10 November 2016

கொல்லிமலை – வீரகனூர்பட்டி சமணர் கோவில்

அன்புள்ள வலைப்பூவிற்கு,


கொல்லிமலையில் சுற்றுலா பயணிகள் அதிகம் சீண்டாத, தனித்துவமான இடம் ஒன்றினைப் பற்றி சொல்லப்போகிறேன். வீரகனூர்பட்டி என்ற மலை கிராமம். அங்கே அமைந்திருக்கும் கொங்கலாய் அம்மன் கோவில். தொன்மையான சமணர் (?!) உருவச்சிலை. இவற்றைப் பற்றியெல்லாம் தமிழில் இதற்குமுன் எழுதியிருக்கும் ஒரே நபர் எழுத்தாளர் ஜெயமோகன் மட்டும் தானென நினைக்கிறேன். கூடவே, எதிர்காலத்தில் கொல்லிமலை செல்லும் நண்பர்கள் வீரகனூர்பட்டிக்கும் செல்வதற்கு தோதாக மேலதிக தகவல்களும் தருகிறேன்.

நாங்கள் வீரகனூர்பட்டிக்கு சென்ற கதையை மட்டுமே தனிக்கட்டுரையாக எழுத வேண்டும். கொல்லிமலைக்கு ஸ்கெட்ச் போடும்போதே கூகுள் மேப்பில் பார்க்க வேண்டிய சில இடங்களை பார்த்து குறிப்பெடுத்து வைத்திருந்தேன். முன்பே சொன்னது போல மேப்பில் குத்துமதிப்பாக கொல்லிமலை பக்கம் உலவினால் கூட ஆங்காங்கே ‘Ancient Jain Temple’, ‘Ancient Jain Idol’ போன்றவை கிடைக்கின்றன. அவற்றில் ஒன்று, நெகனூர்பட்டி சமணர் கோவில். ஒதுக்குப்புற கிராமம் என்பதால் ஆர்வம் அதிகமானது. 

கொல்லியில் சென்று இறங்கியதிலிருந்து ஊர்க்காரர்கள் ஒவ்வொருவரிடமும் சித்தர் குகைகள் பற்றியும் நெகனூர்பட்டியைப் பற்றியும் விசாரித்தபடி இருந்தோம். நெகனூர்பட்டி என்று ஊர் இருப்பதே அங்கே யாருக்கும் தெரியவில்லை. இணைய அணுகல் (ஏர்டெல்) வேறு துண்டிக்கப்பட்டு விட்டதால் மறுபடியும் மேப்பில் அவ்விடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. திட்டமிட்ட மற்ற இடங்களை எல்லாம் பார்த்தாயிற்று. மறுநாள் காலை கிளம்புவதாக முடிவு செய்திருந்தோம். இன்னும் நெகனூர்பட்டி சமணர் கோவிலை மட்டும் பார்க்கவில்லை. கடைசி முயற்சியாக அன்றிரவு எனது டோகோமோ எண்ணை மீள்நிரப்பி 2G வேகத்தில் நெகனூர்பட்டியை கண்டுபிடித்து ஆஃப்லைனில் சேமித்தேன். விடிந்ததும் அங்கே சென்று வந்து பிறகு சென்னைக்கு கிளம்பலாம் என்று முடிவானது.

மழையுடன் விடிந்தது. இன்னொரு அரை மணிநேரம் பொறுத்திருந்து பார்க்கலாம் என்று காத்திருந்து, காத்திருந்து எட்டு மணிக்கு மழை நின்றது. பத்து மணிக்காவது கொல்லியிலிருந்து கிளம்பினால் தான் மாலையிலாவது சென்னை வர முடியும். இப்போது போய் நெகனூர்பட்டிக்கு போகலாம் என்றால் என் உடன் வந்தவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள் என்று அமைதியாக மோட்டுவளையை பார்த்தபடி படுத்திருந்தேன். என் மனக்குறையை குறிப்பால் உணர்ந்துகொண்ட என் தளபதி என்னை நெகனூர்பட்டிக்கு அழைத்துச் செல்ல அவராகவே மனமுவந்து ஒப்புக்கொண்டார்.

செம்மேட்டிலிருந்து வாசலூர்பட்டி வழியாக தின்னனூர்நாடு செல்லும் சாலையிலிருந்து வலதுபுறம் திரும்பி சுமார் ஐந்து கி.மீ தூரம் சென்றால் இலக்கை அடைந்துவிடலாம். இது செம்மேட்டிலிருந்து பத்து கி.மீ. கிலோமீட்டர் கணக்கை பார்த்தால் குறைவு போல தோன்றினாலும் மலைச்சாலை என்பதால் இந்த இடத்தை சென்றடைய அரை மணிநேரத்திற்கு மேல் ஆகிறது. அங்கே சென்றதும்தான் அந்த ஊரின் பெயர் நெகனூர்பட்டி அல்ல வீரகனூர்பட்டி என்று தெரிந்தது. யாரோ கூகுள் மேப்பில் தவறுதலாக கொடுத்திருக்கிறார்கள். ஊர்க்காரர்களிடம் சமணர் கோவில் என்றதும் அம்மன் கோவில் தான் உள்ளது என்று மலையுச்சியை கை காட்டினார்கள். அங்கே வாகனத்தில் செல்ல முடியாது என்பதால் நடந்தே சென்றோம்.

 
பனிமூட்டமான வீரகனூர்பட்டி
அப்போது நேரம் காலை ஒன்பது மணி சுமார் இருக்கும். ஆனால் நாங்கள் நடந்து சென்ற பகுதி முழுக்க பனிமூட்டம். பத்து அடிக்கு முன்னால் என்ன இருக்கிறது என்றே தெரியவில்லை. இதையெல்லாம் தவற விட்டுவிட்டு சென்னை செல்லப் பார்த்தோமே என்று என்னை நானே கடிந்துகொண்டேன். 

அம்மன் கோவிலுக்கு செல்லும் பாதை
சிறிது தூரம் நடந்து மலையுச்சியை அடைந்தோம். அங்கே கேட்பாரற்று அமைந்திருக்கிறது கொங்கலாய் அம்மன் கோவில். 

கொங்கலாய் அம்மன்
அம்மனைக் கண்டதும் எனக்கு செந்தூரதேவி படம்தான் நினைவுக்கு வந்தது. பாழடைந்த கோவில், பார்வையால் பயம் காட்டும் அம்மன் உருவம். ஒருபுறம் திருப்பதிக்கும், சபரிமலைக்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று முண்டியடிக்கிறார்கள். வெவ்வேறு அடுக்கில் பணம் கொடுத்து, கொடுத்த காசுக்கேற்ப தரிசனம் செய்கிறார்கள். இன்னொருபுறம் எங்கேயோ மலை மீது, ஒதுக்குப்புறமாக உள்ள கிராமத்தில் அம்மன் கோவில் ஒன்று தனியாக இருக்கிறது. 

அம்மன் கோவிலின் முகப்புப் பகுதி
வருடத்திற்கு ஒருமுறை (சித்திரை மாதம்) திருவிழா சமயத்தில் மட்டும் கோவிலை திறப்பார்கள் என்று ஊர்க்காரர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டோம். 

கொங்கலாய் அம்மனை பார்த்தாயிற்று. ஆனால் நாம் தேடி வந்தது சமணர் கோவிலாயிற்றே... மேப்பை கையில் வைத்துக்கொண்டு போக்கிமான் விளையாட்டைப் போல இங்கும் அங்கும் அலைந்தோம். கொஞ்ச நேரத்தில் ஊர்க்காரர்கள் இருவர் அந்தப்பக்கம் வந்தனர். இம்முறை சமணர் என்ற வார்த்தையை அவர்களிடம் பிரயோகிக்காமல் பழங்கால சிலை ஏதேனும் உள்ளதா என்றோம். அதோ அங்கே என்று வாழைத்தோப்பிற்குள் கை காட்டினார்கள். 

வாழைத்தோப்புக்குள் சமணர் (தெரிகிறாரா ?)
முதலில் அங்கிருக்கும் உருவம் எங்கள் கண்களுக்கே தெரியவில்லை. நாங்கள் சாமி கும்பிடுவதற்கு தான் வந்தோம் எங்களோடு வாருங்கள் என்று அழைத்துச் சென்றனர் அவ்விருவர். உள்ளே சென்றால் மோனலிஸா புன்னகையுடன், இடைப்பகுதி வரை மண்ணில் புதையுண்டு இருக்கிறது ஒரு சமணர் சிலை. ஜெயமோகன் இச்சிலையை 24 தீர்த்தங்காரர்களில் ஒருவர் என்றும், மகாவீரராக இருக்கலாம் என்றும் குறிப்பிடுகிறார்.

சமணர் உருவச்சிலை
எங்களை அங்கே அழைத்துச் சென்ற கிராமவாசிகள் பயபக்தியுடன் கற்பூரம் கொளுத்தி சமணரை வழிபட்டுக் கொண்டிருந்தனர். அவர்களிடம் சாமியின் பெயரென்ன என்றேன். இருவரில் இளையவர், முதியவரின் முகத்தை பார்த்தார். முதியவர் முனிவர் சாமி என்றார். அவர்கள் இருவரும் அங்கிருந்து நகர்ந்தபிறகு சமணரை புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். (பெரும்பாலும், கிராமவாசிகள் கோவில்களில், கடவுள் உருவச்சிலைகளை புகைப்படம் எடுக்க அனுமதிப்பதில்லை). 

வீரகனூர்பட்டி பயணம் ஒருவாறு எனது கொல்லிமலை பயணத்தை முழுமையடையச் செய்தது போல உணர்ந்தேன். வீரகனூர்பட்டிக்கு என்னை அழைத்துச் சென்றதற்காகவும், ஒட்டுமொத்தமாக கொல்லிமலை பயணத்தில் முகம் கோணாமல், கோபப்படாமல், கால தாமதங்களையும், கரடுமுரடான சாலைகளையும் பொறுத்துக்கொண்ட எனது போர்ப்படை தளபதிகள் பிரகாஷ் மற்றும் ஜெய் ரமேஷ் இருவருக்கும் எனது அன்பு கலந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

ஏறத்தாழ கொல்லிமலை பயணக்கட்டுரைகளின் முடிவுக்கு வந்துவிட்டோம். கடைசியாக கொல்லிமலை சென்றடைவது எப்படி..?, பார்க்க வேண்டிய இடங்கள், எங்கே தங்கலாம்..?, எவ்வளவு செலவாகும்..? போன்ற விவரங்களை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம். தொடர்ந்து இந்த பகுதியை படித்து வந்த நண்பர்களுக்கு ஏதேனும் (விவகாரமில்லாத) சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம்.

கூகுள் மேப்பில்:
(நண்பர்கள் நேரமிருந்தால் மேப்பில் உள்ள தகவல் பிழைகளை சரி செய்யலாம்)

கடைசி இடுகை: பயணக்குறிப்புகள்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

6 comments:

middleclassmadhavi said...

very interesting...nice narration!

Anonymous said...

Very nice..keep going..

'பரிவை' சே.குமார் said...

அருமை...
கொல்லிமலை அறியத் தந்தீர்கள்.

இறை அடிமை said...

நம் அனைவர்மீதும் அந்த ஓர் இறையின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.
நண்பரே ஜியோனிசம் மற்றும் பார்ப்பனீயத்தின் எழுச்சி உலகெங்கும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது பெரும் அச்சுறுத்தலாய் வளர்ந்து நிற்கிறது.டிரம்பின் வெற்றி அதற்கொரு சான்று.இங்கே மோதியின் வெற்றியும் அவ்வாறே நிகழ்ந்தது.தொடர்ந்து இஸ்லாமியர்களை அடக்கி ஒடுக்குவதன் மூலமே தாங்கள் ஆட்சிக்கு வரமுடியும் என நம்புகிறார்கள்.அமைதி ஒன்றையே விரும்பி வாழும் இஸ்லாமியர்கள் மீது தொடர்ந்து வன்முறையை திணிப்பதன் மூலம் அவர்களை அடையாளம் அற்றவர்களாய் மாற்றிவிடவே இவர்கள் முயலுகிறார்கள்.இதற்கு ஒரேவழி இஸ்லாமியர்களின் ஒற்றுமை,மதசார்பற்ற சக்திகள் ஒன்றுகூடி போராடுவது மட்டுமல்ல.அன்பு ஒன்றையே போதிக்கும் இஸ்லாத்தில் தொடர்ந்து பலர் குறிப்பாக உங்களை போன்று பார்ப்பனீயத்தின் விஷ வேர்களை அறுக்க முயல்வோர் சேர்வது மட்டும்தான்.அப்போதுதான் நமது கை வலுக்கும்!பார்ப்பனீய யூதவெறி கும்பலின் கொட்டத்தை அடக்க அப்போதுதான் முடியும்.இன்ஷா அல்லாஹ் அது நடக்கும்!உங்களை போன்றோர் அதற்கு உதவ வேண்டும்!

Anonymous said...

//ஏறத்தாழ கொல்லிமலை பயணக்கட்டுரைகளின் முடிவுக்கு வந்துவிட்டோம். கடைசியாக கொல்லிமலை சென்றடைவது எப்படி..?, பார்க்க வேண்டிய இடங்கள், எங்கே தங்கலாம்..?, எவ்வளவு செலவாகும்..? போன்ற விவரங்களை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.//
அடுத்த கட்டுரை??????

Anonymous said...

Bahot badhiya ye sthan Aaj Bharat ke sabhi Jaini janenge