5 June 2017

பிரபா ஒயின்ஷாப் – 05062017

அன்புள்ள வலைப்பூவிற்கு, 

தம்பதியருக்கு பரிசளிக்க உகந்த நூல்கள் தமிழில் இருக்கிறதா ? நான் சொல்வது ஆங்கிலத்தில் பிரசித்தி பெற்ற மார்ஸ் – வீனஸ் வகையறா. எப்போதாவது வாட்ஸப்பிலோ / ஃபேஸ்புக்கிலோ இக்கேள்வியைக் கேட்டால் நமக்கு கிடைக்கும் பெரும்பான்மை பதில் தமிழ்மகன் எழுதிய ஆண்பால் பெண்பால். முதல்முறை கேள்விப்பட்ட போது உண்மையென்று நம்பி ஆண்பால் பெண்பால் வாங்கிப் படித்தேன். ஆண்பால் பெண்பால் நல்லதொரு நாவல் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. ஆண்பால் பெண்பாலில் வரும் மனைவிக்கு சருமத்தில் மெலனின் குறைபாடு ஏற்படுகிறது. அதனால் ஏற்படும் உடலியல், உளவியல் சிக்கல்கள், திருமண உறவு விரிசல்கள் போன்றவற்றைப் பற்றி நாவலில் வருகிறது. இதுபோக, எம்.ஜி.ஆர் இந்த நாவலில் ஒரு கதாபாத்திரமாகவே வருகிறார். இவற்றைத் தாண்டி நாவலின் உட்கரு என்னவோ ஆண் – பெண் உளவியல் வேறுபாடுகளைப் பற்றியது தான் என்றாலும் கூட புதிதாக மணமானவர்கள் இதனையெல்லாம் உட்கார்ந்து, படித்து, புரிந்துக்கொள்ளும் அளவிற்கெல்லாம் அவர்கள் வெட்டியாக இருக்க மாட்டார்கள் என்பது என் எண்ணம். 

இடைப்பட்ட ஒரு காலத்தில் யாருக்கு பிறந்தநாள் / மணநாள் பரிசுகள் கொடுப்பதென்றாலும் புத்தகங்கள் மட்டும்தான் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். அது ஒரு கேவலமான முடிவு என்று எனக்கு கொஞ்ச நாட்களில் தெரிந்து போனது. கேவலமான முடிவு மட்டும் அல்ல. இப்படி செய்வதால் புத்தகத்தையும், அதனை பெற்றுக்கொள்ளும் நபரையும் நாம் ஒருசேர அவமதிக்கிறோம். ஏனென்றால் நாம் தேடிக் கண்டுபிடித்து, சம்பந்தப்பட்ட நபர் விரும்பும் டாபிக் என்று வாங்கினால் கூட தொண்ணூறு விழுக்காடு ஆசாமிகள் அதனை படிப்பதே இல்லை என்றொரு புள்ளிவிவரம் சொல்கிறது. படிக்கவில்லை என்றால் கூட பரவாயில்லை. பல பேர் அதனை ஒரு பொருட்டாக கூட மதிப்பதில்லை.  

சமீபத்தில் ஒரு புத்தகக் கடையில் நடிகை சில்க் ஸ்மிதா (மதி நிலைய வெளியீடு) பற்றிய புத்தகத்தினைக் கண்டேன். அதைக் கண்டதும் எனக்கும் பல்வேறு நினைவுகள் கிளர்ந்தெழுந்தன. பொறுங்கள். லயனத்தில் சில்க் ஸ்மிதாவின் முகபாவங்களையும், வெள்ளைக் குதிரையொன்று துள்ளி வருவதையும் மாற்றி மாற்றி காட்டுவதைப் பற்றி சொல்லவில்லை. இந்த மதி நிலைய சில்க் ஸ்மிதா புத்தகத்தை நான் முன்பொரு சமயம் வைத்திருந்தேன் (இறந்த காலம்). சக ஊழியர் ஒருமுறை படிப்பதற்கு நல்ல புத்தகங்கள் இருந்தால் இரவல் தருமாறு கேட்டார். பொதுவாக இதுபோன்ற சக வாசிப்பாளர்களை குறிப்பாக ஆரம்பக்கட்ட வாசிப்பாளர்களைக் கண்டால் ஒரு உவகை தோன்றுமில்லையா ? அவருக்கு படிப்பதற்கு இலகுவாக, சுவாரஸ்யமான விஷயமாக இருக்கட்டும் என்று சில்க் ஸ்மிதாவைக் கொடுத்தேன். கொடுத்ததுதான். படித்தீர்களா என்று கேட்பது அவ்வளவு நாகரிகமில்லை என்றாலும் புத்தகம் திரும்பிவருவதற்காக அடிக்கடி அந்தக் கேள்வியை கேட்கத் துவங்கினேன். எப்போது கேட்டாலும் அந்த புத்தகத்தை இன்னும் படிக்கவே இல்லை என்றும், படிப்பதற்கு நேரமில்லை (ஓழ் பஜனை) என்றும் சலிப்பான தொனியில் பதிலளிப்பார். ஒரு கட்டத்தில் புத்தகம் திரும்ப வரவே வராது என்று தெரிந்து கேட்பதை நிறுத்திக்கொண்டேன். ஆனால் அவரோ கேட்காமலே இதோ அதோ அவராகவே முன்வந்து அப்டேட் கொடுப்பார். எட்டி இரண்டு மிதி மிதிக்கலாம் போல தோன்றும். என்ன செய்வது ! நாம் காந்தி பிறந்த நாட்டில் அல்லவா வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.  

இன்னொரு (வாசிப்புப் பழக்கம் அறவே இல்லாத) நண்பர். திடீரென ஒருநாள் வந்து எனக்கு புத்தகங்கள் படிக்க வேண்டுமென்று தோன்றுகிறது என்றார். ஏற்கனவே பட்ட அனுபவத்திற்கு எனக்கு புத்தி வந்திருக்க வேண்டும். ஆனால் வராது. உயிர்மையில் வாங்கிய பாக்கெட் சைஸ் சுஜாதா நாவல்கள் ஏழெட்டு கொடுத்தனுப்பினேன். அது திரும்ப வராது. வராது என்பது கூட பிரச்சனையில்லை. அதை அந்த நண்பர் தொட்டிருக்கக் கூட மாட்டார், மேலும் இப்போது அந்த புத்தகங்கள் பிரபஞ்சத்தின் எந்த மூலையில் போய் ஒளிந்துக்கொண்டிருக்கின்றன என்பது கூட நண்பருக்குத் தெரியாது. கேட்டால் நேரமில்லை என்று பதில் வரும். நேரமில்லை என்பவர்களுக்கு ஒரு கேள்வி: தினசரி காலைக்கடன் முடித்துவிட்டு கழுவிக்கொள்வதற்காவது உங்களுக்கு நேரமிருக்கிறதா ? 

ஒரு நண்பருக்குத் திருமணம். மேலே சொன்ன அனுபவங்களை எல்லாம் தாண்டி அவருக்கு புத்தகங்கள் பரிசளிக்க வேண்டுமென்று தோன்றியது. ஏனென்றால் அவர் ஒரு முன்னாள் வலைப்பதிவர். நீண்ட அலசலுக்குப் பிறகு விஜய் நாகஸ்வாமி (உளவியல் நிபுணர்) எழுதிய 24X7 Marriageம், 69 Things I Wish I Knew Before Getting Marriedம் (பெண் எழுத்தாளரின் சொந்த அனுபவங்கள்) வாங்கினேன்.  

என்னுடன் படித்த நண்பர்கள் ஒவ்வொருவராக திருமணம் செய்துக்கொண்டிருக்கிறார்கள். (அட்லீஸ்ட் இந்த ஒரு விஷயத்திலாவது அவர்களை விட ஒரு நான்கைந்து வருடங்கள் முந்தியிருக்கிறேன் :)) இன்னும் சில பேர் சிங்கிள் தடிமாடாகவே சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். (பேராண்டிகளா, மேட்ரிமோனி சைட்ல இருபத்தி ஒன்பது வயச தாண்டிட்டா யாரும் சீண்டமாட்டாங்கடா. நைஞ்சு போயிடுவீங்கடா, தாத்தா சொல்றேன் கேளுங்கடா !) 

மிகுந்த களைப்பு மற்றும் பசியுடன் வீடு திரும்பும்போது வீட்டில் சுவையான பிரியாணி சமைத்து வைத்திருந்தால் எப்படி இருக்கும். அதுபோல நண்பருடைய திருமண விழாவிற்குள் நுழைந்த சமயம், கானா பாலா (இசை நிகழ்ச்சிக்காக வருகை தந்திருந்தார்) நான் ஓராயிரம் முறை மீண்டும் மீண்டும் விரும்பிக் கேட்ட ஒரு பாடலின் வரிகளைப் பாடிக்கொண்டிருந்தார் :- 

வத்திப்பெட்டி அளவுல கட்டம் ஒன்னு கட்டித்தான 
வாழும் நம்ம வாழ்க்கையில   
ஏ இன்பம் வரும், துன்பம் வரும், காதல் வரும், கானம் வரும்.
எப்பொழுதும் கவலையில்ல 
காலத்தான வாரிவிட்டு நாங்க மேல ஏறமாட்டோம் 
கோடிக்குத்தான் ஆசப்பட்டு
ஏ காசு கையில் வந்துட்டாலும் கஷ்டத்துல வாழ்ந்துட்டாலும்
போகமாட்டோம் மண்ணவிட்டு ! 

அடுத்த பாடலின் இடையே :- 

காதல் பண்ணும் சோக்குல, கட்டுமர கேப்புல, 
காசிமேட்டு கடலு மண்ணுல வீடு கட்டுறா
அலையில்லா கடலுல, துடுப்பில்லா படகுல, 
ஆடுபுலி ஆட்டம்தானே ஆடிக் காட்டுறா
(ஹாய் பிட்ச்சில்) 
அடக்கிப்புடிக்க முடியாத வங்கக்கடல் குதிர
ஆக்டோபஸு மீனப்போல வந்துட்டாடா எதுர ! 

அடுத்து :- 

கோயம்பேடு மார்க்கெட்டுல வந்து பாருடி, 
நான் கோணி மூட்ட தூக்குறவன். ஆனா என்னடி
அப்பு டவுன் வாழ்க்கையில வந்து போகும்டி, 
நான் அப்பக்கூட உன்னவிட்டு போகமாட்டேன்டி ! 

கானா பாலா, You’ve made my day ! இதிலே கவனிக்க வேண்டிய விஷயம் தொடர்ந்து பாலாவின் பாடல்களில் வரும் சென்னை நேட்டிவிட்டிதான். கானா பாலா காலங்கள் கடந்து பேசப்படுவார்.  

இதே நிகழ்ச்சியில் இன்னொரு பாடகி, முதலில் வைக்கம் விஜயலட்சுமி பாடலையும் அடுத்து எல்.ஆர்.ஈஸ்வரி பாடலையும் பாடுகிறார். இரண்டும் அந்தப் பாடகிகளுடைய அதே குரலில் தத்ரூபமாக. அவருடைய வெர்ஸடைலிட்டி பிரமிக்க வைத்தது. ஆனால் எல்லா வயதினரும் கலந்துகொள்ளும் ஒரு விழாவில், சொப்பனசுந்தரி நான்தானே என்றோ, (ஹாஆஆஆஆன்) என்னை மானமுள்ள பொண்ணு இன்னு மதுரையில கேட்டாக என்றோ பாடுவதெல்லாம் எனக்கு கொஞ்சம் சங்கடமாகவே இருக்கிறது. சில விஷயங்களில் நான் இன்னமும் பிற்போக்காளனாகவே இருகிறேன்.  

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

2 comments:

ராஜி said...

தாத்தாவாகியாச்சா

Ponchandar said...

"சில விஷயங்களில் நான் இன்னமும் பிற்போக்காளனாகவே" இருப்பது மிகவும் நல்லது