17 July 2017

பிரபா ஒயின்ஷாப் – 17072017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

யுவல் நோவா ஹராரியின் சேபியன்ஸ் புத்தகத்திலிருந்து சில விஷயங்களைப் பார்ப்போம்.

மனிதனின் கண்டுபிடிப்புகளிலேயே மகத்தானது எது தெரியுமா ? கம்ப்யூட்டரோ, ராக்கெட்டோ, பிரியாணியோ, ஐஸ்வர்யா ராயோ அல்ல. கடவுள் ! சிம்பன்ஸிகள் சிறுசிறு குழுக்களாக வாழும் பழக்கமுடையவை. ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு ஆண் சிம்பன்ஸி தலைமை தாங்கும். (பெண்ணிய பிஸினஸ் எல்லாம் சிம்பன்ஸியில் கிடையாது). ஒரு குழுவில் அதிகபட்சம் ஐம்பது அல்லது அறுபது சிம்பன்ஸிகள் வரை சேர்ந்து வாழும். அதற்கு மேலே எண்ணிக்கை பெருகினால் குழுவின் அமைதி சீர்குலையும். அக்குழுவிலிருந்து இன்னொன்று உருவாகும். மனிதர்களை பொறுத்தவரையில் அதிகபட்சம் நூற்றியைம்பது பேர் வரை இணக்கமாக இருக்க முடிந்தது. (நான் சொல்வது அப்போது ! இப்போது பதினைந்து பேரால் கூட இணக்கமாக இருக்க முடிவதில்லை). ஆதியுலகில் இவ்வுலகில் நம்மோடு வேறு மனித இனங்களும் இருந்தன. ஒரு நியாண்டர்தாலும் மனிதனும் ஒண்டிக்கு ஒண்டி மோதினால் நியாண்டருக்குத்தான் நிச்சய வெற்றி. அதுவே ஒரு நூறு பேர் கொண்ட குழுக்கள் மோதினால் கூட நியாண்டர்தால்கள் வெல்லவே வாய்ப்பு அதிகம். ஆனால் நூறுக்கு மேலே போனால் நியாண்டர்களால் ஒற்றுமையாக போராட முடியாது. இங்கேதான் மனிதர்களுக்கு கடவுளின் துணை தேவைப்படுகிறது. கடவுள்களைப் பற்றிய புனைவுக் கதைகள் ஆயிரக்கணக்கான அந்நியர்கள் ஒற்றுமையாக வாழவும், மற்ற இனங்களை எதிர்த்து போரிடவும் வழி செய்தது. இன்றைக்கு உலகிலுள்ள ஒரே மனித இனம் நாம் மட்டும்தான் ! ஒரு பேச்சுக்கு கடவுள் பற்றிய புனைவுக் கதைகளை ஒரு தனி நபர் உருவாக்கியிருந்தால் அவர் ஒரு பகுத்தறிவாளராக இருந்திருக்க வேண்டும். பெரியார் சொன்னது போல முட்டாள் அல்ல.

சேபியன்ஸ் - புத்தகம்
கடவுளுக்குப் பிறகு மனிதனின் முக்கியமான கண்டுபிடிப்பு – நெருப்பு. நெருப்பைப் பொறுத்தவரையில் மனிதர்கள் மட்டுமல்ல, நியாண்டர்தால்களும் ஹோமோ எரக்டஸ் எனப்படும் நிமிர்ந்த மனித இனங்களும் அதனை பயன்படுத்தின. ஆரம்பத்தில் நெருப்பினால் மனிதர்களுக்குக் கிடைத்த அனுகூலங்கள் – இரவில் வெளிச்சம், குளிருக்கு இதமான வெப்பம் மற்றும் கொடிய விலங்குகளுக்கு எதிரான ஆயுதம். அம்மூன்றையும் தாண்டி நெருப்பு நமக்குத் தந்த சிறப்பான விஷயம் சமையல். சமைத்து சாப்பிடத் துவங்கியதால் உணவில் கிருமிகள், நுண்ணுயிர்கள் அழிந்தன. மேலும் உணவை மென்று சாப்பிட வேண்டிய நேரம் குறைந்தது. உதாரணமாக, சிம்பன்ஸிகள் நாளொன்றிற்கு உணவை மென்று சாப்பிடுவதற்கு மட்டும் தோராயமாக ஐந்து மணிநேரங்கள் செலவிடுகின்றன. சமைப்பதால் மனிதர்களுக்கு நாளொன்றிற்கு ஒரு மணிநேரம் மட்டும் போதுமானதாக இருந்தது. காலப்போக்கில் மனிதர்களுக்கு பற்களின் பயன்பாடும், நீண்ட குடலுக்கான தேவையும் குறைந்தன. இதனால் அவனுக்குக் கிடைத்த ஆற்றல் மூளை வளர்ச்சிக்கு உதவியது. அன்றைய பரிணாம வளர்ச்சியால் நமக்குக் கிடைத்த மூளை பின்னாளில் நமக்கு பெரிய பலன்களை கொடுத்தன. ஆயுதங்கள் கண்டுபிடித்தோம். சக்கரம் கண்டுபிடித்தோம். மின்சாரம், ஏரோப்ளேன், கம்ப்யூட்டர், செல்போன் என்று என்னவெல்லாமோ கண்டுபிடித்துவிட்டோம். குறிப்பாக காகிதம் என்ற விஷயத்தைக் கண்டுபிடித்தோம். அதனால் தான் குண்டு குண்டு இலக்கியங்களை எல்லாம் படைக்க முடிகிறது. வெண்முரசு எழுத முடிகிறது. பக்கத்துக்கு மூன்று வரி (ஒன்றின் கீழ் ஒன்று) மட்டும் அச்சிட்டு கவிதைத் தொகுப்புகள் வெளியிட முடிகிறது.

மீண்டும் ஆதியுலக விஷயத்திற்குள் செல்வோம். நம்மோடு வாழ்ந்த நியாண்டர்தால்களும், டெனிசோவன்களும் மற்ற மனித இனங்களும் இப்போது உலகில் இல்லை. இதுகுறித்து இரண்டு முக்கியமான கோட்பாடுகள் உள்ளன. 

முதலாவது கலப்பினச் சேர்க்கை கோட்பாடு. முதன்முதலில் ஹோமோ சேபியன்ஸ் எனும் நமது மனித இனம் கிழக்கு ஆப்பிரிக்காவில் தோன்றியது. பின்னர் அங்கிருந்து அவர்கள் ஐரோப்பியாவிற்கு பயணம் செய்தார்கள். நியாண்டர்தால்களை கண்டார்கள். அவர்களுடன் உடலுறவு கொண்டார்கள். ஒரு புதிய கலப்பினம் உருவானது. சேபியன்ஸ் கிழக்காசியாவிற்கு பயணம் செய்தனர். ஹோமோ எரக்டஸுடன் உறவு கொண்டார்கள். ஒரு புதிய கலப்பினம் உருவானது. விபரீதமான இக்கோட்பாட்டின் படி பார்த்தால் தற்போது ஐரோப்பியாவில் வசிப்பவர்கள் நியாண்டர்தால் வழி வந்தவர்கள். ஆசியர்கள் எரக்டஸ் வழி வந்தவர்கள். ஆஸ்திரேலியர்கள் டெனிசோவன்கள். 

இரண்டாவது, மாற்றுக் கோட்பாடு. இதன்படி மனிதர்கள் நியாண்டர்தால்கள் மற்றும் மனித இனங்களோடு உறவுக்கொண்டு குழந்தை பெற்றுக்கொள்வது சாத்தியமில்லை. சேபியன்ஸ் இனம் ஐரோப்பாவுக்கு பயணம் செய்தது. நியாண்டர்களோடு போரிட்டு அவர்களை அழித்தொழித்தனர். பூமியின் மற்ற பகுதிகளுக்கும் சென்று அங்குள்ள சக மனித இனங்களை அழித்தனர். பூமியின் ஒரே மனித இனமாக தலையெடுத்தனர். மாற்றுக் கோட்பாடு உண்மையென்றால் இப்போது பூமியில் வசிக்கும் எல்லோரும் சேபியன்ஸ் !

தர்க்கரீதியாக மாற்றுக் கோட்பாட்டை ஏற்றுக்கொள்வது தான் சரியான முடிவு. ஏனென்றால் கலப்பினச் சேர்க்கை மனிதர்களுக்குள் பிளவை ஏற்படுத்தும். ஆனால் உண்மை என்னவோ வேறுவிதமாக இருக்கிறது. 2010ம் ஆண்டு நமக்கு படிமங்களிலிருந்து நியாண்டர்தால் DNA கிடைத்தது. அதனை மனித DNAவோடு ஒப்பிட்டுப் பார்த்தால் ஐரோப்பிய ஜனத்தொகையில் நான்கு சதவிகிதம் வரை ஒத்துப் போகிறது. சில மாதங்களுக்குப் பிறகு படிமங்களிலிருந்து டெனிசோவ மனிதனின் விரல் கிடைக்கிறது. அதன் DNA, ஆஸ்திரேலியர்களுடன் ஆறு சதவிகிதம் வரை ஒத்துப் போகிறது. ஆக, கலப்பினச் சேர்க்கை நடந்திருப்பதற்கு வாய்ப்பு அதிகம். ஆனால் முழுக்க அதுவே நடந்தது என்றும் சொல்ல முடியாது. நாமெல்லாம் ஒரு தாய் மக்கள் என்பது மட்டும் உண்மை.

இப்போது 2012ல் வெளிவந்த அம்புலி படத்தின் கதையை கவனியுங்கள். பிரிட்டிஷ் ராணுவத்தில் விஞ்ஞானியாக பணிபுரிந்த சர் வெலிங்டன் தன் ஓய்வுக்குப் பிறகு தமிழகத்தில் ஒரு கல்லூரி துவங்குகிறார். நியாண்டர்தால் ஆராய்ச்சி என்பது அவரது நீண்டநாள் கனவு. அதாவது நியாண்டரின் மரபணுவை மனிதக்கருவில் செலுத்தி, அதன்மூலம் மனிதர்களை நூற்றியைம்பது ஆண்டுகள் வரை ஆரோக்கியமாக வாழ வைப்பதற்கான முயற்சி. ஆதரவற்ற கர்ப்பிணிப்பெண் ஒருவரை தனது ஆராய்ச்சிக்கு பயன்படுத்துகிறார். துரதிர்ஷ்டவசமாக கர்ப்பிணி கிரகணத்தின்போது வெளியே வருகிறாள். கதிர்வீச்சு தாக்கத்தால் கருவிலிருக்கும் குழந்தை பாதிக்கப்படுகிறது. அம்புலி பிறக்கிறான். 

ஒருவேளை உமா காமேஷ் கிரகணத்தின் போது வெளியே வராமலிருந்தால் அந்த ஆராய்ச்சி வெற்றி பெற்றிருக்கும் இல்லையா ? அம்புலி இரட்டையர்கள் இரண்டாம் பாகத்தை இந்த கோணத்திலிருந்து கூட துவங்கலாம். 

மாதிரி நியாண்டர் பெண்
ஒருவேளை நிஜமாகவே நம் விஞ்ஞானிகள் நியாண்டர்தால் ஆராய்ச்சியில் இறங்கலாம். அப்படி செய்யும் பட்சத்தில் நமக்கு நீண்டநாள் வாழக்கூடிய, அதிக உடல் பலம் கொண்ட, மனிதர்களை விட புத்திசாலித்தனமான ஒரு இனம் கிடைக்கும். நியாண்டர்தால்களைக் கொண்டு மனிதர்களால் செய்ய முடியாத, உடல் உழைப்பு அதிகம் தேவைப்படக்கூடிய காரியங்களை செய்துக்கொள்ளலாம். நியாண்டர்தால் பெண்களுடன் நம் ஆண்கள் உறவுக்கொண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம். (உடல்ரீதியாக நியாண்டர்தால் ஆணும், மானுடப்பெண்ணும் உறவு வைத்துக்கொள்வது சாத்தியக்குறைவு). முதலில் சொன்ன வாக்கியத்தில் நியாண்டர்தால்கள் நம்மை விட புத்திசாலித்தனமானவர்கள் என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

2 comments:

N.H. Narasimma Prasad said...

Great Post. Nice...

DREAMER said...

//ஒருவேளை உமா காமேஷ் கிரகணத்தின் போது வெளியே வராமலிருந்தால் அந்த ஆராய்ச்சி வெற்றி பெற்றிருக்கும் இல்லையா ? அம்புலி இரட்டையர்கள் இரண்டாம் பாகத்தை இந்த கோணத்திலிருந்து கூட துவங்கலாம்.//

கட்டுரை அருமை... இரண்டாம் பாகத்திற்கான ஐடியாவும் அருமை... நிச்சயம் இந்த கோணத்திலும் முயல்கிறேன்...

அன்புடன்
ஹரீஷ் நாராயண்