அன்புள்ள வலைப்பூவிற்கு,
சவரக்கத்தி பார்த்தேன். மிஷ்கின் – ராம் என்பது டெட்லி காம்போ,
லிட்ரல்லி. ஆனால் இயக்குநர் இருவருமில்லை. இரண்டு நிமிடங்கள் படத்தைப் பார்த்தாலோ
அல்லது டிரைலரைப் பார்த்தாலோ கூட இயக்குநர் மிஷ்கினின் உதவியாளர் என்று
யோசிக்காமல் சொல்லிவிடலாம். உண்மைத்தகவல் அதைவிட சற்று கூடுதல் சிறப்பு – இயக்குநர் G R
ஆதித்யா மிஷ்கினின் சகோதரராம்.
மங்கா (மிஷ்கின்) முரடன். இரக்கமில்லாதவன். பரோலில்
வெளிவந்திருக்கிறான், அவனது பரோல் காலம் அன்றைய தினம் மாலை ஆறு மணியுடன்
நிறைவடைகிறது. பிச்சை (ராம்) சவரத்தொழிலாளி. வாய்ச்சவடால் அதிகம். வாய் மட்டும்
இல்லையென்றால் நாய் தூக்கிக்கொண்டு போய்விடும் என்பது மாதிரியான ஆள்.
மங்காவுக்கும், பிச்சைக்கும் ஒரு சிறியத்தகராறு ஆகிவிடுகிறது. முரட்டுக்கிறுக்கனான
மங்கா அவனை கொலைவெறியுடன் துரத்துகிறான்.
படம் துவங்கி நீண்ட நேரத்திற்கு (அநேகமாக இடைவேளைக்கு பின் சிறிதுநேரம்
வரை கூட) என்னங்கடா லூஸுக்கூதி மாதிரி எடுத்து வச்சிருக்கீங்க என்று தோன்றுவதை
தவிர்க்க முடியவில்லை. குறிப்பாக இதில் மங்கா என்கிற கதாபாத்திரம் செய்யும்
கிறுக்குத்தனங்களைப் பார்த்தால் ஒன்றிரண்டு தகாத வார்த்தைகளை சேர்த்து எழுத
வேண்டுமென்று தான் தோன்றுகிறது. அதன்பிறகு படம் கொஞ்சம் அதன் போக்கிலிருந்து விலகி
சில நெகிழ்வூட்டும் காட்சிகள் வருகின்றன. ஒருமாதிரியாகப் போய் இறுதியில் ஒரு
சிறுகதை போல நிறைவடைகிறது படம்.
சவரக்கத்தியின் மிகப்பெரிய பலம் என்று நான் நினைப்பது ராம்
கதாபாத்திரம் தரும் பாஸிடிவ் எனர்ஜிதான். வாழ்க்கை துரத்துகிறது. அத்தனை
துரத்தல்களையும் சளைக்காமல் எதிர்கொள்கிறான். ஒருபோதும் துவண்டு போய்
சரணடைந்துவிடாமல் சமயோசிதமாக சிக்கல்களிடமிருந்து தப்பிக்கிறான். ஒரு கட்டத்தில்
வாழ்க்கையே இவனை எதுவும் செய்ய முடியாது என்று வெறுத்துபோய் விட்டுவிடுகிறது.
மிஷ்கினின் சிடுசிடு கதாபாத்திரத்தை பார்க்கும்போது அதனை நிஜ
மிஷ்கினோடு ஒப்பிடத் தோன்றுகிறது. மிஷ்கினைச் சுற்றி எப்போதும் நான்கு அடியாட்கள்
இருக்கிறார்கள். அவர்களுக்கு மிஷ்கினிடம் ஏதாவது சொல்வது என்றால் பயம், அது நல்ல
விஷயமாக இருந்தால் கூட. ஏனென்றால் மிஷ்கின் ஒரு முரட்டு முட்டாள் ஆயிற்றே. சும்மா
சொல்லக்கூடாது. இயக்குநர் தம்பி மிஷ்கினை செமத்தியாக பகடி செய்திருக்கிறார்.
அதற்காகவே அவரை பாராட்ட வேண்டும்.
பூர்ணா டார்லிங் முதல்முறையாக சொந்தக்குரலில் பேசி இருக்கிறார்.
எரிச்சலூட்டும் ஒரு வேடம் பூர்ணாவுக்கு. ஆனால் அது பூர்ணா என்பதால் ஏனோ எரிச்சல்
ஏற்படவே இல்லை. ஷாஜி வசனம் பேசும் மாடுலேஷனுக்கு முதல்முறையாக பொருத்தமான வேடம்
கிடைத்திருக்கிறது.
படத்தின் பலவீனம் என்றால் கொஞ்ச நேரத்திலேயே ராமுக்கும்
பூர்ணாவுக்கும் ஒன்றும் ஆகிவிடாது என்று தெளிவாக தெரிந்துவிடுகிறது. பின்னணி
இசையும் அதனை உறுதிப்படுத்தி விடுகிறது. அதனாலேயே வழக்கமாக ஏற்படவேண்டிய
பதைபதைப்பு ஏற்பட மறுக்கிறது. மாறாக இதிலிருந்து இவர்கள் எப்படி தப்பிப்பார்கள்
அல்லது மங்கா மனசு மாறிவிடுவானோ என்றே யோசிக்கத் தோன்றுகிறது.
மிஷ்கின் படம், குறியீடு என்றெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல்
பார்த்தால் சவரக்கத்தி நல்ல பொழுதுபோக்கு திரைப்படம். சிம்பிளாக சொல்வதென்றால் டாம்
& ஜெர்ரி பார்த்தது போன்ற உணர்வு.
**********
நீண்ட நாட்களாக என் பக்கெட் லிஸ்டில் இருந்த அனிதாவின் காதல்கள் நாவலை
வாசித்தேன். ஒரு பெண்ணின் மனக்குழப்பங்கள் தான் கதைக்கரு.
கனவுகள் நிறைந்த இளம்பெண் அனிதா. திடீரென ஒருநாள் செல்வம் கொழிக்கும்
ஒரு இளம் தொழிலதிபனின் காதல் பார்வை அவள் மீது விழ, அதே சமயத்தில் அவளது வீட்டில்
அவளை ஒரு அமெரிக்க மாப்பிள்ளைக்கு நிச்சயம் செய்கிறார்கள். இடையில் அனிதாவை
மனதிற்குள் வைத்து பூஜிக்கும் முறைப்பையன் என்று போகிறது அனிதாவின் காதல்கள்.
நடுத்தர வர்க்க பிராமணக் குடும்பம், அதிரடி செயல்பாடுகள் கொண்ட பணக்கார இளைஞன், வாழ்க்கையை
ஈஸியாக எடுத்துக்கொள்ளும் ஒரு மாடர்ன் பெண் என்று நிறைய சுஜாதா கிளிஷேக்கள்.
வழக்கமாக சுஜாதாவின் நாவல்கள் படித்தால் சுரக்கக்கூடிய ஒரு ரசாயனம் ஏனோ அனிதாவின்
காதல்களை படித்து முடிக்கும் வரையில் ஒருமுறை கூட சுரக்கவே இல்லை. குறிப்பாக
நாவலின் முடிவு அத்தனை செயற்கைத்தனமாக இருந்தது.
அனிதாவின் காதல்கள் நாவலில் கவனிக்கத்தகுந்த ஒரு அம்சம் அது ஹர்ஷத்
மேதா ஊழலை மையமாக வைத்து எழுதப்பட்டிருப்பது. முதலில் இது வழக்கம் போல
சுஜாதாவின் ஈ.எஸ்.பி என்று நினைத்தேன். இல்லை. இவ்வூழல் வழக்கு பரபரப்பான
காலகட்டம் 1992. அனிதாவின் காதல்கள் முதற்பதிப்பு வெளிவந்தது நவம்பர் 1993.
ஹர்ஷத் மேதா |
ஹர்ஷத் மேதா ஒரு காலத்தில் ஸ்டாக் மார்க்கெட்டில் கொடிகட்டிப் பரந்த இளம்
தொழிலதிபர். பொருளாதார பத்திரிகைகள் அவரை ‘ஸ்டாக் மார்க்கெட்டின் அமிதாப் பச்சன்’
என்றும், ‘தி பிக் புல்’ (The Big Bull’) என்றும் வருணித்து எழுதின. வோர்லியில்
பகட்டான வீடு, ஸ்விம்மிங் பூல், மினி கோல்ஃப் கோர்ஸ், வெளிநாட்டு கார்கள் என்று
ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருந்த ஹர்ஷத் மேதாவின் வாழ்க்கை திடீரென
ஒருநாள் புரட்டிப் போடப்படுகிறது. ஸ்டாக் மார்க்கெட் சட்டங்களில் உள்ள துளைகளை
பயன்படுத்தி சுமார் இரண்டாயிரம் கோடி ஊழல் செய்திருக்கிறார் என்று
கண்டுபிடிக்கப்படுகிறது. ஹர்ஷத் மேதா செய்தது ஒரு பொருளாதார விளையாட்டு. தனது
துணை நிறுவனங்களின் மூலமாக தனது நிறுவன ஷேர்களை வாங்குவது, இதனால் ஏற்படும் டிமாண்ட்
காரணமாக அவரது நிறுவன ஷேர் விலை உயர்கிறது (மூன்றே மாதங்களில் இருநூறு
ரூபாயிலிருந்து ஒன்பதாயிரம் ரூபாய் வரை). தக்க சமயத்தில் ஷேர்களை பணமாக்கிக்
கொள்வது. 1992ம் ஆண்டு டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் சுசித்ரா தலால் என்கிற ஊடகவியலார்
ஹர்ஷத் மேதாவின் போசடி குறித்து எழுதுகிறார். தொடர்ச்சியாக ஹர்ஷத் மீது 72
வழக்குகள் பதியப்பட்டது. இம்மோசடியில் அப்போதைய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கும்,
நரசிம்ம ராவுக்கும் கூட தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஏழு வருடங்களுக்குப் பிறகு ஹர்ஷத் மேதா வழக்கில் அவருக்கு
ஐந்தாண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பு வந்தது. 2001ம் ஆண்டு
நெஞ்சுவலியின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹர்ஷத் மேதா
உயிரிழந்தார்.
ஹர்ஷத் மேதா மட்டுமல்ல. இந்திய பொருளாதார சந்தையில் கேதான் பரேக்,
சத்யம் ராமலிங்க ராஜு, ரூப் பன்சாலி, சுப்ரதா ராய், ஷாரதா ஸ்காம் என்று ஏராளமான
பொருளாதார மோசடியாளர்கள் இருந்திருக்கிறார்கள். இவ்வளவு ஏன் காற்றில் கூட... சரி
வேண்டாம். விடுங்கள் !
என்றும்
அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
1 comment:
ஸ்டைலிஷ் இளைஞன்- மாதவன்
அமெரிக்க மாப்பிள்ளை- கார்த்திக் குமார்
அம்மாஞ்சி அத்தை பையன்- விவேக்
அலைபாயுதேவும் அனிதாவும் தற்செயல் அல்ல.ஆனாலென்ன..டைட்டில் கார்டில் வசனகர்த்தாவாக வாத்தியார் அங்கே இருக்கிறார்.
Post a Comment