அன்புள்ள வலைப்பூவிற்கு,
ப்ளட் சட்னி ! ஒரு விஷயம் பரவலாக நிறைய
பேரால் பார்க்கப்பட்டு, பேசப்பட்டு வைரலாகிறது. வைரலான பின் இன்னும் நிறைய பேரால்
பார்க்கப்படுகிறது, பேசப்படுகிறது. நான் எப்போதும் இரண்டாவது வகையே. ஒரு விஷயம்
வைரலாகி, அதனை அக்கக்காக பிரித்து மீம்ஸ் போட்டபிறகு அந்த மீம்களில் இருந்து
ஒரிஜினல் செய்தியை அறிந்துகொள்வதே வாடிக்கையாகிவிட்டது. அப்படி நடிகர் கார்த்திக்
குமாரின் ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சியை அறிந்து, அது அமேஸான் ப்ரைமில் இருந்ததால்
பார்க்கலானேன். நிகழ்ச்சியின் பெயர் – ப்ளட் சட்னி!
ஸ்டாண்ட் அப் காமெடி. என்னைப்
பொறுத்தவரையில் ஸ்டாண்ட் அப் காமெடி என்றால் மதுரை முத்து, ஈரோடு மகேஷ்,
அறந்தாங்கி நிஷா. அவ்வளவுதான். ஒரேயொரு முறை பாபா சி.ஜே என்பவருடைய நகைச்சுவையை
சில நிமிடங்கள் கேட்டிருக்கிறேன். அந்த வகையில் கார்த்திக் குமாரின் நிகழ்ச்சி
எனக்கு நிறைய ஆச்சர்யங்களைக் கொடுத்தன. முதலில், ஒரு மனிதர் ப்ரேக் எதுவும் எடுத்துக்கொள்ளாமல்
ஏறக்குறைய ஒன்றேகால் மணிநேரம் (நகைச்சுவையாக) பேசிக்கொண்டே இருப்பது ஒரு
ஆச்சர்யம். அவற்றை எவ்வித தடையுமின்றி கவனிக்கும் பார்வையாளர்கள் இன்னொரு ஆச்சர்யம்.
அட்டென்ஷன் ஸ்பான் என்று ஒன்று இருக்கிறது. அட்டென்ஷன் ஸ்பான் மனிதர்களின் வயது,
திறன் பொறுத்து எட்டு நொடிகளிலிருந்து இருபது நிமிடங்கள் வரை அமைகிறது. அத்தனை
நேரம் வரை மட்டும்தான் ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் கவனம் செலுத்த முடியும்.
அதனால்தான் நம் பள்ளிக்கூட வகுப்பறைகளில் (நல்ல) ஆசிரியர்கள் பாடத்துக்கு இடையே
நம்மை ஆசுவாசப்படுத்தும் வகையில் பாடத்துக்கு அப்பாற்பட்ட டாபிக்குகளை
பேசுவார்கள். கார்த்திக் குமாரின் ஷோவை எடுத்துக்கொண்டால் அவர் ஒரு பத்து நொடிகள்
இடைவெளி கூட விடாமல் பேசிக்கொண்டே இருக்கிறார். திரைப்படங்களில் விடுவது போல
இடைவேளை கூட இல்லை. (ஒருவேளை ப்ரைமில் இடைவேளை காட்டப்படவில்லையா ?) இடைவேளை
இல்லையென்றால் சபாக்காரர்கள் எப்படி காண்டீனில் லாபம் பார்ப்பார்கள்.
சபா என்றதும் நினைவுக்கு வருகிறது. இவ்வகை
சபாக்களில் கர்னாடக சங்கீத / பரத நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறும். எஸ்.வி.சேகர்,
கிரேசி மோகன் நாடகங்கள் நடைபெறும். இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு பெரும்பாலும்
பார்ப்பனர்கள் மட்டும்தான் வருகிறார்கள் (விதிவிலக்குகள் இருக்கலாம்). அதே போல
இந்த ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சிக்கு வருபவர்கள் பெரும்பாலும் பார்ப்பனர்களே.
எஞ்சியிருப்பவர்கள் கார்ப்பரேட் கலாசாரத்தில் ஊறிப்போன நவபார்ப்பனர்கள்.
நிகழ்ச்சியின் இடையே ‘எனி தம்ப்ராம் ஹியர் ?’ என்று கார்த்திக் கேட்க, கூட்டம்
ஆர்ப்பரிக்கிறது. தம்ப்ராம் என்றால் எதோ சென்னையின் புறநகர் பகுதி என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். தமிழ் + பிராமின்ஸ் என்பதன் சுருக்கம்தான் தம்ப்ராமாம் !
கார்த்திக் தன் நிகழ்ச்சியின் ஊடே நடிகர்
ராமராஜனைப் பற்றி ஒரு விஷயம் (ஜோக்) சொல்கிறார். அதாவது ராமராஜனிடம் ஒரு பசு
உள்ளது என்று சொல்லிவிட்டு நான் அவரது மனைவி நளினியைச் சொல்லவில்லை என்று சிரிக்கிறார்.
இது மாதிரி ஷோவின் இடையிடையே நிறைய இரட்டை அர்த்த நகைச்சுவைகள். மனதைத் தொட்டு
சொல்வதென்றால் நாம் நமது நண்பர்கள் மத்தியில் தனிப்பேச்சில் இதுபோன்ற அல்லது
இதைவிட கேவலமான இரட்டை / நேரடி அர்த்த நகைச்சுவைகளை பேசியிருப்போம். ஆனால் ஒரு பிரபலம்,
அதுவும் சினிமாத்துறையைச் சேர்ந்தவர், ஒரு பொது மேடையில் இப்படியெல்லாம் பேசுவது
பொலிடிக்கல்லி தவறு ! இன்னொரு கோணத்தில் பார்த்தால் ஜோக் தானேப்பா ஏன் இவ்வளவு
சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டும். இதைக் கூட இலகுவாக எடுத்துக்கொள்ள முடியாதா
என்று தோன்றவும் செய்கிறது.
இந்த ஷோவின் பிரசித்தி பெற்ற ஜோக் ஒன்று
சூப்பர் ஸ்டார் பற்றியது. சிம்புவை லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கிறார்கள்.
எதை வைத்து என்று தெரியவில்லை. ஒருவேளை நயன்தாரா இருவருடனும் நடித்திருப்பதால்
அவருக்கு இருவருடைய சைஸும் தெரிந்திருக்கும் என்கிறார். அப்புறம் சன்னி லியோனியைப்
பற்றி ஒரு பத்து நிமிட பேச்சு. குறிப்பாக சன்னி பார்ன் படங்களில் முழு உடலைக்
காட்டிவிட்ட பிறகும் கூட அவர் உடைகளுடன் நடிக்கும் பாலிவுட் படங்களைப் பார்க்க
மக்கள் ஏன் ஆர்வம் காட்டுகிறார்கள், முழுக்கப் போர்த்திக்கொண்டு சன்னி ஏதேனும்
திறப்பு விழாவுக்கு (மாலை திறக்க வர்றாடா, மாரை திறக்க வரலை) வந்தால்கூட ஏன்
கூட்டம் கூடுகிறது என்பது குறித்த கார்த்திக்கின் சந்தேகங்கள். ஒரு கதை உண்டு.
ஒருமுறை பிரசித்தி பெற்ற ஒரு நிர்வாண நடிகை துணிக்கடைக்கு சென்றாராம். உடைகளை
தேர்ந்தெடுத்த பிறகு டிரையல் ரூம் எங்கே என்று பணியாளரிடம் கேட்டாராம். அதற்கு
பணியாளர் உங்களுக்கு எதற்கு டிரையல் ரூம் என்றாராம். அந்த பணியாளரின் மனநிலையும்
கார்த்திக்கின் மனநிலையும் ஒன்றே !
அடுத்து பார்ப்பனர்கள் தங்கள் வாழ்நாள்
முழுதும் பேசிப் பேசி ஒரு கட்டத்தில் வெறுத்துபோன கலைஞரின் மரணத்திற்கு வருகிறார்.
குறிப்பாக, ஸ்டாலின் பாவம், கலைஞர் மரணமடையாததால் காத்துக்கொண்டே இருக்கிறார்
என்பவர்களைப் பார்த்தால் எனக்கு பரிதாபமாக இருக்கிறது. இவர்கள் வீட்டில்
தப்பித்தவறி வயதானவர்கள் யாரேனும் இருந்திருந்தால் இவர்களுடைய எண்ணமெல்லாம் எப்படி
இருந்திருக்கும். சொல்ல முடியாது இவர்களே மூச்சு முட்டவைத்து கொன்றாலும்
கொன்றிருப்பார்கள்.
அப்புறம் சுச்சி லீக்ஸ் சம்பவம் குறித்து,
அவரது திருமண வாழ்க்கை, சினிமா வாய்ப்புகள் குறித்து என்று நிறைய சுய பகடிகள்.
முறுக்கிக்கொள்ளாமல் இலகுவாக எடுத்துக்கொண்டால் கார்த்திக்கின் ப்ளட் சட்னியை
ருசிக்கலாம். இந்த ஷோவை நேரில் பார்ப்பதற்கு டிக்கட் விலை ரூ.500 என்று
நினைக்கிறேன். அமேஸான் ப்ரைமுடன் கிடைக்கிறது.
**********
கார்த்திக்கின் ஷோ பார்த்தபிறகு இன்னும்
இரண்டு ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சிகளை ப்ரைமில் கண்டேன். ஒன்று, எஸ்.ஏ.
என்பவரின் மதராஸிடா. இன்னொன்று அஷ்வின் ராவ் குழுவின், புட் சட்னி.
எஸ்.ஏ.வின் மதராஸிடா மறுபடியும் டிபிக்கல்
பார்ப்பனர்களுக்கான ஷோ. இதன் போஸ்டரில் எஸ்.ஏ. கையில் ஃபில்டர் காபியுடன் போஸ் கொடுக்கிறார்.
எஸ்.ஏ. கார்த்திக்கைப் போல சினிமா பிரபலம் கிடையாது என்பதாலும் அவரது ஷோவின் பெயர்
மதராஸிடா என்பதாலும் அவரது நகைச்சுவைகள் முழுக்க தமிழ் பார்ப்பன வாழ்வியல்
முறைகளைப் பற்றியே உள்ளன. பார்ப்பன நகைச்சுவை என்பது என்னவென்றால் –
1. GRE / TOEFL உள்ளிட்ட தேர்வுகள் பற்றி
2. அமெரிக்கா போவது பற்றி
3. எப்போதும் அட்வைஸ் செய்யும் அத்திம்பேர்
பற்றி
4. ஹிந்து பேப்பர் படிப்பது பற்றி
5. NRIகள் பற்றி
6. பார்ப்பன சடங்குகள் பற்றி
பெரும்பாலும் இந்த பார்ப்பன நகைச்சுவைகள்
பார்ப்பனர்களைத் தவிர வேறு யாருக்கும் புரிந்து தொலையாது.
புட் சட்னி ஷோ, மற்ற இரண்டைப் போல சோலோ ஷோ
கிடையாது. மூன்று பேர் தலா இருபத்தைந்திலிருந்து முப்பது நிமிடங்கள் பெர்ஃபார்ம்
செய்கிறார்கள். முதலில் வந்த அஸ்வின் ராவ் தொடங்கும்போதே தானொரு மிடில்கிளாஸ்
பார்ப்பனர் என்று ஜாதி சான்றிதழைக் காட்டிவிட்டுத்தான் நிகழ்ச்சியை துவங்கவே
செய்கிறார். அடுத்து வந்த பாலகுமாரனைப் பார்த்ததும் பார்ப்பனர் இல்லை என்று
தெரிந்துவிடுகிறது. அதனால் தானோ என்னவோ இவருடைய ஜோக்குக்கு யாரும் அவ்வளவாக
சிரிக்கவில்லை. இவர்களுடைய வாழ்வியல் முறையும் ஒரு காரணம். உதாரணமாக, பாலகுமாரன்
தன் ஷோவில் எத்தனை பேர் ஸ்டேட் போர்ட் ? எத்தனை பேர் சி.பி.எஸ்.ஈ என்று
கேட்கிறார். பின்னர் சி.பி.எஸ்.ஈ படித்தவர்களை நான் வெறுக்கிறேன் என்கிறார்.
அரங்கில் அமைதி. எஸ்.ஏ.வின் மதராஸி ஷோவில் இதே விஷயம் உல்டாவாக அதாவது ஸ்டேட்
போர்ட் படித்தவர்களை நக்கலடிக்கிறார்கள். அதற்கு அரங்கம் ஹோவென கூச்சல்
எழுப்புகிறது.
இந்த மூன்று நிகழ்ச்சிகளிலும் பொதுவாக
கவனித்த இன்னொரு விஷயம் நிகழ்ச்சியின் இடையிடையே கெட்டவார்த்தை பேசுவது. பாவம்,
கெட்டவார்த்தை பேசுவதே ஒரு ஜோக் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
**********
ரம்ஜானை முன்னிட்டு பதிவுலக நண்பர்
சிராஜுதீன், என்னையும் பதிவுலக நண்பர்கள் சிலரையும் பிரியாணி விருந்துக்கு அழைத்திருந்தார்.
சென்னையைப் பொறுத்தவரையில் சாலையில் இறங்கி, பத்தடிக்கு மிகாமல் நடந்து, நூறு
ரூபாய் கொடுத்தால் பிரியாணி கிடைத்துவிடும். அவ்வளவு சிம்பிள் ! அப்படியிருக்க வட
சென்னையிலிருந்து தென் சென்னை வரை பயணித்து இந்நிகழ்வில் கலந்துகொண்டோம் என்றால்
அது பிரியாணிக்காக மட்டுமில்லை என்று புரிந்துகொள்ள வேண்டும். கிட்டத்தட்ட ஒரு
ரீ-யூனியன் மாதிரி இந்நிகழ்வு நடந்தது. கேபிள் சங்கர், கே.ஆர்.பி.செந்தில், ஆரூர்
மூனா செந்தில், மெட்ராஸ் பவன் சிவகுமார், அஞ்சாசிங்கம் செல்வின், விக்கியுலகம்
வெங்கட் (வியட்நாம்), உணவு உலகம் சங்கரலிங்கம் ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பிரியாணி விருந்து என்றால் பிரியாணி
மட்டுமல்ல என்று இம்முறை தெரிந்துகொண்டேன். முதலில், லைம் மிண்ட் ஜூஸ். அப்புறம்
தம்ரூட் கேக் (கொஞ்சமாக சாப்பிடுங்கள் வயிற்றை அடைக்கும்), அதன்பின் வாழை இலையில்
மட்டன் பிரியாணி, சிக்கன் லெக் பீஸ், மட்டன் கோலா உருண்டை, இறால் தொக்கு, அவித்த முட்டை
என்று ஒரு படத்தில் விவேக் சொல்வது போல பறக்குறது, நீந்துறது, ஓடுறது, ஓடுறது
போடுறது என்று எல்லாம் இலையில் வந்துவிட்டன. இவை போக மாதுளை போட்ட தயிர்
வெங்காயம், பிரியாணியுடன் சேர்த்துக்கொள்ள தால்ச்சா, பிரியாணிக்கு பிறகு சாப்பிட
பீரனி என்னும் பாயசம். சாப்பிட்டு முடித்தபின் அகரகர், ஆப்பிள் துண்டுகள்,
மங்குஸ்தான், மலை வாழைப்பழம் மற்றும் இன்னொரு சுற்று லைம் மிண்ட் ஜூஸ் என்று
அசத்திவிட்டனர் சிராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர். இனி ஒவ்வொரு ரம்ஜானுக்கும்
பிரியாணி கேட்டு சிக் ஜோக்ஸ் அடிக்க வேண்டியதில்லை.
என்றும்
அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
3 comments:
அருமையான அலசல். வாழ்த்துகள் தம்பி....
Praveen kumar என்பவரின் ஸ்டேன்டப் காமெடி பாருங்கள்.. நான் பார்த்த வரையில் இவரது காமெடி பரவாயில்லை என சொல்வேன்..
Standup comedy பிடிச்சிருந்தா உன்குழாயில் Carlos Mencia என்று தேடவும், Russell Peters க்கு அப்பன். நாலைந்து எபிசோடு பார்த்திட்டா டெம்ப்ளேட் பிடிபட்டுவிடும் சுகிசிவம், ஜெயந்தா பாலகிருட்டிணன் பொழிவுகள் போல.
Post a Comment