16 October 2017

பிரபா ஒயின்ஷாப் – 16102017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

முன்பெல்லாம் தீபாவளி, பொங்கல் என்றால் ஏழெட்டு தமிழ் படங்கள் வெளியாகும். அவற்றில் மூன்றாவது பெரிய நடிகர்களின் படமாக இருக்கும். பண்டிகைகளுக்கு முந்தைய ஒரு வாரம் திரையரங்குகளில் பழைய அல்லது பி-கிரேடு படம் ஓட்டுவார்கள். சில திரையரங்குகள் அந்த இடைவெளியில் அரங்கை புதுப்பித்து தயாராக வைத்துக்கொள்வார்கள். அதுமாதிரி ஒரு இரண்டு வார பிரேக்கை தற்போது தியேட்டர்க்காரர்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கிடைத்த கேப்பில் ராஜ லீலை என்கிற தமிழ்ப்பட போஸ்டர்களில் தபு அபாயகரமான முகபாவனைகளை எல்லாம் காட்டிக்கொண்டிருக்கிறார். இதைப் பார்த்த நண்பர் போய் பார்த்துவிடலாமா என்றார். இந்தக் காலத்தில் ரொம்ப பேரிடம் இல்லாத கெட்டப்பழக்கம் ஒன்று என்னிடம் உள்ளது. எந்த பி-கிரேடு / டப்பிங் பட போஸ்டரை பார்த்தாலும் அது குறித்து கிரவுண்ட் வொர்க் செய்து, அப்படத்தின் பூர்வீகத்தை தெரிந்துக்கொள்வேன். இவர்கள் என்னதான் ராஜலீலை, காமயோகம், இளமை உணர்ச்சிகள், பருவ மொட்டு என்று பெயர் வைத்தாலும் கீழே சின்னதாக டைரக்டரின் பெயரை போடாமல் விடுவதில்லை. என்ன இருந்தாலும் படைப்பாளிக்கு செய்ய வேண்டிய மரியாதை இல்லையா ? தபுவின் ராஜ லீலை போஸ்டரில் கீழே குட்டு தனோவா என்று இயக்குநரின் பெயர் இருக்கிறது. அங்கிருந்து நூல் பிடித்து தபு ஃபில்மோகிராஃபிக்கு போய் அதிலே குட்டு தனோவா இயக்கிய மூன்று படங்களை சலித்தால் அதிலே எது ராஜலீலை என்று எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.

2003ல் வெளிவந்த ஹவா என்கிற பாலிவுட் படத்தின் டப்பிங் தான் இந்த ராஜலீலை. இளம் விதவையான தபு நகர்ப்பகுதியில் வீடெடுத்து வசிக்கும் வசதி இல்லாததால் ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள ஒரு பகுதியில் தன் இரு மகள்களுடன் தங்கியிருக்கிறார். அமானுஷ்ய சம்பவங்கள் நடைபெறுகின்றன. ஒரு உருவமில்லா உருவத்தால் தபு மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்படுகிறார். புரியும்படி செய்வதென்றால் ரேப் செய்யப்படுகிறார். ஒரு கட்டத்தில் சுதாரித்துக்கொள்ளும் தபு இதன் பின்னணியை ஆய்வு செய்கிறார். சில நூற்றாண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் வாழ்ந்த மலைவாழ் மக்கள் தவறு செய்பவர்களை அங்கிருக்கும் கிணற்றில் தள்ளி மரணதண்டனை நிறைவேற்றுவதாகவும், அப்படி கொலை செய்யப்பட்டவர்கள் ஒன்றுதிரண்டு காற்றின் உருவில் வருவதாகவும் கண்டுபிடிக்கிறார். இறுதியில் VFXல் கெட்ட சக்தி உறுமுவதும், அதை நல்ல சக்தி வந்து அழிப்பதுமென சுபம். இப்படத்தில் நம் ஹன்சிகா மோத்வானி குழந்தை நட்சத்திரமாக, தபுவின் மகளாக நடித்திருக்கிறார். 

தமிழ் மொழிபெயர்ப்பாக வெளிவந்திருக்கும் இந்த ராஜலீலையில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம் என்ன தெரியுமா ? இதன் விளம்பரத்தில் தினசரி செக்ஸுவல் வயலன்ஸ் என்று கொட்டை எழுத்தில் போட்டு வைக்கிறார்கள். இது ஒரு ஆக்ஸிமொரான். செக்ஸில் ஏன் வயலன்ஸ் ? இதன் உளவியலை நீங்கள் கொஞ்சம் ஆக்ட்ரெஸ் மீம்ஸ் போன்ற பக்கங்களிடம் ஒதுங்கினால் புரிந்துக்கொள்ளலாம். பெரும்பாலான நபர்கள் எழுதும் பின்னூட்டமெல்லாம் மூஞ்சியில அடிச்சு ஊத்தணும், கதறக் கதற போடணும் என்கிற ரீதியிலேயே இருக்கிறது. இவர்களுடைய இன்பமெல்லாம் அப்யூஸ் செய்வதிலேயே இருக்கிறது. அதுவே அவர்களுக்கென ஒரு பெண் கிடைக்கும்போது வயலன்ஸாகவும் மாறுகிறது. ஏற்கனவே இந்தியாவில் ஏற்கனவே நிறைய செக்ஸ் சைக்கோக்கள் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதில் இந்தமாதிரி படங்கள் வேறு. முதலில் இந்தியர்கள் திருமணம் எதற்காக செய்துகொள்கிறார்கள் என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஒரு பிரபல தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சி. நீயா நானா பாணி என்று வைத்துக்கொள்ளுங்கள். அதில் பங்கேற்பாளராக கலந்துகொண்டேன். பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்றது. முதல் முறையாக சினிமாவுக்கு இத்தனை நெருக்கமான இடத்தில் நுழைகிறேன். அமானுஷ்ய கதைகளில் ரெட் டோர் என்கிற திறக்கப்படாத கதவு ஒன்று வரும். அதுபோல நீலநிற கதவொன்றை திறக்க, அதனுள்ளே ஏராள விளக்குகள் ஒளிர, தற்காலிக வரவேற்பறை, அலங்காரங்கள், இரண்டு பக்கங்களும் கொலு படிக்கட்டுகள் அமைத்து அதிலே மனித பொம்மைகள் அமர்ந்து ஒரு தனி உலகமே இயங்கிக்கொண்டிருக்கிறது. 

ஏற்கனவே பைக்கில் பில்லியன் ரைடராக ஒன்றரை மணிநேரம் அமர்ந்ததில் கண்ணிரண்டும் பொங்கிப்போய் ஓ’வென இருந்தேன். இதிலே கூடுதலாக மின்விளக்குகள் தரும் வெக்கை ஒரு வாதை. விவாதத்தின் தலைப்பு என்ன என்றால் யாரும் சொல்வதாக இல்லை. திடீரென தேவையில்லை என முன்வரிசையில் அடித்த ஆணியெல்லாம் புடுங்குகிறார்கள். புதிதாக ஒரு கதவு சேர்க்கிறார்கள். மறைவாக அங்கே இங்கே என ஏழெட்டு காமிராக்கள் தெரிகின்றன. போதாதென செட்டுக்கு வெளியே இருந்து டைனோசர் கரங்களாக ஒரு காமிரா நீள்கிறது. உள்ளே நுழைந்து பத்தாவது நிமிடமே தவறான இடத்திற்கு வந்துவிட்டோமென தோன்ற ஆரம்பித்துவிட்டது. 

சில விஷயங்கள் இருக்கின்றன. விவாதிக்கத் துவங்கினால் அதற்கு முடிவே கிடையாது. இரவு முழுக்க விவாதித்து தீர்த்தபிறகும் விடிந்தபிறகு அவரவர் அவரவர் இடத்திலேயே அமர்ந்திருப்பார்கள். உதாரணமாக, கடவுளின் இருப்பு. அதுபோல ஒரு அனுமார் வால் டாபிக்கை கையில் எடுத்து வைத்துக்கொண்டு அது அது இஷ்டத்துக்கு எங்கே எங்கேயோ போய் விவாதம் சூடு பிடிக்கும் தருணத்தில் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டார்கள். 

முதலில் விவாத நிகழ்ச்சிக்கும் நமக்கும் என்ன சம்பந்தம் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். அங்கே போனால் தலைப்பு நம்ம சிலபஸாக இருந்ததால் சில கருத்துகளை சொல்ல நினைக்க, மைக் அங்கே இங்கே என அலைந்து என்னிடம் மட்டும் வராமல் போக்கு காட்டிக்கொண்டிருந்தது. போதாத குறைக்கு முன்வரிசையில் ஒருவர் மைக்கை வாங்கி மற்றவர்களுக்கும் கொடுக்காமல், தானும் பேசாமல் மைக்கை தன் கால்களுக்கிடையே அதக்கிக்கொண்டே உட்கார்ந்திருந்தார். ஒரு டாபிக் பேசத் துவங்கினால் அதுகுறித்த கருத்தை யோசித்து வைத்தபிறகு, மைக் கிடைக்காமல் கடைசியில் அடுத்த டாபிக், அடுத்த டாபிக் என்று போய் ஒரு கட்டத்தில் போங்கடா உங்க மைக்கே வாணாம் என்று வேடிக்கை பார்க்கத் துவங்கிவிட்டேன்.

நிகழ்ச்சியில் பேசப்பட்ட விஷயம் குறித்து எழுத நிறைய இருக்கிறது. அது நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிறகு, அதிலே கட்ஸ் போக என்னென்ன வருகிறது, ஷோ எப்படி ப்ரொஜெக்ட் செய்யப்படுகிறது என்பதைப் பொறுத்து பார்த்துக்கொள்ளலாம். இந்நிகழ்வில் தனிப்பட்ட முறையில் என்னை மகிழ்ச்சியடைய வைத்த ஒரு விஷயம் – நிகழ்ச்சியின் ப்ரொட்யூஸரின் பெயர் நிலா !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

2 comments:

'பரிவை' சே.குமார் said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

Ponmahes said...

பதிவு அருமை......வாழ்த்துகள்..