அன்புள்ள வலைப்பூவிற்கு,
முந்தைய பகுதி: மோயாறு
பள்ளத்தாக்கு
மசினகுடியில் பிரத்யேக அனுபவமாக சிகூர் அருவி / மோயாறு பள்ளத்தாக்கை
பார்த்துவிட்டோம். அதைத் தாண்டி வேறெதுவும் இடங்கள் இருப்பதாக தெரியவில்லை.
பைக்காரா சென்றால் அங்கே ஒரு அணை, ‘அனுமதி இல்லை’ பலகை, சிடுசிடு
அதிகாரி எல்லாம்தானே இருக்கப்போகிறது. மசினகுடியிலிருந்து முப்பத்தியாறு
கொண்டையூசி வளைவுகளில் ஊட்டி அமைந்திருக்கிறது. ஊட்டியின் எல்லையை மட்டும்
தொட்டுவிட்டு வந்துவிடலாம் என்பது திட்டம்.
நீளும் வனச்சாலை |
மைசூரு – ஊட்டி சாலையில் பன்னிரண்டு
கி.மீ. ஆள் நடமாட்டம் அதிகமில்லாத காட்டுவழிச் சாலை. கிட்டத்தட்ட பந்திப்பூர்
வனச்சாலையில் பார்த்த அதே காட்சிகள். மான்கள், மயில்கள், குரங்குகள். பந்திப்பூர்
என்பது கர்நாடக கட்டுப்பாட்டில் உள்ள வனப்பகுதி. இது தமிழ்நாடு ! பந்திப்பூரிலிருக்கும்
எந்த கட்டுப்பாடுகளும் இங்கே இல்லை. சஃபாரி ஜீப்புகள் இல்லை, மேலைநாட்டு பயணிகள்
இல்லை. கொஞ்ச தூரம் செல்ல செல்ல உதகையின் பிரம்மாண்ட மலைகள் தெரிய ஆரம்பித்தன.
பைசன் பாயிண்டிலிருந்து |
வனச்சாலையின் முடிவில் பைசன் பாயிண்ட்
எனும் நோக்குமுனை வருகிறது. கொண்டையூசி வளைவுகளுக்கு முன்னதாக ஒரு சிறிய ஓய்வு
எடுத்துக்கொள்வதற்கு உகந்த இடம். இங்கிருந்து பார்த்தால் மலை மீது ஊர்ந்து
செல்லும் காட்டெருமைகளை பார்க்கலாம் என்கிறார்கள்.
கொண்டையூசி வளைவுகள் துவங்குகின்றன.
மொத்தம் முப்பத்தியாறு. ஒரு ஒப்பீட்டுக்காக சொல்கிறேன். கொல்லியின் உயரம் சுமார்
ஆயிரத்து இருநூறு மீ., எழுபது கொ.ஊ வளைவுகள். ஊட்டியின் உயரம் இரண்டாயிரம் மீட்டருக்கு
மேல், ஆனால் முப்பத்தியாறே வளைவுகள். அப்படியென்றால் வளைவுகள் எவ்வளவு உக்கிரமாக
இருக்கும் என்று பார்த்துக்கொள்ளுங்கள். மலையேறத் துவங்குகிறோம். அதே சமயம், மழைச்சாரல்
துவங்குகிறது. மழை துவங்கியதா அல்லது மழையின் எல்லைக்குள் நாங்கள்
நுழைந்துவிட்டோமா என்று தெரியவில்லை. ஏனென்றால் அடிவாரம் வரை மழையில்லை. மேலே ஏற,
ஏற ஒரே பனிமூட்டமாக இருக்கிறது. மேகங்களுக்கு உள்ளே புகுந்து வெளியே வருகிறோம்.
டைட்டானிக் முக்கிலிருந்து கடலை ரசிப்பதுபோல பரவசமடைகிறோம். உடலெல்லாம்
சிலிர்க்கிறது. பரவசம் மட்டுமல்ல. ஊட்டி குளிர் அப்படி. போதாததற்கு மழை வேறு.
மலையழகு ! |
ஒவ்வொரு வளைவிலும் ஒரு பெரிய கண்ணாடி
வைத்திருக்கிறார்கள், சாலையின் மறுபுறம் வரும் வாகனங்களை தெரிந்துகொள்வதற்காக. ஆங்காங்கே
சில டீக்கடைகள். ஒரு குறுக்குவழி முகப்பில் ஏதோ ஒரு அருவிக்கு செல்லும் வழி.
ஊட்டியில் எந்த இடங்களையும் சுற்றிப்பார்க்க வேண்டாம் என்று முன்பே முடிவு
செய்திருந்ததால் நிச்சயிக்கப்பட்ட பெண்ணிடம் கண்ணியமாக நடந்துகொள்வது போல கடந்தோம். முப்பத்தியாறையும் கடந்தோம்.
ஊட்டியின் எல்லை |
ஊட்டியின் மைய இணைப்புச் சாலைக்கு
வந்திருந்தோம். பற்ற வைத்தோம். குளிர் தாங்க முடியாமல் அதுவே தான் எங்களை பற்ற
வைத்தது. பனி படர்ந்த அந்த மலையை அண்ணாந்து பார்த்தோம். இன்னும் இருக்கிறது உயரம்.
கொஞ்ச நேரம் பயணித்தால் உச்சகட்டத்தை எட்டிவிடலாம். இப்போது அவசரம். பொழுது
சாய்வதற்குள் மசினகுடிக்கு திரும்பியாக வேண்டும். அது மட்டுமல்ல, ஊட்டி என்பது பெரிய சம்பவம். சமயம் பார்த்து செய்யவேண்டும்.
இறங்கத் துவங்கினோம். மலைகளைப்
பொறுத்தவரையில் ஏறும்போது இருக்கும் அதே பரவசம் இறங்கும்போதும் இருக்கிறது.
ஏற்கனவே பார்த்து வைத்திருந்த இடங்களில் நின்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். ஒரு
தேநீர்க்கடை, அதையொட்டி சோளக்கடை. வாகனங்களை நிறுத்திவிட்டு இளைப்பாறினோம். தூரத்தில்
எங்கேயோ ஒரு படுகர் இல்லத் திருமண இசை கேட்டது.
மீண்டும் மசினகுடி ! தொடரில் மசினகுடி
ஊர்பகுதியைப் பற்றி ஏற்கனவே சொல்லியிருந்தேன். அதில் விடுபட்ட ஒரு பகுதி ட்ரீம்
லேண்ட் உணவகம். பேக்கரி, சூப்பர் மார்க்கெட், உணவகம் மூன்றையும்
உள்ளடக்கியிருக்கிறது. விசாலமான டைனிங் ஹால். நாங்கள் போன வேளையில் அதிக
கூட்டமில்லை. சூழலும் விருந்தோம்பலும் தரமாக இருந்தது. ஊட்டியிலிருந்து
திரும்பியதும் இங்கேதான் மதிய உணவை சாபிட்டோம். மதிய உணவை சாப்பிடும் சமயம் மாலை
ஆகியிருந்தது.
ஊர் திரும்பும் பாதை |
மறுநாள் காலையும் அதே உணவகத்தில்
சாப்பிட்டுவிட்டு திரும்புதலுக்கு தயாரானோம். மீண்டும் பந்திப்பூர் வனச்சாலை.
திரும்பிவரும் போது முதுகுப்புறத்தை காட்டியபடி ஒரு யானை காட்டுக்குள்
சென்றுக்கொண்டிருந்தது. மக்கள் குழுவாக அதனை பார்த்துக்கொண்டிருந்தனர். வனச்சாலையை
கடந்தபிறகு நினைவுப்பொருட்கள் வாங்கிக்கொள்ள சில கடைகள் இருக்கின்றன. போகும்போது
கடந்த அதே கர்நாடக நெடுஞ்சாலைகள் திரும்பும்போது ரணமாக இருந்தன. வெயில் வேறு. அந்தி
சாயும் சமயத்தில் ஆம்பூர் ஸ்டாரில் பிரியாணியை த்வம்சம் செய்தபிறகு தான் மூளை வேலை
செய்ய ஆரம்பித்தது. அந்தி சாய்ந்தது !
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
2 comments:
அருமையான பதிவு...
நான் இலங்கயிளிருகிறேன்... அடுத்த வருடம் தமிழ்நாடு சுற்றிப் பார்க்கலாமென வருகை தரப் போகிறேன்... இன்னும் நிறைய இடங்களை பற்றி பகிரவும்...
வருக பரதன்... வரும்போது சொல்லுங்க நானே சிறப்பா உங்களுக்கு itinerary ரெடி பண்ணித் தர்றேன்...
Post a Comment