அன்புள்ள வலைப்பூவிற்கு,
கடந்த இடுகை: அருவிகள்
கொல்லிமலை தொடரில் அடுத்து நோக்குமுனைகள் பற்றியும் வேறு சில
போக்கிடங்கள் குறித்தும் பார்க்கலாம். நோக்குமுனை என்றதும் என்னவோ ஏதோ என்று
பயந்துவிட வேண்டாம். ‘வியூ பாயின்ட்’ என்பதைத்தான் நம் மொழியில்
எழுதியிருக்கிறேன். மலை வாசஸ்தலங்களுடைய சிறப்பம்சங்களில் ஒன்று நோக்குமுனைகள். தனிப்பட்ட
முறையில், நோக்குமுனைகள் எப்போதும் எனக்கு பரவச உணர்வை தரக்கூடியவை. கொல்லிமலை
சென்றபோது மொத்தம் மூன்று நோக்குமுனைகள் கண்டோம்.
சீக்குப்பாறை நோக்குமுனையிலிருந்து |
முதலாவது சீக்குப்பாறை நோக்குமுனை. கொல்லியில் உள்ள பிரதான நோக்குமுனை
இது. கொல்லி சென்ற எவரும் சீக்குப்பாறைக்கு செல்லாமல் திரும்பியிருக்க
மாட்டார்கள்.
மாலை வேளையில் |
செம்மேட்டிலிருந்து வெறும் 2 கி.மீ தூரத்திலேயே அமைந்திருக்கிறது
சீக்குப்பாறை. இங்கிருந்து மலையடிவார கிராமங்கள் குட்டிக்குட்டியாக அழகாக
தெரிகின்றன.
சீக்குப்பாறையிலிருந்து இரவு |
இங்கே காணக்கிடைக்கும் காட்சி பகல் வெளிச்சத்தில் ஓரழகு என்றால்
இரவிருளில் பேரழகு.
இரண்டாவது டெம்பிள் கட் ரோடு நோக்குமுனை. இந்த நோக்குமுனை எங்கள் லிஸ்டிலேயே
இல்லை. ஆகாயகங்கையிலிருந்து மாசிலா அருவிக்கு போகும் வழியில், தனியாக பிரியும்
பாதையைக் கண்டு உள்ளே நுழைந்தால் ஓர் அற்புதமான நோக்குமுனை கிடைத்தது. இங்கிருந்து
பார்த்தால் ஆகாயகங்கைக்கு அப்பாலிருக்கும் மலைப்பகுதி தெரிகிறது.
டெம்பிள் கட் ரோடு நோக்குமுனையிலிருந்து |
நாங்கள் இங்கே சென்றபோது நான்கைந்து இளைஞர்கள் அமர்ந்து
பேசிக்கொண்டிருந்தனர். அவர்களிடம் வழக்கம் போல சித்தர்களைப் பற்றி விசாரித்தோம்.
உடனே ஒருவர் சித்தர்கள் இங்கிருப்பது உண்மைதான் என்றார். மேலும் சித்தர்கள்
இரண்டடி உயரம் தான் இருப்பார்கள், ஒருமுறை தான் அவர்களுடைய குகைப்பக்கம் போனபோது
மார் முழுக்க ரோமங்களுடன், சட்டை அணியாத சித்தர் கக்கத்தை சொறிந்தபடி வெளியே
வந்ததாகவும், அவரைக் கண்டதும் உள்ளே ஓடிப்போய்விட்டதாகவும் கதை சொல்லலானார்.
கேட்பதற்கு ஸ்வாரஸ்யமாக இருந்தது.
மூன்றாவது சேலூர் (கஸ்பா) நோக்குமுனை. இதனுடைய சிறப்பம்சம் –
இங்கிருந்து பார்த்தால் ஸ்ரீரங்க கோபுரம், திருச்சி மலைக்கோட்டை, தலைக்காவிரி
ஆகியவை தெரியும் என்று சொல்லப்படுகிறது. இன்னொரு சிறப்பம்சம் இது மனித நடமாட்டம் அதிகமற்ற
பகுதி. சேலூரிலிருந்து பிரிந்து செல்லும் பாதையில் நுழைந்தபிறகு கிராமவாசிகள்
நம்மை வித்தியாசமாக பார்க்கத் துவங்கிவிடுகின்றனர்.
சேலூர் கிராம வீடுகள் |
ஜோத்பூர் நகரத்தில் உள்ளதைப் போல நெருக்கமாக கட்டப்பட்ட சின்னச்சின்ன
வீடுகளை கடந்து மலையுச்சிக்கு சென்றோம். அங்கே காவல்துறை கண்ட்ரோல் ரூம் ஒன்று
மட்டும் இருந்தது. நோக்குமுனை கட்டுமானம் ஏதும் இருப்பதாக தெரியவில்லை.
சேலூர் நோக்குமுனையிலிருந்து |
உள்ளே இருந்த
ஒரு காவலரை விசாரித்து, இங்கே நோக்குமுனை கட்டுமானம் ஏதுமில்லை. இந்த இடமே
ஒரு நோக்குமுனை என்று தெரிந்துக்கொண்டோம். தூரத்தில் தெரிந்த மலைக்குன்று திருச்சி
மலைக்கோட்டையாக இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டோம்.
இவை தவிர்த்து சோளக்காட்டில் ஒரு நோக்குமுனையும், தமிழக அரசு
தாவரவியல் பூங்காவில் ஒரு நோக்குமுனையும் உள்ளன.
புலியிடம் பால் கறக்கும் சிங்கம் (கோப்பு படம்) |
தாவரவியல் பூங்கா குழந்தைகள்
விளையாடவும், பெரியவர்கள் இளைப்பாறவும் தோதாக அமைந்திருக்கிறது.
வாசலூர்ப்பட்டியில் படகுத்துறை அமைந்திருக்கிறது. படகு சவாரியில் பெரிய
ஆர்வமெதுவும் இல்லாததாலும், நேரமின்மையாலும் படகுத்துறையை தவிர்த்துவிட்டோம்.
ஆனால், வாசலூர்ப்பட்டி படகு இல்லத்திற்கு பக்கவாட்டிலுள்ள ஒற்றையடிப் பாதையில்
நடந்து போனால் சோழர் காலத்து சிவன் கோவில் ஒன்று காணக்கிடைக்கிறது.
தொன்மையான சிவன் கோவில் |
இவற்றைத் தவிர்த்து பார்க்க வேண்டிய இடங்கள் என்றால் சோளக்காடு சந்தை,
வல்வில் ஓரி சிலை. சோளக்காடு சந்தையில் பிரதானமாக பல்வகை வாழைப்பழங்களும்
பலாப்பழமும் கிடைக்கின்றன.
வல்வில் ஓரி சிலை மலையின் மையப்பகுதியில் பேருந்து நிலையத்திற்கு
எதிரிலேயே அமைந்திருக்கிறது. குதிரையின் மீது வீற்றிருக்கிறார் வல்வில்
ஓரி. குதிரையோடு இருக்கும் சிலைகளைப் பற்றி ஒரு சுவையான குறிப்பு உண்டு. சிலையில்
குதிரை முன்னிரண்டு கால்களை தூக்கியபடி
இருந்தால் அந்த மன்னர் போரில் வீர மரணம் அடைந்திருக்கிறார் என்று பொருள். குதிரை ஒரு காலை மட்டும்
தூக்கியபடி இருந்தால் மன்னர் போரில் விழுப்புண் பெற்று சில காலம் கடந்து
இறந்திருக்கிறார் என்றும், குதிரையின் நான்கு கால்களும் தரையில் இருந்தால் மன்னர் இயற்கை மரணம்
அடைத்திருக்கிறார் என்றும் அர்த்தம்.
முன்னிரண்டு கால்களைத் தூக்கியபடி கம்பீரமாக நிற்கிறது ஓரியின்
குதிரை !
ஆங்கிலத்தில் சேவ் தி பெஸ்ட் ஃபார் லாஸ்ட் என்பார்கள். அதுபோல, கொல்லியில்
இதுவரை மக்கள் கால்தடம் அதிகம் பதிக்காத ஒரு பிரத்யேக இடம் குறித்து அடுத்த
கட்டுரையில் பார்க்கலாம்.
(தொடரும்)
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
2 comments:
எங்க தொடரும்??
http://www.philosophyprabhakaran.com/2016/11/veeraganurpatti-jain-temple.html
Post a Comment