12 June 2017

பிரபா ஒயின்ஷாப் – 12062017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஆட்டோஃகிராபின் வெற்றிக்குப் பிறகு சேரன் தடதடவென பொக்கிஷம், டூரிங் டாக்கீஸ், மாயக்கண்ணாடி என்று படங்களை அறிவித்தார். அவற்றில் டூரிங் டாக்கீஸ் மட்டும் வெளியாகவில்லை. அதுதான் தவமாய் தவமிருந்து என்கிறார்கள். த.த.வின் கதைக்கும் டூரிங் டாக்கீஸ் தலைப்பிற்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாக தெரியவில்லை. அத்தலைப்பை எஸ்.ஏ.சி தன்வசப்படுத்தியிருக்கிறார். ஒரு சினிமாவில் இரண்டு கதைகள் என்பதால் இப்படியொரு தலைப்பு.

முதல் கதையின் நாயகனாக எஸ்.ஏ.சி.யே நடித்திருக்கிறார். இறப்பை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் ஒரு எழுபத்தைந்து வயது முதியவர் (மனதளவில் இளைஞர் என்று அவரே அடிக்கடி சொல்லிக் கொள்கிறார்) தனது ஐம்பது வருட காதலியைத் தேடி வட இந்தியாவில் (காதலி ஒரு சேட்டு ஃபிகர்) ஊர் ஊராக அலைகிறார். இறுதியில் காதலியைக் கண்டுபிடித்து அவருடைய மடியில் உயிர் துறக்கிறார்.

இரண்டாவது கதை ஒரு கிராமத்தின் சாதிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் அது சார்ந்த அவலங்கள் பற்றிய கதை, கிராமத்து சேர்மனின் மகன் மற்றும் ஆதிக்க வகுப்பைச் சேர்ந்த ரோபோ சங்கரும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து அவர்களுடைய மணல் கொள்ளையை தடுக்க முனையும் (தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த) தாசில்தாரரை கொல்கிறார்கள். தாழ்த்தப்பட்ட குழந்தைகளுக்கு கல்வி மறுக்கிறார்கள். அதனை எதிர்க்கும் பத்து வயது சிறுமியை... வேண்டாம் விடுங்கள்.

ஒரு சினிமாவில் இரண்டு கதைகள், ஒன்று பொழுதுபோக்குக்கு, ஒன்று சமூக பிரசாரத்திற்கு என்பது நல்ல கான்செப்ட். டெக்ஸ்ட் ஃபார்மட்டில் எழுதிப் பார்த்தால் இரண்டும் அற்புதமான கதைகள். முதல் கதை ஒரு வகையில் ப.பாண்டிக்கு உந்துதலாகக் கூட இருந்திருக்கலாம். ஆனால் திரைக்கதையில் சொதப்பி வைத்திருக்கிறார்கள். குறிப்பாக முதல் கதை இரண்டாவது கதையை படுகொலை செய்துவிடுகிறது. ஐம்பது வருடத்திற்கு முன்பு நடைபெறும் கதையில் பீரியட் படங்களுக்குண்டான சங்கதிகள் துளி கூட கிடையாது. எஸ்.ஏ.சி.க்கு என்று சில வக்கிரமான சிந்தனைகள் உள்ளன. ரசிகன் படத்தில் விஜய் அம்பிகாவின் முதுகுக்கு சோப்பு போடும் காட்சி நினைவிருக்கிறதா ? அது போக ரேப் காட்சிகளுக்கு பிரசித்தி பெற்றவர் இயக்குநர். அது படத்தின் சில இடங்களில் துருத்திக்கொண்டு தெரிகிறது. டூரிங் டாக்கீஸ் பார்த்ததிலிருந்து ஒரு பாடத்தைக் கற்றுக்கொண்டேன். ஹார்ட் டிஸ்க்கில் இருக்கிறது என்பதற்காக கண்ட படங்களையும் பார்க்க வேண்டுமென்று அவசியமில்லை. 

குழந்தைகளின் கோடை விடுமுறையை குறிவைத்து ஊர் சுற்றிய கும்பல் ஓய்ந்த சமயத்தில் குடும்பத்துடன் ஏற்காடு சென்றிருந்தோம். ஏரியைச் சுற்றி அமைந்துள்ள காடு ஏரிக்காடு. அதுவே மருவி ஏற்காடு ஆனதாக சொல்கிறார்கள். மிக விரைவில் அதுவும் மருவி எர்காட் ஆகப்போகிறது. ஊர்களின் பெயர்களை இதுபோல ஸ்டைலிஷாக மாற்றிக் கொள்வதில் சமகால இளைஞர்கள் மத்தியில் ஒரு மேம்போக்குத்தனம் தெரிகிறது. பெசன்ட் நகர் பீச்சை பெஸ்ஸி என்பதில் ஒரு குதூகலம். மகாபலிபுரத்தை மஹாப்ஸ் என்பதில் ஒரு குதூகலம். இதனால் என்னவென்றால் இன்னொரு நூறு வருடங்களுக்குப் பிறகு யாருக்கும் மகாபலிபுரம் என்றால் தெரியாது. ஏற்காடு மலைக்கு சேர்வராயன் மலை என்றொரு பெயர் இருக்கிறது. லோக்கல் தெய்வம். அதையும் ஷேர்வராய் என்று மாற்றிவிட்டார்கள். அதனால் ஊரெங்கும் ஹோட்டல் ஷேர்வராய்ஸ், ஷேர்வராய்ஸ் ரெஸ்டாரன்ட், ஷேர்வராய்ஸ் சூப்பர் மார்க்கெட் என்று நிறைந்திருக்கின்றன. 

மொத்தம் இருபது கொண்டையூசி வளைவுகள். இரண்டு தாண்டும்போதே சீதோஷ்ண மாற்றம் தெரியத் துவங்குகிறது. மலையுச்சியில் சேர்வராயன் கோவில் உள்ளது. சமீபத்தில் திருவிழா நடந்து முடிந்தது போலிருக்கிறது. ராட்டினங்கள், குதிரை சவாரி, பொம்மைக் கடைகள், இன்ஸ்டன்ட் புகைப்படக் கடைகள் என்று களை கட்டியிருக்கிறது.

சேர்வரயான் கோவில்
கோவில் என்பது ஒரு குகையைப் போல இருக்கிறது. தொண்ணூறு டிகிரி கோணத்தில் குனிந்து, பத்து பதினைந்து அடிகள் நடந்து சென்றுதான் பெருமாளை தரிசிக்க வேண்டியிருக்கிறது (பெருமாள் தானே ?). அதற்குள் நிற்கும் அர்ச்சகர் எப்படி சலிக்காமல் நாள் முழுக்க நிற்கிறார் என்பது வியப்பாக இருக்கிறது. வெளியே உலவிக்கொண்டிருந்த போது ஒருத்தர் தன்னுடன் வந்தவர்களுக்கு ஏற்காடு மலையிலிருந்து மலையின் இன்னொரு புறத்தைப் பார்த்தால் பெருமாள் படுத்திருப்பது போல தெரியும் என்றார். நான் அந்தப்பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை. இந்த வயதில் பெருமாள் படுத்திருப்பதைப் பார்த்து என்ன செய்யப் போகிறேன். 

படகு இல்லம்
சேர்வராயன் கோவில் தவிர்த்து, படகு இல்லம், பாப்பி ஹில்ஸ் (சிறிய பொழுதுப்போக்கு பூங்கா), ரோஜா பூங்கா, தாவரவியல் பூங்கா, ஜெண்ட்ஸ் சீட் (மற்றும் லேடீஸ் சீட், சில்ரன்ஸ் சீட்) நோக்குமுனைகள், மஞ்சக்குட்டை நோக்குமுனை, பகோடா பாயின்ட், மான் பூங்கா, கிள்ளியூர் அருவி, குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா என்று அட்டகாசமான ஃபேமிலி சுற்றுலா மற்றும் கோடை வாசஸ்தலம். ஆனால் டிராவல் ஏஜென்ட்டுகள் யாரைக் கேட்டாலும் இங்க சுத்திப் பாக்குறதுக்கெல்லாம் பெருசா ஒன்னுமில்லைங்க என்றே பதில் சொல்கிறார்கள்.  

இண்டெக்கோ விடுதியின் முகப்பு
க்ளப் மஹேந்திராவின் இண்டேக்கோ ரிசார்ட் பழங்கால ஆங்கிலேயே கட்டிடங்களின் பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கருப்புநிற பழைய மாடல் ஸ்விட்ச்சுகள், ஃபர்னிச்சர்கள், மின்விளக்குகள் என்று மனதைக் கொள்ளை கொள்கின்றன. கூடவே பில் தொகையையும் தீட்டி கொள்ளை அடிக்காமல் இருந்தால் ஆறு மாதங்கள் தங்கியிருந்து விழாவை சிறப்பித்துவிட்டு வரலாம். 

மலையுச்சியில் அமைந்திருக்கும் ஸ்டெர்லிங் விடுதி
க்ளப் மஹேந்திரா ஒரு பிரமிப்பு என்றால் மலையுச்சி சரிவில் கட்டப்பட்டிருக்கும் ஸ்டெர்லிங் ஒரு பிரமிப்பு. என்ன ஒன்று, நடுத்தர மக்களுக்கெல்லாம் எட்டாதபடி மிக உயரத்தில் அமைந்திருக்கிறது ஸ்டெர்லிங். 


ஊர்ப்பெயர்களை ஸ்டைலிஷாக மாற்றிக்கொள்வது ஒரு ஃபேஷன் என்றால் சில பேர் தங்களுடைய சொந்தப்பெயரையே சங்கடமாக உணர்ந்து ஸ்டைலாக மாற்றிக்கொல்கிறார்கள். குறிப்பாக ஐ.டி.யில் பணிபுரியும் மத்திய வயதினர். உதாரணமாக சண்முகம் – ஷம்மு, தட்சிணாமூர்த்தி – தக்ஷின், பத்மநாபன் – பேடி (Paddy). நல்லவேளையாக என் பெற்றோர் நான் பெருமைப்பட்டுக்கொள்ளும் சிறப்பான பெயரை சூட்டியிருக்கிறார்கள். நான் தான் அப்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஏதேதோ எழுதிக்கொண்டிருக்கிறேன்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

3 comments:

DREAMER said...

//"ஹார்ட் டிஸ்க்கில் இருக்கிறது என்பதற்காக கண்ட படங்களையும் பார்க்க வேண்டுமென்று அவசியமில்லை"//
இது desktopல்..வைக்க வேண்டிய quote... பதிவுகள் அருமை...

வெட்டிஆபீசர் said...

//நல்லவேளையாக என் பெற்றோர் நான் பெருமைப்பட்டுக்கொள்ளும் சிறப்பான பெயரை சூட்டியிருக்கிறார்கள். நான் தான் அப்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஏதேதோ எழுதிக்கொண்டிருக்கிறேன். //

அதென்னவோ சரிதான்... டாக்குடர் சோப்பு போட்டுவிட்டது ஸ்ரீவித்யாவுக்கு. ஆனால் நீங்கள் "அம்பிகாவுக்கு" என வரலாற்றையே மாற்றி எழுதிவிட்டீர்கள். வருங்கால தமிழக முதல்வரின் வாழ்க்கை சரிதத்தை எழுதும்போது கவனமாக இருக்க வேணாமோ?

பிகு: இணையத்தில் எதை எழுதினாலும் உடனே லிங்கு கொடு என ரெபரன்ஸ் கேட்டு உறுதிப்படுத்திக்கொள்ளும் இணைய போராளிகளுக்காவும், இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காட்சியினை தவறவிட்ட, மறந்துவிட்ட தமிழன்களுக்காக ...
https://www.youtube.com/watch?v=6xJedaldWds

விஸ்வநாத் said...

ஹலோவ் ப்ராப்ஸ் ...