அன்புள்ள வலைப்பூவிற்கு,
சிவந்த கைகள். கார்ப்பரேட் பின்னணியில் அமைந்த சுஜாதாவின் ராக்கெட்
வேக நாவல். விக்ரம் என்கிற இளைஞன் கார்ப்பரேட் ஏணியில் துரிதமாக முன்னேறுகிறான்.
இலக்கின் அருகே செல்லும் தருவாயில் ஒரு இடையூறு. எம்.பி.ஏ படித்ததாக பொய் சொல்லி
வேலையில் சேர்ந்திருக்கிறான். அந்தப் பொய் அவனை மீண்டும் தரையில் இழுத்துப்போட
பார்க்கிறது. அச்சூழலை விக்ரம் எப்படி எதிர்கொள்கிறான் என்பதே சிவந்த கைகள் ! நாவலை
படித்து முடிக்கும்போது அதன் முடிவில் இன்னொரு பத்தி வர வேண்டும் என்று நினைத்து,
அதனை மனதுக்குள்ளே எழுதியும் பார்த்தேன். ஒரு பத்தி மட்டும் இல்லை. இரண்டாவது பாகமாக
இன்னொரு நாவலே இருக்கிறது (கலைந்த பொய்கள்) என்பதை பிற்பாடு தெரிந்துக்கொண்டேன்.
சிவந்த கைகள் ஒரு வகையில் என்னுடைய சொந்தக்கதை. போலி டிகிரி ஆசாமி
என்று எண்ணிவிடாதீர்கள். நான் சொல்ல வந்தது கார்ப்பரேட் சூழலில் அத்தனை எளிதாக
பொருந்தாமல், அச்சூழலை ஒருவித தயக்கத்துடன், அச்சத்துடனும் அணுகும், அன்றாடப்பணியில்
சின்னச் சின்ன தவறுகள் செய்து, அவற்றை மற்றவர்களுக்கு தெரியாமல் மறைக்க மேலும் பல
தவறுகள் செய்து, பூசி மொழுகி சர்வைவ் செய்துக்கொண்டிருக்கும் ஒரு இளைஞனைப் பற்றி.
நாவலில் வருவது போல நேரங்கள் கூடிவந்து திடீரென துறையில் பெரிய
ஆளாகும் நபர்களை பார்த்திருக்கிறேன். தேவர் மகனில் சிவாஜி மறைந்தபிறகு கமல் சார்ஜ்
எடுத்துக்கொள்வார். அவருக்கு பொறுப்புகள் கூடும். கெட்டப் மாற்றிக்கொள்வார். சொந்த
வாழ்க்கையில் தியாகங்கள் செய்வார். நிறைய கேங்ஸ்டர் படங்களில் பார்த்திருப்போம்.
ஒரு பெரிய தாதாவின் வீழ்ச்சிக்குப் பிறகு அவருக்கு அடுத்த நிலையில் இருப்பவர்
அதிகாரத்திற்கு வருவார். புதுப்பேட்டையில் அன்பு என்கிற தாதாவை வீழ்த்தி கொக்கி
குமார் அவருடைய இடத்திற்கு முன்னேறுகிறான். அதே போல கார்ப்பரேட்டில் கூட சில
சமயங்களில் இரண்டாம் நிலையில் இருப்பவரே முதல் நிலையில் இருப்பவரை மிதித்து
தள்ளிவிட்டு முன்னேறுவதை பார்க்கலாம். சில சமயங்களில் சில லக்கி பாஸ்டர்டுகளுக்கு
யாரையும் வீழ்த்த வேண்டிய அவசியம் இருக்காது. காற்று பலமாக வீசி, இலைகள்
உதிர்வதால் அதிகாரம் வந்து சேரும்.
நான் சொல்வதெல்லாம் எக்ஸப்ஷனல் கேஸஸ். மற்றபடி பெரும்பாலான சமயங்களில்
கார்ப்பரேட்டில் வேலை கிடைப்பது, வேலை செய்வது, பதவி உயர்வு கிடைப்பது எல்லாம்
மற்ற துறைகளில் உள்ளதைப் போலவே சவாலான விஷயம்தான். ஆனால் சினிமாவில் மட்டும்
இவையெல்லாம் வெகு சுலபமாக கிடைப்பதாக தொடர்ந்து முன்னிறுத்தப்படுகிறது. மாயாண்டி
குடும்பத்தார் படத்தில் கடைசி மகனை (தருண் கோபி) மட்டும் படிக்க வைக்கிறார்கள். அவருக்கு
படிக்கும்போது கேம்பஸ் இண்டர்வியூவில் வேலை கிடைக்கிறது. வேலையில் சேர்ந்த முதல்
நாளே அவருக்கு தனியறை ஒதுக்கப்படுகிறது. மதிய உணவுக்கு லெக் பீஸ் வைத்து பிரியாணி
தருகிறார்கள். இதனை தமிழ் சினிமாக்களில் தாராளமாக பரவிக்கிடக்கும்
தர்க்கப்பிழைகளில் ஒன்றாக எடுத்துக்கொள்ள முடியாது. பின்தங்கிய கிராமப்புற / முதல்
தலைமுறை பட்டதாரிகளின் அறியாமையை இதுபோன்ற காட்சிகள் பலப்படுத்துகின்றன. கிராமப்புற
மாணவர்கள் கார்ப்பரேட் பணியிடங்களில் சோபிக்க முடியாது என்று சொல்லவில்லை. தருண்
கோபிக்கு கேம்பஸ் இண்டர்வியூவில் இடம் கிடைக்கிறது என்றால் அதற்காக அவர் எத்தனை
உழைக்கிறார், என்ன மாதிரியான முயற்சிகள் எடுக்கிறார், என்னென்ன திறன்களை
வளர்த்துக் கொள்கிறார் என்பது பற்றி படத்தில் ஒரு துரும்பைக் கூட காட்டவில்லை,
அட்லீஸ்ட், ஒரு அறுபது நொடி மாண்டேஜ் காட்டியிருக்கலாம்.
மாயாண்டி குடும்பத்தார் பரவாயில்லை. யாரடி நீ மோகினி ஒட்டுமொத்தமாக
மென்பொருள் துறையையே கொத்துபரோட்டா போடுகிறது. வீட்டில் வெட்டியாக
உட்கார்ந்திருக்கும் திருவாளர் தனுஷ் நயன்தாராவிற்காக அவர் பணிபுரியும் மென்பொருள்
நிறுவனத் தேர்வில் கலந்துகொள்கிறார். எழுத்துத் தேர்வில் ஒன்றும் தெரியாமல்
உட்கார்ந்திருக்கிறார். நயன்தாரா வந்து டென்ஷன் ஆகாம யோசிங்க என்கிறார். உடனே
கடகடவென எழுதி முடித்து அடுத்த ரவுண்டுக்கு தேர்வாகிறார். குரூப் டிஸ்கஷனில்
தமிழில் பேசுகிறார். (ஐ.டி. நிறுவனங்களில் தமிழில் பேசுவது சகஜம்தான் என்றாலும்
குரூப் டிஸ்கஷனில் ஏய் திராவிட சமுதாயமே என்றெல்லாம் ஆரம்பித்தால்
துரத்திவிடுவார்கள்). நேர்முகத் தேர்வில் மல்டி த்ரெடிங், ஃபாரின் கீயின்
பயன்பாடு, வொய்ல் – டூ வொய்ல் வேறுபாடுகள் போன்ற சப்பையான கேள்விகள்
கேட்கிறார்கள். தனுஷ் அதுவும் தெரியாமல் முழிக்கிறார். நயன்தாராவை பார்த்ததும்
துரித ஸ்கலிதம் ஏற்பட்டது போல பதில்கள் வந்து விழுகின்றன. வேலைக்கு சேர்ந்தபிறகு
நயன்தாரா அவரைப் பார்க்கவில்லை என்கிற கடுப்பில் கமாண்ட் ப்ராம்டில் ASDF என்று
டைப் செய்கிறார். துறையில் உள்ள அத்தனை சிஸ்டமும் கீக்கீ என்று
சப்தமெழுப்புகின்றன. மேனேஜர் வந்து லார்டு மாதிரி கத்துகிறார் (இதில் மட்டும்
தர்க்கப்பிழை இல்லை). குற்ற உணர்வில் தனுஷ் இரவு முழுக்க அலுவலகத்திலிருந்து
கீபோர்ட் நடனம் புரிகிறார். எதுவும் வேலைக்கு ஆகவில்லை. சட்டையை மடித்துவிட்டுக்
கொண்டு இன்னும் தீவிரமாக கோட் எழுதுகிறார். நீண்டநேர போராட்டத்திற்குப்பின் திரை ஹலோ
வேர்ல்ட் என்பதைப் போல கோட் ஆக்டிவேட்டட் என்று பிரசுரிக்கிறது. அடுத்து
ஆன்சைட் வாய்ப்பு கிடைப்பது, ஆஸ்திரேலியாவில் கூத்தடிப்பது என்று நீள்கிறது. மேலும் பல படங்களில் மென்பொருள் பணியாளர்கள் என்றாலே இப்படித்தான் ஹேர்ஸ்டைல் வைத்திருப்பார்கள், ஐரோப்பிய ஆங்கிலம் பேசுவார்கள், சனிக்கிழமை இரவென்றாலே பப்புக்கு செல்வார்கள், சகஜமாக செக்ஸ் வைத்துக்கொள்வார்கள் என்று நிறைய பொதுமை படுத்தல்களை காணலாம்.
மென்பொருள் துறையைப் பற்றி படம் எடுப்பவர்கள் அத்துறையை பற்றி கொஞ்சம்
டேபிள் வொர்க்காவது செய்துவிட்டு எடுப்பது உத்தமம். கோட் அடிப்பது என்றால் காதலர்
தினம் கவுண்டமணி மாதிரி கீபோர்டில் தடதடவென அடிப்பது அல்ல. அது இருட்டு அறையில்,
உருவமற்ற ஒரு பொருளை தேடும் புதிர். அப்பொருளை தேடும் சமயத்தில் உங்களுக்கு
முரட்டுக்குத்துகள் விழும். கொடிய மிருகங்கள் உங்களை கூட்டு வன்புணர்வு செய்து,
குதத்தைக் கிழிக்கும். ரத்தம் வடிய, வடிய பொருளைத் தேடிக்கண்டுபிடித்து ஆட்டோ டிரைவர் மாணிக்கம்
மாதிரி சிரிக்க வேண்டும். எல்லாம் முடித்து நீங்கள் செய்த வேலையின்
அளவு என்னவென்று பார்த்தால் சொற்பமாக இருக்கும். குறிப்பாக, டீபக்கிங் எனும் பிழை
திருத்தத்தை எடுத்துக்கொண்டால் பலமணிநேர உழைப்பின் விளைவாக ஒரேயொரு
வரியை மட்டும் மாற்றம் செய்திருப்பீர்கள்.
மகளை பள்ளியில் சேர்க்கும் புதிய படலத்தில் காலடியெடுத்து
வைத்திருக்கிறேன். இதென்ன பிரமாதம் என்று கொஞ்சம் அசட்டையாக இருந்துவிட்டேன். உள்ளே
நுழைந்தால் தான் அதிலிருக்கும் பல வேடிக்கைகள், அபத்தங்கள் புரிகிறது. டீச்சர்கள்
எல்லாம் ஒரு மாதிரி செயற்கையாக ஆங்கிலத்தில் பேசுகிறார்கள். நீங்கள் தமிழகத்தில்
ஏர்போர்ட், ஸ்டார் ஹோட்டல் போனால் கூட நீங்கள் தமிழில் பேசினால் உங்களிடம் தமிழில்
பேசுவார்கள் அல்லது முயற்சிப்பார்கள். இங்கே அந்த பேச்சுக்கே இடமில்லை. ஃபீஸ் என்ற
பெயரில் நான் எஞ்சினியரிங் படித்த தொகையை கேட்கிறார்கள். டொனேஷன் என்பதை ஒன் டைம்
ரெஜிஸ்ட்ரேஷன் என்று நாசூக்காக கேட்கிறார்கள். மகளுக்கு ஓரல் டெஸ்ட் வேறு
இருக்கிறது என்கிறார்கள். இன்னும் என்னென்ன கொடுமைகளை பார்க்கப் போகிறேனோ ?
எதற்கும் இப்போதே அலெக்ஸாண்டரின் குதிரை பெயரை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
என்றும்
அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
1 comment:
IT துறையைப் பற்றிய விவரங்கள், கருத்துக்கள் செம..
Post a Comment