17 June 2019

பிரபா ஒயின்ஷாப் – 17062019

அன்புள்ள வலைப்பூவிற்கு,

பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டியில் ஒயின்ஷாப் எழுத, சிந்திக்க இணக்கமான சூழல் அமையாததால் கடந்த வாரம் ஒயின்ஷாப் வெளியாகவில்லை. ப்ச்... திங்கட்கிழமைக்கும் ஒயின்ஷாப்பிற்கும் உள்ள மரபு உடைந்ததில் கொஞ்சம் வருத்தம்.

********************

ஒரு சிறிய கதையுடன் (சிறுகதை ?) இவ்வார ஒயின்ஷாப்பை துவங்கலாம். 

ஒரு பதின்பருவ பெண். அவளது அம்மா இறந்துவிட்டார். அப்பா இரண்டாவது திருமணம் செய்துகொள்கிறார். சித்தியை அவளுக்கு பிடிக்கவில்லை. அவள் தனது அப்பா மற்றும் சித்தியுடன் புதுவீட்டில் குடியேறுகிறாள். ஆனால் புதுவீட்டில் நடக்கும் சில வினோத சம்பவங்கள் அத்தனை மகிழ்ச்சியானதாக இல்லை. கீழ் தளத்தில் இருக்கும்போது மேல் தளத்தில் யாரோ நடக்கும் சத்தம் கேட்கிறது. இவர்கள் வெளியே போய்விட்டு வரும்போது வீட்டிற்குள் யாரோ வந்துபோன தடயங்கள் தெரிகின்றன. உச்சகட்டமாக ஒருநாள் அவள் உடை மாற்றுகையில் யாரோ ஒருவன் அவளை வீட்டிற்குள் மறைந்திருந்து பார்ப்பதை உணர்கிறாள். உடனே தன் அப்பாவிடம் சென்று முறையிடுகிறாள். அப்பாவும் சித்தியும் இதுகுறித்து ஆலோசிக்கிறார்கள். மகளுக்கு புதுவீடு பிடிக்காததால் தான் இப்படியெல்லாம் புகார் சொல்கிறாள் என்று முடிவுக்கு வருகிறார்கள். 

வினோத நிகழ்வுகள் தொடர்கின்றன. இந்த வீட்டில் ஏதோ விஷயம் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளும் மகள் வீட்டைப் பற்றியும், அங்கே இதற்கு முன்பு குடியிருந்தவர்களைப் பற்றியும் பக்கத்து வீடுகளில் விசாரிக்கிறாள். அந்த வீட்டில் இதற்கு முன்பு ஒரு கணவன், மனைவி அவர்களது மகளுடன் வசித்து வந்ததாகவும், அவர்கள் ஒருநாள் மர்மமான முறையில் இறந்துபோனதாகவும் தெரிந்துகொள்கிறாள். வீடு திரும்பியதும் வீட்டிலுள்ள பழைய ஸ்டோர் ரூமில் இதற்கு முன் குடியிருந்தவர்களுடைய சில பொருட்கள் இறைந்து கிடப்பதை கவனிக்கிறாள். அதிலிருந்த ஒரு குடும்ப புகைப்படத்தை பார்க்கிறாள். அக்கம் பக்கத்து வீடுகளில் சொன்ன கணவன், மனைவி, மகள் குடும்பம். அவளது பயம் அதிகமாகிவிடுகிறது. அதே வீட்டில், அதே போல குடும்பமாக வசிக்கும் இவர்களுக்கும் ஆபத்து ஏற்படலாம் என்று நினைக்கிறாள். அதே சமயம் அப்பாவிடமும், சித்தியிடமும் எப்படி புரிய வைப்பது என்று தவிக்கிறாள். அவளுக்கு அந்த சிரமம் ஏற்படாமல், அடுத்தடுத்த வினோத அனுபவங்கள் அப்பாவுக்கும், சித்திக்குமே ஏற்படுகின்றன. அவர்களுக்கோ பக்கத்து வீட்டிலுள்ள வினோதமான ஆசாமியின் மீது சந்தேகம். அவனது பார்வையே சரியில்லை என்கிறாள் சித்தி. அப்பா மின்னணு பூட்டு இயந்திரங்களை நிறுவி வீட்டின் பாதுகாப்பை பலப்படுத்துகிறார். இனி எந்த பயமும் இல்லையென ஆசுவாசம் அடைகிறார்கள்.

ஒருநாள் அப்பாவும், சித்தியும் வெளியூர் சென்றிருக்க மகள் மட்டும் வீட்டில் தனியாக இருக்கிறாள். அத்தருணத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக் கொள்ள விழையும் மகள் அவளது காதலனை வீட்டிற்கு விளையாட அழைக்கிறாள். அப்பா, அம்மா விளையாட்டு ! பாவம், மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்த காரணத்தினால் அவர்களை ஒருவன் மறைந்திருந்து பார்க்கிறான் என்று அவர்களுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. ஒரு சுற்று சுமூகமாக முடிந்து அடுத்த சுற்றுக்காக அவர்கள் காத்திருக்கும் வேளையில் அப்பாவும், சித்தியும் வந்துவிடுகிறார்கள். அவசர அவசரமாக காதலனை அலமாரியில் மறைந்துகொள்ளச் சொல்கிறாள். அப்பாவும், சித்தியும் வந்திருந்து கொஞ்ச நேரம் கழித்து அவர்களுடைய அறைக்கு சென்றுவிடுகிறார்கள். மகள் தனது அறைக்கு விரைந்து அலமாரியைத் திறந்து பார்க்கிறாள். காதலனைக் காணவில்லை. புத்திசாலி காதலன், கிடைத்த சமயத்தில் சாமர்த்தியமாக வீட்டிற்கு கிளம்பிப் போய்விட்டான் என்று நினைக்கிறாள். ஆனால் உண்மையில் காதலன் அங்கிருந்து கிளம்பியிருக்கவில்லை.

ஒரு இரண்டு, மூன்று நாள் கழித்து காதலனிடம் இருந்து எந்த குறுந்தகவலோ, அழைப்போ வராததால் அவனை போனில் அழைக்கிறாள். இப்போது அழைப்பு மணி அவளது அலமாரியில் ஒலிக்கிறது. ஒருவேளை அலைபேசியை அலமாரியிலேயே மறந்திருப்பானோ என்று நினைத்துக்கொண்டே மெல்ல அலமாரியைத் திறந்தால் காதலனின் பிணம் உள்ளேயிருந்து சரிந்து விழுகிறது ! போலீஸுக்கு தகவல் சொல்லப்படுகிறது. போலீஸ் அந்த குடும்பத்தையே சந்தேக வளையத்திற்குள் கொண்டு வருகிறது. அப்பாவும், சித்தியும் வேறு மகள் மீது பயங்கர கோபத்தில் இருக்கிறார்கள். பிரச்சனை தீரும்வரை மகளை வீட்டுச்சிறையில் வைக்க முடிவு செய்து ஸ்டோர் ரூமுக்குள் தள்ளி கதவைப் பூட்டி விடுகிறார்கள். அங்கே அவளுக்கு ஒரு மருத்துவ கோப்பு கிடைக்கிறது. ஒரு பதின்பருவ இளைஞனின் மனநோய் பற்றிய குறிப்பு அது. அவனை பீடித்திருக்கும் அந்த மன நோயின் பெயர் – AGORAPHOBIA ! அதாவது வீட்டிலிருந்து வெளியே செல்வது குறித்த அதீத பயம். அந்த மருத்துவ கோப்பில் இளைஞனின் தந்தை பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. அது இதற்கு முன் அந்த வீட்டில் குடியிருந்த குடும்பத் தலைவனின் பெயர் என்று அக்கம் பக்கத்தினர் சொன்னது நினைவுக்கு வந்து போகிறது. அவளுக்குள் ஏதோவொரு புதிர் விடுபட்டது போல தோன்றியது. முன்பொரு முறை அந்த ஸ்டோர் ரூமில் பார்த்த குடும்ப புகைப்படத்தை தேடியெடுத்து அதனை உற்று நோக்குகிறாள். வீட்டின் முன்புறம் கணவன், மனைவி, மகள் மூவரும் சிரித்தபடி போஸ் கொடுக்க, பின்னால் வீட்டின் ஜன்னலில் மறைந்திருந்து பார்க்கும் ஒரு முகம் தெரிந்தது. புகைப்படத்தில் அந்த முகத்தை கவனித்த வேளையில், அந்த அறையில் அவள் மட்டும் இல்லை என்பதை அவள் உணர்ந்தாள் ! முற்றும்.

********************

மேலே எழுதியிருப்பது 2016ம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியான வித்தின் (WITHIN) என்கிற படக்கதையின் சாரம். அதாவது அப்படத்தின் கதையை கொஞ்சம் முன்னும், பின்னும் மாற்றி, இப்படி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று சில விஷயங்களை மாற்றி எழுதியிருக்கிறேன். சுவாரஸ்யமாக இருந்ததா என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

தமிழில் எடுப்பதற்கான அம்சங்கள் பொருத்தமாக இருந்தாலும் கூட ஒரு முக்கியமான லாஜிக் இடிக்கிறது. அது – CRAWLSPACE. சில மேலை நாட்டு கட்டிட முறைகளில் ஒரு தளத்திற்கும் மற்றொரு தளத்திற்கும் இடையே சுமார் ஒரு அடி உயரத்தில் இடத்தை விட்டு வைப்பார்களாம். மின்சரடுகள், தண்ணீர் குழாய்கள் போன்றவற்றை வீட்டிற்குள் கொண்டுவர இந்த இடைவெளியை பயன்படுத்திக்கொள்வார்களாம். கதைப்படி நம் சைக்கோ நாயகன் இந்த இடைவெளியில் தான் ஒளிந்துகொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. 

இந்த CRAWLSPACE (தமிழில் தவழ்வெளி என்று வைத்துக் கொள்ளலாமா ?) ஒரு பெரிய டாபிக். இந்த ஒயின்ஷாப் தாங்காது. சுருக்கமாகச் சொல்வதென்றால் படத்தில் சொல்லப்படும் தவழ்வெளி சம்பவம் வெறும் கதைக்காக சேர்க்கப்பட்ட சம்பவம் அல்ல. மெக்ஸிகோவில் கடுமையான பஞ்சம் நிலவிய சமயத்தில் அங்கே வீடற்ற பல மனிதர்கள் இம்மாதிரி தவழ்வெளிகளில் மறைந்திருந்து வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் நவீன உலகில் நடைபெற்ற இதுபோன்ற உண்மைச் சம்பவங்களை RANKER மற்றும் LISTVERSE போன்ற தளங்கள் பட்டியலிட்டுள்ளன. இவையெல்லாம் பிஸார். சுவாரஸ்யத்துக்காக கற்பனை கலந்து தயாரிக்கப்பட்ட பட்டியல் என்று கூட நினைக்கலாம்.

கைது செய்யப்பட்டவர்
அப்படி நினைப்பவர்களுக்கு ஒரு அண்மைச்செய்தி – அமெரிக்காவின் டெனஸி மாகாணத்தில் தனது பதினான்கு வயது மகளின் அறைக்கு மேலிருக்கும் இடைவெளியில் ஒரு மனிதன் வசிப்பதாக மகளின் தாயார் புகார் அளித்து அந்த ஆளை கைது செய்திருக்கிறார்கள். அந்த மனிதன் அந்த பதினான்கு வயது பெண்ணின் முன்னாள் காதலன் என்பது உபரித்தகவல்.

சரி, இப்போது WITHIN படத்தை தமிழில் யார் எடுக்கப் போகிறீர்கள். CRAWLSPACE என்பதை வேண்டுமானால் ஸ்டோர் ரூம் அல்லது அலமாரியின் பின்னால் மறைந்திருக்கும் ரகசிய அறை என்று மாற்றிக்கொள்ளலாம்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

2 comments:

Ponmahes said...
This comment has been removed by the author.
Ponmahes said...

இதே சாயலில் சுஜாதாவின் சிறுகதை படித்ததாக ஞாபகம் . என்ன அதில் மனிதனுக்குப் பதிலாக கேமரா இருக்கும் என்று நினைக்கிறேன் . இதே சாயல் தானே சிவப்பு ரோஜாக்கள் படம்(கேமரா அலமாரியில் இருக்கும் ) ????

அருமையான கதை . படமாக வந்தால் அருமையாக இருக்கும். என்ன நல்ல இயக்குநர் வேண்டுமே ???!!

பதிவு அருமை வாழ்த்துக்கள் தம்பி !!!!