12 December 2016

லெனின் உறங்குகிறார் !

அன்புள்ள வலைப்பூவிற்கு,

மம்மியைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். எகிப்திய மம்மியைச் சொல்கிறேன். காலத்தால் அழிக்கமுடியாதபடி பாதுகாக்கப்படும் உயிரினங்களின் சடலங்களை மம்மி என்கிறார்கள். சில வேதிப்பொருட்களின் உதவியாலும், கடுங்குளிரான உஷ்ணநிலையை பேணுவதின் மூலமும் சடலங்களை பாதுகாப்பது பண்டைய எகிப்தியர்களின் பழக்கம்.

பண்டைய காலத்தில் மட்டுமில்லாமல் நவீன யுகத்தில் கூட சடலங்கள் தற்காலிகமாகவோ / நிரந்தரமாகவோ பராமரிக்கப்படுகின்றன என்பது அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஊட்டுகிறது. ‘எம்பால்மிங்’ என்கிறார்கள். மேலை நாடுகளில் எம்பால்மிங் என்பது ஒரு வழக்கமான நடைமுறை போலாகிவிட்டது. இதற்கென தொழில்முறை ஆட்கள் இருக்கிறார்கள். யாரேனும் இறந்தால் சடலத்தை இவர்களிடம் ஒப்படைத்து விடுகிறார்கள். சடலம் எளிதில் கெடாமல், துர்நாற்றம் வீசாமல், காயங்கள் ஏதேனும் இருந்தால் வெளியே தெரியாமல், தசைகள் இறுகிப்போய்விடாமல், முக அமைப்பை சீராக்கி சிரித்த முகத்துடன் இருப்பது போல தயார் படுத்தி இறுதிச்சடங்கிற்கு அனுப்புவது இவர்களுடைய வேலை. இதற்கென பிரத்யேக வேதியியல் திரவங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

மேலே சொன்னது தற்காலிகமாக சில மணிநேரங்களோ, சில நாட்களோ தாக்குப்பிடிக்கக்கூடியது. மாதக்கணக்கிலோ, வருடக்கணக்கிலோ கூட சடலத்தை எம்பால்மிங் செய்து பாதுகாக்க முடியும். இதன் வழிமுறையை கேட்டால் பயங்கரமாக இருக்கிறது. உடலில் துளையிட்டு ரத்தம் முழுவதையும் வெளியேற்றிவிட்டு, அதே துளைகள் மூலம் எம்பால்மிங் ரசாயனங்களை உள்ளே செலுத்துவதே அந்த முறை. இம்முறையை பயன்படுத்தி மறைந்த சோவியத் யூனியன் தலைவர் லெனினின் உடல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. 92 ஆண்டுகளாக !

லெனின் 1924ம் ஆண்டு தன்னுடைய ஐம்பத்தி நான்காவது வயதில் மரணமடைந்தார். இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார் லெனின். அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. பக்கவாதத்துடன் பேசவும், எழுதவும் கூட பழகிக்கொண்டார். இருப்பினும் 1924 ஜனவரி மாதம் இருபத்தியோராம் தேதியன்று லெனின் மூளையில் தமணி வெடித்து, கோமா நிலைக்கு சென்று மரணமடைந்தார். அடுத்த நாள்தான் சோவியத் அரசாங்கம் அவருடைய மரணச்செய்தியை பொதுமக்களுக்கு அறிவித்தது. 

முதலில் லெனின் சடலத்தை பாதுகாக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்கிறார்கள். சொல்லப்போனால் லெனினை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் அதிலிருந்த சில ரத்தக்குழாய்களை நீக்கியிருக்கிறார். ஒருவேளை சடலம் இத்தனை காலம் பதனிட்டு வைக்கப்படும் என்று தெரிந்திருந்தால் அப்படி செய்திருக்க மாட்டேன் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். ‘எம்பால்மிங்’ முறையில் சீரமைக்கப்பட்ட பிணங்களில் ரத்தக்குழாய்கள் வேதிய ரசாயனங்களை தசைகளுக்கு கடத்தும் வேலையைச் செய்யும்.

பிரேத பரிசோதனைக்குப் பிறகு லெனின் உடல் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக நான்கு தினங்கள் வைக்கப்பட்டது. ஆனால் நான்கு தினங்கள் கடந்தபின்னரும் லெனினின் உடலைக் காண பல்வேறு நாடுகளில் இருந்து தொடர்ந்து மக்கள் குவிந்தபடி இருந்ததால் அரசாங்கம் அதனை செஞ்சதுக்க அருங்காட்சியகத்திற்கு மாற்றியது. இயல்பாகவே ரஷ்யா குளிர்பிரதேசம் என்பதால் அவருடைய உடல் குலையாமல் ஐம்பத்தியாறு நாட்கள் வரை இருந்தது. அதன்பிறகு அங்கே கோடைக்காலம் தொடங்கியபோது லெனினை நிரந்தரமாக பராமரிக்க அரசாங்கம் முடிவு செய்தது.

அப்போதும் எம்பால்மிங் முறை குறித்து அரசாங்கம் யோசிக்கவில்லை. உறைபனி உஷ்ணநிலையில் உடலை பதமாக வைத்திருப்பது தான் திட்டம். இதற்காக ஜெர்மனியிலிருந்து குளிர்பதன உபகரணங்கள் வரவழைக்க முடிவு செய்தனர். அதற்கான ஏற்பாடுகள் நடந்துக்கொண்டிருந்த வேளையில் ரஷ்யாவின் புகழ்பெற்ற வேதியியல் ஆய்வாளர்கள் இருவர் ‘எம்பால்மிங்’ முறையை பரிந்துரைத்திருக்கின்றனர். எம்பால்மிங் செய்தால் உடல் கெடாமல், நிறம் மாறாமல், உருக்குலையாமல் பாதுகாக்க முடியும் என்பது அவர்களின் எண்ணம். பல்வேறு விவாதங்களுக்கும் ஆய்வுகளுக்கும் பிறகு அரசாங்கம் அந்த ஆலோசனையை ஏற்றுக்கொண்டது.

இதற்குள் காலத்தின் கோலத்தால் லெனினுடைய தோல் கறுத்திருந்தது. அதனை பழைய நிறத்திற்கு கொண்டு வருவதற்காக வேதியியல் ஆய்வாளர்கள் இரவு பகலாக உழைத்தனர். இறுதியாக லெனின் இறந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு எம்பால்மிங் செய்யப்பட்ட அவருடைய உடல் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக திறந்துவிடப்பட்டது. உருக்குலையாமல் இருந்த அவருடைய உடலைக் கண்டு மக்கள் நிஜமாகவே வியந்திருக்கிறார்கள்.

அதன்பிறகு தொடர்ந்து அவருடைய உடலை பராமரிப்பதற்காக இரண்டாயிரம் வல்லுநர்கள் உழைத்திருக்கிறார்கள். அவருடைய எலும்புக்கூடு, தசைகள், தோல் ஆகிவற்றை பாதுகாக்கப்பட்டன. அதே சமயம், உள்ளுறுப்புகள் அனைத்தும் நீக்கப்பட்டுவிட்டன. அவருடைய மூளை மருத்துவ மாணவர்களின் பயிற்சிக்காக வழங்கப்பட்டுவிட்டது. 

ரஷ்ய விஞ்ஞானிகள் நிகழ்த்திக் காட்டிய அற்புதம் உலகெங்கிலும் பேசப்பட்டது. அதன்பிறகு வியட்நாம் தலைவர் ஹோ சி மின் உட்பட பல உலகத்தலைவர்கள் இறந்தபிறகு எம்பால்மிங் முறை கையாளப்பட்டது. சோவியத்தை சேர்ந்த மற்றொரு தலைவரான ஸ்டாலினின் உடலும் அவர் இறந்தபிறகு எட்டு ஆண்டுகள் வரை பாதுகாக்கப்பட்டது.

தற்போது தொழில்நுட்பம் எவ்வளவோ வளர்ந்துவிட்டது. ஆனாலும் லெனின் உடலை பராமரிப்பது நுட்பமான பணியாகவே இருந்து வருகிறது. சில நாட்களுக்கு ஒருமுறை ஆய்வாளர்கள் வந்து எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டியிருக்கிறது. உடல் வைக்கப்பட்டிருக்கும் அரங்கத்தின் உஷ்ணநிலை, ஒளியமைப்பு, ஈரத்தன்மை போன்றவற்றை கவனமாக கையாள வேண்டியிருக்கிறது. பதினெட்டு மாதங்களுக்கு ஒருமுறை உடலை முழுமையாக மறுசீரமைப்பு செய்ய வேண்டியிருக்கிறது. அவருடைய உடலில் செயற்கை கண்ணிமைகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. மூக்குப்பகுதி செயற்கையாக சீரமைக்கப்பட்டுள்ளது.

சோவியத் யூனியன் சிதறியபிறகு சில ஆட்சியாளர்கள் அருங்காட்சியகத்தை நிரந்தரமாக மூட முயற்சித்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் மக்கள் பெருந்திரளாக அருங்காட்சியகம் முன்பு கூடி, தங்கள் தலைவரை காப்பாற்றியிருக்கிறார்கள். இன்னொரு சமயம் லெனின் உடலை பராமரிப்பதற்கு தேவைப்படும் நிதியை காரணம் காட்டி அருங்காட்சியகத்தை மூட முயன்றிருக்கிறது அரசு. அப்போதும் கம்யூனிஸ இயக்கம் மக்களிடம் பணம் வசூலித்துக் கொடுத்து தன் எதிர்ப்பைக் காட்டி அருங்காட்சியகத்தை காப்பாற்றியிருக்கிறது.  

இவற்றைப் பற்றியெல்லாம் கவலையேதும் இல்லாமல் லெனின் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருக்கிறார், 92 ஆண்டுகளாக !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment