4 September 2017

பிரபா ஒயின்ஷாப் – 04092017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

1948. தென்னாப்பிரிக்காவில் ‘அப்பர்தீட்’ (தீட்டு ?) எனும் நிற துவேஷ விதிமுறைகள் நடைமுறைக்கு வருகிறது. அப்பர்தீட் சட்டம் தென்னாப்பிரிக்கர்களை கறுப்பர், வெள்ளையர், நிறத்தவர், இந்தியர், ஆசியர் எனப் பல்வேறு இனக்குழுக்களாகப் பாகுபடுத்தியது. கறுப்பினத்தவர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டன. 'வெள்ளையருக்கு மட்டும்' எனக் குறிப்பிடும் அறிவிப்புப் பலகைகள் பொது இடங்களில் தாராளமாகக் காணப்பட்டன. அரசு, கல்வி, மருத்துவ வசதி, பொதுச் சேவைகளில் பாகுபாட்டுக் கொள்கையைக் கடைப்பிடித்ததுடன், கறுப்பினத்தவருக்கு வெள்ளையரிலும் தரக் குறைவான வசதிகளையே வழங்கியது. கறுப்பினப் பாடசாலைகளின் கல்வி முறை அவர்களைக் கூலியாட்களாக உருவாக்குவதாகவே அமைந்தது. அப்பர்தீட் முறைக்கு மக்கள் நேரடியாகவும், அரசியல் வழிமுறைகள் மூலமும் காட்டிய எதிர்ப்புக்களை, நீதி விசாரணை இன்றித் தடுத்து வைத்தல், சித்திரவதை, செய்தித் தணிக்கைகள், கட்சிகளைத் தடை செய்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் அரசு அடக்க முயன்றது. பல்வேறு புரட்சி இயக்கங்கள் தடைசெய்யப்பட்டன. 

விளையாட்டுக்களிலும், இனங்களுக்கு இடையிலான தொடர்புகள் விரும்பப்படவில்லை. கிரிக்கெட்டை பொறுத்தவரையில் கறுப்பின வீரர்கள் தென்னாப்பிரிக்க அணிக்காக விளையாட அனுமதிக்காதது மட்டுமில்லாமல் மற்ற கறுப்பின அணிகளுடனும் அந்நாட்டின் அணி விளையாடாமல் இருந்தது. அதன்படி இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுடன் மட்டும்தான் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் விளையாடும். அந்த அணிகளிலும் வெள்ளையின வீரர்கள் மட்டுமே இருக்க வேண்டும். அப்போது டொ’லிவெரா என்கிற கறுப்பின வீரர் இங்கிலாந்துக்காக விளையாடி வருகிறார். டொ’லிவெரா யாரென்றால் தென்னாப்பிரிக்காவில் பிறந்து நிற துவேஷத்தால் உரிமைகள் பறிக்கப்பட்டு அதனால் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தவர். 1968ம் ஆண்டு இங்கிலாந்துக்கும் தென்னாப்பிரிக்காவிற்கும் இடையே டெஸ்ட் தொடர் ஏற்பாடு செய்யப்படுகிறது. அச்சமயம் டொ’லிவெரா நல்ல ஃபார்மில் இருந்தும் கூட அவருக்கு தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இங்கிலாந்து அணியில் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அணியில் இடம்பெற்ற ஒரு வீரருக்கு காயம் ஏற்பட அவருக்கு பதிலாக டொ’லிவெரா அழைக்கப்படுகிறார். தென்னாப்பிரிக்காவில் எதிர்ப்பலைகள் கிளம்புகின்றன. மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன. இறுதியாக இங்கிலாந்து அணி தொடரை ரத்து செய்துவிட்டு நாடு திரும்புகிறது. தொடர்ச்சியாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் இருந்து தென்னாப்பிரிக்கா இடைநீக்கம் செய்யப்படுகிறது.

மண்டேலா - க்ளெர்க் உடன்படிக்கை
1991ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் தொடர் பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு அப்பர்தீட் முறை ஒழிக்கப்பட்டது. தலைவர் நெல்சன் மண்டேலா சிறையிலிருந்து வெளியே வருகிறார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் தென்னாப்பிரிக்கா மீண்டும் இணைக்கப்படுகிறது. இதற்குள் நான்கு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பைகள் நடந்து முடிந்துவிட்டன. 1992ம் ஆண்டு ஆஸி, நியூஸியில் நடைபெற்ற உலகக்கோப்பையே தெ.ஆ பங்கேற்ற முதல் உலகக்கோப்பை. அதுவரையில் நிற துவேஷம் காரணமாக தெ.ஆ அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்ட கெப்ளர் வெஸல்ஸ் அணியின் கேப்டனாக களமிறங்குகிறார். ஒன்பது அணிகள் பங்கேற்ற அந்த தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை விளையாட வேண்டும். முதல் போட்டியே அப்போதைய உலக சாம்பியன் ஆஸியுடன். ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் தெ.ஆ வெற்றி பெற்றது. ஆட்டமிழக்காமல் 81 ரன்கள் குவித்த கெப்ளர் வெஸல்ஸ் தான் ஆட்டநாயகன். லீக் ஆட்டங்களின் முடிவில் எட்டு போட்டிகளில் ஐந்தை வென்று மூன்றாமிடத்தை பிடித்தது தெ.ஆ. 

அரையிறுதியில் இங்கிலாந்துடன் மோதல். மழையின் காரணமாக ஆட்டம் சற்று தாமதமாக தொடங்கினாலும் ஓவர்கள் குறைக்கப்படவில்லை. எனினும் குறிப்பிட்ட நேரத்திற்குள் முதல் இன்னிங்க்ஸ் முடிக்கப்படாததால் ஐந்து ஓவர்கள் குறைக்கப்பட்டன. கொடுக்கப்பட்ட 45 ஓவர்களில் இங்கிலாந்து 252 ரன்கள் குவித்திருந்தது. அப்போதைய கிரிக்கெட் விதிமுறைகளின்படி அது பெரிய ஸ்கோர். தொடர்ந்து விளையாடிய தெ.ஆ. அதிரடியாக இல்லையென்றாலும் நிதானமாக இலக்கை நெருங்கிக்கொண்டிருக்கிறது. கடைசியாக 13 பந்துகளில் 22 ரன்கள் தேவை. மழை குறுக்கிடுகிறது. அப்போது டக்வொர்த் – லிவிஸ் முறை கிடையாது. (ட-லி முறைக்கும் எதிர்ப்பாளர்கள் உண்டு). அப்போதைய மழை விதிமுறைகளின்படி இரண்டாவது அணி விளையாடும்போது மழை குறுக்கிட்டு, ஓவர்கள் குறைக்கப்பட்டால், ஒவ்வொரு ஓவர் குறைக்கப்படும்போது முதலாவது ஆடிய அணி ஒரு ஓவரில் அடித்த குறைந்தபட்ச ஸ்கோர் டார்கெட்டில் இருந்து கழிக்கப்படும். அதாவது முதலாவது ஆடிய அணி ஒரு ஓவரில் ரன் எதுவும் அடிக்கவில்லை என்றால் இரண்டாவது அணிக்கு முதல் ஓவர் குறைக்கப்படும்போது டார்கெட் குறையாது. அவ்விதிகளின்படி மழையின் குறுக்கீட்டால் ஒரு ஓவர் குறைக்கப்படுகிறது. டார்கெட் குறையவில்லை. 7 பந்துகளில் 22 அடிக்கவேண்டும். மழை தொடர்கிறது. முதலாவது விளையாடிய இங்கிலாந்து இரண்டு மெய்டன் ஓவர்கள் கொடுத்திருக்கிறது. அதனால் மீண்டும் டார்கெட் குறையவில்லை. ஒரு பந்தில் 22 ரன்கள். பன்னிரண்டு நிமிட மழை. கடைசி பந்தில் ஒரு ரன் எடுக்க, 20 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. தென்னாப்பிரிக்கா உலகக்கோப்பையில் இருந்து வெளியேறுகிறது.

இப்போட்டியின் முடிவை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் ? என்னைப் பொறுத்தவரையில் அநியாயம். ஒருவேளை மழை குறுக்கிடாமல் 13 பந்துகளில் 22 ரன்கள் அடிக்க முடியாமல் தென்னாப்பிரிக்கா தோற்றிருந்தால் அதனை நியாயமான தோல்வியாக ஏற்றிருக்கலாம். எதற்காக இப்போது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வரலாற்றைச் சொல்லிக்கொண்டிருக்கிறேன் என்று உங்களுக்கு அநேகமாக புரிந்திருக்கலாம். கிட்டத்தட்ட NEET தேர்வும் 1992 உலகக்கோப்பையின் மழை விதிமுறைகளும் ஒன்றுதான்.

NEET தேர்வு காய்ச்சலில் இட ஒதுக்கீடு தொடர்பான நிறைய மொன்னைத்தனமான பதிவுகள் / வாட்ஸப் ஃபார்வேர்டுகள் ஃபேஸ்புக்கில் பரவிக்கிடக்கிறது. மேலோட்டமாக பார்த்தால் நியாயம் தானே என்று நினைக்கத்தோன்றும் பதிவுகள். இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படித்தவரிடம் ஆபரேஷன் செய்து கொள்வீர்களா? என்று ஒரு கேள்வி. மருத்துவம் என்றில்லை. எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் மதிப்பெண்கள் என்பது போட்டியில் வடிகட்டுவதற்கு மட்டுமே பயன்படும். பயிற்சிதான் முக்கியம். சிறப்பாக பணியாற்றும் மருத்துவர்கள் நாளடைவில் வேர்ட் ஆஃப் மவுத்தில் புகழ் பெறுகிறார்கள், சாதிக்கிறார்கள். மென்பொருள் துறையை எடுத்துக்கொண்டால் பெரும்பாலும் 65 – 70 சதவிகித மதிப்பெண்கள் எடுத்தவர்கள் தான். அதனால் 90 சதவிகிதம் எடுத்தவர்கள் மென்பொருள் துறையில் சாதிக்க முடியாது என்று சொல்லவில்லை. யாராக இருந்தாலும் பயிற்சி இருந்தால் சாதிக்கலாம். இட ஒதுக்கீடு என்பது பொருளாதார ரீதியாக பின் தங்கியவரை முன்னேற்றி விடுவதற்காக அல்ல, இன்னார் படிக்க கூடாது என கல்வி முழுமையாக மறுக்கப் பட்டு காலம் காலமாக கூலியாக மட்டுமே இருக்க வேண்டும் என தலைமுறை தலைமுறையாக புத்தக வாசம் படாத படி பார்த்துக் கொண்ட இனத்திற்கு, எந்த படிநிலை அமைப்புப்படி அவர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டார்களோ அந்த படிநிலையின் ரிவர்ஸ் வெர்ஷன்தான் இந்திய இட ஒதுக்கீடு முறை. இட ஒதுக்கீட்டுக்கும் பொருளாதாரத்துக்கும் துளியும் சம்மந்தமில்லை. இப்போது தென்னாப்பிரிக்காவின் அப்பர்தீட் பற்றிய பத்தியை மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள்.

சம நீதி - சமூக நீதி
இட ஒதுக்கீடு எதிர்ப்பாளர்களின் நீண்டகால வாதம் நீதி என்பது எல்லோருக்கும் சமம் என்பது. சமூகநீதி வேறு, சம நீதி வேறு. ஒரு அம்மா தான் பெற்ற பிள்ளைகள் அனைவரின் மீதும் பாரபட்சமில்லாமல் பாசம் வைப்பது சமநீதி. அதே அம்மா, பெற்ற பிள்ளைகளில் ஒரு பிள்ளை மட்டும் வாழ்வில் கஷ்டப்படும் போது, மற்ற பிள்ளைகளை விட ஒப்பீட்டளவில் பின்னுக்கு இருக்கும் போது, வசதியாக இருக்கும் பிள்ளைகளிடம் இருந்து தான் பெறும் பணம், பொருளை கூட இல்லாத பிள்ளைக்கு கொடுப்பாள். அந்த பிள்ளையை பற்றியே அவள் முழு சிந்தனையும், புலம்பலும் இருக்கும். அதற்காக மற்ற பிள்ளைகளை வெறுப்பதாக அர்த்தமில்லை, இது தான் சமூக நீதி !

விவரம் தெரியாமல் இதுபோல பதிவிடும் அற்பர்களை விடுங்கள். எல்லாம் தெரிந்தும் குரூரமாக ஒரு இறப்பைக் கூட கொச்சைப் படுத்துபவர்களை என்ன சொல்வது ? ஒரேயொரு ஆறுதல். பதிவுலகம் வந்த நாள் முதல் ஏராளமான மிதவாத / நடுநிலைவாத நண்பர்களை கடந்து வந்திருக்கிறேன். அவர்களுக்கெல்லாம் இப்பொழுதாவது நாம் யாரை எதிர்க்க வேண்டும் என்று புரிந்திருக்கும்.

நன்றி: வாசுகி பாஸ்கர் (பதிவின் சில மேற்கோள்கள் தோழர் வாசுகி பாஸ்கரின் பக்கத்திலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

No comments: