1 May 2017

பிரபா ஒயின்ஷாப் – 01052017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

இன்று மே தினம். மே தினம் என்றதும் உங்களுக்கு என்ன நினைவுக்கு வருகிறது ? எனக்கு உழைப்பாளர் சிலை (காலண்டரில் அந்த படம்தான் போட்டிருப்பார்கள்) மற்றும் அஜித் பிறந்தநாள்.

பத்தொன்பதாம் நூற்றாண்டு. தொழிலாளர்கள் அதிகமாக சுரண்டப்பட்ட காலகட்டம் அது. அப்பொழுதெல்லாம் வேலை நாள் என்பது அதிகாலை முதல் இரவு வரை. கிட்டத்தட்ட பதினாறிலிருந்து பதினெட்டு மணிநேரங்கள். உலகெங்கிலும் தொழிலாளர்கள் அவ்வப்போது வேலை நேர குறைப்புக்காக போராடியிருக்கின்றனர். குறிப்பாக 1858ம் ஆண்டு ஆஸ்திரேலிய கட்டிடத் தொழிலாளர்கள் ‘எட்டு மணிநேர வேலை, எட்டு மணிநேர பொழுதுபோக்கு, எட்டு மணிநேர ஓய்வு’ என்கிற கோரிக்கையை முன்வைத்து போராடி வெற்றியும் கண்டிருக்கிறார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொழிலாளர் போராட்டங்கள் விஸ்வரூபம் எடுத்தன. 

ஆஸ்திரேலிய தொழிலாளர் போராட்டம்
1886ம் ஆண்டு மே ஒன்றாம் தேதியன்று சிகாகோ மாநகரில் மாபெரும் தொழிலாளர் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு தலைமை தாங்கிய தொழிலாள தலைவர்கள் மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டது. மகத்தான அப்போராட்டத்தின் அடையாளம் இன்று (கிட்டத்தட்ட) உலகம் முழுவதும் மே தினமாக அனுசரிக்கப்படுகிறது. சரி நிகழ்காலத்திற்கு வாருங்கள். மற்ற துறைகள் பற்றி தெரியவில்லை. ஐ.டி. துறையில் உள்ளவர்கள் நாளொன்றிற்கு எத்தனை மணிநேரங்கள் பணிபுரிகிறீர்கள் ? குறிப்பாக சப்போர்ட்டில் உள்ளவர்கள். வாடிக்கையாகவே காலை பத்து மணிக்கு துவங்கி இரவு பதினோரு மணிவரை பணிபுரிபவர்களை நான் பார்த்திருக்கிறேன். இது தவிர சனி, ஞாயிறுகளில் கூட அலுவலகமே கதி என்று கிடப்பவர்களும் உண்டு. இப்படி கடமை கண்ணியம் கட்டப்பாக்களாக பணிபுரிபவர்கள் ஒவ்வொரு அப்ரைஸலிலும் கணிசமான சம்பள உயர்வை பெற்று விடுகிறார்கள் என்றாலும் கூட என்னைப் பொறுத்தவரையில் நாம் வேலைக்கு போவது, சம்பாதிப்பது எல்லாமே நம்முடைய சுமூகமான சமூக வாழ்க்கைக்காகத் தானே. அதுவே பாதிக்கப்படுகிறது எனும்போது லட்சங்களில் சம்பாதித்து என்ன கிழிக்கப் போகிறீர்கள் ? யோசியுங்கள். தேவைப்பட்டால் இன்னொரு மே தின போராட்டத்திற்கு தயாராகுங்கள் !

ஐந்தாண்டு காலம் தொடர்ந்து மின்சார ரயிலில் பயணித்திருக்கிறேன். தினசரி பேருந்துப் பயணம், அவ்வப்போது பங்குதானி என பொது போக்குவரத்து முறைகள் எல்லாவற்றையும் பயன்படுத்தியிருக்கிறேன். இவற்றில் கிடைக்கும் அனுபவங்கள் சுவாரஸ்யமானவை. உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன். கூட்டமான பேருந்தில் ஏறியவுடன் உட்கார்ந்திருப்பவர்களிடம் உங்கள் பையை கொடுப்பது என்பது ஒரு கலை. கருணை அடிப்படையில் வயோதிகர்களிடம் கண்டிப்பாக கொடுக்கக்கூடாது. கால்களை ‘V’ வடிவத்தில் அகட்டி வைத்திருப்பவர்களிடம் கொடுக்கக்கூடாது. செருப்பை கழட்டிவிட்டு உட்கார்ந்திருப்பவர்களிடம் கொடுக்கக்கூடாது. சில பேர் மதிய உணவுக்காக ஒரேயொரு சிறிய பையை மட்டும் சுமந்து வருவார்கள். அதனை கையிலோ மடியிலோ வைக்க மாட்டார்கள். கால்களுக்கிடையே ஒய்யாரமாக பையை உட்கார வைத்திருப்பார்கள். இவர்களிடம் கண்டிப்பாக கொடுக்கவே கூடாது. இவர்களில் சிலர் நமக்கு பெரிய சகாயம் செய்வதாக நினைத்துக் கொண்டு தாமாகவே முன்வந்து நம் பையை வாங்கி அவர்கள் காலுக்குக் கீழே வைத்துவிடுவார்கள். கவனமாக இருக்க வேண்டும். யுவதிகளிடம் யோசிக்காமல் கொடுக்கலாம். நம்மைப் போலவே பையைக் கொண்டுவரும் இளைஞர்களிடம் கொடுக்கலாம். என்ன அய்யா ஒரு பையை கொடுப்பதில் இவ்வளவு ஆராய்ச்சியா என்று உங்களுக்கு தோன்றக்கூடும். இது ஒரு சாம்பிள்தான். தொடர்ந்து பொது போக்குவரத்தில் பயணிப்பதால் நிறைய விசித்திர மனிதர்களையும் மனோபாவங்களையும் பார்க்க முடிகிறது. இனி வரும் காலங்களில் அவற்றை ஒவ்வொன்றாக எழுதுகிறேன்.

ஜூலியஸ் சீஸரின் புகழ்பெற்ற மேற்கோள் ஒன்று உண்டு. ஆங்கிலத்தில் I came, I saw, I conquered என்பார்கள். அதுபோல எழுத்துத்துறையில் நுழைந்ததும் புகழ் பெற்று அடுத்தடுத்து நாவல்கள் எழுதி, அத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார் சரவணன் சந்திரன். ஸ்கூலில் சில டீச்சர்கள் கோபப்பட்டால் நாளை வரும்போது நூறு முறை இம்போஸிஷன் எழுதி வா என்பார்கள். அப்படி யாராவது சரவணன் சந்திரனிடம் நாவல் எழுதச் சொன்னால் கூட சலிக்காமல் எழுதித் தந்துவிடுவார் போலிருக்கிறது. 

வசீகரமான எழுத்துநடை. ஒரு இருபது நிமிடங்கள் படித்துவிட்டு எழுந்தால் ஹாட் பாக்ஸில் உட்கார்ந்துவிட்டு வந்தது போலிருக்கிறது. ரசிக்க வைக்கும் எழுத்து என்பது ஒரு வகை. சரவணனுடைய எழுத்து அதையும் தாண்டி படிப்பவர்களையும் எழுதத் தூண்டுகிறது. சரவணனுடைய மூன்று நூல்களும் ஆரம்பகட்ட வாசகர்களுக்கு உகந்தவை. மூன்றும் கிட்டத்தட்ட ஒரே பாணியிலானவை. மற்ற இரு நாவல்களிடமிருந்து அஜ்வாவில் ஒரு வித்தியாசம் என்னவென்றால் மற்ற இரண்டும் அனுபவத் தொகுப்புகள். அஜ்வாவும் அப்படித்தான். ஆனால் இதிலே கடைசி அத்தியாயம் ஒரு சினிமா படத்தைப் போல நிறைவடைகிறது. சரவணனின் எழுத்தில் கவனித்த ஒரு விஷயம் இஷ்டத்துக்கு கிளை விட்டுக் கிளை தாவிக்கொண்டே இருக்கிறார். நாங்கள் பொறியியல் தேர்வுகளில் நாற்பத்தி நான்கு பக்கங்களை நிரப்புவதற்காக மனதில் தோன்றுவதை எல்லாம், சாராயம், கருவாடு, துண்டுபீடி என்று கடகடவென எழுதிக்கொண்டே வருவோம். அதுபோல நாவலில் ஒரு கொலை விவரணை வருகிறது. ஒரு நபரின் கழுத்தை அறுத்து கொலை செய்கிறார்கள். அங்கே துவங்கி கோழி கழுத்தை அறுப்பது நினைவுக்கு வந்து, தீபாவளி நாஸ்டால்ஜியா, ரத்தப் பொரியல், புரோட்டா என்று போய்க்கொண்டே இருக்கிறார். நாவலின் பல இடங்களில் இதுபோல தாவிக்கொண்டே இருக்கிறார். அடிக்கடி ராஜூ முருகன் சாயல் தெரிகிறது. பார்த்தசாரதி கோவில் வாசலில் பிச்சை எடுக்கும் பாட்டியிடம் ஒளி தெரிந்தது என்கிறார். நள்ளிரவில் பண்ணாடி வந்து ‘இன்றிரவு மழை வரும்’ என்றதாக சொல்கிறார். இவையெல்லாம் ஆரம்பகட்ட அறிகுறிகள். இன்னும் இரண்டு அல்லது மூன்று நாவல்கள் இதே நடையில் எழுதினால் சரவணன் சந்திரன் போரடித்துக் கூட போகலாம்.

பாகுபலி பார்த்தாயிற்று. இப்படித்தான் இருக்கப்போகிறது என்று முன்பே தெரிந்திருந்ததால் முதல் பாகத்திற்கு இருந்த அளவிற்கு எதிர்பார்ப்பில்லை. இருந்தாலும் அதன் விஷுவல் பிரம்மாண்டத்தின் முன்பு சரணடைந்துவிட்டேன். நிறைய வடை சுட்டிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் மொத்தமுமே வடைதான். அதே சமயம் நம்முடைய மன்னர்களைப் பற்றிய வரலாறும், வரலாற்றுப் புனைவுகளும் முழுக்க முழுக்க வடைகளால் ஆனவைதானே. அவற்றின் திரை வடிவம் தான் பாகுபலி. 

எனக்கு படம் முழுக்க நெருடலாக இருந்த ஒரு விஷயம், வசனங்களுக்கான உதட்டசைவு. முதல் பாகமும் இப்படித்தான் இருந்ததா என்று நினைவில்லை. ஆனால் இதில் நடிகர்களின் உதட்டசைவை கவனிக்கும்போது பக்கா டப்பிங் படத்தை பை-லிங்குவல் என்கிற பெயரில் நம் தலையில் கட்டியிருக்கிறார்கள் என்று புரிகிறது. மதன் கார்கியின் வசனங்கள் அட்டகாசம். குறிப்பாக நாசருக்காக எழுதியவை. தமிழ் சினிமாவின் சிறந்த MILF யாரென்று கேட்டால் ஒரு நொடி கூட யோசிக்காமல் ரம்யா கிருஷ்ணனை கை காட்டிவிடலாம். சிவகாமியின் மிடுக்கைப் பார்க்கும்போது தமிழ் சினிமாவில் எப்போது ஜெயலலிதாவின் வாழ்க்கையை சினிமாவாக எடுத்தாலும் அதில் ஜெயலலிதாவாக நடிக்க வேண்டியவர் ரம்யா கிருஷ்ணன் தான். குரல் கூட அத்தனை பொருத்தம். மஹதீரா வெளிவந்தபோது அதன் இசையமைப்பாளரின் பெயர் மரகதமணி என்றதும் பெண் என்று நினைத்தேன். பின்னாளில் உண்மையைத் தெரிந்துக்கொண்டேன். பாகுபலி பின்னணி இசையில் அவ்வப்போது சம்ஸ்கிருத மந்திரங்கள் போலவும், செவிக்குள் எளிமையாக நுழையாத வார்த்தைகள் இருந்தால் கூட முணுமுணுக்க வைக்கின்றன. நாத்திகர்களைக் கூட சிவா சிவாய போற்றியே நமச்சிவாய போற்றியே என்று பாட வைத்த பெருமை மரகதமணிக்கு உண்டு. கருந்தேள் போன்றவர்கள் லிஸ்ட் போட்டு பாகுபலியை கழுவி ஊற்றினால் கூட, பாகுபலி தமிழ் / தெலுங்கு சினிமாவில் பல கதவுகளை திறந்துவிடப் போகிறது என்பதை மறுக்க முடியாது.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

5 comments:

R K Rajkumar said...

மரகதமணி அவரு கூட பாடி இருக்கார்

எம் அப்துல் காதர் said...

மரகதமணி, ராஜமெளலியின் மாமனார்.

ராஜி said...

பர்த்டே பேபி அஜீத் பத்தி சிலவரிகள் சொல்லி இருக்கலாம்

ivpkpm said...

தவறு மனைவியின் அண்ணன்

Ponmahes said...

//அதுவே பாதிக்கப்படுகிறது எனும்போது லட்சங்களில் சம்பாதித்து என்ன கிழிக்கப் போகிறீர்கள் ? யோசியுங்கள்.
தேவைப்பட்டால் இன்னொரு மே தின போராட்டத்திற்கு தயாராகுங்கள் !

நாங்க ரெடி யா இருக்கோம் லாரன்ஸ் வருவாரா போராட்டத்துக்கு???


பங்குதானி -> Share Auto. super translation