26 June 2017

பிரபா ஒயின்ஷாப் – 26062017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

பாலாஜி மோகனின் இணையத் தொடர் பார்த்தேன். தலைப்பு: As I’m Suffering from Kadhal. தலைப்பே இது யாருக்கான தொடர் என்பதை சொல்லிவிடுகிறது. அப்படியும் இல்லையென்றால் ப்ரொமோ வீடியோ அல்லது முதல் எபிஸோட் சில நிமிடங்கள் பார்த்தால் போதும். 

சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு, சாந்தனு பாக்யராஜ் நடிப்பில், கலைப்புலி தாணுவின் மகன் கலாபிரபு இயக்கத்தில் சக்கரக்கட்டி என்றொரு படம் வெளிவந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை. பாடல்கள் எல்லாம் பயங்கர ஹிட். குறிப்பாக டாக்ஸி டாக்ஸி. ஆனால் படம் அப்போதைய விமர்சகர்களால் கழுவிக் கழுவி ஊற்றப்பட்டது. எனக்கு தனிப்பட்ட முறையில் சொதப்பலான க்ளைமாக்ஸ் தவிர சக்கரக்கட்டியை மிகவும் பிடித்திருந்தது. இன்னும் சொல்வதென்றால் அந்த சமயத்தில் சக்கரக்கட்டி பட வசனங்கள் எனக்கு மனப்பாடம். (ராஹுல் டிராவிட், லேட் பிக்கப்). அது ஹாஸ்டல் தினங்கள். ஏதாவது படம் கிடைத்தால் லேப்டாப்பில் தேயத்தேய பார்ப்போம். அப்படி சக்கரக்கட்டியை பத்து முறைக்கு மேலே பார்த்திருப்பேன். அத்தனை முறை பார்த்ததற்கும், படம் அவ்வளவு பிடித்ததற்கும் காரணம் அதில் காட்டப்பட்ட எலைட் வாழ்க்கைமுறை. பணக்காரத்தனம் என்பதை நாம் சினிமாவில் காலம் காலமாக பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் அவற்றில் ஒரு செயற்கைத்தனம் இருக்கும். சக்கரக்கட்டியில் அது ஒப்பீட்டளவில் இயல்பாக அமைந்திருந்தது. என்னவென்று சரிவர சொல்லத் தெரியவில்லை. ஆனால் அந்த எலைட் வாழ்க்கைமுறையை திரையில் பார்க்கும்போது ஒரு ஈர்ப்பு. (கலாபிரபு கெளதம் கார்த்திக்கை வைத்து தனது அடுத்த படத்தை முடித்துவிட்டார். படத்தின் பெயர் இந்திரஜித். அட்வென்ச்சர் ஃபேண்டஸி. இன்னும் வெளிவரவில்லை. வரவே வராது போலிருக்கிறது).

அதுபோல கொஞ்ச வருடங்களுக்கு முன்பு தமிழில் ஒரு குறும்படம் வெளிவந்தது. குறும்படங்களில் மூன்று வகை. ஒன்று, தண்ணி, பொண்ணுங்க, கடலை, காதல் என்று ஜல்லியடிக்கும் வகைகள். இரண்டாவது, அவசர அவசரமாக சினிமாவை அடுத்த கட்டத்திற்கு பெயர்த்துச் செல்லத் துடிக்கும் நவீன முயற்சிகள். மூன்றாவது, சமூக விழிப்புணர்வு படங்கள். நான் சொல்கிற குறும்படம் மூன்றாவது வகை. விழிப்புணர்வு என்றாலே பெரும்பாலும் குழந்தை தொழிலாளி, குடிப்பழக்கம், பெண்ணடிமைத்தனம் என்று ஒரு சில டெம்ப்ளேட்டுகள் உள்ளன. ஆனால் அந்த குறும்படத்தில் வித்தியாசமாக விந்தணு தானத்தை எடுத்து கையாண்டிருந்தார்கள். (என்னைக் கேட்டால் இதெல்லாம் நூறு வருடங்களுக்குப் பின்பு யோசிக்க வேண்டிய பிரச்சனை. இப்போதைக்கு வேலையை முடித்துவிட்டு சுத்தமாக ஃப்ளஷ் செய்தாலே போதும்). தமிழ் குறும்படம்தானா என்றே சந்தேகிக்கிற வகையில் பாதிக்கு மேலே ஆங்கில வசனங்கள். அதிலேயும் சக்கரக்கட்டியைப் போலவே மேல்தட்டு வாசனை. பிடித்திருந்தது. (யூடியூபில் முழுக்க தேடிவிட்டேன். குறும்படத்தின் இணைப்பு கிடைக்கவில்லை. அதன் பெயரும் மறந்துவிட்டது).

அதனால் பாலாஜி மோகனின் இணையத் தொடர் பற்றி அறிந்ததும் அது எனக்கான கப்கேக் என்று புரிந்துவிட்டது. மொத்தம் பத்து எபிஸோடுகள். தினசரி இரண்டு அல்லது மூன்று எபிஸோடுகளாக பார்த்து முடித்தாயிற்று. கிட்டத்தட்ட இயக்குநரின் முதல் படம் போலவே இருக்கிறது. மொத்தம் ஒன்பதே கதாபாத்திரங்கள். முதலில் வேடிக்கையாக ஆரம்பித்து, நடுவில் இரண்டு எபிஸோடு மொக்கை போட்டு, இறுதியில் எமோஷனலாக முடியாமல் முடிகிறது. அடுத்த சீசனில் தொடரும் போல. நடுவில் ரோபோ சங்கர் வரும் பகுதியைத் தூக்கிவிட்டு, தரமாக எடிட் செய்தால் இரண்டரை மணிநேர சினிமாவாகக் கூட வெளியிட்டிருக்கலாம். இணையத் தொடர்களுக்கு சென்ஸார் கிடையாது போலிருக்கிறது. ஓத்தா, ஃபக் கூட பரவாயில்லை. அதைவிட அபஸ்வர வார்த்தைகள் ஒன்றிரண்டு இடங்களில் வருகிறது. விட்டுத்தள்ளுங்கள்.

முன்னே சொன்ன மேல்தட்டு வாழ்க்கைமுறையைத் தாண்டி, நடிகர்களின் சின்னச் சின்ன உடல்மொழி அதிகம் ஈர்க்கிறது. குறிப்பாக சனந்த், சுந்தர் ராமு, சஞ்சனா மற்றும் நக்ஷத்ராவின் உடல்மொழி பிரமாதம். பாலாஜியும், தன்யாவும் கொஞ்சம் ஓவராக்டிங். (தன்யா தொடரின் அசோஸியேட் ரைட்டரும் கூட). படைப்பாளியையும் அவரது படைப்பையும் சம்பந்தப்படுத்தி பார்ப்பது தவறு என்பார்கள். ஆனால் காதல், கல்யாணம், டைவர்ஸ் என்று தொடர் சுற்றிச் சுற்றி வருவதை பார்க்கும்போது பாலாஜி மீது சந்தேகமாக இருக்கிறது.

இதில் சோகமான விஷயம் என்னவென்றால், இது மாதிரியான படங்கள், வெப் சீரிஸ் யாருக்காக எடுக்கப்படுகிறதா அவர்கள் இதை மயிரா கூட மதிக்க மாட்டார்கள். என்னைப்போன்ற மிடில்கிளாஸ் ஆர்வக்கோளாறுகள் பார்த்தால்தான் உண்டு.

தொடரில் தன்வியாக வரும் நக்ஷத்ராவிற்கு தன்னுடைய திருமணம் பற்றி பெரிய கனவு இருக்கிறது. திருமணம் என்றால் திருமண வாழ்க்கை பற்றியதல்ல. திருமண நிகழ்வு பற்றியே பெரிய கனவு. ப்ரீ-எங்கேஜ்மென்ட், எங்கேஜ்மென்ட், மெஹந்தி, சங்கீத், திருமணம், ரிசப்ஷன் இப்படி நீள்கிறது தன்வியின் பட்டியல். இதையெல்லாம் அறிவிப்பதற்கு ஒரு பார்ட்டி. டயர்டாக இருக்கிறதா ? பொறுங்கள்.

நிஜத்திலேயே ஒரு உதாரணம் தருகிறேன். எழுத்தாளர் கயல் தன்னுடைய வலைப்பூவில் தனது திருமணத்திற்கு நூறு நாட்களுக்கு முன்பிலிருந்து, கவுண்டவுன் போட்டு, தினசரி ஒரு சிறுகுறிப்பு எழுதி வருகிறார். ஃபோட்டோகிராபி, ஷாப்பிங் என்று திருமண தயாரிப்பு வேலைகள், இடையிடையே கவிதைகள் என்று அற்புதமான டாக்குமென்டேஷன். நிறைய இடுகைகள் படிப்பதற்கு சுகமாகவும், பிரமிப்பாகவும், கொஞ்சம் பொறாமையாகவும் இருக்கின்றன. ஒரு சில இடுகைகள் அசூயை தரவும் செய்கின்றன. உதாரணம், பட்டுப்புடவை ஷாப்பிங் பற்றிய இடுகை. கயல் தன்னுடைய நூறு நாள் இடுகைகளை புத்தகமாக வெளியிட்டால் திருமணத்தை எதிர்நோக்கியிருக்கும் பெண்களுக்கு உதவியாகவும், விருப்பமானதாகவும் இருக்கும்.

ஆண்களைப்.... Well, பெரும்பாலான ஆண்களைப் பொறுத்தவரையில் திருமணம் என்பது ஒரு சங்கடமான சடங்கு. முக்கியமாக சில விஷயங்கள்..

1. கோட் சூட் அணிவது. இது இப்போது மிடில் கிளாஸ் திருமணங்களில் கட்டாயமாக்கப்பட்டுவிட்டது. தொண்ணூறு சதவிகித ஆண்கள் திருமணம் / ரிஷப்ஷனில் அணியும் கோட்டை அதன்பிறகு வாழ்நாளில் அணிவதே இல்லை என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. மீதமுள்ள பத்து சதவிகித ஆண்கள் (மனைவியின்) தம்பி, தங்கை திருமணத்தில் கட்டாயத்தின் பெயரில் அணிகிறார்கள்.

2. வேண்டியவர் / வேண்டாதவர் பாரபட்சமில்லாமல் எல்லோர் முன்பும் சென்று ஒரு வழிசலான புன்னகையோடு திருமண அழைப்பு வைக்க வேண்டும். அதன் நீட்சியாக கல்யாணத்துக்கு முந்தைய நாள் இரவு குஷ்டு வந்து கல்ட்டா செய்யும் நண்பர்களை பொறுத்துக்கொள்ளவும் வேண்டும்.

3. ஷாப்பிங் – இது பக்கா பொண்ணுங்க ஏரியா. பயங்கரமான பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை உள்ளவர்களால் மட்டும்தான் இதனை கடந்து வர முடியும்.

4. ஃபோட்டோகிராஃபி – நல்லவேளையாக உலகம் நவீன மயமாவதற்குள் எனக்கு திருமணம் முடிந்துவிட்டது. இப்பொழுதெல்லாம் ஹனிமூனுக்கு கூட மூன்று பேராகத்தான் டிக்கட் எடுக்கிறார்கள். போஸ் கொடுப்பதற்கு தனியாக யோகா, ஜிம்னாஸ்டிக்ஸ், மார்ஷியல் ஆர்ட்ஸ் எல்லாம் பயில வேண்டும் போலிருக்கிறது.

5. ரிசப்ஷன், திருமணம் இரண்டு நிகழ்வுகளுக்கும் சேர்த்து குறைந்தது பத்து மணிநேரங்களாவது நின்றுக்கொண்டே இருக்க வேண்டும், புன்சிரிப்பு மாறாமல். 

இவை தவிர்த்து, அங்கிளை ஞாபகமிருக்கா என்று கேட்டுவிட்டு பதிலுக்காக காத்திருப்பவரிடம் குழைந்து சமாளிப்பது, திடீரென மணமகளின் தோழிகள் அவரை மட்டும் தனியாக அழைத்துச் சென்று செல்ஃபி எடுத்துக்கொள்ளும் சமயம் பைத்தியம் போல மேடையில் தனியாக நிற்பது, ஆரத்தி தட்டு எடுக்கும் மணமகளின் மூன்று டஜன் உறவினர்களுக்கு பொறுமை காப்பது, மணப்பெண்ணுக்கு லட்டு ஊட்டுவது போல போட்டோவுக்கு போஸ் கொடுப்பது என்று அது ஒரு பெரிய லிஸ்ட்.

புரோகிதர்கள் வைத்து செய்யப்படும் திருமணங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். ஒரு படத்தில் சத்யராஜ் சொல்வது போல, புகை அலர்ஜி, சைனஸ் பிராப்ளம், கண்ணு எரியும் அதனால யாராவது தாலிய கட்டினா கூட்டிட்டு போயிடலாம். 

ஆண்களின் நீண்ட கால கனவு, ஏக்கம், தவம் எல்லாம் திருமணத்திற்கு பிறகு நடக்கும் விஷயங்கள் தான். நான் திருமணத்திற்கு பின்பான வாழ்க்கையைப் பற்றி சொல்கிறேன் :)

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

2 comments:

ராஜி said...

பாவம் உங்கூட்டம்மா

Rajarajan Kannan said...

/*ஆண்களின் நீண்ட கால கனவு, ஏக்கம், தவம் எல்லாம் திருமணத்திற்கு பிறகு நடக்கும் விஷயங்கள் தான்*/
- ஓமம் ஓமம்.