச்சல் குளம், சிறிய உள்விளையாட்டு அரங்கு, அறையில் குளிர்சாதனப் பெட்டி போன்றவை
இருப்பது அவசியம். ஆனால் கொல்லியில் எங்கேயும் நீச்சல்குளம் கிடையாது. பெயரளவில்
மட்டுமே ரிஸார்ட். மற்றபடி அவற்றை லாட்ஜ் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
ஒப்பீட்டளவில் நல்லதம்பி (ரிஸார்ட்) மற்றும் P.A. ஹாலிடே இன் ஆகிய இரண்டும்
பரவாயில்லை ரகம்.
சில தங்குமிடங்களை பார்வையிட்டுவிட்டு நல்லதம்பியில் செட்டிலானோம். (தங்குமிடங்களை தேர்ந்தெடுப்பதைப் பற்றிய விரிவான குறிப்புகளை நாம் தொடரின் இறுதியில் பார்க்கலாம்).
சில தங்குமிடங்களை பார்வையிட்டுவிட்டு நல்லதம்பியில் செட்டிலானோம். (தங்குமிடங்களை தேர்ந்தெடுப்பதைப் பற்றிய விரிவான குறிப்புகளை நாம் தொடரின் இறுதியில் பார்க்கலாம்).
வெள்ளி மாலை நல்லதம்பியில் ‘முழு’ ஓய்வெடுத்துவிட்டு, சனி காலை கொல்லிமலையை
சுற்றிப்பார்க்க உற்சாகமாக தயாரானோம்.
அடுத்த இடுகை: ஆகாயகங்கை
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
3 comments:
நாங்க பேருந்தில் போனோம் ஒருமுறை.நல்லதம்பியில் தான் தங்கினோம்.பேருந்தில் போகும்போது நல்லதம்பி வாசலிலே இறங்கியிருக்கலாம்.எங்களுக்கு தெரியவில்லை.செம்மேட்டில் போய் இறங்கி விசாரித்தால் அது வரும் வழியிலே இருக்கு என்றார்கள்.மணி இரவு எட்டு இருக்கும்.அந்த கும்மிருட்டில் வனாந்திரத்தில் நல்லதம்பி வரை நடந்தே போனோம்.மட்டுமல்லாது அறை எடுத்து உடைமைகளை வைத்துவிட்டு மீண்டும் ஒருமுறை செம்மேடு போய் "கொள்முதல்" செய்துவிட்டு மறுபடி அதே கும்மிருட்டு அதே வனாந்திரம்.செம்ம அனுபவம்.
நல்லதம்பி எதிரில் ஒரு ஹோட்டல், அரப்பளிஸ்வரர் கோயிலுக்கு திரும்பும் இடத்தில் உள்ளது ரவி ஹோட்டல், தோற்றத்தை பார்த்து ஏமாற வேண்டாம் நல்ல சுவைக்கு ஒருமுறை சாப்பிட்டு பார்க்கவும்.
நாங்க போன்போது அங்கு தான் சாப்பிட்டோம்.
Actually how stupid I am, first I didn't know where is kollimalai; secondly, I live just near by only, ( Cuddalore ). You made me to visit there very soon...
Post a Comment