3 May 2018

கோவா – அட்வெஞ்சர்

அன்புள்ள வலைப்பூவிற்கு,


கோவா கட்டுரைகளின் அடுத்த பகுதியாக டிட்டோஸ் லேன் பற்றி பார்க்கலாம் என்று சொல்லியிருந்தேன். ஒரு சிறிய மாற்றம். டிட்டோஸ் லேனுக்கு முன்பாக கோவாவில் உள்ள அட்வெஞ்சர் ஆக்டிவிட்டீஸ் (சாகஸ விளையாட்டுகள்) பற்றி சுருக்கமாக பார்த்துவிடலாம். கோவாவில் சாகசங்கள் என்றால் முக்கியமாக வாட்டர் ஸ்போர்ட்ஸ் ! அஃதில்லாமல் ஒன்றிரண்டு விளையாட்டுகளும் உண்டு. 

சாகசங்களின் மீது ஈடுபாடு கொண்டவர்கள் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் –

* சீஸனில்லா சமயங்களில் கோவாவில் பெரும்பாலும் அட்வெஞ்சரின் தடயங்களே இருப்பதில்லை. சீஸன் என்பது நவம்பர் முதல் மே வரை. இதில் இடையில் பிப்ரவரி, மார்ச் சமயத்தில் போனால் கூட்டமும் இவற்றின் விலைவாசியும் குறைவாக இருக்கும்.

* நிறைய கடற்கரைகள் இருந்தாலும் சில கடற்கரைகளில் மட்டும்தான் வாட்டர் ஸ்போர்ட்ஸ் உள்ளன. நாங்கள் ஒரு பகல் முழுக்க லிட்டில் ரஷ்யா பகுதியில் சுற்றிவிட்டு வாட்டர் ஸ்போர்ட்ஸ் என்ற ஒன்று இருப்பதையே மறந்துபோனோம். அதன்பிறகு திடீரென நினைவுக்கு வந்து வகேட்டர் பீச்சுக்கு விரைந்தோம்.

பொதுவான வாட்டர் ஸ்போர்ட்ஸ் (பாரா செய்லிங், வாட்டர் ஸ்கூட்டர், பம்ப் ரைட், பனானா ரைட் போன்றவை) அமைந்துள்ள சில கடற்கரைகள் –

- வகேட்டர் (வடக்கு)
- அஞ்சுனா (வடக்கு)
- பாகா / கேலங்குட்டே (வடக்கு)
- கேண்டோலிம் (வடக்கு)
- மிராமர் (மத்தி)
- கோல்வா (தெற்கு)
- பலோலம் (தெற்கு)

இவை தவிர்த்து ஸ்கூபா, பாரா கிளைடிங், ஸ்னார்கலிங், ஹாட் பலூன் போன்ற சில பிரத்யேக அம்சங்களும் உண்டு. 

பாராசெய்லிங் - ஏரியல் வியூ
1. பாராசெய்லிங்: கோவாவில் தனிப்பட்ட முறையில் என்னை பரவசத்தில் ஆழ்த்திய மூன்று விஷயங்களில் ஒன்று இந்த பாராசெய்லிங். நபர் ஒருவருக்கு 800ரூ என்று நினைக்கிறேன். படகில் குழுவாக மக்களை கடலுக்குள் சுமார் ஐநூறு மீட்டர் தூரத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள். பின்னர் அதிலிருந்து இன்னொரு பெரிய படகு. அங்கிருந்து காற்றாடிக்கு நூல் விடுவது போல உயரத்தில் பறக்க விடுகிறார்கள். கரையிலிருந்து வெகு தூரத்திற்கு வந்தபிறகு இப்படி பறப்பதால் கீழே முழுக்க அரபிக்கடல் மட்டும்தான் தெரிகிறது. கீழே இருக்கும் ஆபரேட்டர் உச்சபட்ச அளவிற்கு கயிறை விட்டு முடித்ததும் கப்பென வயிற்றைக்கவ்வ சில நொடிகள் கடலை கழுகுப்பார்வை பார்க்கிறோம். பின்னர் மீண்டும் கீழே இறக்குகிறார்கள். கூடுதலாக முன்னூறு ரூபாய் கொடுத்தால் கீழே இறக்குகையில் ஒருமுறை கடல்நீரில் நம்மை முக்கி எடுக்கிறார்கள் !

2. பம்(ப்) ரைட்: ஸ்பீட் போட்டின் பின்னால் இருவர் அமரக்கூடிய குழிகள் கொண்ட ரப்பர் டியூப் இணைக்கப்படுகிறது. குழியில் உங்கள் அடிப்பகுதியை அலேக்காக வைத்து உட்கார்ந்துகொள்ள வேண்டும். அவ்வளவுதான் ! ஸ்பீட் போட் உங்களை தரதரவென்று இழுத்துச்செல்லும் அலைகள் தொப்பு தொப்பென்று பின்புறம் வெளுக்கும். இதில் விசேஷம் என்னவென்றால் ஒரு சுற்று முடிந்ததும் ஸ்பீட் போட் ஓட்டுநர் கூடுதல் காசு கொடுத்தால் இன்னொரு சுற்று அழைத்துச் செல்வதாக கேட்பார். பின்புறம் பழுத்திருந்தால் கூட அப்போது இன்னொரு சுற்று போக வேண்டும் போலிருக்கும் !

3. பனானா ரைட்: இதுவும் கிட்டத்தட்ட பம் ரைட் பாணிதான். ஆனால் காயங்கள் கிடையாது. வாழைப்பழ வடிவில் உள்ள டியூபில் நான்கைந்து பேரை அமர்த்தி ஸ்பீட் போட்டின் பின்புறம் கட்டி இழுத்துச் செல்வார்கள். கொஞ்ச தூரம் கடலில் சென்றபிறகு வாழைப்பழம் கவிழ்ந்து மொத்த பேரும் தண்ணீரில் விழுவீர்கள்.

4. வாட்டர் ஸ்கூட்டர் & ஸ்பீட் போட்: மிதவாதிகளுக்கான வாகனங்கள். அனுபவம் / பயிற்சி உள்ளவர்களுக்கு வாட்டர் ஸ்கூட்டரை தனியாக ஆபரேட் செய்ய அனுமதியளிக்கப்படுகிறது.

5. டால்பின் ட்ரிப்: விலங்கு ஆர்வலர்கள் மற்றும் குடும்பங்களுக்கானது. கரையிலிருந்து குறிப்பிட்ட தூரம் வரை படகில் குழுவாக அழைத்துச் செல்கிறார்கள். டால்பின்கள் புழங்கும் பகுதிக்கு அழைத்துச் சென்று அவை துள்ளி விளையாடுவதை காண்பிக்கிறார்கள்.

இனி பிரத்யேகமான சில சாகசங்களை கவனிக்கலாம்.

6. பாராகிளைடிங்: பொதுவாக பள்ளத்தாக்குகளில் நடத்தப்படும் விளையாட்டு. மணாலியின் சோலாங் பள்ளத்தாக்கில் இது பிரபலம். கோவாவில் அரம்போல் கடற்கரையில் மட்டும் பாராகிளைடிங் உள்ளது. விலை நபர் ஒருவருக்கு 3000ரூ. கடலருகே பறப்பதால் பாரா செய்லிங்கில் கிடைக்கும் அதே பரவச உணர்வு கிடைக்கும்.

7. ஸ்கூபா டைவிங்: கோவா கடற்கரையிலிருந்து சுமார் 19 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள கிராண்ட் தீவில் ஸ்கூபா டைவிங் நடைபெறுகிறது. கோவாவில் ஸ்கூபா செய்ய வேண்டுமென்றால் காலை ஏழு மணிக்கே குழுவினருடன் தீவுக்கு சென்று, பயிற்சி எடுத்து செய்துவிட்டு மாலை திரும்பவேண்டும். விலை மதிய உணவுடன் சேர்த்து ஒருவருக்கு 3000ரூ. ஒரு முழுநாளை விழுங்கி விடுவதால் கோவாவில் பெரும்பாலானாவர்கள் ஸ்கூபா செய்வதில்லை.

8. ஸ்னார்கலிங்: ஸ்கூபாவின் சகோதரன். ஸ்கூபாவில் வாயு சிலிண்டரைக் முதுகில் கட்டிக்கொண்டு மீன்களோடு சேர்ந்து நீந்தலாம். ஸ்னார்கலிங்கில் கடல் நீரின் மேற்பரப்பில் குப்புறப்படுத்தபடி மிதக்க வேண்டும். பிளாஸ்டிக் சுவாசக்குழாய் மேற்பரப்புக்கு வெளியே நீண்டு சுவாசிக்க உதவும். இப்படி மிதந்தபடி மீன்களையும், கடல் பாசிகளையும் பார்த்து பரவசமடையலாம். விலை மதிய உணவுடன் சேர்த்து ஒருவருக்கு 1500ரூ.

9. வாட்டர் ஸ்கியிங்: கேலங்குட்டே, மொபோர் உள்ளிட்ட சில கடற்கரைகளில் மட்டும் அமைந்துள்ள கொஞ்சம் எலைட் விளையாட்டான வாட்டர் ஸ்கியிங் சுமார் பத்து நிமிடங்களுக்கு 1800ரூ. கால்களில் பிரத்யேக ஸ்கேட்டிங் டிவைஸ் கட்டப்பட்டு படகின் பின்னால் வேகமாக இழுத்துச் செல்வார்கள்.

10. கோ கார்ட்: கடற்கரை அல்லாத சாகசம். கோவாவில் வடக்கில் அஞ்சுனாவிலும், தெற்கில் நுவெமிலும் கோ கார்ட் அமைந்துள்ளது. திங்கட்கிழமை தவிர்த்து மற்ற ஆறு நாட்களும் மாலை நான்கு மணியிலிருந்து இரவு பத்து மணி வரை இயங்கும் கோ கார்ட் பத்து சுற்றுகளுக்கு 350 ரூ வசூலிக்கப்படுகிறது.

11. ஹாட் பலூன்: தெற்கு கோவாவில் சந்தோர் என்னும் இடத்தில் மட்டும் செயல்படுகிறது. தினசரி காலை மற்றும் மாலை தலா இரண்டு மணிநேரங்கள். ஹாட் பலூனில் பயணம் செய்ய வேண்டுமென்றால் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டியது அவசியம். விலை சிறுவர்களுக்கு 8000 – 10000ரூ. பெரியவர்களுக்கு 12000ரூ.

இவற்றைத் தவிர்த்து விண்ட் சர்ஃபிங், கயாகிங், யாட், ராஃப்டிங், ஸோர்பிங் போன்றவையும் உள்ளன. பொதுவான பயணிகள் இவற்றை தவிர்த்துவிடலாம். உதாரணத்திற்கு, விண்ட் சர்ஃபிங் செய்ய வேண்டுமென்றால் போதிய பயிற்சி தேவை. ராஃப்டிங் செய்யும் நதிக்கு நகர்ப்புறத்திலிருந்து நீண்டதூரம் பயணிக்க வேண்டியிருக்கும்.

படங்கள் - இணையம்

அடுத்து வருவது: கோவா – டிட்டோஸ் லேன்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

3 comments:

Shabir Hussain said...

கோவாவில் பலான மேட்டர் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்
ரேட் போன்றவை

guna said...

SUPER

guna said...

அடுத்து வருவது: கோவா – டிட்டோஸ் லேன்

i am waiting