அன்புள்ள வலைப்பூவிற்கு,
நடுவில் கொஞ்ச நாட்களாக புத்தகம் படிக்கும் பழக்கமே நின்று
போய்விட்டது. பேருந்தில் ஏறினால் ஒரு குட்டித்தூக்கம் போடத் தோன்றுகிறது. அல்லது
ஃபேஸ்புக் நேரத்தை விழுங்குகிறது. கொஞ்சம் சிரமப்பட்டு அதிலிருந்து மீண்டு
கார்த்திக் புகழேந்தியின் ஊருக்கு செல்லும் வழி படித்தேன்.
சின்னச் சின்னதாக
முப்பத்தியொரு கட்டுரைகள். அநேகமாக ப்ளாகில் எழுதப்பட்டவை என்று நினைக்கிறேன்.
முதல் கட்டுரை இட்லியை பற்றியது. அக்கட்டுரையானது இட்லியில் துவங்கி கிராமத்து
ஆட்டுக்கல், திருமண வீடு என்று நீண்டு ஆதம்பாக்கத்தில் உள்ள ஒரு இட்லிக்கடையின்
அறிமுகத்துடன் நிறைவடைகிறது. கா.பு.வின் கட்டுரைகளுக்கென்று ஒரு வார்ப்புரு
இருக்கிறது. அன்றாட வாழ்க்கையில் ஏதோ ஒரு விஷயத்தை கவனிக்கிறார். பின்பு அதனுடனான
அவரது தொடர்பை நினைவுக்குறிப்புகளுடன் விவரிக்கிறார். ஃபினிஷிங் டச்சாக மீண்டும்
நிகழ்காலத்தின் சம்பவம் குறித்து ஒரு இறுதி வரி. உதாரணமாக, மகேஷிண்ட பிரதிகாரம்
பார்க்கிறார். அது அவருக்கு சில பழைய நினைவுகளை தட்டி எழுப்புகிறது. அவற்றை சுவையாக
விவரிக்கிறார். இன்னொரு கட்டுரையில், நீண்ட வருடங்களுக்குப் பிறகு நெல்லை ராம் –
முத்துராம் திரையரங்கில் படம் பார்க்கிறார். அங்கிருந்து நெல்லையில் இருக்கும் /
இருந்த திரையரங்குகளைப் பற்றி சுவையாக விவரிக்கிறார். எல்லாக் கட்டுரைகளுக்கும்
பொதுவான விஷயம் சுவையான வர்ணனை என்பதுதான் இங்கே அடிக்கோடிட்டு காட்ட வேண்டிய
விஷயம். இடையிடையே தீவிரமாக சில விஷயங்களையும் சொல்லிவிட்டுச் செல்கிறார், சிறு
தெய்வங்களின் மீதும், நாட்டார் பாடல்களின் மீதும் இயல்பாகவே கா.பு.வுக்கு ஒரு
நாட்டம் இருப்பது தெரிகிறது. நடுவில் அவ்வப்போது சரவணன் சந்திரன் எட்டிப்
பார்த்துவிட்டு போகிறார். நம் எல்லோரிடமும் நிறைய அனுபவங்கள் இருக்கின்றன. ஆனால்
பலருக்கு எழுதுவதில் விருப்பம் இருப்பதில்லை. அல்லது திறமை இல்லையென்று நினைத்துக்
கொள்கிறோம். அப்படிப்பட்டவர்கள் இவருடைய கட்டுரைகளை படித்தால் ஒரு உந்துதல்
கிடைக்கக்கூடும். இவருடைய கட்டுரைகள் அத்தனை எளிமையாக, அவ்வளவுதான் பார் பெரிய
அலங்காரமெல்லாம் வேண்டாம் உன் அனுபவத்தை அப்படியே எழுதினாலே போதுமென சொல்கின்றன.
கார்த்திக் புகழேந்தி கம்யூனிஸ சிந்தனையாளராக இருக்கக்கூடும் என்று
நினைக்கிறேன். அவருடைய பதிப்பகத்திற்கு ஜீவா படைப்பகம் என்று பெயர்
சூட்டியிருக்கிறார். மேலும் அவரது புத்தக அட்டைப்படத்தில் தா.பாண்டியன் நடந்து
செல்வது போன்ற படத்தினை பிரசுரித்திருக்கிறார்.
மகளிர் மட்டும் வெளியாகும்போது அதனை பார்க்க திரையரங்கம் அழைத்துச்
செல்ல வேண்டுமென்பது பிக் பாஸின் நீண்ட நாட்களுக்கு முந்தைய கோரிக்கை. அதனை
நிறைவேற்றியாயிற்று. பெண்ணிய சினிமாக்களுக்கு மனைவியுடன் செல்வது என்பது ஏறக்குறைய
தற்கொலைக்கு சமம். அதையும் இதையும் காட்டி நம்மை குற்ற உணர்விற்குள் தள்ளி
விட்டுவிடுவார்கள். நல்லவேளையாக மகளிர் மட்டும் அத்தனை உக்கிரம் கிடையாது.
கதை என்று புதிதாக எதுவுமில்லை. டிரைலரில் பார்த்த அதே விஷயங்கள்
மட்டும்தான் கதை. இடையிடையே சில எரிச்சல்களை தவிர்த்துப் பார்த்தால் சுவாரஸ்யமாக
நகர்கிறது. சிக்ஸர் அடிக்க வேண்டிய களம். ஆனால் பாதுகாப்பாக சிங்கிள் ரன் மட்டும்
ஓடியிருக்கிறார்கள்.
கவுசல்யா – சங்கர் என்கிற நிஜப்பெயர்களை படத்தில் பயன்படுத்தியது, ஈழ
நினைவேந்தல் காட்சி என்று நிறைய ஃப்ரேம்களில் ஆச்சர்யப் படுத்தியிருக்கிறார்கள்.
மகளிர் மட்டுமில் மூன்று விஷயங்கள் என்னை வெகுவாக கவர்ந்தன. முதலாவது,
அவரவருக்கான சின்ன வயது காஸ்டிங். நாசருக்கு நாசரின் மகனையே நடிக்க வைத்தாயிற்று.
பானுப்ரியா, சரண்யா, ஊர்வசி, லிவிங்க்ஸ்டன் என்று எல்லோருடைய சின்ன வயது
நடிகர்களும் முக அமைப்பு ஒத்துப்போகும் அளவிற்கு தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
நிச்சயமாக இதற்குப் பின்னால் பெரிய உழைப்பு இருந்திருக்க வேண்டும். குறிப்பாக
சரண்யாவின் சின்ன வயது கதாபாத்திரம் அத்தனை கச்சிதம்.
இரண்டாவது, பாவல் நவகீதனின் கேரக்டர். குற்றம் கடிதலில் வந்தது போலவே
இதிலும் இவருக்கு முக்கியமான துணை கதாபாத்திரம். அவ்வப்போது இவருடைய ஹிந்தி கலந்த
தமிழ் உச்சரிப்பும், எப்போதும் ரஜினிகாந்த் போல வாயை வைத்துக் கொண்டிருப்பது
எரிச்சலைக் கொடுத்தால் கூட அந்த வேடத்திற்கு தன்னால் முடிந்த நீதியை
செய்திருக்கிறார்.
மூன்றாவது, பானுப்ரியாவின் சின்ன வயது வேடத்தில் நடித்த அழகி ! சின்ன
வயது காட்சிகள் இடையிடையே வந்தாலும் நேரம் குறைவு என்கிற நம் ஆதங்கத்தை
புரிந்துகொண்டு அவரையே பானுப்ரியாவின் மகளாகவும் நடிக்க வைத்திருக்கிறார்கள்.
சீரான மூக்கு, கூரான கண்கள், கோதுமை நிறமென கச்சிதமான அழகி. அஜித் ரசிகர்கள் அடிக்கடி
ஸ்க்ரீன் பிரசன்ஸ் என்பார்களே அதற்கு அர்த்தம் புரிந்துக் கொண்டேன். இவர் தோன்றும்
காட்சிகளில் எல்லாம் என் கண்கள் அவரைவிட்டு அகலவில்லை. அகல முடியவில்லை.
அழகியின் பெயர் ஷோபனா கார்த்திகேயன். அறிமுகப்படம் என்கிறார்கள்.
கொஞ்சம் டிக் செய்து பார்த்தேன். இவருடைய முன்னாள் சினிமா பெயர் ஜெஸின். ஜெஸின்
கார்த்திக், ஜெஸின் டிக், ஜெஸின் தீபிகா என வெவ்வேறு பெயர்களில் மாடலாகவும்,
நடிகையாகவும் இருந்திருக்கிறார். ஒரு சில தமிழ்ப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக
நடித்திருக்கிறார். போத்தீஸ், ஏர்டெல், கே.எப்.சி உட்பட சில விளம்பரங்களிலும்
நடித்திருக்கிறார். 2013ல் மெம்மித்தரம் பிரேமிஞ்சுகுன்னம் என்கிற தெலுங்கு
படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆகியிருக்கிறார். தமிழில் அங்குசம் என்கிற படத்தில்
ஒரு சின்னஞ்சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார். தோண்டத் தோண்ட சில பழைய
புகைப்படங்கள் எல்லாம் கிடைத்தன. அதை வைத்து பார்க்கும்போது கோலிவுட்டில் ஒரு
சுற்று வரக்கூடிய எல்லா தகுதிகளும் ஷோபனாவிடம் இருக்கிறது. சினிமா ப்ரோக்கர்
சொன்னார், ஜோசியக்காரர் சொன்னார் என்று ஷோபனா மூக்கு அறுவை சிகிச்சை மட்டும்
செய்து கொள்ளாமலிருக்க வேண்டும்.
என்றும்
அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
1 comment:
துப்பறிவாளன் பார்த்துவிட்டு அனு இம்மானுவேல் கண்களை பற்றி ஆயிரம் வார்த்தைகள் மிகாமல் ஒரு கடிதம் எழுதுக.. !!
Post a Comment